search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திறள் நுண்ணறிவு  தொழில் நுட்பம்
    X

    திறள் நுண்ணறிவு தொழில் நுட்பம்

    • இந்த வருடம் கென்டக்கி டெர்பி எனப்படும் அமெரிக்க குதிரை ரேசில் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது!
    • ஆம் ஸ்பெக்டிரா என்பது முதல் நாலு குதிரைகளின் பெயரையும் அவற்றின் சரியான வரிசையையும் முன்பே கணித்தல்.

    "பொறப்பட்டுட்டாரும்மா!"

    "காருக்கு வந்துட்டாரு!"

    "என் தகவல்படி ரெண்டு காரு ஒரே சமயம் புறப்பட்டு ஒரே திசையில போவுதுங்கம்மா!"

    "ரெண்டு காரும் போற திசை மந்தவெளி இல்லம்மா! அபிராமபுரம்!"

    நீங்கள் வீட்டு காலிங் பெல் அடிக்கும் முன்பே கதவு திறக்கப்பட்டு கேள்வி தெறிக்கும்.

    "ஏன் லேட்டு!"

    "லேட்டா? நேரா ஆபீஸ்லேர்ந்து வரேன்! என்ன டிராபிக்குங்கற!"

    "எங்க அபிராமபுரத்துலயா?"

    "என்..என்னது! அபிராமபுரமா? நான்..!"

    "புளுகாதீங்க! அந்த லாவண்யாவ நோகாம எஸ்கார்ட் பண்ணி வீட்ல கொண்டு விட்டுட்டு வர்ரீங்க!"

    "இல்ல வைஷு! நா வந்து…!"

    "ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் புரோகிராம் வந்ததாலதான் உங்க தகிடு தத்தமெல்லாம் தெரியுது!

    அட என்னங்க இது கொறக்களி வித்தையா இருக்கு!

    ஆம். இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு என்னும் இயல் தொழில் நுட்ப வகையில் புதிதாக இருந்தாலும் அது பயன்படுத்தும் அடிப்படை மிகப்பழமையானதுதான். ஸ்வார்ம் என்பது எறும்பு, தேனி, கரையான், முதலான உயிரினங்களின் கூட்டத்தைக்குறிக்கும். மந்தை என்பது ஆடு, மாடுகளின் கூட்டம். இது ஹெர்ட் எனப்படுகிறது. கூட்ட மதி நுட்பம் அல்லது அதற்குச் சமனாக மந்தை புத்தி, கவனிக்க மந்த புத்தி இல்லை, பொருத்தமாயிருக்கும். தவிர சரியோ பிழையோ முன்னே செல்வரின் வழியில் செல்வதைத் தான் மந்தைப்புத்தி என்கிறோம்.

    இந்த மந்தையானது ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமலும் ஒரு இடத்தில் இருந்து இயக்கம் ஏதுமில்லாமலும், ஆனாலும் ஏதோ ஒரு ஒழுங்கில் செயல் படுவதாகும். அந்த மத்திய இயக்கம் இல்லாத சுதந்திர நடத்தையிலும் அந்தக்குழுவின் ஒரு ஒழுங்கு நிறைந்த செயல்பாடு வெளிப்படும்.

    இந்த நடவடிக்கையை அலசி ஆராய்ந்து இது அடுத்து வரும் நேரங்களில் எப்படி இருக்கும் என்பதைக்கணிக்க முயலுவதுதான் ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு.

    இந்த வருடம் கென்டக்கி டெர்பி எனப்படும் அமெரிக்க குதிரை ரேசில் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது! வருடா வருடம் இந்த டெர்பி ரேஸ் மே மாதத்தின் முதல் சனிக்கிழமை நடைபெறும். போன வருடம் இந்த ரேசை நடத்தும் நிறுவனமான சர்ச்சில் டவுன்ஸ் என்னும் கம்பெனி இந்த திரள் நுண்ணறிவு புரோகிராமை ரேசில் முதல் முறையாக பரிசோதனை அளவில் செயல் படுத்தியது. இந்த புரோகிராம் ரேஸ் நடக்கும் முன்பே முதலில் வரவிருக்கும் நான்கு குதிரைகளின் பெயர்களை மிகச்சரியாக கணித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    "என்ன தலைவா! கிண்டி போனியே நேத்து, என்னாச்சு?"

    "ஸ்பெக்டிராவுல எல்லாம் நான் சொன்னபடிதான்!"

    "அடேயப்பா! எத்தன லாபம்?"

    "லாபமா! அதுங்க வர்ர வரிசை தப்பாப்போச்சுப்பா!"

    ஆம் ஸ்பெக்டிரா என்பது முதல் நாலு குதிரைகளின் பெயரையும் அவற்றின் சரியான வரிசையையும் முன்பே கணித்தல். இதைத்தான் திரள் நுண்ணறிவு புரோகிராம் கென்டக்கி டெர்பியில் படுதுல்லியமாக கணித்திருந்தது.

    இந்த இயலின் அடிப்படை வெகு இயற்கையான விஷயங்கள்தாம். பறவைகள் கூட்டமாகப்பறக்கும் நேர்த்தியைக் கவனித்தால் புரியும். அவற்றை இப்படிப்பற என்று யாரும் கட்டளையிடுவதில்லை. தன் சுற்றத்தாருடன் ஒன்று சேர்ந்து ஒரு முறையில் பறக்கும்போதே, அதில் ஒரு ஒழுங்கும் அந்த ஒழுங்கின் குழுமச்சக்தியும் வெளிப்படுவதாக விற்பன்னர்கள் சொல்லுகிறார்கள்.

    அதே அடிப்படையில்தால் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு இயலும் வடிவமைக்கப்படுகிறது. இதே போல எறும்புகளின் கூட்டச்செயல்பாடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி, ஆடு மாடு மந்தைகள், நுண்ணுயிர் நுண்ணறிவு ஆகியவற்றிலும் இந்த திரள் நுண்ணறிவை பார்க்கலாம்.

    "என்ன மாதிரிடி உங்க குடும்பம்?"

    "ஏன், என் குடும்பத்துக்கென்னவாம்?"

    "பாத்தேனே உன் தம்பி கல்யாணத்துல! பொண்ணப்பெத்தவரை என்னமா ஆட்டி வெச்சீங்க!"

    "ஆமா இப்பவே கிடுக்கி போடலைன்னா அவருக்கு துளிர்த்துடுமே!"

    "அதெப்படி உங்க குடும்பத்துல எல்லோரும் சொல்லி வெச்சா மாதிரி ஒரே விதமா டார்ச்சர் பண்றீங்க!"

    பேசின ஆசாமிக்கு அன்று இரவு வெறும் பழைய சோறுதான் கிடைத்திருக்கும், என்றாலும் இதெல்லாம் திரள் நுண்ணறிவுக்குள் வராது.

    இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவுக்கான பயன்பாடுகள் பெருகிக்கொண்டே வருகின்றன.

    அமெரிக்க ராணுவம் இந்த இயலை பயன்படுத்தி ஆளில்லா டிரோன்களை இயக்கவும், நாசா விண்வெளி ஆராய்ச்சியிலும் மேலும் பல நாடுகள் மருத்துவத்துறையிலும் பயன்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன.

    முக்கியமாக நானோ ரோபாட்டுகளை உடலினுள் செலுத்தி கேன்சர் கட்டிகளை முறியடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

    "என்ன சார் டயர்டா இருக்கீங்க!"

    "ஒண்ணுமில்ல, காலையில டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்!"

    "என்ன ஆச்சு?"

    "ஒண்ணும் இல்ல, சின்ன பிராப்ளம்தான்! நுரையீரல்ல கேன்சர்னு தெரிஞ்சது! அதான் கார்த்தால போய் நானோபோட் டிரீட்மெண்ட் எடுத்துண்டு வந்தேன். கேன்சர் குணமாயிடுத்து. என்ன கொஞ்சம் டயர்டா இருக்கு. லஞ்சுக்கு அப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கினா சரியாய்டும், வரட்டுமா?"

    நடக்கத்தான் போகிறது!

    Next Story
    ×