என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உச்ச சனி யாருக்கு நன்மை தரும்
    X

    உச்ச சனி யாருக்கு நன்மை தரும்

    • மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.
    • விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.

    சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றும் சக்தி படைத்தவர் சனிபகவான். ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களை வீழ்த்துவதும் சனிபகவான். அதனால் தான் நமது முன்னோர்கள் சனியை போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை என்று சொல்லி வைத்தார்கள். எப்பொழுதும் எளிமையாக நிதானமாக நடந்து கொள்பவர்களை சனி பகவான் உயர்த்திக்கொண்டே செல்வார். அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். ஒருவருக்கு நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் உள்ளது என்றால் அவர் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல வளமான நிலையில் உள்ளார் என்று பொருள். அடிப்படை தேவைக்கு கூட கஷ்டப்படுபவர்கள் அடிமட்ட தொழில் செய்பவர்களுக்கு சனி பகவான் பலவீனமாக உள்ளார் என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சனி பகவான் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்து அமையும்.

    இந்த ஜென்மத்தில் ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். ஒருவர் எந்த மனத்தாங்களும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனை படக்கூடிய சம்பவங்கள் நடந்து தீரும். இத்தகைய சிறப்பு பெற்ற சனிபகவான் துலாம் ராசியில் 20 டிகிரியில் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். ஏழையாக இருந்த ஒருவன் பணக்காரனாக மாறும்போது தனது பழைய நிலையை மறந்து விடுவான் அதை மறக்காமல் நினைவில் நிறுத்தி வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே சனி பகவான் துலாம் ராசியில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார்.

    சனிபகவான் உச்சம் அடையும் சுவாதி நட்சத்திரத்தில் புதிய தொழில் தொடங்கலாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் தொழில் உத்தியோகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம். இன்றைய நட்சத்திர நாளில் அரசு அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. குழந்தை பாக்கியத்தில் குறை இருப்பவர்கள் திருமணமாகி பல வருடமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாதி நட்சத்திர நாளில் பழகினால் கரு உண்டாகும்.

    திருமணம், புத்திர பாக்கிய தடை இருப்பவர்கள் இந்த நட்சத்திரநாளில் சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மறந்து யார் செயல்படுகிறார்களோ அவர்களை சனிபகவான் தண்டிக்க தவற மாட்டார். இத்தகைய சிறப்புமிக்க சனி பகவான் 12 லக்னத்திற்கும் உச்சம் பெறுவதால் உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். அவரே பாதகாதிபதி என்பதால் சிலருக்கு நண்பர்கள் தொழில் கூட்டாளிகளால் ஆதாயமும் இருக்கும் பாதகமும் இருக்கும். யாரை முழுமையாக நம்புகிறார்களோ அவர்களே இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் பெரும்பான்மையாக இரண்டு திருமணத்தை சந்திக்கிறார்கள். இரண்டாவது திருமணம் நடந்த பிறகு தொழில் உத்தியோகத்தில் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலமாக வருமானம் மற்றும் சொத்துக்கள் சேர்க்கை உண்டு.

    ரிஷப லக்னத்திற்கு 9,10-ம் அதிபதியான சனி பகவான் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெறுவார். பாக்யாதிபதி ஆறில் உச்சம் பெறுவதால் எளிதில் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாது அல்லது தந்தை நோயாளியாக கடனாளியாக இருப்பார். தந்தையின் பாரத்தை ஜாதகர் சுமப்பார். அல்லது தந்தைக்கு வைத்தியம் செய்து ஜாதகர் கடனாளியாக மாறுவார். இவரே பாதகாதிபதியாக ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    அல்லது அதிகமாக கடன் பெற்று சொந்த தொழில் செய்து அதில் நஷ்டத்தை சந்திப்பார்கள். பொதுவாக ஆறில் உச்ச கிரகம் இருப்பது நல்லதல்ல. சனிபகவானுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் என்றால் ஜாதகருக்கு நிச்சயமாக மீள முடியாத வழக்கும் உண்டாகும்.

    மிதுன லக்னத்திற்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் ஐந்தில் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்களால் ஜாதகருக்கு வழக்கு வரலாம். குழந்தையின்மை, அபார்ஷன். அவப்பெயர், அவமானம். மன நிம்மதி இன்மை. முடிவெடுக்கும் திறன் இன்மை, உயில் சொத்து, பாலிசி பணம் ஏற்படும். பெரும் நஷ்டம், தற்கொலை எண்ணங்கள், வறுமை ஏற்படும். எவ்வளவு பாக்கிய பலன்கள் இருந்தாலும் அவை ஒரு மன சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியாது. ஜாதகரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை உண்டு. தந்தை வழியில் துர்மரணம் நடந்திருக்கும். எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதிலிருந்து எளிமையாக மீண்டு வருவார்கள். சிலருக்கு மத நம்பிக்கை குறைவுபடும் அல்லது வேற்று மத வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள்.

    கடக லக்னத்திற்கு 7, 8-ம் அதிபதியான சனிபகவான் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் உச்சம் பெறும்போது திருமணத்திற்கு பிறகு நல்ல பொருளாதாரம் கிடைக்கும். வாழ்க்கை துணை வசதியானவராக இருப்பார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார மேன்மை மிகுதியாக இருக்கும். தாயாரால் சொத்து வழக்கு வரலாம். தொழில் கூட்டாளி பிரச்சினை, நண்பர்களால் வம்பு, வழக்கு, திருமண வாழ்வில் பிரிவு, தீயவருடன் இணைந்திருக்கும் நிலை ஏற்படலாம். விபத்து நடக்கலாம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள். பண்ணையாளர்கள் சுய ஜாதகம் அறிந்து தொழிலில் ஈடுபட வேண்டும். சில மாணவர்களுக்கு கல்வியில் தடை தாமதங்கள் வரலாம்.

    சிம்ம லக்னத்திற்கு 6,7-ம் அதிபதியான சனி பகவான் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். வாழ்க்கைத் துணை கடனாளியாக அல்லது நோயாளியாக இருப்பார். ஜாமீன் சார்ந்த பிரச்சினைகளால் அவதி உண்டு. இளைய உடன்பிறந்த சகோதரன் தனது கடனை ஜாதகரின் மேல் திருப்பி விடுவார். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். தனிமையில் தவிப்பர். ஆறுதலாய் இருக்க முன் வருபவரையும் நோகடித்து விலக்குவர். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். சொத்துக்களுக்கு முறையான ஆவணம் இருக்காது. முதல் திருமண பிரிவினையை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

    கன்னியா லக்னத்திற்கு 5,6-ம் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் உச்சம் பெறுவார். பிள்ளை பிறந்த பிறகு ஜாதகர் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார். சரியாக உண்ண முடியாத, தூங்க முடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். பெற்ற பிள்ளைகளுக்காக கடன்படுவார். பூர்விக சொத்தால் வம்பு, வழக்கு, கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். ஜாதகர் மருத்துவ குணம் நிறைந்தவர். இவர்களின் கை ராசி மருந்து சாப்பிட்டவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும் கைராசி மருத்துவர் என்று பெயரும் கிடைக்கும். முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் ஜாதகரே ஆட்டுவிக்கும்.

    துலாம் லக்னத்திற்கு 4,5-ம் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் உச்சம் பெறுவார். 12 லக்னங்களில் அதிக நன்மையை பெறுபவர்கள் துலாம் லக்னத்தினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள்.

    குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.

    விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். கல்வியில் மேன்மை இருக்காது. வெளியூர் வெளிநாட்டில் கல்வி கற்பார்கள். சொத்துக்களை உடன் பிறப்புக்காக விரயம் செய்வார்கள். முயற்சியில் தோல்வி, சகோதர இழப்பு, சகோதர சச்சரவு, தூக்கமின்மை ஏற்படும். செல்வ நிலையும் சீராக இருக்காது. சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள். தகுந்த நிரந்தர, தொழில் உத்தியோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.

    தனுசு லக்னத்திற்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவார் துலாம் லக்னத்திற்கு அடுத்த படியாக உச்ச சனியால் அதிக சுப பலன்களை அடைபவர்கள் தனுசு ராசியினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. பாக்கியவான். நல்ல குணம் உள்ளவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். ஆத்ம சக்தி உள்ளவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

    அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு.

    மகர லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் தன லாப அதிபதியான சனி பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். தனது வாக்கு திறமையால் குடும்பத்தை காப்பாற்றுவதில் வல்லவன். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள்.

    பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவார்கள். பரம்பரையாக அரசு வேலை அல்லது அரசு பதவியில் இருப்பார்கள்.

    கும்ப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். தந்தையின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். குல தெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். சுகமான இல்வாழ்க்கை உண்டு. அரசாங்க பணி உண்டு.

    அரசியலில் புகழ், பெயர், கவுரவம் உண்டு. முன்னோர்கள் கல்வி நிறுவனம் நடத்தியவர்கள் அல்லது ஜாதகர் கல்வி நிறுவனங்கள் நடத்துவார்.

    மீன லக்னத்திற்கு லாப அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். சொந்த மண்ணை விட்டு சென்று வெளியூர், வெளிநாட்டில் பிழைப்பு நடத்தி புகழ் பெறுவார்கள். அஷ்டமாதிபதி சுக்ரன் பலம் பெற்றால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

    மூத்த சகோதரத்துக்கு கண்டம். மூத்த சகோதரத்துகளால் பொருள் இழப்பு ஏற்படும். லக்னாதிபதி குரு பலம் குறைந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும். வாழ்வு நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். மறைமுக வருமானம் உண்டு. பொதுவாக சனிபகவான் வினைப்பதிவை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.

    செல்: 98652 20406

    Next Story
    ×