என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

விபரீத ராஜயோகம் வழங்கும் அஷ்டமஸ்தானம்
- பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.
- வாழ்ந்த நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை கிடைத்து யோகத்தை அனுபவிப்பார்கள்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது பழமொழியாக இருந்தால் கூட யோகமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் ஆகும்.
அதிர்ஷ்டமான வாழ்க்கை என்பது ஆயிரத்தில் சிலருக்கு மட்டுமே உண்டாகும். ஜோதிடத்தை பொருத்தவரை காலபகவான் நினைத்தால் யாருடைய வாழ்க்கையையும் மாற்றுவார். ஜோதிடத்தில் பல்வேறு யோகங்கள் இருந்தால் கூட விபரீத ராஜயோகம் என்பது சிறப்பான யோகமாக கூறப்படுகிறது. பலர் விபரீத ராஜயோகம் என்பதை பெரும் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஒரு விபரீதம் நடந்து ஒரு மீள முடியாத இழப்பு நடந்து அதன் பிறகு அதை ஈடு செய்யக் கூடிய வகையில் ஏதாவது பணம் பொருள் கிடைப்பதே விபரீத ராஜயோகம் ஆகும். தற்போது சமீப காலத்தில் கரூரில் நடந்த அசம்பாவிதத்தில் 41 பேரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட உயிர் இழப்பை அரசியல் பிரமுகர்கள் அரசாங்கம் ஈடு செய்ததை விபரீத ராஜயோகம் என்று கூறலாம். ஒருவர் சிறுக சிறுக சேர்த்த காப்பீட்டு பணம் அவரின் காலத்திற்கு பிறகு அவரின் வாரிசுகளுக்கு கிடைப்பது விபரீத ராஜயோகமாகும்.
பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள், நெருங்கிய ரத்த பந்தம் போன்ற உறவுகளின் காலத்திற்குப் பிறகு அவர்களின் உயில் சொத்து, பணம், நகைகளை அனுபவிப்பது விபரீத ராஜயோகம் ஆகும். பினாமி மூலம் கிடைக்கும் சொத்துக்களும் இதில் அடங்கும். புதையல், கண்டெடுத்த பொருள், ரேஸ், பங்குச் சந்தை, சூதாட்டத்தில் கிடைக்கும் பணங்களும் விபரீத ராஜயோகமாகும். பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி இதன் மூலமாக கிடைக்கும் பணம் என்றுமே மதில் மேல் பூனை தான். அதிர்ஷ்டம் எல்லா நேரத்திலும் அரவணைக்காது. மேலே கூறிய அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல முறை இழந்த பணம் ஏதாவது ஒரு முறை அதிர்ஷ்ட லட்சுமியை கண்களில் காட்டும்.
சிலருக்கு அதிர்ஷ்ட பணம் பொருள் கிடைத்த பிறகு அதை அனுபவிக்க முடியாத வகையில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருக்கும்.
உடல் ரீதியான பாதிப்பு, மன ரீதியான பாதிப்பு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கும். சுருக்கமாக இதற்கு ஒரே வரியில் பலன் சொல்ல வேண்டும் என்றால் இருக்கும் ஆனால் இருக்காது அல்லது இருப்பதை அனுபவிக்க முடியாது.
ஐ.ஆனந்தி
ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ம் மிடத்திற்கான அதிபதியே அஷ்டமாதிபதியாகும். அந்த அஷ்டமாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும், அஷ்டமாதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோகத்தையோ அவ யோகத்தை தருகிறது. எட்டாம் பாவகம் என்பது பணபர ஸ்தானமாகும். பணம் பொருளால் ஏற்படும் சுப அசுப பலனைப் பற்றிக் கூறுவது எட்டாம் பாவமாகும். ஒருவர் ஜாதகத்தில் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவகாரியத்தை குறிப்பது 8ம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8ம் பாவக அதிபதி, 8-ல் நின்ற கிரகங்கள், எட்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்கள் ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறுகளை தருபவர்கள்.
ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் பிரச்சினை தேடி வரும். வம்பு பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து, ஜாமீன் பிரச்சினை, தீராத நோய், தீர்க்க முடியாத கடன் வரும். ஒரு சிலருக்கு பரிதாபப்பட்டு கொடுத்த பணம் கூட அலைக்கழிக்கும். எட்டாமிடம் வேலை செய்யும் போது தொழில் உத்தியோகரீதியான யோகமோ, அவயோகமோ நடக்கும். ஒரு சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் உழைத்த கூலிக்கு பலமுறை அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த பயம் ஜாதகருக்கு இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தை குறிப்பது 8ம் பாவகமாகும். ஒரு ஜாதகத்தில் எட்டாமிடத்தின் மூலம் ஆயுள் மட்டுமல்ல தீராத நோய் விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மதியின்மை, தற்கொலை எண்ணம், கோர்ட், கேஸ் பிரச்சினை போன்றவற்றை அறிய முடியும்.
ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து போன்றவை தேடி வருவதற்கு அஷ்டமா திபதியே காரணமாகும்.
பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பணம் சம்பாதிப்பது எளிதான செயல் அல்ல என்ற நிலை இருக்கும் போது எதிர்பாராத பண இழப்பு சிலருக்கு வாழ்க்கை பாதையை தடம் புரட்டி விடுகிறது. 8-ம்மிடம் அசுப வலுப்பெற்றால் போலீஸ், கோர்ட், கேஸ் , கட்டப்பஞ்சாயத்து நஷ்டம் அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மையோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 8-ம்மடத்தில் நின்ற கிரகம் தனது சமசப்தம பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் 8ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன்கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்கள்.
பெண்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியே. மாங்கல்ய பலம் பற்றியும் தெரிவிப்பவர். 8-ம் இடத்தில் நிற்கும் பாவ கிரகங்கள் மட்டுமல்ல சுப கிரங்களும் ஜாதகரை நிலை குலைய வைக்கும். எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்தும் வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் நடத்த எட்டாம் பாவக வலிமை வேண்டும். தொழிலுக்காக போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் பலவீனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடம். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பராம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருக்கும்.
அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகும். அவர்களின் வாழ்க்கையும், முதலீடும் யாரும் புரிய முடியாத வண்ணம் மறைபொருளாக இருக்கும். எட்டாம் பாவகத்தின் பாவத் பாவம் பத்தாம் பாவமாகும். எட்டாம் பாவகம் எனும் பணபர ஸ்தானம் மூலமாக வளர்க்கப்படும் பாவகம் பத்தாம் பாவகம் எனும் தொழில் ஸ்தானமாகும்.
ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். 7-க்கு 2 என்பதால் மனைவியால் விபரீத ராஜயோகம் ஏற்படும். அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு வீடு, கார், பங்களா, நகை, நட்டு, தங்கம், வெள்ளி, பணம், சீர் வரிசை என பெரும் பொருளுடன் மனைவி அமையும். 8-ல் நிற்கும் கிரகம் 2ம்மிடத்தை பார்ப்பதால் தனது வாய்ஜாலத்தால் மனைவியை மகிழ்வித்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம் தொடரும்.
அதாவது மனைவிக்கு கூஜா தூக்க வேண்டும். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் மனைவியின் பின் செல்லும் போது வாழ்க்கை வசந்தமாகும். மனைவியை தவறான வார்த்தைகளால் வசை பாடினால் முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து கோர்ட், கேஸ் என அழைந்து மன வியாதி வந்து விடும். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும். நிலையான நண்பர்கள் அமைய மாட்டார்கள். இவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் சண்டை நீதிமன்றம் வரை சென்று அவமானத்தை அதிகபடுத்தும்.
அன்றாட தேவைக்கு கஷ்டப்படும் ஒருவர் திடீர் தனவானாக மாறி அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது விபரீத ராஜயோகமாகும். வாழ்ந்த நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை கிடைத்து யோகத்தை அனுபவிப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய யோகங்களில் ஒன்றுதான் விபரீத ராஜ யோகமாகும்.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12-ம் மிடங்கள் மறைவு ஸ்தானங்களாகும். கடந்து வந்த பிறவிகளின் கர்மாவிற்கு ஏற்ப சுக, துக்கங்களை வழங்குபவர்கள் இந்த மறைவு ஸ்தான அதிபதிகள். 3, 6, 8.12-ம் அதிபதிகள் ஒரு ராசியில் நின்றாலோ, ஒருவரையொருவர் நேரடியாக பார்த்தாலோ, ஒரு மறைவு ஸ்தான அதிபதியின் நட்சத்திரத்தில் மற்றொரு மறைவு ஸ்தான அதிபதி நின்றாலோ 3, 6, 8, 12-ம் அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை அடைந்தாலும் விபரீத ராஜயோகம் உண்டாகும்.
அதாவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ஒரு ஜாதகத்தில் 5,9-ம் மிடங்கள் ஒருவர் செய்த புண்ணியத்தைக் கூறுமிடங்களாகும். 6,8, 12-ம்மிடங்கள் ஒருவர் செய்த பாவத்தை தெரிவிக்கும் இடங்களாகும். பூர்வ புண்ணிய ஸ்தானா திபதி எனும் 5ம் அதிபதியும் பாக்கியாதிபதி எனும் 9ம் அதிபதியும் எந்த பாவகத்தில் அமர்கிறார்களோ அந்த பாவகத்தில் உள்ள குறைகளை நீக்கிவிடுவார்கள்.
உதாரணமாக ஒன்பதாம் அதிபதி அதாவது பாக்யாதிபதி அஷ்டமஸ்தானத்தில் அமர்ந்தால் எட்டாம் பாவகக் குறைகளை நீக்கிவிடுவார். இந்த 5,9-ம் அதிபதிகள் வீட்டில் 6,8,12-ம் அதிபதிகள் அமர்ந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களும் தடைபடும். 6, 8, 12-ம் அதிபதிகள் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று புகழ் அடைகிறார்கள். 6,8,12-ம் அதிபதிகள் 1, 5, 9-ம் இடத்தில் அமர்ந்தால் முன்னேற்றக் குறைவு பூர்வீகத்தில் பிழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அஷ்டமாதிபதி சுப வலுப் பெற்றால் லாட்டரி, ரேஸ், வாரிசு இல்லாத சொத்து, அதிர்ஷ்ட சொத்து, பங்குச்சந்தை ஆதாயம்.. போன்ற விபரீத ராஜ யோகமும் உண்டாகும். அஷ்டமாதிபதி அசுப வலுப் பெற்றால் விரும்பத்தகாத விளைவுகள் நடக்கும்.
அஷ்டமாதிபதிக்கு பாதகாதி சம்பந்தம் இருந்தால் உச்ச கட்ட பாதிப்ப ஏற்படும். லக்ன ரீதியான சுப கிரகத்தின் சம்பந்தம் குரு பார்வை இருக்கும் போதும் சிறு சிறு பாதிப்பு ஏற்படும். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சுப பலன் வழங்குவாரா அல்லது அசுபத்தை ஏற்படுத்துவார என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பு. இதை எளிமையாக உணர ஒரு வழி உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஒருவரின் வாழ்வாதாரம் உயர்ந்தால் அஷ்டமாதிபதி வரமாக உள்ளார் என்று பொருள். திருமணத்திற்கு பிறகு பொருளாதார இன்னல் மிகுதியாக இருந்தால் அஷ்டமாதிபதி அசுபமாக உள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா நான் பணக்காரன் ஆவேனா? என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது.
தேவைக்கு பணம் கிடைக்காமல் போவதற்கு முதலாவது காரணம் சராசரி வாழ்க்கைக்கே போராடும் நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்று நம்பிக்கை இழந்து வாழ்வதே இதற்கு முதல் காரணமாகும். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பதை விட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் பால் தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகியவற்றை கலந்து பஞ்சகவ்யம் தயாரித்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் கூடி வரும்.
வேயுறு தோளிபங்கன் எனத் துவங்கும் கோளறு பதிகம் தினமும் படித்து வர நவக்கிரகங்களால் நன்மைகள் உண்டாகும்.
செல்: 98652 20406






