என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

குல தெய்வ தோஷம்- கும்பிட்டால் குறையும்!
- நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும் கோள் செய்யாததை குல தெய்வம் செய்யும் என்று சொல்வார்கள்.
- குல தெய்வத்தை கண்டு பிடித்து கும்பிட கும்பிடதான் தோஷங்களில் இருந்து தப்ப முடியும்.
நாம் ஒவ்வொருவரும் எவ்வளவோ சாமி கும்பிடுகிறோம். பெரும்பாலும் அனைவருமே ஒன்றுக்கும் மேற்பட்ட சாமிகளை வணங்குவது உண்டு. ஆதிகாலத்தில் இயற்கையாகவே அமைந்து விட்ட பல்வேறு காரணங்களால் சனாதன தர்மங்களின் அடிப்படையில் பல்வேறு கடவுள்களை வழிபடுவது வழக்கத்தில் வந்து விட்டது.
இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்துக்குரிய தெய்வம் என்றெல்லாம் கடவுள் வழிபாட்டை பல வகைகளாக பிரித்து விட்டார்கள். ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒவ்வொரு வகையான திருப்தி கிடைப்பதாக பலரும் சொல்வது உண்டு.
ஆனால் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபடாவிட்டால் எந்த பிரயோஜனமும் கிடையாது. பல்வேறு தெய்வங்களை ஒருவர் வழிபட்டு வந்தாலும் குல தெய்வ வழிபாடு மட்டுமே வலிமையானதாக பலன் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கு காரணம் ஒரு குடும்பத்தில் ஒரு குல தெய்வத்தை வழிபடுகிறார்கள் என்றால் அதை அவர்களது முன்னோர்கள் பாரம்பரியமாக தனிச்சிறப்புடன் வழிபாடுகளை காலம் காலமாக செய்து வருகிறார்கள் என்று அர்த்தமாகும். இதனால்தான் குல தெய்வத்தை குலம் காக்கும் தெய்வமாக போற்றுவது உண்டு.
சுருக்கமாக சொல்ல வேண்டு மானால் ஒருவரது வாழ்வு அமைதியாகவும், மேம்பாடு கொண்டதாகவும் இருக்கிறது என்றால் அதற்கு 100 சதவீதம் குல தெய்வம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் குல தெய்வம் மட்டும்தான் ஒருவரது அனைத்து வகையான நலன்களையும் உண்மையான அக்கறையையும் காட்டும்.
மற்ற தெய்வங்களை வழிபட்டாலும் குல தெய்வத்தை வழி பட்டால்தான் அதற்கான பலன்கள் கிடைக்கும். இதை உணர்த்தவே நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும் கோள் செய்யாததை குல தெய்வம் செய்யும் என்று சொல்வார்கள். என வே குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது.
குல தெய்வ வழிபாட்டை யார் ஒருவர் சரியாக செய்கிறாரோ அவரது வம்சம் தழைத்தோங்கும். இதை கருத்தில் கொண்டுதான் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் மாறி வருபவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவையாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குல தெய்வத்தை வழிபடுவதை முக்கிய கடமையாக வைத்துள்ளனர்.
சிலர் மாதத்துக்கு ஒரு தடவையாவது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். மற்ற தெய்வ வழிபாட்டுக்கும், குல தெய்வ வழிபாட்டுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
மற்ற தெய்வங்களை வழிபட செல்லும்போது சாதாரணமாக தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு வந்து விடலாம். ஆனால் குல தெய்வத்தை வழிபட செல்லும்போது கண்டிப்பாக பொங்கலிட்டு நைவேத்தியம் படைத்துதான் வழிபட வேண்டும். யார் ஒருவர் இந்த ஐதீகத்தை கடைபிடிக்கிறாரோ அவர்கள் வாழ்வில் துன்பம் என்பது இருக்காது.
மாறாக இதையெல்லாம் செய்யாமல் அலட்சியமாக குல தெய்வத்தை வழிபடாவிட்டால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காது. அது மட்டுமல்ல குல தெய்வத்தை மறந்துவிட்டால் அதுவே ஒரு தோஷமாகி விடும். அதைதான் ஜாதகத்தில் குல தெய்வ தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வதுண்டு.
குல தெய்வத்தை வழிபடாதபோது முன் ஜென்ம கர்ம வினைகள் நீங்கவே நீங்காது. அதுவும் ஒரு தோஷமாக சேர்ந்து கொள்ளும். இதனால்தான் குல தெய்வ தோஷம் மிக கடுமையானதாக கருதப்படுகிறது.
மேலும் ஒருவருக்கு குல தெய்வ தோஷம் இருந்தால் அவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அது நிறைவு பெற்றதாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் குல தெய்வ தோஷம் இருப்பவர்கள் மற்ற எந்த கடவுளை வணங்கினாலும் அந்த கடவுள்களின் அருள் கிடைக்கவே கிடைக்காது.
வசதி உள்ள சிலர் வீட்டில் ஹோமம் அல்லது யாகம் செய்து வழிபட்டால் பலன் பெற்று விடலாம் என்று கருதுவது உண்டு. குல தெய்வத்தை வழிபடாமல் எந்த யாகம் செய்தாலும் அது வீணான செலவாகவே இருக்கும். எனவே ஜாதகத்தில் குல தெய்வ தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபாடுகளை அவசியம் செய்ய வேண்டும்.
சிலருக்கு மகன் அல்லது மகளின் திருமணம் தாமதமாகி கொண்டே போகும்போதுதான் குல தெய்வ தோஷம் இருப்பது தெரிய வரும். அதன் பிறகு குல தெய்வத்தை கேட்டு அறிந்து சென்று வழிபடுவார்கள்.
குல தெய்வம் சிறிய தெய்வமாக இருந்தாலும் அதுவே சக்தி வாய்ந்த தெய்வம் என்பதை மறுக்கவே முடியாது. ஒருவரது குடும்பத்தில் எமதர்மன் நுழைய வேண்டுமானால் கூட குல தெய்வத்திடம் அனுமதி பெற்றுதான் நுழைவான் என்று சொல்வார்கள். எனவே குல தெய்வத்தை வழிபடாவிட்டால் தோஷம் மேல் தோஷம் வாங்கி சிக்கல்களைதான் எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு முன் ஜென்ம கர்ம வினைகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஒரு கால கட்டத்திற்கு பிறகு குல தெய்வமே தெரியாமல் போய் விடும். அவர்களது வாரிசுகளும் எங்களுக்கு குல தெய்வம் பற்றி தெரியாது என்று பரிதாபமாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள்.
இத்தகைய நிலையில் இருப்பவர்கள் பவுர்ணமி தோறும் குல தெய்வத்தை நினைத்து வழிபட்டால் விரைவில் அந்த குல தெய்வத்தை கண்டுபிடித்து விடலாம். இதற்கான பூஜைகள் நடத்தும் போது குல தெய் வத்தை நினைத்து 27 முறை உச்ச ரித்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இப்படி செய்து வந்தால் குல தெய்வம் தாமாகவே முன் வந்து உங்களுக்கு வழிகாட்டும்.
முழுமையாக குல தெய்வத்தை கண்டுபிடிக்க முடியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு அனைத்து விதமான வழிபாடுகளையும் செய்யலாம். திருச்செந்தூர் சம்கார தலம் என்பதால் ஒருவரது வாழ்வில் தீய சக்தி களை விரட்டுவதற்கு அந்த ஆலயத்து முருகனையும் குல தெய்வமாக ஏற்பது உண்டு.
திருச்செந்தூர் தலம் குருவுக்குரிய தலமாகவும், செவ்வாய்க்குரிய தலமாகவும் கருதப்படுகிறது. எனவே குல தெய்வம் தெரியாதவர்கள் 90 சதவீதம் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆண்டுக்கு ஒரு தடவை வழிபாடு நடத்த சென்று வருவார்கள்.
இதன் மூலம் குல தெய்வ சாபத்தில் இருந்தும் விடுபட முடியும். குல தெய்வ சாபம் நீங்கினால் தடைப்பட்ட சுப காரியங்கள் அடுத்தடுத்து நிறைவேற வாய்ப்பு உள்ளது.
குல தெய்வ கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் இந்த தவறுக்காக குல தெய்வத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மனமுருகி மன்னிப்பு கேட்டால் குல தெய்வ சாபம் நிவர்த்தியாக வாய்ப்புள்ளது.
குல தெய்வத்தின் சிறப்பை அறிந்தவர்கள் அதை தங்களது தலைமுறையுடன் நிறுத்தி விடக்கூடாது. தங்கள் மகன்-மகளை குல தெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு சன்னதியையும் சுற்றி காண்பித்து அதன் சிறப்புகளை சொல்லி கொடுக்க வேண்டும். அப்படி சொல்லி கொடுத்தால்தான் குல தெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திலும் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படி செய்யாமல் இருப்பதால்தான் குல தெய்வத்தை மறந்து குல தெய்வ தோஷத்துக்கு ஆளாகிறார்கள். ஜாதகத்தில் 5-ம் கட்டத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு ஒருவரது குல தெய்வ வழிபாட்டை ஜோதிடர்கள் எளிதாக சொல்லி விடுவார்கள். குல தெய்வத்தின் அனுகிரகமும், அருளும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அந்த கட்டம் காட்டி கொடுத்து விடும்.
ஜாதகத்தில் 5-ம் இடத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருந்தால் குல தெய்வத்தை அதிகம் வழிபடவில்லை என்று சொல்வார்கள். இதை நிவர்த்தி செய்ய உங்களுக்கு அருகில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபட்டாலே போதும் என்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் சதுரகிரி மகாலிங்கத்தை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியினரும் இப்படி தங்கள் பகுதியில் உள்ள மிக பழமையான ஆலயத்தின் தெய்வங்களை குல தெய்வங்களாக ஏற்கலாம்.
அந்த ஆலயத்தின் தெய்வத்தின் படத்தை வாங்கி வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து குல தெய்வமாக வழிபடலாம். இது அனைத்து செல்வங்களையும் தேடி தருவதாக அமையும். எனவே குல தெய்வ தோஷத்தை சாதாரணமாக கருதாதீர்கள். குல தெய்வத்தை கண்டு பிடித்து கும்பிட கும்பிடதான் தோஷங்களில் இருந்து தப்ப முடியும்.






