என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- சிவனும் அன்னாபிஷேகமும்
    X

    ஆன்மிக அமுதம்- சிவனும் அன்னாபிஷேகமும்

    • தமிழும் சமஸ்கிருதமும் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து பிறந்த இரு மொழிகள்.
    • நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். கடவுள் தான் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்.

    தானங்களில் சிறந்தது அன்னதானம் எனப்படுகிறது. மற்ற தானங்களைப் பெறுபவர் யாரும் போதும் என்று சொல்வதில்லை. மற்ற தானங்களில் தானம் பெறுபவருக்கு இன்னும் தந்தாலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆனால் அன்னதானம் அப்படியல்ல, அன்னத்தை வயிறு நிறையச் சாப்பிட்டவர் வயிறு நிறைந்தபின் இன்னும் வேண்டும் என்று சொல்ல வாய்ப்பேயில்லை.

    ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்

    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

    உன்னோடு வாழ்தல் அரிது.

    என்கிறது அவ்வையாரின் நல்வழி நூலில் உள்ள பாடல்.

    இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை இப்போதே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றால் இயலாது. அந்தந்த வேளைக்குத் தான் சாப்பிட வேண்டும், அதுவும் வயிறு நிறைந்துவிட்டால் அதன்பின் சாப்பிட இயலாது.

    எனவே தானங்களிலேயே அன்னதானம் பெற்றவர் மட்டும்தான் போதும் என்று மனநிறைவோடு சொல்வார். அதன் காரணமாகவே அன்னதானம் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

    'உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என அன்னதானத்தின் சிறப்பைப் போற்றுகிறது மணிமேகலை. வற்றாமல் அன்னத்தை அருளும் அமுதசுரபி என்ற தெய்வீகப் பாத்திரத்தின் மூலம் எண்ணற்றவர்களுக்கு அன்னதானம் அளித்த மணிமேகலையைப் பற்றிப் பேசுகிறது அந்தக் காப்பியம்,

    பரம்பொருளான சிவன் அருவம் உருவம் அருவுருவம் என மூன்று நிலைகளில் காட்சி தருகிறார். அருவ நிலையில் ஆகாயமாக சிதம்பரத்தில் ஆராதிக்கப்படுகிறார். உருவமாக நடராஜராக வடிவம் கொண்டு பல்வேறிடங்களில் பூஜிக்கப்படுகிறார். அருவுருவாக லிங்க வடிவில் பல இடங்களில் போற்றப்படுகிறார்.

    அருவுருவம் என்பது உருவமும் உருவமின்மையும் இணைந்தது. லிங்க வடிவில் ஓர் உருவம் இருந்தாலும் அதற்கு கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் இல்லை, இவ்வடிவமே அன்னாபிஷேக வைபவத்தில் இடம் பெறுகிறது. இந்த லிங்க வடிவம் அன்னத்தால் கவசம்போல் மூடப்படுகிறது.

    இவ்விதம் அன்னாபிஷேகம் நிகழ்த்தும்போது சாமவேதம் ஓதப்படுகிறது. சிவன் சாமகானபிரியன் அல்லவா? ராவணனே சாமவேதம் இசைத்துத் தானே சிவனை மனங்குளிரச் செய்தான்?

    தமிழும் சமஸ்கிருதமும் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து பிறந்த இரு மொழிகள். அன்னாபிஷேகத்தின்போது தேவார திருவாசகப் பாடல்களும் பாடப்படுகின்றன. மொழி கடந்து நிற்கும் மூலப் பரம்பொருளை எந்த மொழியாலும் போற்றலாம் தானே? மதுரையில் சங்கத்தமிழ் வளர்த்த சிவனைத் தமிழ்ப் பாடல்களால் எளிதில் குளிர்வித்துவிட முடியும அல்லவா?

    இப்படி நாடெங்கும் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நிகழ்த்துவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் தோன்றாது என்பது ஆன்மிக நம்பிக்கை. விவசாயிகளுக்கு வளம் சேர்க்கும் விழா இந்த அன்னாபிஷேக விழா.

    நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். கடவுள் தான் அன்னத்தின் வடிவில் இருக்கிறான். நமக்கு அன்னமாய்ப் படியளப்பவனும் அவன்தான். சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வது என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.

    வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனியை மறைத்து, அதன் மேலாக காய், கனி வகைகளைச் சார்த்தி லிங்கத்தை அலங்கரிப்பார்கள். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சாதம் பின்னர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த சாதத்தை உண்டால் நோய்நொடி அணுகாது என்பது நம்பிக்கை.

    நல்ல உணவு உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியது அவசியம் என்கிறது நம் ஆன்மிகம். திருமூலர், விவேகானந்தர் போன்றோர் உடம்பின் முக்கியத்துவத்தைப் பற்றிக்கூறி அதைப் பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    என்பது திருமூலரின் திருமந்திரம். உடல் வலிமை குன்றினால் மெய்ஞ்ஞானம் கிட்டாது என்று அறைகூவுகிறார் திருமூலர்.

    சுவாமி விவேகானந்தரும் 'நீ கால்பந்து விளையாடி உடலை வலிமைப்படுத்து. அப்போதுதான் உனக்கு கீதை நன்றாகப் புரியும்' என்று கூறியிருக்கிறார்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்த துறவியரில் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை செலுத்திய தமிழ்த் துறவி வள்ளலார். அவரது உரைநடைத் தொகுப்பில் உடல்நலம் பேணுவது குறித்து ஏராளமான செய்திகள் உள்ளன.

    சுதந்திர காலத் தலைவர்களில் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை செலுத்தி ஏராளமான கருத்துகளை வெளியிட்டவர் மகாத்மா காந்தி.

    நாம் நம் உடலை வலிமைப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேகப் பெருவிழா நாடெங்கும் சிவன் கோவில்களில் நடைபெறுகிறது.

    ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அந்த உணவின் தன்மையைப் பொறுத்தே அவனது உள்ளமும் இயங்கும் என்கின்றன உபநிடதங்கள். இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட சாத்துவிக உணவை உண்பதன் மூலம் நம் உள்ளத்தைச் செம்மைப்படுத்தலாம்.

    அன்னத்தைக் கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    சிதம்பரத்தில் நாள்தோறும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது. அன்றுதான் சந்திரன் தன் பதினாறு கலைகளுடன் பூரணப் பொலிவுடன் காட்சி தருகிறான். பித்தா பிறைசூடி பெருமானே என்றல்லவா அடியவர்கள் பாடுகிறார்கள்? சந்திரனைத் தலையில் சூடியவனைச் சந்திரனின் ஒளி மிக அதிகமாகக் காணப்படும் நாளில் வழிபடுவதுதானே சிறப்பானது?

    இந்த வைபவத்தின் பின்னுள்ள புராணக் கதை என்ன?

    இருபத்தேழு நட்சத்திரங்களும் தட்சனுக்கு மகள்களாகப் பிறந்தார்கள். அவர்களை மணந்துகொண்டான் சந்திரன். ஆனால் கார்த்திகையிடமும் ரோகிணியிடமும் மட்டும் அதிக அன்புடன் நடந்துகொண்டான்.

    இதனால் மற்ற நட்சத்திரப் பெண்கள் வெறுப்புற்று தங்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டார்கள். தட்சன் உன் தோற்றப் பொலிவு மங்கி மறையட்டும் எனத் தன் மாப்பிள்ளைக்கு சாபம் கொடுத்தான்.

    சந்திரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கவே திங்களூர் சென்று சிவபெருமானை வழிபட்டுச் சாப விமோசனம் பெறுமாறு அறிவுறுத்தினான் தட்சன். அவ்விதமே திங்களூரில் தவம் செய்யத் தொடங்கினான் சந்திரன்.

    அவன் ஒளி தட்சனின் சாபத்தால் மங்கிக் கொண்டே வந்தது. மூன்றாம் பிறையளவு சந்திரன் தேய்ந்தபோது, சிவபெருமான் கருணைகொண்டு அதைத் தன் தலையில் சூடி அடைக்கலம் அளித்தான்.

    எனினும் தேய்பிறையாகவும் வளர்பிறையாகவும் அவன் மாறி மாறித் தோன்றுவான் என்றும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று அவன் முழுப் பொலிவுடன் காட்சி தருவான் என்றும் சிவன் வரம் அருளினான். சிவன் தலையில் உள்ள சந்திரன் முழுப் பொலிவு பெறும் நாளான ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது.

    அன்னாபிஷேகம் தொடர்பாக இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. பிரம்மனின் அகந்தையை அடக்கும் பொருட்டு பிரம்மன் தலையைச் சிவபெருமான் கொய்தார். அதனால் சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது.

    அந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அவரது பிச்சைப் பாத்திரத்தில் யாரேனும் உணவிட்டு அது நிரம்ப வேண்டும். காசி அன்னபூரணி அவ்விதம் உணவிட்டபோது பாத்திரம் நிரம்பவே சிவனின் தோஷம் நீங்கியது. அந்த நாள் ஐப்பசி பவுர்ணமி, அதனாலும் அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது.

    சிவன் பஞ்சபூத தலங்களில் குடிகொண்டு அருள்பாலிக்கிறான். பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் -நிலம் பிருத்வி லிங்கம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்-நெருப்பு ஜோதி லிங்கம், திருச்சி ஜம்புகேசுவரர் கோவில் -நீர் அப்பு லிங்கம், சிதம்பரம் நடராசர் கோவில்- ஆகாயம் ஆகாச லிங்கம், திருக்காளத்தி காளத்தீசுவரர் கோவில்-காற்று வாயு லிங்கம்.

    இவ்விதம் பஞ்ச பூதங்களின் வடிவாக உறையும் சிவனை பஞ்ச பூதங்களால் ஆன அன்னத்தால் அபிஷேகம் செய்து போற்றுகிறோம்.

    அன்னம் உருவாவதில் பஞ்ச பூதங்களும் பங்கு வகிக்கின்றன. நிலத்தில் தான் நெல் விளைகிறது. அதை விளைவிப்பது ஆகாயத்திலிருந்து வரும் மழை நீர். காற்றில்தான் நெல் வளர்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட அரிசி நெருப்பில் வெந்து சோறாகிறது.

    பஞ்ச பூத வடிவாக உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னத்தில் பஞ்ச பூதங்களின் பங்கும் அடங்கியுள்ளது.

    அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தின் ஒரு பங்கு குளத்தில் கரைக்கப்படுகிறது. அதன்மூலம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சிவன் படியளக்கிறார் என்பது ஐதீகம்.

    அன்னாபிஷேகம் தமிழகத்தின் தொன்மையான வழிபாடாகும். அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனிடம்தான் மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார். மன்னன் அவருக்கு அன்னாபிஷேகத்தைக் குறைவின்றி நடத்த நிலங்களைத் தானமாக அளித்திருந்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    ராஜராஜ சோழனும் அவனது மகன் ராஜேந்திர சோழனும் தஞ்சாவூரிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ததைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதி செய்கின்றன.

    கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன்.

    சாம வேதம் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறது என்பது இதன் பொருள்.

    அன்னாபிஷேகத்தன்று சிவலிங்கத்தின் மேல் சார்த்தப்படுகின்ற ஒவ்வொரு பருக்கைச் சோறும் ஒரு சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவனை தரிசித்தால் அது கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

    அன்னாபிஷேக சிவனைத் தரிசனம் செய்து கோடி சிவதரிசனம் செய்த புண்ணியத்தைப் பெறுவோம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×