என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி - விசாலாட்சிமங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி - விசாலாட்சி
- கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.
- துளசிதாசர், கபீர் தாசர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி.
ஏழு முக்தி தலங்களில் ஒன்று காசி!
அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகிய ஏழு மோட்சபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் காலம் காலமாக பக்தர்களால் மிகவும் விரும்பி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தலமாகும்.
இது சென்னையில் இருந்து சுமார் 1156 மைல் தொலைவிலும் லக்னோவில் இருந்து சுமார் 194 மைல் தொலைவிலும் உள்ள தலமாகும்.
1800 கோவில்கள் கொண்ட திரு நகரம்!
இதன் புனிதத்தன்மையையும் மகிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர்.
அன்னபூரணி, விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன அனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மகிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.
அத்துடன் மிக அதிகமான புண்ணிய நீராடல் கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.
காசி ரகசியம்!
கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி தலம் இருப்பதாக காசி ரகசியம் கூறுகிறது. காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.
காசிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய ரகசியம் ஒன்று உண்டு.
பிரளய காலம் என்று ஒன்று உண்டு. அப்போது மூலப்பொருள் தம் படைப்பு முழுவதையும் சுருக்கி ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது.
இதுவே மகாகவி கம்பன் ராமாயணத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் 'உலகம் யாவையும் தாம் உளவாக்கல்" என்பதாகும்.
பிறகு தக்க தருணம் வரும்போது அது வெளி விடுகிறது. அந்தக் குடுக்கையைப் பத்திரப்படுத்தும் இடம் தான் காசி திருத்தலம்!
ஆக பேரண்டப் படைப்பில், காசி தான் உற்பத்தி கேந்திரமாகவும் லய கேந்திரமாகவும் ஆகிறது. இப்படிப்பட்ட பெருமை வேறு எந்தத் தலத்திற்கும் கிடையாது.
இன்னொரு காரணமும் இந்தத் தலத்தின் சிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இதர தலங்களில் நல்வினை செய்தோருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். ஆனால் இந்தத் தலத்திலோ நல்வினை, தீவினை என்றில்லாமல் அனைவருக்கும் முக்தி கிட்டுமாம். இப்படி சனத்குமார சம்கிதை கூறுகிறது.
காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அசி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது.
காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள். அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.
64 கட்டங்கள்:
கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 நீராடல் கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.
அசி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அசி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.
வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான நீராடல் கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.
மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும்போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.
இந்த நீராடலை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று சுவாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக்கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம். மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.
காசி விசுவநாதர் ஆலயம்
பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று விஸ்வநாதர். காசி விசுவநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்கிரகம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.
இந்த ஆலயத்தை 1767 முதல் 1795 முடிய இந்தூரை ஆண்ட மகாராணி ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அவர் கோவிலுக்குச் செய்த நற்பணிகள் பற்பல.
கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.
அன்னபூரணி தேவி
தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது. ஆகவே காசியின் அரசியே அன்னபூரணி தான்!
இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோவிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன.
பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மண்டபத்தில் நின்று பலகணியின் வழியாகத் தான் தேவியைத் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.
இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக்கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.
அம்பாளின் அருகே இரு புறமும் தங்கத்தினால் ஆன ஸ்ரீதேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.
கருவறையில் மூலையில் சிறு பள்ளம் ஒன்றில் விசுவநாதர் கொலுவிருந்து அருளாட்சி செய்கிறார். விசுவநாதர் ஏன் ஓரத்தில் இருக்கிறார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
ராணி அகல்யாபாய் சிதிலமடைந்திருந்த கோவிலை மீண்டும் கட்ட முனைகையில், முன்பு போலவே ஐந்து மண்டபங்கள் கொண்டதாக கோவில் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் விசுவநாதரின் திருவிளையாடல் அப்போது அரங்கேறியது.
"நான்கு புறமும் வாசல்கள் உள்ள ஒரு மண்டபம் கட்டிக் கற்பூரத்தைப் போடுங்கள். எங்கே அது தானாகவே பற்றி எரிகிறதோ அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று ஒரு அசரீரி எழுந்ததாம். ஆகவே தான் விசுவநாதர் கற்பூரம் தானாகவே பற்றி எரிந்த இடமான ஓர இடத்தில் இருக்கிறார்.
விசுவேசுவரர் லிங்கம் சிவசக்தி சொரூபமாக இருக்கிறது. லிங்கத்தின் மேல் பாகம் குமிழ் போல இருக்கிறது. அது சிவ வடிவம் என்றும் கீழ்ப்பாகம் சக்தி வடிவம் என்றும் சொல்லப்படுகிறது.
விசாலாட்சி ஆலயம்:
அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் சிறு சந்து ஒன்றில் விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம்.
பவுர்ணமி அன்று அம்மனுக்கு அபிஷேகம் உண்டு. விஜயதசமி அன்று தங்க விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறாள். கோவிலுக்குள் அம்பு விடும் உற்சவமும் நடைபெறுகிறது.
கால பைரவர் ஆலயம்:
காசிக்குச் சென்று திரும்பும் யாத்ரீகர்கள் திரும்பும்போது கால பைரவரைத் தரிசித்து விட்டுத் திரும்புவது மரபு. கால பைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்திற்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. கால பைரவரே காசி தலத்தின் காவல் தெய்வம். இவருக்கு வாகனம் நாய். கலமும் உடுக்கையும் மழுவும் பாசக்கயிறும் ஏந்திய ஈசனின் திரு உருவமாகவே காலபைரவரைக் கருதுகின்றனர். அவர் உள்ள இடத்தில் யமபயம் இல்லை என்பது ஐதீகம்.
நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அவர் போக்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் இதற்காக நம்மை மயில் இறகால் தட்டி ஆசீர்வதிப்பதோடு கையில் காசிக் கயிறு கட்டி விடுகிறார்கள். இந்தக் கயிறு விசேஷமானது. பல ஆண்டுகளுக்கு அறுந்து போகாமல் இருப்பது இது. இது நம்மைக் காக்கும் ஒரு காப்பு என்று கருதப்படுகிறது.
மகான்கள் தவம் புரியும் இடம்
துளசிதாசர், கபீர் தாசர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் தவம் புரியும் இடமும் இதுவே.
கங்கைக் கரையில் ஈசன் தேவியுடன் திரு நடனம் ஆடிய இடம் காசி என்று அறநூல்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும். இது ஐதீகம்.
காசி யாத்திரை மேற்கொள்வோம். அம்பிகை மற்றும் ஈசன் அருளைப் பெறுவோம்!.
தொடர்புக்கு:-
snagarajans@yahoo.com






