என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  வெப்பத்தை தணிக்கும் வாழ்வியல் முறைகள்
  X

  வெப்பத்தை தணிக்கும் வாழ்வியல் முறைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெயில் காலத்தில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பம் தணியும், மன அழுத்தம் குறையும்.
  • உடற்பயிற்சியை பொருத்தவரை அதிகாலையில் மிதமான உடல்பயிற்சியை நல்ல காற்றோட்டமான இடத்தில் செய்யலாம்.

  நம் முன்னோர்கள் பெரும்பொழுதை கார்காலம், கூதிர்காலம், முன்பனிகாலம், பின்பனிகாலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஆறுவகையாக இலக்கண விளக்க நூலில் தொகுத்து உள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் இளவேனில் காலம் நடக்கிறது. இக்காலத்தில் பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நேராக எதிர்கொள்வதால் சூரியனின் கதிர் நேரடியாக பூமியின் மீது விழுகிறது. அதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கிறது.

  "அண்டத்தில் உள்ளதே பிண்டம்" என்பதற்கிணங்க தம் உடலிலும் வியர்வையும் வெப்பமும் பெருகும். அதன் விளைவாக எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமை, உடல் வறட்சி, அதிக வியர்வை காரணமாக உடல் அசதி, சோம்பல், சரும பிரச்சினை தசைபிடிப்பு போன்றவை ஏற்படும். குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், உயர்குருதி அழுத்தம், நீரிழிவு போன்ற இணைநோயுள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவேண்டிய காலகட்டம் இது.

  இந்த நாட்களில் என்னென்ன காரியம் செய்யலாம். எவை செய்யக்கூடாது என்பதை நம் முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.

  கோடைகாலத்தில் முதலில் நாம் உடலுக்கு போதுமான நீரை பருக வேண்டும். சராசரியாக 2.7- 3.7 லிட்டர் நீரை தினமும் பருகுவதன் மூலம் அதிகப்படியான வியர்வை காரணமாக ஏற்படும் நீரிழப்பை தவிர்ப்பதோடு நீர்பாதை தொற்றில் இஅருந்தும் தப்பலாம்.

  பொதுவாக நாம் குடிக்கும் நீரில் இரண்டு அல்லது மூன்று தேற்றான்கொட்டையை இழைத்து விட்டு ஐந்து (அ) ஆறு மணி நேரம் அசையாது வைத்திருக்க நீரிலுள்ள நுண்ணிய மலினங்கள் பாத்திரத்தின் அடியில் தங்கும். கோடைக்காலத்தில் தேற்றான்கொட்டையோடு சிறிது நெல்லிக்கனி/நெல்லிக்கட்டை, நன்னாரி, சீரகம் அல்லது வெட்டிவேர் சேர்த்து ஊறவைத்து பருக பித்தம் தணிந்து, வயிற்றுநோய், சுரம் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும். தேற்றான்கொட்டை, நெல்லிக்கனி போன்றவை கற்பவினம் என்பதால் நோயில்லாமல் நெடுநாள் வாழ வழிவகுக்கும்.

  மேலும் இக்காலத்தில் அதிகப்படியான வியர்வை உண்டாவதால் ஏற்படும் தாது உப்புகள் இழப்பை சரிசெய்ய இளநீர் பருகி வரலாம். இதிலுள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இழந்த நீர்ச்சத்தை சீர் செய்து சோர்வை உடனே நீக்கி நன்மை பயக்கும்.

  அடுத்து நாம் பின்பற்ற வேண்டியது பருவத்திற்கேற்ற காய், கனிகள் உண்ணுதல் இதன் மூலம் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் புத்துணர்வும் பெருகும். உடற்கழிவுகளும், நச்சுபொருட்களும் எளிதில் உடலை விட்டு வெளியேற துணை செய்யும்.

  ராஜகனி என்று அழைக்கப்படும் எலுமிச்சை உடல்சூட்டை தணிப்பதுடன், நீர்வேட்கையையும் குறைக்கும். இதில் பெரும்பங்கு உள்ள வைட்டமின்-சி மற்றும் பிளேவனாய்டுகள் பிரி ரேடிகலுக்கு எதிராக செயல்பட்டு, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நுண்ணுயிரி தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

  இந்த சமயத்தில் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியது வெள்ளரிக்காய். இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதன்மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி சருமத்திற்கும் பல நன்மைகளையும் தரும். வெப்பத்தால் ஏற்படும் தோல் சிவத்தல், எரிச்சல் போன்றவற்றை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும். கண் கருமை, சுருக்கம், வெயிலால் தோலில் ஏற்படும் கருமை போன்றவற்றையும் நீக்கும். இதிலுள்ள சிலிக்கா நகம் மற்றும் முடி பாதுகாப்பிற்கு பெரிதும் பயன்படும். மேலும் நீரிழிவு நோயளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.

  வெம்மையில் இருந்து நம்மை பாதுகாக்க நாம் அடுத்தாக எடுத்துக்கொள்ள வேண்டியது தர்பூசணி. இரும்புச்சத்து, வைட்டமின் A, C, B1, B6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் நிறைந்துள்ளது. இதிலுள்ள சிட்ரிலின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நார்ச்சத்தும், நீர்சத்தும் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை சரி செய்யும். உடல் உஷ்ணம் குறைந்து மனம் அமைதியாகும்.

  மேலும் பழங்களின் அரசனான மாம்பழம். வைட்டமின் B6, A, C, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவற்றை நிரம்ப பெற்றுள்ளதால், அனைவரும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள பெக்டின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவிசெய்யும் மற்றும் குளுடாமின் அமிலம் ஞாபக சக்தி அதிகரிக்க துணை செய்கிறது. இதனை முறைப்படி புசித்து வர மனத்தளர்ச்சி, வன்மை குறைவு முதலியன ஒழியும். பஞ்சேந்திரியங்களுக்கு பலம், தெளிவு, சிரசு, முழங்கால்களுக்கு வன்மை, ரோம வளர்ச்சி, நற்றொளி இவை உண்டாகுமென சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

  இயற்கை மருத்துவர் நந்தினி

  அடுத்ததாக கடைபிடிக்க வேண்டியதில் முக்கியமானது "எண்ணெய் குளியல்" நம் முன்னோர்கள் "வைத்தியருக்கு கொடுப்பதை வாணியருக்குக் கொடு" என்று கூறுவதுண்டு. நோய் வந்து வைத்தியருக்கு செலவு செய்வதைவிட எண்ணெய் பொருள் தயாரிக்கும் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி குளியல் செய்து வந்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பதே அதன் அர்த்தம். எண்ணெய், முக்கூட்டு நெய், பசு நெய் போன்றவைகளை வாரம் இரு முறை தேய்த்து முழுகி வர எந்த ரோகமும் அணுகாது.

  பெண்கள் வெள்ளி மற்றும் செவ்வாய், ஆண்கள் புதன் மற்றும் சனி ஆகிய இரண்டு நாள்களில் எண்ணெய் முழுக்கு செய்யலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது நம் முன்னோர்கள் கூறிய விதிகளையும் பத்தியங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

  சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் உதயமான ஐந்து நாழிகைக்குள் அதாவது 2 மணி நேரத்திற்குள் எண்ணெய் குளியல் செய்தால் நோயில்லாத தேகம் பெறலாம். எண்ணெய் தேய்க்கும் பொழுது இரண்டு காதுகளிலும் மும்மூன்று துளியும், மூக்கில் இரண்டிரண்டு துளியும் விட்டு பின்பு உச்சி முதல் அனைத்து உடல் அங்கங்களிலும் சூடெழும்பாமல் குளிரத் தேய்க்க வேண்டும்.

  இரண்டு காதுகளில் எண்ணெய் விடுவதால் சிரசின் நோயும். கண்களுக்கு தேய்ப்பதினால் செவி நோயும், பாதங்களில் தேய்ப்பதனால் கண்களின் நோயும், சிரசிலிட்டு முழுகுவதால் அனைத்து நோய்களும் விலகும்.

  தைலம் தேய்த்து கொஞ்சம் ஊறிய பிறகு மாவிலைகொழுந்து இரண்டு மூன்று இட்டு காய்ச்சிய வெந்நீரில் குளியல் பொடி தேய்த்து முழுகலாம். சுத்த குளியலுக்கு மணமுள்ள அரைப்பு வேண்டுமானால் பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகி, விலாமிச்சம் வேர், கிச்சிலிக்கிழங்கு போன்ற சரக்குகளை சேர்த்திடித்த நலங்குமா உபபோகிக்கலாம்.

  குளியல் செய்து முடித்தவுடன் உடல் மற்றும் கூந்தலை சிறிதும் ஈரமில்லாமல் உலர்த்த வேண்டும். தலையை உலர்த்தாமல் முடிந்தால் தலைபாரம், தலைவலி, சுரம் உண்டாகக்கூடும். சாம்பிராணி கொண்டு தூபம் போட்டுக் கொண்டால் கூந்தல் சீக்கிரம் உலரும்.

  பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து வரலாம். அதனால் வெயிலினால் ஏற்படும் வியர்வை, கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள் நீங்கும் என பதார்த்த குண சித்தாமணி என்னும் நூல் விளக்குகிறது.

  மேலும் இக்காலத்தில் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். அதிக புழுக்கம், வியர்வை ஏற்படும்பொழுது மின் விசிறியோடு நாம் பனை, வெட்டிவேர் போன்றவற்றால் செய்த விசிறிகளையும் பயன்படுத்தலாம். வெட்டிவேர் விசிறி தேக எரிச்சல், நீர்வேட்கையை நீக்குவதோடு மன ஊக்கத்தையும் கொடுக்கும். பனையோலை விசிறி வாத, பித்த மற்றும் கப நோய்களை நீக்கும்.

  பொதுவாகவே நாம் மருதாணி இட்டுக்கொள்வது மிகவும் நல்லது. இவ்வெயில் காலத்தில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பம் தணியும், மன அழுத்தம் குறையும். நமது கண்ணுக்கு புலப்படாத பல கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் மருதாணி இலைக்கு உண்டு. நகங்களில் ஏற்படும் நோய் தொற்றையும் இது சரி செய்யும்.

  உடற்பயிற்சியை பொருத்தவரை அதிகாலையில் மிதமான உடல்பயிற்சியை நல்ல காற்றோட்டமான இடத்தில் செய்யலாம். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் அதிக சூடாகி, சோர்வு ஏற்படும். எனவே தத்தம் வன்மைக்கு அரைபங்குக்கு மேற்படாமல் பயிற்சி செய்ய வேண்டும். மிதமான உடற்பயிற்சிகள் செய்து உடல்வன்மை மற்றும் புத்துணர்ச்சியை பெறலாம்.

  வெயிலின் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு கிடைத்த அரும்பெரும் உணவு நுங்கு. கோடையில் வெயில் கொப்புளம் ஏற்படாமல் தடுப்பதோடு, வயிற்று புண்ணையும் சரி செய்கிறது. மேலும் நுங்கின் நீரை மேல்தடவி வர வேர்குரு மறையும். நுங்கில் VIT-B, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிரம்பி உள்ளது. இதில் உள்ள ஆந்தோசயனின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவும். கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும்.

  நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை நாமும் பின்பற்றி கோடையின் வெப்பத்தை வெல்வோம்.

  Next Story
  ×