என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மூலம் நட்சத்திரம் தோஷமா?
    X

    மூலம் நட்சத்திரம் தோஷமா?

    • உண்மையில் மூலம் நட்சத்திரம் உன்னதமான நட்சத்திரம். ஒரு குடும்பத்திற்கு பலம் சேர்க்கும் நட்சத்திரம் ஆகும்.
    • ஒரு மூலம் நட்சத்திரக்காரரை வேறு ஒரு நட்சத்திரக்காரர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அந்த நபர் வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையுமே சந்திக்க மாட்டார்.

    ஜாதகத்தில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மூலம் நட்சத்திரம் இருப்பதாக தெரிய வந்தால் பெரும்பாலானவர்கள் பதட்டம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மூலம் நட்சத்திரம் என்றாலே அது ஆகாத நட்சத்திரம் என்ற ஒரு மாயை மக்கள் மனதில் மிக மிக ஆழமாக பதிந்து விட்டது. ஜோதிட உலகில் உள்ள எத்தனையோ மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றுதான் என்று இதை சொல்ல வேண்டும்.

    உண்மையில் மூலம் நட்சத்திரம் மிக மிக அருமையான நட்சத்திரம் ஆகும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் 19-வது நட்சத்திரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக மிக சிறந்து விளங்குவார்கள்.

    ஒருவரது ஜாதகத்தில் அனைத்து பாதங்களிலும் மூலம் நட்சத்திரம் இருந்தால் அவர்கள் கல்வியில் மிக மிக சிறந்து விளங்குவார்கள். இல்லறத்திலும் சரி, ஆன்மிகத்திலும் சரி அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். மூலம் நட்சத்திரம் மற்ற கிரக அமைப்புகளுடன் வலுவாக இருக்கும் பட்சத்தில் அவர் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார்.

    பொதுவாகவே மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆலய பணிகளுக்கு முன்நின்று உதவி செய்வார்கள். கம்பீரமான தோற்றம், யாரையும் கவர்ந்து இழுக்கும் வாக்கு தன்மை ஆகிய இரண்டும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அடிப்படையாக அமைந்து இருக்கும்.

    மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் செய்தாலும் சரி அல்லது மற்றவர்களிடம் பணிபுரிந்தாலும் சரி அவர்களது திறமை தனித்துவம் கொண்ட தாக காணப்படும். தொழிலில் எதை தொட்டாலும் வெற்றி பெறுவார்கள். அதற்காக எந்த விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

    அதே சமயத்தில் அவர்களிடம் இரக்க குணமும் மிகுந்து இருக்கும். ஏழை-எளியவர்களுக்கு தாராளமாக உதவி செய்வார்கள். அதுபோல குடும்ப உறுப்பினர்களிடம் அளவு கடந்த பாசத்துடன் காணப்படுவார்கள். சுயமரியாதை மிகுந்த இவர்கள் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள்.

    எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் மூலம் நட்சத்திரம் என்றதும் ஆகாத நட்சத்திரம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் வழக்கம் மக்களிடையே காணப்படுகிறது. குறிப்பாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்தால் மாமனார் அல்லது மாமியாருக்கு ஆகாது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விடுவது உண்டு.

    ஆனால் இதில் எந்த உண்மையும் கிடையாது. எதனால் இத்தகைய பேச்சுவழக்கு நடைமுறைக்கு வந்தது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மூலம் நட்சத்திரத்தில் முதல் பாதம் நவாம்சத்தில் மேஷ ராசியில் இடம் பெறும். மேஷ ராசி என்பது சூரியன் உச்சம் அடையும் ராசியாகும். அதாவது ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு சூரியன் என்பது அவரது மாமனாரை குறிக்கும்.

    இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண் ஒரு குடும்பத்துக்குள் செல்லும்போது அந்த வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த பெண்ணுக்கு தானாகவே வந்து விடும். அதற்கு காரணம் மூலம் நட்சத்திரம். மாமனார் உயிரை எடுத்து விட்டு இது வரும் என்று அர்த்தமல்ல. அந்த பெண்ணுக்கு உள்ள தனித்திறமையால் அது கிடைக்கும்.

    இதுவரை நிர்வாகம் செய்து குடும்பத்தை கட்டிகாத்து வரும் மாமனாருக்கு புதிதாக பெண் நிர்வாக பொறுப்பு ஏற்பது பிடிக்கவே பிடிக்காது. இதைதான் ஜோதிடர்கள் மேலோட்டமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்லி விடுவார்கள். இப்படி சொல்லி சொல்லிதான் மூலம் நட்சத்திரம் என்றால் ஏதோ பயங்கரமான நட்சத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு ஆகி விட்டது.

    உண்மையில் மூலம் நட்சத்திரம் உன்னதமான நட்சத்திரம். ஒரு குடும்பத்திற்கு பலம் சேர்க்கும் நட்சத்திரம் ஆகும். ராம பக்தனான அனுமனின் நட்சத்திரம் மூலம்தான். அதனால்தான் அனுமனால் இலங்கை சென்று சீதையை மீட்க உதவிகள் செய்ய முடிந்தது.

    ஒவ்வொரு நட்சத்திரமும் நமது உடல் அமைப்பில் ஒரு பகுதியை குறிக்கும். அந்த வகையில் மூலம் நட்சத்திரம் நமது மூலாதார பகுதியை குறிப்பதாகும். இந்த மூலாதாரம் என்பது நமது உடலில் உள்ள 7 சக்கரங்களில் முதன்மையானது. மூலாதார சக்கரம் முனைப்பாக வேலை செய்தால்தான் மற்ற 6 சக்கரங்களும் செயல்படும்.

    மூலம் நட்சத்திரம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணமே போதும். ஆனால் மூலம் நட்சத்திரம் என்பது கேது எனப்படும் நிழல் கிரகத்தின் கீழ் வருவதால் அதை தோஷமான நட்சத்திரம் என்ற பட்டியலில் சேர்த்து விட்டனர்.

    அதாவது மூலம் 1, 2, 3 பாதம் என்றால் மாமனாருக்கு ஆகாதாம். கேட்டை 2, 3, 4 பாதமானால் கணவரின் மூத்த சகோதரருக்கு ஆகாதாம். விசாகம் 4-ம் பாதமானால் கணவரின் இளைய சகோதரருக்கு ஆகாதாம். ஆயில்யம் 2, 3, 4 பாதனால் மாமியாருக்கு தோஷம் என்றெல்லாம் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

    மூலம் நட்சத்திரத்தின் சிறப்பையும், மூலம் நட்சத்திரத்தை தொடர்புபடுத்தி சொல்லப்படும் பழமொழிகளின் உண்மையையும் உணர்ந்து புரிந்து கொண்டவர்கள் மூலம் நட்சத்திரத்தை ஒரு போதும் தவறாக சொல்ல மாட்டார்கள். புரியாதவர்கள்தான் மூலம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வேண்டாம் என்று சொல்லும் மரபின் மயக்கத்தில் இப்போ தும் இருக்கிறார்கள். இதனால்தான் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஏராளமான வர்கள் உரிய காலத்தில் திருமணம் கைகூடாமல் கடுமையாக தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து வைத்தால் அவர்களது வாழ்க்கை மற்றவர்களை விட சிறப்பானதாகவே இருக்கும். அதாவது ஒரு மூலம் நட்சத்திரக்காரரை வேறு ஒரு நட்சத்திரக்காரர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அந்த நபர் வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையுமே சந்திக்க மாட்டார்.

    ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் ஜாதக ரீதியாக திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால் மூலம் நட்சத்திரத்தில் மட்டும்தான் இந்த நட்சத்திரம் கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தாராளமாக திருமணம் செய்யலாம் என்பார்கள்.

    என்றாலும் சிலர், "ஆண் மூலம் அரசாளும். பெண் மூலம் நிர்மூலம்" என்ற பழமொழி எப்படி வந்தது என்று கேட்கக்கூடும். இதுவும் பேச்சு வழக்கில் தவறாக மாறி விட்ட ஒன்றுதான். "ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்" என்பது தான் சரியானதாகும்.

    அதாவது ஆனி மாதம் பவுர்ணமி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்துடன் இருப்பார்கள் என்பார்கள். அதுபோல ஆனி மாதத்திற்கு பிறகு வரும் மாதங்களில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் எதிரிகளை நிர்மூலம் ஆக்குவார்கள் என்பதுதான் உண்மையான கருத்தாகும்.

    இதைத்தான் சுருக்கமாக ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்று சொல்லி வைத்தார்கள். புலிப்பானி சித்தரின் ஜோதிட நூல் உள்பட பண்டைய ஜோதிட நூல்களில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஜோதிடர்கள் எதுகை மோனைக்காக ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று எக்குத்தப்பாக சொல்லி வைத்ததால் அதுவே இப்போது உண்மை என்பது போல உலா வருகிறது.

    எனவே மூலம் நட்சத்திரம் தோஷமானது அல்ல. ஒருவேளை நீங்கள் தோஷம் என்று நினைத்தால் தினமும் காலையில் விநாயகரை வழிபடுங்கள். கோவில்களுக்கு நிறைய தானம் செய்யுங்கள். பிரமோற்சவம் நடக்கும்போது கோவில்களில் கொடி ஏற்றுவார்கள். அந்த கொடி செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    ஆலயங்களுக்கு சென்று மூலம் நட்சத்திர பரிகாரம் அல்லது பிரார்த்தனை பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம், திருநீர்மலை பெருமாள் ஆலயம், திருவதிகை சிவாலயம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.

    Next Story
    ×