search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையிலும் நலமாக மகிழ்வாக வாழலாம்..!
    X

    முதுமையிலும் நலமாக மகிழ்வாக வாழலாம்..!

    • கை, கால், மூட்டு, உடல், முதுகுத்தண்டுவட வலிகளுக்கு அமுக்கரா சூரண மருந்தை பாலில் கலந்து எடுக்கலாம்.
    • சிரிப்பு, தூக்கம் , மன மகிழ்ச்சி இவை மூன்றும் முதுமைக்கு மிகவும் அவசியம்.

    'முதியோர் நலனில் சித்த மருத்துவம்' என்ற நலத்திற்கான பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கிவிட்டது. அநேகமாக பல்வேறு முக்கிய நோய்நிலைகளைப் பற்றியும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதியது முதுமையில் பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இருப்பினும் முதுமையில் நலமாய் வாழ முடியுமா? என்ற ஐயப்பாடு பலருக்கு உண்டு.

    முதுமை என்பது எண்ணற்ற மாற்றங்களும், சவால்களும் நிறைந்தது. அத்தகைய மாற்றங்கள் மற்றும் சவால்களை கடந்து ஆரோக்கியத்தை உறுதியாக்க வேண்டியது முதுமைக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆரோக்கியம் என்பது உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் இருக்க வேண்டியது முதுமைக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும் பொதுவானதே. அத்தகைய ஆரோக்கியம் முதுமைக்கு கூடுதல் சவாலாக உள்ளது.

    முதுமையில் சிலருக்கு பல்வேறு உடல் வியாதிகள். சிலருக்கு ஒரு சில நோய்நிலைகள் மட்டுமே. ஏன் இவ்வளவு மாற்றம்? முதுமை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் துன்பங்களும், துயரங்களும் நபருக்கு நபர் மாறுபடுகிறது என்ற எண்ணம் பலருக்கு உண்டு.

    இது எனக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது? என்று புலம்பும் சூழலும் உண்டாகிவிடும். முதுமையில் நோய்கள் என்பது சாதாரணம் தான். நோய்நிலைகள் எவ்வாறு இருப்பினும், எதையும் தாங்கும் மன தைரியம் முதுமையில் இருந்தால், வாழும் வரை ஆரோக்கியமாக வாழலாம்.

    முதுமையில் நலமாய் வாழ, சில வழிமுறைகளை தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். அதன்படி முதலில் நோய் பாதிப்புள்ளவர்கள் தங்களுக்கான மருந்துகளை பட்டியலிட்டு அவ்வப்போது மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மருந்துகளை ஒரு போதும் தவற விடக்கூடாது. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் சார்ந்த மருந்துகளை மறவாமல் எடுத்துக்கொள்வது அவசியம். 'நோய் வந்தது வந்துவிட்டது, பிறகு என்ன ஒரு கை பார்த்துவிடலாம்' என்ற மனதிடம் அவசியம் வேண்டும். நோய் வந்து விட்டதே என்று அதையே எண்ணி புலம்புவதால் கெடப்போவது தனது ஆரோக்கியம் தான் என்பதை உணர வேண்டும்.

    முதுமையில் நோயால் பாதிக்கப்படுவது என்பது சாதாரணம் என்ற எண்ணமும், மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சரியாகி விடும் என்ற எண்ணமும் உருவாக வேண்டும். சில சமயங்களில் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகளும், மருந்து மாத்திரைகளும் மன சலிப்பை உண்டாக்கக்கூடும். இருப்பினும் அதை அனைத்தையும் புறந்தள்ளி வாழ்க்கையில் தன்னம்பிக்கை நடைப்பயணத்தை தொடர வேண்டும். அவ்வப்போது நடைப்பயிற்சியும், தியானப்பயிற்சியும், யோகாசனப்பயிற்சியும் முதுமையின் தன்னம்பிக்கையை கூட்ட உதவும்.

    முதுமையில் பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில், சித்த மருந்துகளை தாங்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாமா? என்ற ஐயப்பாடும் பலருக்கு ஏற்படும். அந்த ஐயத்தைப் போக்க எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளை சித்த மருத்துவரிடம் காட்டி ஆலோசனைப் பெற்று எடுத்துக்கொள்வதும் நல்லது.

    முக்கியமாக தலைவலி, உடல் வலி, மூட்டு வலி போன்ற தொந்தரவுகளுக்கு முதுமையில் பலர் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இச்செயல் முதுமையில் செயல் குறைந்த முக்கிய உள்ளுறுப்புகளை மேலும் பாதிக்கும்.

    சித்த மருந்துகளில் சில மருந்துகளை முதியோர்கள் அனைவரும் கைவசம் வைத்துக்கொள்வது நல்லது. அமுக்கரா கிழங்கு சூரணம், திரிபலை சூரணம், திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம், நிலாவாரை சூரணம், ஏலாதி சூரணம், பிண்ட தைலம், அருகன் தைலம் ஆகியன அவற்றில் சில. மேற்கூறிய மருந்துகளை சாதாரண உடல் உபாதைகளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    கை, கால், மூட்டு, உடல், முதுகுத்தண்டுவட வலிகளுக்கு அமுக்கரா சூரண மருந்தை பாலில் கலந்து எடுக்கலாம். இது தூக்கமின்மை நிலையிலும் பலன் தரும். திரிபலா சூரணத்தை ஐம்பது வயதைக் கடக்கும் அனைவரும் எடுத்துக்கொள்ள பழக வேண்டும். இரவில் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது ஐம்பது வயதுக்கு பின்னர் வரும் பெரும்பாலான நோய்நிலைகளில் பலன் தரும். அதோடு என்றும் பதினாறு மார்கண்டேயனைப் போல் இருக்க வழிவகை செய்யும். சாதாரண சுவாசப்பாதை தொற்றுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நாடுவதைக் குறைத்து திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம் ஆகிய மருந்துகளை நாடலாம். இவற்றில் ஒன்றை தேனில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரம் தொடர்ந்து ஆன்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதால் பாதிக்கப்படும் குடல் மீண்டும் சீராக ஒரு ஆண்டு கூட ஆகலாம் என்கின்றன நவீன அறிவியல் ஆய்வுகள். ஆகவே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது.

    அத்துடன் இருமல், சளி தொந்தரவுக்கு ஆடாதோடை மணப்பாகும், பித்தம் கூடின வெயில் காலத்தில் மாதுளை மணப்பாகும், நன்னாரி மணப்பாகும் நற்பலன் தரும். மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்தம் பேணவும் அவ்வப்போது நிலாவாரை சூரணம் இரவில் வெந்நீரில் கலந்து எடுக்கலாம். இது இன்ன பிற நோய்நிலைகளையும் தடுக்க உதவும்.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள எளிய மருந்துகளை நாடுவதால், தேவையின்றி ஏற்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளை குறைக்க முடியும். இதுவும் ஒருவகையில் ஆயுளை நீட்டிக்க உதவும். அஞ்சறைப்பெட்டி சரக்குகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்தாய் பயன்படுத்துவது நல்லது.

    உணவைக் குறைப்பது முதுமைக்கு நல்லது. மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்பதால் முதுமையில் உணவைக் குறைத்து உடல் எடையை பேணிக்காப்பது நோய்களை வராமல் தடுக்கும் எளிய யுக்தி முறை.

    தேரையர் சித்தர் கூறும் பிணியணுகாமல் தடுக்கும் விதிமுறைகளை கடைபிடித்து வருவது முதுமைக்கு நல்லது. "நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்பவர் தம் பேருரைக்கிற் போமே பிணி" என்கிறது தேரையர் சித்தரின் பாடல். அதன்படி எக்காலத்தும் குடிக்கும் நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்து வருவதும், அன்றாட உணவில் நெய் சேர்த்து வருவதும், மோரினை நீர் அதிகம் சேர்த்து பயன்படுத்துவதும் உடலுக்கு நல்லது.

    மேலும் அதில் கருணைக்கிழங்கை தவிர பிற கிழங்குகளை தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பிற கிழங்குகள் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதாகவும், வாதத்தைக் கூட்டி எல்லா நோய்நிலைகளையும் அதிகரிப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை கடைபிடிக்கும் இடத்தில் எமனுக்கு வேலை இல்லை என்கிறது தேரையர் சித்தரின் பாடல் வரிகள். எனவே முதுமையில் ஆயுளை நீட்டிக்க அனைவரும் இவற்றை பின்பற்ற வேண்டும்.

    சரியான உணவு, பசித்த பின் புசித்தல், அத்துடன் மருந்து மாத்திரைகள், அளவான தூக்கம், அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி இவையே முதுமைக்கு அத்தியாவசியம். இவற்றை பின்பற்றுவது முதுமையின் ஆயுளுக்கு பக்க பலம்.

    சிரிப்பு, தூக்கம் , மன மகிழ்ச்சி இவை மூன்றும் முதுமைக்கு மிகவும் அவசியம். இவற்றை யாருக்காகவும் விட்டுத்தராமல் இருப்பது நல்லது. நல்ல தூக்கமே ஒரு வகையில் புத்துணர்ச்சியோடு மன மகிழ்ச்சி தரும். மதிய நேரத்தில் சற்று ஓய்வு, இரவு நேரங்களில் குறைந்தது 7 மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் பல வியாதிகளை ஓட்ட உதவும். இவை இரண்டும் இல்லாவிட்டால் மருத்துவமனை வாசலை தேடி ஓட வேண்டி இருக்கும். ஆக, எவையெல்லாம் முதுமைக்கு அவசியம் என்பதை பட்டியலிட்டு பின்பற்றுவது சிறந்தது.

    இவ்வாறு ஆரோக்கியத்திற்கான பாதையில் தான் நடப்பதோடு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுதலும் முதுமைக்கான கூடுதல் பொறுப்பு. ஆகவே தனது வாழ்க்கை அனுபவங்களையும், சமூக பொறுப்புகளையும், ஆரோக்கியத்துடன் சேர்த்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது முதுமையின் கடமை. தன் காலம் முடிந்து விட்டது, இனி நம்மால் எந்த பயனும் இல்லை என்று தங்களாவே நினைத்துக்கொண்டு மனம் உடைவது சரியல்ல. ஏனெனில் முதியவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தூண்கள். ஆகவே முதுமையை பாரமாய் நினைக்காமல் முதியோர்களை அடுத்த தலைமுறையினரின் வழிகாட்டியாய் நினைத்து பாவித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது சமூகத்தின் கடமை.

    மருத்துவர் சோ.தில்லைவாணன், 8056040768

    சுருக்கமாக, முதுமையில் நாட்பட்ட நோய்களை நிர்வகிப்பது, அதற்கான மருந்துகளை கையாள்வது, அடுத்து வரப்போகும் நோய்களை தடுப்பது, வாழ்வியல் முறை ஆதரவு, முற்றிலும் இயலாத நிலையில் பிறரின் உதவி, ஆகிய ஐந்தும் மிக மிக அவசியமாகின்றன.

    முடிவாக "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி" ஆகிய தத்துவப் பாடல்களை எல்லாம் முதுமையில் ஓரம்கட்டிவிட்டு, "இளமை எனும் பூங்காற்று" எனும் பாடலை மனதில் நிறுத்தி, மன தைரியத்துடன் அன்பினை கைகோர்த்து, அக்கறையோடு பெயரன் பெயர்த்திகளோடு கொஞ்சி விளையாடி, நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து, மனதிற்கு இதமான பழங்கால நினைவுகளோடு நாட்களைக் கழித்தால், முதுமையில் இளமையோடு நலமாய் வாழ முடியும். முதுமை என்பது சாபம் அல்ல. முதுமை என்பது நிச்சயம் வரம் தான்.

    -முற்றும்-

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×