என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

காமராஜர் - ராஜாஜி
காமராஜரின் கட்சிப் பணிகளும் தொழிற்சங்கப் பணிகளும்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
- காந்திஜியின் விருப்பத்திற்கு மாறாக, பிரகாசம் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனதால், அவருக்கு எந்த ஒத்துழைப்பையும் தர வேண்டாமென்று, காமராஜரின் நண்பர்கள் வற்புறுத்தினர்.
- ராஜாஜி தன்னை எதிர்த்துத் தான் காய்களை நகர்த்துகிறார் என்பது தெரிந்தும், அவருக்குள்ள மரியாதையை காமராஜர் கொடுக்கத் தவறியதில்லை.
காமராஜரின் கட்சிப் பணிகளும் தொழிற்சங்கப் பணிகளும்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
தமிழகத்தில் காமராஜரை விட்டுவிட்டு, அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டு விட்டார் காந்திஜி. ராஜாஜியினால் காமராஜரை எதிர்த்து நின்று வெல்ல முடியாது என்பதையும் காந்திஜி புரிந்து கொண்டு விட்டார். இருந்தாலும் முதிர்ந்த அரசியல் வாதியான ராஜாஜிக்கு தமிழகத்தில் ஒரு முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமென்பதில் காந்திஜியும் சில மேலிடத் தலைவர்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
1946-ல் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று விட்டது. யாரை முதல்வராக்குவது? என்பது குறித்து மேலிடத் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாஜி காங்கிரசை விட்டு விலகி இருந்தார். இருந்தாலும் அவரை மீண்டும் காங்கிரசுக்கு கொண்டு வந்து முதல்-அமைச்சராக்கி விடலாம் என்று சிலர் நினைத்தனர். அந்தச் சிலரில் காந்திஜியும் ஒருவராக இருந்தார். அதற்காக மெனக்கெடவும் செய்தார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரையும், ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பிரகாசத்தையும், கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த மாதவமேனன் ஆகிய மூவரையும் டெல்லிக்கு அழைத்து யாரை முதல்வராக்கலாம் என்று ஆலோசனை கலந்தார் பட்டேல்.
காந்திஜியுடன் ஆலோசனை கலந்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று தாளா வெங்கட்ராவ், கோபால ரெட்டி, பட்டாபி சீதாராமய்யா, ராஜாஜி ஆகிய 4 பேரையும் சேர்த்து 7 பேர் காந்திஜியை சந்தித்துப் பேசினார்கள்.
பொது விவகாரங்களில் பிரகாசம் சரியாக, நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எனவே முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பினை, பட்டாபி சீதாராமய்யா அல்லது ராஜாஜிக்கு வழங்கலாம் என்று யோசனை சொன்னார் காந்திஜி.
அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த மவுலானா ஆசாத்தையும் இதுகுறித்து தலைவர்கள் சந்தித்துப் பேசிய போதும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ராஜாஜிக்கும், பட்டாபி சீதாராமய்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் காமராஜர் நினைத்தால் யாரையும் வெற்றி பெறச் செய்திடலாம் என்ற நிலைப்பாடு தான் அப்போதிருந்தது. இதனை பட்டாபி சீத்தா ராமய்யாவே காந்திஜியிடம் தெளிவுபட உரைத்து விட்டார்.
பிரகாசம் முதல்-மந்திரியாக வருவதை காந்திஜி விரும்பவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட காமராஜர், தனது நிலைப்பாடு அதுவே என்று சொல்லி விட்டால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், காந்திஜியின் உண்மையான சீடர் என்பதை காமராஜர் நிரூபித்துக் காட்டினார்.
இறுதியில் முத்துரங்க முதலியாரும், பிரகாசமும் முதல்-அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டனர். முத்துரங்க முதலியார் வெற்றி பெற்று விட்டார். இன்னும் காமராஜர் "கை" மேலோங்கி விடும் என்று நினைத்த ராஜாஜி கோஷ்டியினர் 33 பேரும், திடீரென நடுநிலை வகிப்பது என்று முடிவெடுத்து வாக்களிக்காமல் இருந்ததால் 7 வாக்கு வித்தியாசத்தில் பிரகாசம் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார்.
காந்திஜியின் விருப்பத்திற்கு மாறாக, பிரகாசம் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனதால், அவருக்கு எந்த ஒத்துழைப்பையும் தர வேண்டாமென்று, காமராஜரின் நண்பர்கள் வற்புறுத்தினர். ஆனால் காமராஜர் அதற்கு இசையவில்லை. நண்பர்களின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டார். கட்சியின் தலைவர் பதவி என்பது அனைவரையும் சமமாகப் பாவிப்பதே. அந்தக் கடமையில் தவறக்கூடாதே என நினைத்தார் காமராஜர். அந்தக் கடமையில் இருந்து நான் தவற மாட்டேன் என்று சொல்லி விட்டார் காமராஜர்.
கவிஞர் இரவிபாரதி
மேலும் ஜனநாயக மரபுப்படி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நமது கட்சியின் சார்பிலேதான் பிரகாசம் முதல்வராகி இருக்கிறார். இனிமேல் கட்சிக்குள்ளே பேதம் காட்டி, சண்டை சச்சரவுகளை வளர்ப்பது காங்கிரஸ் ஸ்தாபனத்திற்கு நல்லதல்ல. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, கட்சிக்குள்ளே திணிப்பது சரியல்ல என்று காமராஜர் உறுதிபட உரைத்துவிட்டார்.
அன்றைய காலகட்டத்திலேயே, ஜனநாயகத்தில் எத்தனை நம்பிக்கையுடையவராக காமராஜர் திகழ்ந்திட்டார் என்பதற்கு இந்த சம்பவங்களே நல்ல உதாரணமாகும்.
ஆனால் இந்தப் பெருந்தன்மையான ஜனநாயகப் போக்கு, முதல்-அமைச்சராய் பொறுப்பேற்ற பிரகாசத்திடம் இல்லை. மாதவ மேனனை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று காமராஜர் கேட்டுக் கொண்டதற்கு பின்பும், அதைக் காதிலே வாங்கிக் கொள்ளாமல் ராஜாஜி கோஷ்டியைச் சேர்ந்த ராகவ மேனனை மந்திரி ஆக்கினார் பிரகாசம். அதற்கு பிறகும், எந்த வேறுபாடும் கொள்ளாமல் தலைமைப் பண்புக்கு இலக்கணமாக காமராஜர் நடுநிலையோடுதான் செயல்பட்டார்.
ஆனால் ராஜாஜியின் நிலைப்பாடு வேறு விதமாக இருந்தது. பிரகாசம் மந்திரி சபையை கவிழ்ப்பதற்கான திட்டம், டெல்லியிலே இருந்த ராஜாஜியின் வீட்டிலேதான் தீட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திலே ஏ.பி.ராமசாமி ரெட்டியாரை முதல்வராக்கி விடலாம் என்று ராஜாஜி ஒரு யோசனையை முன் வைத்தார். பிரகாசம் மீது கொண்டுவர இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்ப்பதற்காகவும், சமரசம் செய்வதற்காகவும் அப்போது காங்கிரசில் முக்கிய தலைவராக விளங்கிய ஆச்சார்ய கிருபளானி சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
என்னை முதல்-அமைச்சராக இருக்க விடுங்கள். யாரை வேண்டுமானாலும் அமைச்சர்களாக போட்டுக் கொள்ளுங்கள் என்று பிரகாசம் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். காமராஜரை தவிர எல்லோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.
இந்த அறிவிப்பு காமராஜருக்கு நல்லதாகப்படவில்லை. என்னுடைய சமரசத்தை எதிர்க்கும் ஒரே ஆள் நீங்கள் தான் என்று ஆச்சார்ய கிருபளானி காமராஜர் மீது நேரடியாகவே கோபத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் காமராஜர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே பிரகாசம் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் நிறைவேறியது. பிரகாசமும் வெளியேறினார்.
பிரகாசத்தின் வாழ்வில் பொதுவாழ்வுத் தூய்மை இல்லை என்பதை காந்திஜியே சொன்ன பிற்பாடு வேறு சிந்தனையே இல்லை. என்னை முதல்வராக நீடிக்க விடுங்கள். மற்ற பதவிகளை எப்படி வேண்டுமானாலும் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்ற பிரகாசத்தின் தன்னலமிக்க பேச்சினை காமராஜரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ராஜாஜி அறிவாளி. என்றாலும், காமராஜருக்கு முன்னால் நிற்க முடியவில்லை. எந்த ஒரு விஷயத்திலும், காமராஜரே உயர்ந்து நிற்கிறார் என்ற பொறாமை ராஜாஜியின் நண்பர்களுக்கு இருந்து கொண்டே வந்தது. அதனால் 1946-ல் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில், காமராஜரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ராஜாஜி.
பசும்பொன் தேவரென்றால் அதற்கொரு தனி மரியாதை எப்போதுமே எல்லோரிடமும் உண்டு. எனவே முத்து ராமலிங்கத் தேவரிடம் போய், காமராஜரை எதிர்த்து நீங்கள் தான் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ராஜாஜி. ஆனால் தேவர் பெருமகன் மறுத்துவிட்டார்.
அடுத்த கட்டமாக காரைக்குடி தியாகி சா.கணேசனிடம் நீங்கள் தான் காமராஜரை எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் ராஜாஜி. ராஜாஜியே கேட்கும் பொழுது சா.கணேசனால் மறுக்க முடியவில்லை. போட்டியில் 62 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார் காமராஜர். சா.கணேசன் தோல்வியை தழுவினார்.
அரசியலில் பகைமை பாராதவர் காமராஜர். ராஜாஜி தன்னை எதிர்த்துத் தான் காய்களை நகர்த்துகிறார் என்பது தெரிந்தும், அவருக்குள்ள மரியாதையை காமராஜர் கொடுக்கத் தவறியதில்லை. இறுதி வரை இந்த மதிப்பில் கடுகளவும் குறைந்ததில்லை.
தோற்போம் என்பது தெரிந்தும், சா.கணேசனை ஏன் நிறுத்தினீர்கள்! என்று ராஜாஜியிடமே கேட்டுவிட்டார் காமராஜர். அதற்கு ராஜாஜியோ, சா.கணேசனை நிறுத்தியதால் அவருக்கு எந்த நஷ்டமும் வந்துவிடவில்லை. ஒரு வேளை வெற்றியடைந்தால் அது எங்களுக்கு லாபம் தானே? என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் ராஜாஜி.
ராஜாஜி சிரித்துக்கொண்டு சொன்னாரே தவிர, உள் மனதிலே நம்மை முதல்வராக வர விடமாட்டேன் என்கிறாரே இந்த காமராஜர், என்ற மனக்கொதிப்பு இருந்து கொண்டே வந்தது. அது தொடர்ந்து கொண்டே இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை மட்டுமே காமராஜர் கவனிக்கவில்லை. தொழிற் சங்கப் பணிகளிலும் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். முத்துரங்க முதலியார், ராஜகோபாலன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தொழிற்சங்க பிரச்சினைகளை காமராஜரின் கவனத்திற்கு கொண்டு வந்து, ஆலோசனைகளைப் பெற்ற வண்ணம் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களுக்கென்று ஒரு அலுவலகம் இல்லாமல் இருந்தது. இதை உணர்ந்த காமராஜர் "தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் பகுதி" என்ற அமைப்பைத் தொடங்கி வைத்து அவர்களுக்கென நான்கு சட்டசபைத் தொகுதிகளையும் ஒதுக்கிக் கொடுத்தார். அதற்குப் பிறகு தான் தொழிற்சங்கத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
பகளிங்காம் தொழிற்சங்கம், சென்னையில் உள்ள இதர ஆலைத் தொழிலாளர் சங்கம், கோவைப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், தென்கிழக்கிந்திய ரெயில்வே தொழிலாளர் சங்கங்களுக்கு இத்தொகுதிகள் நான்கும் பிரித்து வழங்கப்பட்டன. அதன்படி சென்னைத் தொழிலாளர் சார்பாக கன்னியப்பன் என்பவர் சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் காமராஜருடைய மதிப்பு தொழிலாளர்கள் மத்தியில் கூடியது.
கோவையில் முப்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட வேலைநிறுத்தம் நடைபெற்றபோது தன்னுடன் ஆர்.வெங்கட்ராமனையும் அழைத்துக்கொண்டு போய் மில்அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மந்திரி சபையிலும் அதனை விவாதிக்க வைத்து, தீர்வு கண்டார் காமராஜர். எனவே "தொழிலாளரின் தலைவர்" என்று எல்லோருமே காமராஜரைப் போற்றினர்.
தொழிலாளர்கள் மத்தியில் காமராஜரின் செல்வாக்குப் பெருகியது. மிகப்பெரிய நிறுவனமான "பி அண்ட் சி மில்" தொழிற்சங்கத்தலைவர்களும் "மதுரை ஹார்வி மில்" தொழிற்சங்கத்தலைவர்களும் காமராஜரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை செய்தே எல்லாவற்றையும் செய்தார்கள்.
மலைக்காடுகளில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு உதவினார் காமராஜர். அதே போல் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியிலும் பிரச்சினைகள் ஏற்பட்டபோது... அதனுடைய தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு பக்கபலமாக நின்று உழவர்களுக்கும், பண்ணையாட்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். அன்றைய தினம் ரெவின்யூ மந்திரியாக இருந்த கா.நா.வெங்கட்ராவுடன் இதற்காக தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழிலாளர்களுக்குத் தோள் கொடுத்ததால், காமராஜரை தந்தை ஸ்தானத்திலே வைத்து தொழிலாளர்கள் கொண்டாடினர்.
இப்படி, தொழிலாளர்கள் மத்தியிலும், பாட்டாளிகள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும், காமராஜரின் "புகழ்" நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது. கட்சி நிர்வாகத்திலும் கூடிக்கொண்டே இருந்தது. சிறப்பாக பணியாற்றி பேரெடுத்தார்.
சாதாரண மனிதன் என்பவன், தனக்குள்ள நிலம், வீடு, உடமைகள், ஆடை, அணிகலன்கள் இவற்றில் தான் அதிகம் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு சேவை செய்வதிலே தான் காமராஜருடைய மகிழ்ச்சி இருந்தது.
எனவே கட்சித்தொண்டர்கள் மத்தியிலும் , பொதுமக்கள் மத்தியிலும் காமராஜரின் புகழ் கூடிக்கொண்டே போனது.
அடுத்த வாரம் சந்திப்போம்...






