என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உயிர் காக்கும் அமிர்தம் சுக்கு
    X

    உயிர் காக்கும் அமிர்தம் 'சுக்கு'

    • கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் வாந்தி, வாய்குமட்டல், மசக்கை போன்ற நிலைகளிலும் சுக்கு நல்ல பயன் தரக்கூடியதாக உள்ளது.
    • நாட்பட்ட ஒற்றைத்தலைவலிக்கு மாத்திரைகளை போட்டு சளைத்தவர்கள் சுக்கினை பயன்படுத்தி பயனடையலாம்.

    நமது அன்றாட வாழ்வில் இஞ்சி அல்லது சுக்கினை பயன்படுத்தாமல் யாராலும் நகர முடியாது. அதுவும் குளிர் மற்றும் பனிக்காலங்களில் சூடான 'சுக்கு மல்லி காபி' அல்லது 'இஞ்சி தேநீருக்கு' ஏங்கும் நம் நாட்டினர் பலர். குளிர்காலத்தில் மட்டும்தான் இஞ்சியின் தேவை என்றில்லாமல், வெயில் காலத்திலும் இஞ்சியின் பயன்கள் அளப்பரியது.

    கோடைக்காலத்தில் பித்தத்தைக் குறைக்கும். இஞ்சியும், எலுமிச்சை பழமும் போட்டு பிழிந்த கரும்பு சாறு குடித்தால் உடலுக்கு உடனடி ஊட்டம் தான். இன்னும் சொல்லப்போனால், நாடிநரம்புகள் வழியாக சர்க்கரைக் கரைசலை ஏற்றுவதற்கு நிகரான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதை பாரம்பரிய பானங்களை நாடும் எவரும் மறுக்க முடியாது. அது மட்டுமின்றி உணவு சமைத்தலில் இஞ்சியோ அல்லது சுக்கோ சேர்த்தால் கூடுதல் சுவை தான். தற்காலத்தில் மாமிச உணவுகளை சமைக்கும்போது அதிகம் பயன்படுத்தும் இஞ்சி பூண்டு பசையும் 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற தமிழனின் வாழ்வியல் முறைக்கு சான்று.

    எவ்வளவு தான் நவீன வாழ்வியல் முறையும், மேற்கத்திய உணவுகளும், அவை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களும், நம் மீது படை எடுத்தாலும், இன்றும் 'சுக்கு மல்லி காபி' மீதான தீராத மோகம் நம் நாட்டு மக்களிடையே உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உணவும், ஆரோக்கிய கட்டமைப்பு முறைகளும், நமது பண்பாடு, கலாச்சாரம் இவற்றுடன் ஒன்றிணைந்து பிரிக்க முடியாத பிணைப்பாக உள்ளது.

    "சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியர்க்கு மிஞ்சிய தெய்வம் இல்லை" என்ற சொல்லடை தென்தமிழகத்தில் உண்டு. தமிழ்கடவுள் முருகனுக்கு இணையாக பேசப்படும் அளவுக்கு மருத்துவ குணங்கள் வாய்ந்த அஞ்சறைப்பெட்டி கடைசரக்காக உள்ளது 'சுக்கு'. புழக்கத்தில் காய்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது. ஆகையால் இஞ்சிற்கு உண்டான மருத்துவ குணங்களை விட சற்று கூடுதலான தன்மைகள் சுக்கிற்கு உள்ளது தனிச்சிறப்பு, ஆனால் 'கடுக்காய்க்கு அகநஞ்சு, சுக்கிற்கு புற நஞ்சு' என்கிறது சித்த மருத்துவம். அதனால் தோல் சீவிய சுக்கினை பயன்படுத்துவது அளப்பரிய மருத்துவ நன்மைகளை அளிக்க வல்லது.

    சித்த மருத்துவத்தில் மட்டுமின்றி ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னரே, சீன மருத்துவத்திலும் சுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன மருத்துவத்தில் மூட்டு வலி, வாந்தி, அசீரணம் ஆகிய உடல் உபாதைகளுக்கு இஞ்சியை பயன்படுத்தியதாக தெரிகிறது. ஜப்பானின் காம்போ மருத்துவத்திலும் சுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மார்க்கோபோலோ இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் வரை, இஞ்சி என்கிற மூலிகை அமிர்தம் ஐரோப்பிய நாடுகளுக்கு கிடைக்காமல் இருந்துள்ளது. அதற்கு பின்னர், கிட்டத்தட்ட முதலாம் நூற்றாண்டில் தான் இஞ்சியை இந்தியாவில் இருந்து வாங்கி பயன்படுத்த துவங்கியதாக வரலாறு கூறுகின்றது.

    நடைமுறையில் இஞ்சியின் மேல் தோலில் சுண்ணாம்பினை தடவிப் பதப்படுத்தி சுக்கு தயாரிக்கப்படுகிறது. ஆகையால் சுக்கின் மேல்தோலை நீக்கி பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் அதில் உள்ள சுண்ணாம்பு வயிற்றுக்கோளாறுகளை உண்டாக்குவதோடு மட்டுமின்றி, சுக்கின் மருத்துவ குணங்களை குறைத்துவிடும். அதனால் தான் சித்த மருத்துவம் சுக்கினை 'விடம் மூடிய அமிர்தம்' என்கிறது. அதாவது சுண்ணாம்பு எனும் நஞ்சினால் மூடப்பட்ட, அஞ்சறைப்பெட்டியின் உயிர் காக்கும் அமிர்தம் என்பது இதில் விளங்குகிறது.

    காலையில் சூடாக சுக்கு தேநீர் குடிப்பதில் துவங்கி, பேருந்து பயணங்கள் மற்றும் மலை பயணங்களில் ஏற்படும் சிரமங்களான வாந்தி, வாய் குமட்டலை தடுக்க 'இஞ்சி மரப்பா' என்று இஞ்சியின் மற்றும் சுக்கின் பயன்பாடுகள் நம்மிடையே அதிகம். இத்தகைய பாரம்பரியம் கூறும் வாழ்வியல் தான் நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை.

    "காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்" என்கிறார் திருவள்ளுவர். வாழ்வியலுக்கு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு கடைக்கால் இட்டு சென்றுள்ளது இதில் வெளிப்படை. சித்த மருத்துவம் கூறும் நோய்களுக்கு முதல் காரணமான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதமே முதன்மையாய் நின்று நோய்களை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. வாதம் என்பது வாயு. இந்த வாயுவைக் குறைத்து நோய்களிடம் இருந்து நம்மை காக்க வல்லது சுக்கு. இறவாமையை அளிக்க வல்ல எளிய மூலிகை கடைசரக்கு சுக்கு என்பதும் சிறப்பு.

    இன்றைய நவீன வாழ்வியலில் வாயு சார்ந்த உடல் உபாதைகள் அதிகம். அதிகரித்துவிட்ட துரித உணவுகளும், குப்பை உணவுகளும் வாயு தொல்லையை உண்டாக்கி பல்வேறு சீரண மண்டலம் சார்ந்த நோய்நிலைகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய வாயுத்தொல்லையை போக்கி சீரண மண்டலத்தை காக்க வல்லது சுக்கு. சுக்கினை பொடித்து அவ்வப்போது தேனுடன் கலந்து எடுத்துக்கொண்டால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள வாதத்தைப் போக்கி நலத்தை தரும்.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    சித்த மருத்துவத்தில் வாதத்தினை சமப்படுத்தும் பல்வேறு மருந்துகளின் சுக்கு சேருவது சிறப்பு. சீரண உறுப்புகளைத் தூண்டி பசியைத் தூண்டும் 'பஞ்ச தீபாக்கினி' சூரணத்திலும், மந்த கழிச்சலுக்கு மருந்தாகும் 'தயிர்ச்சுண்டி' சூரணத்திலும், வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சீர் செய்யும் திரிகடுகு சூரணத்திலும் சுக்கு சேருகிறது. 'திரிகடுகு' சூரணத்தில் சுக்குடன், மிளகு, திப்பிலி இவை சேருவது நாம் அறிந்ததே.

    மேற்கூறிய சுக்கு சேரும் சித்த மருந்துகளை தகுந்த அனுமானங்களில் எடுத்துக்கொள்ள நோயின் வேரினை அறுத்து நலம் பயக்கும். பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு உண்டாகும் அசீரண மாந்தத்தைப் போக்கி, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் சித்த மருந்தான 'சவுபாக்கிய சுண்டி லேகியம்' சுக்கினை முதன்மையாகக் கொண்டது.

    சுக்கின் மருத்துவ குணத்திற்கு காரணமாக அதில் உள்ள 'ஜின்ஜெரால்' எனும் வேதிப்பொருள் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. வேதிப்பொருட்கள் தவிர சில வைட்டமின்களும், தாது உப்புக்களும், முக்கியமாக இரும்பு சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மூட்டு வீக்கம், வலி சார்ந்த நோய்நிலைகளில் சுக்கு நல்ல பலனை அளிப்பதாக நவீன அறிவியல் ஒப்புக்கொள்கின்றது. சுக்கில் உள்ள மூலிகை வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தை உண்டாக்கும் நொதிகளை தடுத்து நோய்நிலையை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டு வலிக்கு சுக்கு பற்று அதாவது சுக்கினை அரைத்து முட்டை வெண்கருவுடன் சேர்த்து பற்றாக போடும் வழக்குமுறையையும் சித்த மருத்துவம் கொண்டுள்ளது.

    கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் வாந்தி, வாய்குமட்டல், மசக்கை போன்ற நிலைகளிலும் சுக்கு நல்ல பயன் தரக்கூடியதாக உள்ளது. கர்ப்ப காலத்தில் கிட்டத்தட்ட 70% பெண்களுக்கு மசக்கை என்ற நிலை உண்டாகி பல பெண்களுக்கு உடல் பலவீனம், சோகை, தாதுச்சத்துக்கள் இழப்பு ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் மருந்து மாத்திரைகளை நாடாமல் சுக்குவை நாடுவது இயற்கையாகவே அவர்களுக்கு நலம் பயக்கும்.

    நவீன அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும், பல வெளிநாடுகளில் சுக்குவுடன் வைட்டமின் பி-6 சேர்த்து மருந்தாகி கர்ப்பிணிகளின் மசக்கைக்கு மருந்தாக்கி தரப்படுகிறது. புற்றுநோயின் பிடியில் சிக்கி, கதிரியக்க சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உண்டாகும் முக்கிய பக்க விளைவான வாந்தி மற்றும் வாய்குமட்டலுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கு பின் உண்டாகும் வாந்திக்கும் சுக்கு சிறந்த மருந்து என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது நமது பாரம்பரிய மருத்துவம் அறிவியலை விஞ்சியது என்பதற்கு உதாரணம்.

    இஞ்சியின் சாறுடன், எலுமிச்சம் பழச்சாறு, பூண்டு சாறு மற்றும் தேன் சேர்த்து காலையில் வெறும்வயிற்றில் எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைத்து இருதயத்திற்கு நன்மை பயப்பதாக உள்ளது. மேலும் இருதயத்தின் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் தன்மையும் உடையது. அதே போல சுக்குடன், பூண்டும் சேர்த்து எடுத்துக்கொள்ள உடலில் வாதத்தைக் குறைத்து வாதம் சார்ந்து உண்டாகும் இடுப்பு மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல தீர்வு தருவதாக உள்ளது.

    நாட்பட்ட ஒற்றைத்தலைவலிக்கு மாத்திரைகளை போட்டு சளைத்தவர்கள் சுக்கினை பயன்படுத்தி பயனடையலாம். சுக்கு சேர்ந்த திரிகடுகு சூரணம் அல்லது இஞ்சி சேர்ந்த சித்த மருந்துகளாகிய 'இஞ்சி லேகியம்' அல்லது 'இஞ்சி ரசாயனம்' கூட அத்தகைய நிலையில் நல்ல பலனைத்தரும். நாட்பட்ட தலைவலி, உடல்வலி, தலை கிறுகிறுப்பு ஆகிய நோய்நிலைகளில் சுக்கினை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தினால் நற்பலன் தரும். 'சுக்கு தைலம்' எனும் சித்த மருந்தினை கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்துவதும் நல்லது.

    அதே போல் தலையில் நீர்கோர்த்து உண்டாகும் சைனஸ் தலைவலிக்கு சுக்கினை நெற்றியில் பற்றுப்போட பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம். சுக்கு சேர்ந்த 'நீர்க்கோவை மாத்திரை' எனும் சித்த மருந்தினை நெற்றியில் பற்றுப்போட பயன்படுத்திட தலைவலி குறையும்.

    சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாகிய வர்ம மருத்துவத்திலும் சுக்கின் பயன்பாடு அளப்பரியது. வர்மம் மருத்துவம் சார்ந்த பெரும்பாலான மருந்துகளில் சுக்கு சேருவது சிறப்பு. வர்ம தலங்களில் அடிபட்டு மயக்கமுற்ற நிலையில் உள்ளவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர, சுக்கினை வாயிலிட்டு மென்று (சவைத்து) ஊதும் பழக்கம் இன்றும் தென் தமிழகத்திலும், பல கிராமங்களிலும் பரவலாக உள்ள வழக்கு முறை. ஆக, சுக்கு உணவிற்கு நறுமணத்தை தரும் வெறும் மணமூட்டியாக மட்டுமின்றி, உயிர்க்காக்கும் மருந்தாக, அமிர்தமாக தமிழர்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாயில் போட்டவுடன் காரத்தை தரக்கூடிய சுக்கு, வெப்ப வீரியத்தை உடையதால் அளவுடன் பயன்படுத்துவது நல்லது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்கிற பழமொழி சுக்கிற்கும் மிகப்பொருந்தும். சுக்கினை அதிக அளவு பயன்படுத்த நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படக்கூடும். வயிற்றுப்புண் உள்ள நோயாளிகள் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது. மொத்தத்தில் அஞ்சறைப்பெட்டி நமக்கு அளித்த அருமருந்து சுக்கு. இத்தகைய சுக்கினை அளவோடு பயன்படுத்தினால் வளமோடு வாழமுடியும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×