என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தெய்வீக வண்ணங்கள்!
    X

    தெய்வீக வண்ணங்கள்!

    • ஒருநாள் சூர்தாசைச் சோதிக்கும் பொருட்டாக கிருஷ்ண விக்கிரகத்திற்கு அலங்காரம் செய்யும்முன் திரையிட்டு மூடினார்கள்.
    • கண்ணனும் எல்லையற்றவன் என்பதால் அவன் நிறமும் நீலமாக அமைந்திருக்கிறது!`

    நமது ஆன்மிகத்தில் வண்ணங்களுக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. குண்டலினி யோகத்தில் பல்வேறு ஆதார சக்கரங்கள் விவரிக்கப்படுகின்றன. அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் தோத்திரத்தில் குண்டலினி யோகம் பற்பல வரிகளில் விவரிக்கப்படுகிறது.

    `இடைபிங்கலையின் எழுத்தறி வித்துக்

    கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி

    மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி அதனில் கூடிய அசபை

    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து...'

    குண்டலினி யோகத்தில் மனம் நிலைக்கும் இடங்களான சக்கரங்களைப் பற்றி அவ்வை பேசுகிறார். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராகாரம் என்பவையே அந்தச் சக்கரங்கள்.

    ஆன்மிகத்தில் அவை பல்வேறு வண்ணங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. மூலாதாரம் சிவப்பு, ஸ்வாதிஷ்டானம் ஆரஞ்சு நிறம், மணிபூரகம் மஞ்சள், அனாகதம் பச்சை, விசுத்தி நீலம், ஆக்ஞா சக்கரம் கருநீலம், சகஸ்ராகாரம் ஊதா நிறம் எனச் சக்கரங்களுக்கு நிறங்கள் உண்டு என்கிறது யோக சாஸ்திரம்.

    கண்ணன், ராமன் ஆகிய கடவுளரின் மேனி நீல நிறமாக இருக்கின்றன. ராமனுடைய மேனி நிறத்தைக் குறிப்பிடும்போது `மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ` என்கிறார் கம்பர். ராமன் மேனி மரகதப் பச்சை நிறத்தில் இருந்ததாகக் கூறி வியக்கிறார் அவர்.

    சிவன் சிவப்பு நிறம் உடையவன். சிவனின் கையைப் பிடித்த அவன் மனைவி பார்வதி, ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கழுத்தைப் பிடித்தாள்!

    தன் கணவர் ஆலகால விஷத்தை அருந்தியபோது ஓடிப்போய் தன் கணவன் கழுத்தை இறுகப் பிடித்து நஞ்சு நெஞ்சுவரை செல்லாமல் கழுத்தளவிலேயே தங்கிவிடுமாறு செய்தாள்.

    உள்ளே தங்கிய விஷம் காரணமாகக் கழுத்து மட்டும் நீல நிறம் பெற்றதால் சிவன் நீலகண்டன் என்றும் அழைக்கப்படலானான்.

    `நீலகண்டரே வாரும்!` எனத் தொடங்கும் கீர்த்தனை ஒன்றை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா விஜயராகவன்.

    `சிவபெருமானே! உன் கழுத்து நஞ்சை உண்டதால் நீல நிறமாக இருக்கிறது. நீ சென்னைக்கு வந்து இங்குள்ள மாசுடைய காற்றை சுவாசித்துப் பார். சந்தேகமில்லாமல் நீயும் திருமாலைப் போல் உடல் முழுவதும் நீலநிறம் கொண்டவனாக மாறிவிடுவாய்!` என பக்திக் கவிதையில் சுற்றுச்சூழல் சிந்தனையையும் இணைத்து எழுதுகிறார் அவர்.

    அகலிகை சாப விமோசனக் காட்சியைச் சித்திரிக்கும் கம்பர், மை வண்ணமுடைய தாடகையை மழை வண்ணமுடைய ராமன் கையால் அம்பு எய்து வதம் செய்ததையும் பின்னர் தன் காலால் அகலிகைக்குச் சாப விமோசனம் அருளியதையும் விஸ்வாமித்திரர் வாயிலாக வியக்கிறார்.

    `இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

    இனியிந்த உலகுக் கெல்லாம்

    உய்வண்ணம் அன்றி மற்றோர்

    துயர்வண்ணம் உறுவ துண்டோ?

    மைவண்ணத் தரக்கி போரில்

    மழைவண்ணத் தண்ணலேநின்

    கைவண்ணம் அங்கு கண்டேன்

    கால்வண்ணம் இங்கு கண்டேன்!'

    கண் பார்வையற்ற பக்திக் கவிஞரான சூர்தாசர் வாழ்வில் கண்ணனின் ஆடை நிறம் குறித்து ஒரு சம்பவம் வருகிறது. வடமதுரைக் கண்ணன் ஆலயத்தில் சூர்தாசர் ஆஸ்தான பாடகராக இருந்த காலகட்டம்.

    ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் கண்ணனது விக்கிரகத்திற்குத் திரையிட்டு அலங்காரம் செய்து பின் திரையைத் திறப்பார்கள். உடன் சூர்தாஸ் பாடத் தொடங்குவார்.

    கண்ணன் அன்று என்ன நிறப் பட்டாடை அணிந்திருக்கிறான் என்பதை அந்தப் பாடலில் அவர் குறிப்பிடுவார்! இது அர்ச்சகர்களுக்குப் பெரும் வியப்பைத் தந்தது.

    ஒருநாள் சூர்தாசைச் சோதிக்கும் பொருட்டாக கிருஷ்ண விக்கிரகத்திற்கு அலங்காரம் செய்யும்முன் திரையிட்டு மூடினார்கள்.

    கண்ணனுக்கு உடையே அணிவிக்காமல் முத்துமாலைகளை இடுப்பிலும் கைகால்களிலும் கழுத்திலும் தொங்கவிட்டு அலங்காரத்தை முடித்தார்கள்.

    திரையை விலக்கிய அவர்கள் சூர்தாசரிடம் இன்று கண்ணன் என்ன நிற ஆடை அணிந்திருக்கிறான் என வினவினார்கள். சற்றுநேரம் அமைதியாக இருந்த சூர்தாஸ் திடீரெனப் பாடலானார்.

    `கண்ணா! என்ன ஆயிற்று உனக்கு? பாஞ்சாலிக்குச் சேலைகளை வாரிவாரிக் கொடுத்த வள்ளல் அல்லவா நீ? இன்றென்ன வெறும் முத்துமாலைகளோடு காட்சி தருகிறாய்? உன் பல் முத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நீ அள்ளியெடுத்து துணிக்கு பதிலாக இன்று முத்தை அணிந்துகொண்டாயா?`

    என்று சூர்தாசர் பாடியதைக் கேட்டு அர்ச்சகர்கள் திகைத்துப்போய் அவரை விழுந்து வணங்கினார்கள் என்கிறது சூர்தாசரின் திருச்சரிதம்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    விவேகானந்தர் சென்னை வந்தபோது கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அப்போது மாணவராக இருந்தார் ராஜாஜி. கண்ணன் ஏன் நீல நிறமாக இருக்கிறான் என மாணவர்களைக் கேள்வி கேட்டார் விவேகானந்தர்.

    ராஜாஜி அந்த வித்தியாசமான கேள்விக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு பதிலைச் சொல்லி விவேகானந்தரின் பாராட்டைப் பெற்றார். அவர் சொன்ன பதில் இதுதான்:

    `ஆகாயம் எல்லையற்றுப் பரந்திருக்கிறது. அது நீல நிறமாக இருக்கிறது. கண்ணனும் எல்லையற்றவன் என்பதால் அவன் நிறமும் நீலமாக அமைந்திருக்கிறது!`

    கண்ணன் பாட்டு எழுதிய கிருஷ்ண பக்தரான பாரதியாரும் எல்லா இடங்களிலும் கண்ணனின் வண்ணமே தென்படுவதாகக் கூறிக் கண்ணனைப் போற்றுகிறார்.

    `காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்

    கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!

    பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

    பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா!!`

    சிவானந்தர் எழுதிய `வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு வழி` என்ற நூலில் ஒரு விந்தையான செய்தி வருகிறது.

    அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு பார்வையற்றவர், அவரிடம் ஒரு துணியைக் கொடுத்தால் அதன் அடர்த்தியை விரலால் சோதித்துப் பார்த்து, இது பச்சை நிறத் துணி இது நீல நிறத் துணி என்றெல்லாம் வேறுபடுத்தி அடையாளம் கண்டு சொல்லி விடுவாராம்.

    கண்கள் இல்லாத அவருக்கு நகக் கண்களே கண்கள்போல் பயன்பட்ட அதிசயம் அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

    பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை வேத காலத்திலிருந்து நம்மிடையே நிலவிவரும் மலர் வழிபாட்டின் பயன்பாட்டை நெறிப்படுத்தியவர். இன்னின்ன வண்ணமுடைய மலர்களால் இறைவனை வழிபட்டால் இன்னின்ன பயன்களைப் பெறலாம் என அவர் ஆராய்ந்து பட்டியலிட்டுத் தந்திருக்கிறார்.

    மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிற மொழி தமிழ், ஆங்கிலம் எனப் பலப்பல. மனிதன் கடவுளுடன் பேசப் பயன்படும் மொழியே மலர்கள் என்பது அன்னையின் கண்டுபிடிப்பு.

    மஞ்சள் வண்ணமுடைய ஜவந்தி போன்ற மலர்கள் கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தவருக்கு ஆரோக்கியம் வேண்டும் என்று எடுத்துச் சொல்லுமாம். சிவப்பு நிறமுடைய தாமரைகள் பக்தருக்குச் செல்வம் வேண்டும் என்று கடவுளிடம் தெரிவிக்குமாம்.

    இப்படிக் காகித மலர்கள் என்றால் பாதுகாப்பு, எருக்கம்பூ என்றால் தைரியம் எனப் பல்வேறு நிறமுடைய மலர்களின் ஆன்மிகப் பயன்பாட்டை அன்னை வகுத்துத் தந்துள்ளார்.

    கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று, திருமாலின் திருவுருவை மலர்களோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது.

    `மலர்களிலே பல நிறம் கண்டேன் - திரு

    மாலவன் வடிவம் அதில் கண்டேன்

    மலர்களிலே பல மணம் கண்டேன் - திரு

    மாதவன் கருணை மனம் கண்டேன்

    பச்சை நிறம் அவன் திருமேனி

    பவழ நிறம் அவன் செவ்விதழே

    மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்

    வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்...`

    பக்தர்கள் தாங்கள் எந்தக் கடவுளின் அடியவர்கள் என்பதை அடையாளம் காட்டுவதற்கும் வண்ணம் பயன்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள்.

    அறுபடை வீடுகளுக்கு யாத்திரை செல்லும் முருகன் அடியவர்கள் பச்சை நிற ஆடையில் காட்சி தருகிறார்கள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அடியவர்களோ சிவப்பு வண்ண உடை அணிகிறார்கள்.

    உணர்வுகளுக்கு ஏற்றவாறும் மனிதர்கள் ஆடையின் நிறத்தைத் தேர்வு செய்துகொள்வது உண்டே? கடும் துயரத்தில் இருப்பவர்கள் கறுப்பு நிற உடையை அணிகிறார்கள். ஒரு தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நினைப்பவர்கள் கறுப்புக் கொடி காட்டுகிறார்கள். கறுப்பு சோகத்தின் அடையாளமாகவும் எதிர்ப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

    பறவைகளிலும் பட்டுப்பூச்சிகளிலும் மலர்களிலும் ஏராளமான வண்ணங்களை இயற்கை படைத்திருக்கிறது.

    இரவில் இருளில் மலரும் மலர்கள் தங்களை நாடிவரும் தேனீக்களுக்குத் தாங்கள் தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் வெள்ளை நிறத்திலேயே அமைகின்றன.

    நிலத்தில் மலரும் மல்லிகை, நீரில் மலரும் அல்லி போன்ற இரவுப் பூக்களெல்லாம் வெண்மை நிறம் கொண்டிருக்கின்றன. இயற்கையின் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் நாம் உணர வேண்டிய காரணம் ஒன்று மறைந்திருக்கிறது என்பது உண்மைதானே?

    பச்சோந்திக்குத் தனித்த நிறம் கிடையாது. அது எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அதனால்தான் அடிக்கடிக் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களைப் பச்சோந்தி என்கிறார்கள்.

    மழைக்கால வானவில் ஏழு வண்ணங்களோடு திகழ்கிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்கள் பயன்படுகின்றன. சிவப்புக் கொடி அசைத்தால் ரெயில் நிற்கிறது. பச்சைக் கொடி அசைத்தால் புறப்பட்டுச் செல்கிறது. நமது தேசியக் கொடி காவி, வெண்மை, பச்சை ஆகிய வண்ணங்களைத் தாங்கியுள்ளது. நம் ஆன்மிகம் வண்ண மயமானது. பின்பற்றுவதற்கு ஏற்றது. நம் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும் சக்தி ஆன்மிக வண்ணங்களுக்கு உண்டு.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×