என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பக்தித் தமிழ் வளர்த்த பாவை- ஆண்டவனுக்கு பூமாலையும் பாமாலையும் சூடிய ஆண்டாள்
    X

    பக்தித் தமிழ் வளர்த்த பாவை- ஆண்டவனுக்கு பூமாலையும் பாமாலையும் சூடிய ஆண்டாள்

    • கோதை மணப்பருவம் அடைந்தவுடன் பிறர் எவரையும் மணக்க எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாளுக்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள்.
    • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தினமும் புதியதாக ஆண்டாளின் இடக்கையில் இலைக்கிளி ஒன்று இன்றளவும் சார்த்தப்படுகிறது.

    மாலெனப்படும் மகாவிஷ்ணுவின் பக்தியில் தோய்ந்து ஆழங்கால் பட்டவர்கள் ஆழ்வார்கள் ஆகும். அவர்கள் 12 பேர். அவர்களில் ஒருவர் ஆண்டாள். அவள் தமிழை, நாராயணனை ஆண்டதால் ஆண்டாள் என அழைக்கப்பட்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பது. கோதை என்றால் வாசமும் அழகும் உடைய மாலை என்பது பொருளாகும்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் திருநந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தாள். விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார் முழு அழகுடன் விளங்கிய அந்தக்குழந்தையை ஏந்தியவுடன், அது இறைவனுக்கு சார்த்தும் பூமாலை போலிருந்ததால் "கோதை" என்ற பெயரிட்டு வளர்க்கத் துவங்கினார். நந்தவன மலர்களை மாலையாய் தொடுத்து வடபத்திர சயனருக்கு வழங்குவது விஷ்ணுசித்தரின் முக்கியப்பணி. இளம் வயதிலேயே தமிழ், தெய்வீகம், என்பனவற்றில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். கோதையும், இளம் வயதிலேயே கண்ணன் மீது அதீத பக்தியுணர்வும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக "மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்ற அளவில் அவனையே மணம் செய்துகொள்ளும் எண்ணமும் வளர்ந்தது. தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பார்க்கும் அளவிற்கு பக்தி காதலாக பரிணமித்தது. கோவிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை தினமும் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளா? என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து திரும்பவும் கொண்டு குடுவையில் வைப்பாள்.

    தினமும் கோதை சூடிமகிழ்ந்த மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை ஒதுக்கி வேறு மாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறினர். பகவத் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் தொடுத்து வைத்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டு கண்டித்தார். அன்று இரவு பெருமாள் விஷ்ணுசித்தர் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு உகந்தது என்றும் அதனையே அணிவிக்கும்படியும் கூறினார். அது முதல் கோதை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாள். அவள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.

    கோதை மணப்பருவம் அடைந்தவுடன் பிறர் எவரையும் மணக்க எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாளுக்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள். அவளுடைய தந்தை பலவழிகளில் முயன்றும் அவளுக்கு மணமுடிக்க இயலவில்லை. பாவை நோன்பிருந்து 30 பாசுரங்களில் திருப்பாவை பாடினாள். காதலின் வரமாக வீரமாக 143 பாசுரங்களில் நாச்சியார் திருமொழியையும் பாடினாள். பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோவில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

    மார்கழி நீராடி நோற்கும் நோன்பு சங்க நாளிலே கன்னிப்பெண்களுக்குப் பெருவழக்காயிருந்தற்குக் குறிப்புகள் உள்ளன. இந்நோன்பை 'அம்பா ஆடல்' என்ற பெயரால் சங்ககால நல்லந்துவனார் கூறுகின்றார். தாயோடு ஆடப்படுவதால் இப்பெயர் பெற்றது

    இறுதியில் ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி திருவரங்கம் வந்தார். இதைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டாள் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திரநன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது என்பது பாகவதர்கள் காட்டும் வரலாறு

    ஆண்டாள் காலம்: திருப்பாவை 13ம் பாசுரத்தில் 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற குறிப்பைக் கொண்டு கி.பி.731இல் மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் (மார்கழிப் பவுர்ணமியன்று) வெள்ளி எழுச்சியும் வியாழன் வீழ்ச்சியும் நிகழ்ந்தன எனவும் வரையறை செய்யப்படுகிறது. எனவே ஆண்டாள்காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனப்படுகிறது.

    கண்ணனை அடைய விரும்பி பழந்தமிழ் நாட்டு வழக்கமான பாவை நோன்பு நோற்றாள். அதை விவரிப்பதே திருப்பாவையாகும். திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பு, ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக்கொண்டு, கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் லட்சியமாக எண்ணிப் பாடியுள்ளதைக் குறிப்பதாக உள்ளது.

    திருப்பாவை – நூலமைப்பு திருப்பாவை நூலில் முப்பது பாசுரங்கள் உள்ளன. அவை, கொச்சகக் கலிப்பா என்னும் யாப்பு வகையில் அடங்குவன. பழைய திருப்பாவை பதிப்புகளில் ஒவ்வொரு பாசுரத்திற்கும் ராகம் குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பது பாட்டுகளையும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

    முதல் ஐந்து பாசுரங்களில் திருமாலின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகள் கூறப்படுகின்றன. மார்கழி நோன்பின் நோக்கம், நோற்பதற்கு உரியவர், நோன்பின் வழிமுறைகள், நோன்பின் பயன் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

    6 முதல் 10 வரை உள்ள பாசுரங்களின் செய்திகள், சற்றே புதிய ஐந்து சிறுமிகளை எழுப்புவது போலவும்,அடுத்த ஐந்து பாசுரங்களில் வயதில் சற்றே பெரியவர்களையும் அனுபவத்தில் முதிர்ந்தவர்களையும் எழுப்பும் வகையில் குறிப்பிடப்படுகின்றன.

    நான்காம் பகுதியில் (16 வயது முதல் 20 வயது வரை) பெண்கள் அனைவரும் நந்தகோபன் திருமாளிகைக்குச் சென்று, வாயில் காப்போனை அழைத்து வேண்டி, மணிக்கதவை திறக்கச் செய்து உள்ளே புகுந்து, நந்தகோபன், யசோதை, நப்பின்னை, கண்ணன், பலதேவன் ஆகியவர்களை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.

    ஐந்தாம் பகுதியில் (21 வயது முதல் 25 வயது வரை) நப்பின்னையோடு சேர்ந்து அவர்கள் அனைவரும் கண்ணனை எழுப்புகிறார்கள். எம்பெருமான் துயிலெழுந்து விடுகிறான். தாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்தருள வேண்டும் என, பகவானின் லீலைகளைப் போற்றிப்பாடுகிறார்கள்; கண்ணன் வந்து சிங்காதநத்தில் அமரவும் வேண்டுகின்றனர்.

    திருப்பாவை ஓர் உயர்ந்த ஆற்றுப்படை இலக்கியம் போல் அமைந்துள்ளது. வரும்வழியில் பரிசு பெற்ற கலைஞன் ஒருவன் பரிசு பெறச்செல்லும் கலைஞனிடம் கொடை அளிக்கும் மன்னன் ஒருவனிடம் வழிப்படுத்துவது போல வழிப்படுத்துகின்றாள். எதிரெதிர் வருபவரை வழிப்படுத்துதல் இல்லாமல், ஆண்டாள் போகும் வழியிலேயே எல்லோரையும் எழுப்பி, "வாருங்கள் நாராயணனாகிய பெரும் வள்ளல் குறித்து நாம் பாடினால் மட்டுமே நமக்கு அழிவில்லாத செல்வம் கிடைக்கும்" என்று தன் தோழிகளை தட்டி எழுப்பி வழிப்படுத்தி பாவை நோன்புக்கு அழைத்துச் செல்கிறாள். ஆண்டாள் கூறிய பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. அகத் தூய்மை அவனை அடைய உதவும் வழி என்கிறாள்.

    பக்தி ரசம் மட்டுமல்லாது, பழக்கவழக்கங்கள், ஆழிமழைக் கண்ணா பாசுரத்தில் இயற்கை வர்ணனைகள் மூலம் நாராயணனை இறைவனை உருவகப்படுத்துதல் "புள்ளும் சிலம்பின காண்" "கீசுகீசுஎன்றெங்கும் ஆனைச் சாத்தன்" போன்ற ஒலி வர்ணனைகள் பறவைகளின் ஒலி, "உன்மகள்தான் ஊமையோ அன்றிச் செவிடோ,அனந்தலோ ஏமப்பெருந்துயில் தான் மந்திரப்பட்டாளோ" போன்ற நகைச்சுவை ததும்பும் வரிகள், "கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து" எனச்சொல்லும் ஆயர் வாழ்க்கை பல கிராமிய வாழ்க்கை என்று தெளிந்த வர்ணனை விவரிப்புடன் அமைந்துள்ள எளிய இனிய பாசுரங்களைத் திருப்பாவையில் சொல்லி ஆண்டாள் ஆச்சரியப்படுத்துகிறாள்.

    பொதுவாக அனைத்து வைணவக் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. நிறைய திரு விழாக்கள் ஆண்டாள் நினைவாகத் தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது "பாவை நோன்பு" ஆகும். இது தமிழ் மாதம் மார்கழி ஒன்றாம் தேதியில் இருந்து முப்பதாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் "ஆண்டாள் திருக்கல்யாணம்", பகல்பத்து, ராப்பத்து, மற்றும் ஆடிப் பூரம், ஆடித் திருவிழா போன்றவை சில முக்கிய விழாக்களாகும். வட தமிழகப் பகுதிகளில் போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணமும் கனு உற்சவத்தன்று கணுப்பொடி உற்சவமும் நடைபெறுகிறது.

    ஆண்டாளின் இலைக்கிளி:

    திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தினமும் புதியதாக ஆண்டாளின் இடக்கையில் இலைக்கிளி ஒன்று இன்றளவும் சார்த்தப்படுகிறது. இந்தக் கிளியைச் செய்வதற்குத் தோராயமாக நான்கில் இருந்து நாலரை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    ஆண்டாள் கொண்டை: ஆண்டாள் கொண்டை தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது. இந்தச் சிகையலங்காரம், கேரள மாநில நம்பூதிரிகளின் சிகை அலங்காரத்தினைப் போல் உள்ளது.

    ஆண்டாளின் மாலை: அடியவள் ஒருத்தியின் மாலை திவ்யதேசப் பெருமாள்களுக்கு நெடு நாட்களாக எடுத்துச் சென்று சார்த்தப்படுவது சிறப்பான தகவலாகும்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், குறிப்பாகக் கருடசேவையன்று நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிய மலர்மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருவார். இந்த மணமிகு மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டது ஆகும். திருப்பதி பெருமாளிடமிருந்து மலர்மாலை, வருடந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு அனுப்பப்படுகிறது. அதே போல் மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின்போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. கோவை போன்ற பகுதிகளில் உள்ள சில பெருமாள் கோவில்களில் தங்கள் கோவில் திருக்கல்யான உற்சவத்தின்போது சூடிக்களைந்த மாலை வாங்கிச் சென்று அணிவிக்கும் பழக்கமும் உள்ளது.

    ஆண்டாளின் பக்தி: வட இந்தியாவில் ராதாவின் பக்தி பிரபலமாகப் போற்றப்படுகிறது. பெண் பக்தியாளர்களில் மீராபாய் கண்ணனிடம் கொண்ட அர்பணிப்புடன் கூடிய பக்தியைப் போலத் தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது.

    Next Story
    ×