என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நிராகரிக்கக் கற்றுக் கொள்வோம்!
- கடனாளியாகச் சந்தோஷமாய் வாழ்வதைவிட கடனின்றி சிக்கணமாக வாழ்வது நிம்மதியான செயல்.
- நிராகரிப்பதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் எப்போதும் தயாராக இருப்பவர்களே துயரமற்ற மனிதர்களாக உலகில் வலம்வர முடியும்.
ஏற்றுக்கொள்வதைப் போலவே நிராகரித்தலும் ஓர் நேர்முறையான செயலே! என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கும் அருமை வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
பெரும்பாலும் நாம் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளவும் தீயவற்றை வேண்டாமென்று நிராகரிக்கவும் தயங்கக்கூடாது என்று கேள்விப்பட்டிருப்போம். 'கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி!' வாழ்வை நடத்துவதே எல்லா நிலைகளிலும் ஏற்புடைய செயலாகும். ஆனால் நாகரிகம் கருதியும், முகத் தாட்சண்யம் கருதியும் சிலவற்றை 'முடியாது!' என நிராகரிப்பதற்குத் தயங்குகிறோம்.
எல்லாவற்றிற்கும் 'ஆமாம் சாமி!' போடுவதும், எல்லாவற்றையும் 'சரி' எனச் சொல்லி ஏற்றுக்கொள்வதும் பல வேளைகளில் தீராத துன்பத்திலேயே கொண்டுபோய் விட்டுவிடும். "அது எப்படி முகத்திலடித்தது போல 'வேண்டாம்!' என்று கூறுவது?; 'முடியாது!' என்று கருணையில்லாமல் மறுத்துப் பேசுவது?" என்று சிலர் யோசிக்கலாம்.
திருவள்ளுவர் சொல்கிறார், "வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை!" என்று. பொதுவாகச் 'செல்வம்' என்பது 'வேண்டும்! வேண்டும்!' என்று தேடிச்சென்று ஈட்டுவது ஆகும்; விரும்பி முயற்சியுடன் செய்யப்படுவதுதான் 'செல்வம்'. ஆனால் 'விழுச்செல்வம்' எனப்படும் நிலைத்த செல்வம் எது என்றால், எதற்குமே ஆசைப்படாமல் 'வேண்டாம்! வேண்டாம்!' என்று நிராகரித்தலே ஆகும் என்கிறார். உண்ணுகிற உணவைக்கூட(அது நம் உடம்புக்கு ஒத்துக் கொள்கிற உணவாயினும்) 'வேண்டாம்! வேண்டாம்!' என்று நிராகரித்து உண்ண வேண்டும்: அதுவே ஊறு விளைவிக்காத உயிர் வளர்க்கும் உணவுமுறை! என்கிறார்.
"மாறுபாடு இல்லாத உண்டி
மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு"
'நிராகரித்தல்' என்றால் எதனையும் கண்ணை மூடிக்கொண்டு வேண்டாம் என்று நிராகரிப்பது இல்லை. அறிவுக்கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டு, ஆராய்ச்சி செய்வது; பிறகு, சொல்பவர் எவ்வளவு உயரிய தன்மையர் ஆனாலும் பொருந்தாதவை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்து விட வேண்டும். மனிதர்களைப் பொறுத்து மட்டுமல்ல; பொருள்களின் தன்மையைப் பொறுத்தும் உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கூறுவதோ, தரம் பார்க்காமல், பளபளப்பானதா? பளபளப்பற்றதா? என்றும் மயங்கி நிற்பதோ கூடாது. 'பயனுள்ளதா?' என்கிற பொருள்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் மெய்ப்பொருள் காண வேண்டும். சொந்த அறிவின் துணைகொண்டு மெய்ப்பொருள் கண்டபிறகு நிராகரித்தலுக்கும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் ஆட்பட வேண்டும்.
திருவள்ளுவர் இரண்டு திருக்குறள்களில் மெய்ப்பொருள் காணும் அறிவின் திறத்தை வலியுறுத்திக் கூறுகிறார்:
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் உள்ளவர்களால் மட்டுமே நேர்மையான முறையில் நிராகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அவ்வளவு பெரிய மனிதர் கூறுகிறாரே! அதை எப்படி நிராகரிப்பது?. அளவில் எவ்வளவு பெரியதாகவும், நிறையில் எவ்வளவு கனமானதாகவும் இருக்கிறது!; அந்தப்பொருளை எப்படி நிராகரிப்பது? என்றெல்லாம் தயங்கி நிற்பவர்கள் வாழ்வில் தோல்வியை மட்டுமே தழுவக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த மாதிரி தருணங்களில், ஒருவருக்குச் சொந்தமாக நிறைந்திருக்கும் அறிவே அவருக்குத் துணிச்சலைத் தந்து, ஊக்கமான முடிவை எடுக்க உதவி, வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
கௌதம புத்தர் தனது சீடர்களோடு ஒரு கிராமத்துக்குப் போனார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் எவருக்குமே புத்தரைப் பிடிக்கவில்லை; எனவே கண்ணா பிண்ணாவென்று வாய்க்கு வந்தபடித் திட்டி, அவரை அவமானப் படுத்தத் தொடங்கினார்கள். காலை தொடங்கி மாலை வரை ஏச்சும் பேச்சும் கூடிக்கொண்டே இருந்தது; குறையவில்லை. புத்தர் சாந்தம் தவழும் புன்னகையோடு அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தார்.
சுந்தர ஆவுடையப்பன்
மாலைநேரம் வந்தது; "இன்னமும் என்னிடம் சொல்ல வேண்டியதும் பேச வேண்டியதும் ஏதாவது இருக்கிறதா?. எனக்கு அடுத்த கிராமத்துக்குப் போகவேண்டிய நேரம் வந்து விட்டது. இன்னமும் என்னிடத்தில் ஏச வேண்டிய பாக்கி இருந்தால் சொல்லுங்கள்; நாளை இந்தப்பக்கமாக வந்து நேரம் ஒதுக்கித் தருகிறேன்!" என்று புன்னகை குறையாத சாந்தத்துடன் புத்தர் கேட்டார்.
"ஏங்க! நாங்க உங்களை இவ்வளவு நேரமாத் திட்டி அவமானப் படுத்துகிறோமே! உங்களுக்குக் கோபமே வரவில்லையா?" ஊர் மக்கள் புத்தரைப் பார்த்துக் கேட்டனர். புத்தர் சொன்னார், " திட்டுவதும் அவமானப் படுத்துவதும் உங்களுடைய சுதந்திரம்!; அவற்றை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதும் என்னோட சுதந்திரம். நேற்றுக்கூட ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன்; அங்குள்ள மக்கள் எனக்கு நிறைய இனிப்புகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு கொண்டாட வந்தார்கள். நான் எந்த இனிப்பையும் எடுக்காமல் இனிப்பை நிராகரித்து விட்டேன். ஏனெனில் இனிப்பு எனது உடல்நிலைக்கு ஒத்துப்போகாது.
அவர்கள் தட்டுத் தட்டாய்க் கொண்டுவந்த இனிப்பை நான் நிராகரித்து விட்டதால் அங்கு என்ன நடந்தது தெரியுமா?" என்று கேட்டுவிட்டுப், புத்தர் அமைதியாக அந்த ஊர்மக்களைப் பார்த்தார். பிறகு பேசினார். "எனக்குத் தருவதற்காக அவர்கள் கொண்டு வந்திருந்த இனிப்பை நான் நிராகரித்துவிட்டதால், அதை அவர்களே பகிர்ந்து அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது இன்று காலை முதல் என்னைநோக்கி நீங்கள் வழங்கிய வசவுகளையும், படுத்திய அவமானங்களையும் நான் நிராகரிக்கிறேன்!. அப்படியானால், நான் நிராகரித்ததனால், அவற்றை நீங்களே பகிர்ந்து உங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிவரும். அதனால் வரப்போகிற துன்பங்களும் துயரங்களும் என்னைப் பாதிக்கப் போவதில்லை; மாறாக உங்களுக்கே வந்து, உங்களையே பாதிக்கும். வாழ்க்கையில் நிராகரிக்கக் கற்றுக்கொண்டால், துயரமே இல்லை!" என்று பேச்சை முடித்தார் புத்தர்.
நம்மிடம் ஒரு குணம் இருக்கிறது. மற்றவர் பாராட்டினால் அதை வெகுமானமாகக் கருதி மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறோம்; நமக்கு அந்தப் பாராட்டிற்கான முழுத்தகுதி இருக்கிறதா? என்பது பற்றித் துளியளவும் ஐயப்படுவதே இல்லை. அடுத்தவர்கள் நம்மைப்பற்றி விமரிசனம் செய்து அவமானப் படுத்தினால் மட்டும், நாம் அந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் துளியளவும் பொருத்தமில்லாதவர்கள் என்றாலும் அதனை ஒரு பொருட்டாகக் கருதி வருத்தப்படுகிறோம்; துயரில் ஆழ்கிறோம். வெகுமானமோ அவமானமோ அவற்றிற்கு நமக்கு முழுத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவை இரண்டையுமே கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்கக் கற்றுக்கொண்டால் அவை தொடர்பான துன்பங்கள் நம்மைத் தொடர்வது இல்லை.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
துறவோ விருப்பமோ எந்தெந்தப் பொருள்களில் நமக்குப் பற்றின்றிப் போகிறதோ அந்தந்தப் பொருண்மைகளால் நமக்குத் துயரங்கள் இல்லை! என்கிறார் திருவள்ளுவர். இது துறவுநிலையின் உச்சத் தன்மை. புத்தருக்கு இது வசப்படலாம்; ஆனால் குடும்பம் கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் என வாழும் குடும்பஸ்தர்களுக்கு எல்லாவற்றையும் சமமாகப் பாவித்து நிராகரித்துவிடும் தன்மை சாத்தியமா?. சிந்திக்க வேண்டிய கேள்வி.
சுமை ஏற்றப்படுகிற வண்டிக்கும், சுமைவண்டியை இழுக்கிற மாடுகளுக்கும் இவ்வளவு சுமையைத்தான் சுமக்க முடியும்; இதற்குமேல் ஏற்றினால் சுமக்க முடியாது! என்று தனது வலிமையளவைக் கூறிக், கூடுதல் சுமையேற்றாதீர்கள் என்று நிராகரிக்கிற உரிமை கிடையாது. விளைவு, கூடுதலான வலிகளோடு அந்தச் சுமையை இழுத்துத்தான் ஆகவேண்டும்; அல்லது அச்சுமுறிந்து, மாடும் வண்டியும் பரிதாபமாகச் சாலை நடுவே கிடக்க வேண்டியதுதான். மனிதர்கள் மாடுகள் அல்லவே!. அவர்களுக்கு சிந்திக்கும் அறிவும், எடுத்துரைக்கும் ஆற்றலும் நிறையவே உண்டுதானே!. பின் ஏன் எல்லாவற்றையும் 'சரி! சரி!' என மாடுபோலத் தலையாட்டிக் கொண்டே செய்ய வேண்டும்?; மன அழுத்தத்திற்கும் உளைச்சலுக்கும் ஆளாக வேண்டும்?.
அலுவலகத்திலும் பணியிடத்திலும் மேலிடத்தில் இருப்பவர்கள், எப்படியாவது தங்களுக்கு வேலை முடிந்தாக வேண்டும் என்பதற்காக சில அப்பாவிகளது தலையில் சுமக்க முடியாத சுமைகளை ஏற்றி வைத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அப்பாவிப் பணியாளர்களும் மேலிடத்தை மறுத்துப்பேச முடியாமல், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தீராத துன்பங்களுக்கு ஆளாகி, இல்லாத நோய்களையெல்லாம் இழுத்து வைத்துக்கொண்டு திரிவார்கள்; இவர்கள் இயலாமையில் வருந்துபவர்கள். இன்னும் சிலபேர் இருக்கிறார்கள்; அவர்கள் வெற்றுப் பாராட்டுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டுக் கொடுக்கிற எல்லா வேலைகளையும் மொத்தமாய் வாங்கிக் குவித்துப் போட்டுக்கொண்டு எந்த வேலையிலிருந்து தொடங்குவது என்று தெரியாமல் குழம்பிப் போய்க் கிடப்பார்கள்.
இம்மாதிரியான குழப்பமும் வருத்தமும் இல்லாமல் இருப்பதற்கு ஒரே வழி, முடிகிற வேலைகளை மட்டுமே ஒத்துக்கொள்வது; மிகையான வேலைகளை, 'முடியாது!' என ஒரே வரியில் நிராகரித்து விடுவது ஆகும். இப்படிச் சட்டென நிராகரித்து விடும்போது அந்த நேரத்திற்கு மட்டும் கொஞ்சம் வருத்தமான சூழல் உருவாகும்; ஆனால் அதன் பிறகு தொடரப்போகும் துயரங்களுக்கான முற்றுப்புள்ளி அப்போதே வைக்கப்பட்டு விடும்.
அலுவலகம் போலக் குடும்பங்களிலும் கணவன் மனைவி பிள்ளைகள் அனைவருமே விரலுக்கு மீறிய செலவினங்களாக நிதிசார் சுமைகள் ஏற்படும்போது, எளிதாக நிராகரித்துவிடுவது தேவையான நன்மைகள் தரும்.
வீடுகட்டப்போகிறோம் என்று தொடங்கிவிட்டால், வெறுங்கை கொண்டு முழம்போடவும் முடியாது; செலவுகள் திட்டமிடவும் முடியாது. கையிருப்பு எவ்வளவு? கடன்தொகை எவ்வளவு? மாதவருமானத்தில் கட்ட வேண்டிய மாதத்தவணை எவ்வளவு? எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுவந்து கூடுதலாக ஒருரூபாய் தேவைப்பட்டாலும் அந்தச் செலவைக் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்து விடுவதே புத்திசாலித்தனம். கடனாளியாகச் சந்தோஷமாய் வாழ்வதைவிட கடனின்றி சிக்கணமாக வாழ்வது நிம்மதியான செயல்.
வாழ்வில் சில விஷயங்களை நாம் நிராகரிப்பது ஒருபுறமிருக்க, நாம் பலரால், பல தருணங்களில் நிராகரிக்கப்படும் நேரங்களிலும் உறுதியாக இருக்க வேண்டும். நினைக்கும் படிப்பு, நினைக்கும் மதிப்பெண், நினைக்கும் வேலை, நினைக்கும் சம்பளம், நினைக்கும் குடும்பம் இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நாம் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகக் கூடும். அந்த மாதிரியான தருணங்களில் இது இப்போதைக்கு நிராகரிக்கப்படுகிறது; இருந்தாலும் இதைவிடச் சிறந்த ஒன்று அமையப்போகிறது என்பதற்காகவே இது நழுவிப்போகிறது என்று மன உறுதியோடு நம்பிக்கைகொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் எப்போதும் தயாராக இருப்பவர்களே துயரமற்ற மனிதர்களாக உலகில் வலம்வர முடியும்.
தொடர்புக்கு 943190098






