என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தீர்வு காண முயற்சிப்போம்!
    X

    தீர்வு காண முயற்சிப்போம்!

    • தன்னை மிகப்பெரிய முட்டாள் மாவீரனாக எண்ணுகிறான்.
    • வன்முறை என்பது சிறு வயதில் அவன் பார்த்த, அனுபவித்த ஒன்றாக இருக்கலாம்.

    பாலியல் வன் கொடுமைகள் நடப்பதற்கு ஒரே ஒரு காரணம் என்று சொல்ல முடியாது. மன ரீதியான, சமுதாய ரீதியான, உடல் ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதற்காக இதனை நியாயப்படுத்த முடியுமா என்ன?

    இந்த கொடுமைகள் உடலின் காமப்பசி, தான் என்ற அதிகார மமதை, பிறரை நசுக்கி, அழித்துப் பார்ப்பதில் ஒரு வக்கிர ஆனந்தம், பலவீனமான பெண்ணை மிரட்டி கட்டுப்படுத்தும் மமதை குடி கொண்ட ஆணின் வெளிப்பாடாக நிகழ்கிறது.

    சில ஆண்கள் வாழ்வின் பல ஆக்கப்பூர்வமான முன்னேற்றம், பிரிவுகளில் தோற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் மனக்கோணலின் வெளிப்பாட்டு செயலாக பாலியல் வன்கொடுமைகளை செய்கின்றனர்.

    பெண் என்றால் பணிந்துதான் ஆக வேண்டும் என்ற அரக்க சிந்தனை, ஆண் இப்படி முறையற்ற சுக போகங்களை அனுபவிக்கப் பிறந்தவன் என்ற வக்கிரமான மனப்பான்மை ஆகியவையும் இவர்கள் மனதில் புகுந்து விடுகின்றது.

    சமுதாய அக்கறை இன்மை, பிறர் உரிமைகளைப் பற்றிய அக்கறை இன்மை, அவர்கள் வாழ்வில் சிறு வயதில் ஏற்பட்ட மனக்காயங்கள் இவையும் ஒரு ஆணின் மிருகத் தனமான நடவடிக்கைக்கு காரணம் ஆகின்றது.

    வளரும் கீழ்தரமான சூழ்நிலை, குடி, போதை பொருட்கள், பார்க்கக் கூடிய கீழ்தரமான வீடியோக்கள் இவை ஒருவனை மேலும் முரடன் ஆக்கி விடுகின்றது.

    * தன்னை மிகப்பெரிய முட்டாள் மாவீரனாக எண்ணுகிறான்.

    * வன்முறை என்பது சிறு வயதில் அவன் பார்த்த, அனுபவித்த ஒன்றாக இருக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

    * நிறைய இடங்களில் இவர்கள் எப்படியோ தப்பித்து விட்டால் மனம் மேலும், மேலும் இதிலேயே மூழ்குகின்றது.

    * கொடூர முறையில் கற்பழிப்பு இவர்களுக்கு உல்லாச பொழுது போக்காகின்றது.

    * கடுமையான தண்டனைகள் சமீப காலமாக செயல்படுத்தப்படுவது நிச்சயம் சற்று அச்சத்தினை இவர்களிடையே ஏற்படுத்தும்.

    * மேலும் திரும்ப எதிர்ப்பு காட்ட முடியாத பலவீனமான பெண்களை இவர்களின் சாதகமாக எடுத்துக் கொள்ளும் குணமும் நீடிக்கிறது. இன்று பல பெண்கள் துணிந்து முன் வந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதால் தவறான ஆணிடம் சிறு உறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    ஆக தீர்வு என பேசும் போது ஆண்களை விட்டுவிட்டு பேசுவது தீர்வே ஆகாது.

    * பெண்களை கூடை போட்டு மூடி வைக்க முடியாது. அவர்களும் வாழ வேண்டும்.

    * அச்சத்தின் காரணமாக படிப்பினை தவிர்ப்பது, கல்யாணம் சீக்கிரம் செய்து பொறுப்பை முடித்து விட்டோம் என பேச முடியாது. இன்று வயது வித்தியாசம் இல்லாமல்தான் வன்கொடுமைகள் நடக்கின்றன.

    * என்ன செய்ய முடியும்? என்று அங்கலாய்க்கக் கூடாது. என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தினையும் முயற்சி எடுத்து செய்ய வேண்டும்.

    * ஆண்களே இல்லாத சமுதாயமோ, பெண்களே இல்லாத சமுதாயமோ இருக்க முடியாது. இரு பாலாரும் சம உரிமையுடன் வாழ்ந்தால் மட்டுமே அது சமுதாயம். ஆக இந்த வன்முறை ஒழிய பல முயற்சிகள் தேவை. கூட்டு முயற்சி தேவை, சட்டங்கள் அச்சுறுத்தல், கடும் நடவடிக்கை தேவை. (இன்றைய கால கட்டத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது).

    வளர்ந்து முதிர்ந்தவர்களிடம் கீழ்க்கண்ட முயற்சிகள் எந்த பலனும் தராது. ஆனால் வளரும் இளைய சமுதாயத்தினரிடம் நல்ல பலனைப் பெறலாம்.

    * ஆணோ, பெண்ணோ விடலைப் பருவத்தினை அடையும் போது உடலின் இயற்கை மாற்றங்கள், இன விருத்தி இவற்றினைப் பற்றி அறிவது நல்லது. அடுத்த பாலருடன் பழகும் போது எல்லைகளை அவர்கள் அறிய வேண்டும்.

    * ஆண்-பெண் இருவரும் இயற்கையின் படைப்பில் சமமே என்பதனை இரு பாலரும் உணர வேண்டும். இதனை உணர்ந்தால் ஆணாதிக்க அகம்பாவம் நன்கு குறையும்.

    * காதலே ஏற்பட்டாலும் அடுத்தவரின் 'ஆம்', 'இல்லை' என்ற பதில் அவசியம். நிர்பந்திப்பதும், வன்முறையும் கூடாது.

    * பாலியல் கொடுமை என்ற பேச்சே இருக்கக் கூடாது.

    * ஆண் என்றால் தாக்குவான். பெண் என்றால் தாக்கப்படுவாள்- இவை இன்னும் எத்தனை காலத்திற்கு. பெண் என்றால் எதிர்த்து கடுமையாகத் தாக்குவாள் என்று நிலை நாட்ட வேண்டும்.

    * பாதுகாப்பான சூழ்நிலை இல்லாமல் தெரிந்த ஆணும், பெண்ணும் கூட இருக்க வேண்டாமே.

    * பாதுகாப்பிற்கு பள்ளிகளும், கல்லூரிகளும் முக்கியத்துவம் தர வேண்டும்.

    * பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தேவை.

    * இதனைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகள் அதிகம் விழிப்புணர்வாக வெளியிடப்பட வேண்டும்.

    சிறுமிகளுக்கு கற்றுத் தரப்பட வேண்டியவை:

    * நல்லது எது? கெட்டது எது? வேறு பாட்டினை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். * 'தொடாதே' என பயமின்றி சத்தமாய் கத்த வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. * பயம் என்பதே இருக்கக் கூடாது.

    * தன்னம்பிக்கையினை உருவாக்க விடுங்கள். * பிறரிடம் இருந்து அதிலும் தெரியாதவர்கள் இடம் இருந்து பரிசு, சாப்பாடு எதுவும் ஏற்கக் கூடாது.

    * உடனே பெற்றோரிடம் சொல்லுங்கள்.

    * பெற்றோரின் தொலை பேசி எண், போலீஸ் அவசர எண் 100 இவைகளை மனப்பாட மாக அறிந்திருக்க வேண்டும்.

    * ஒரு அவசர பாதுகாப்பு அலாரம் கூட வைத்துக் கொள்ளலாம்.

    * 'உதவி' 'Help' என ஆபத்தான நிலையில் குரலை உயர்த்தி கத்த வேண்டும்.

    * பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறுமிகள் பயப்படாமல் பேச ஊக்குவிக்க வேண்டும்.

    * ஏதோ சிறுமிகள் தவறு செய்து விட்டது போல் கூனி குறுகக் கூடாது. துணிந்து எழ வேண்டும். இது இன்றைய கால சூழ்நிலையின் கட்டாயம் ஆகி விட்டது. போராடத்தான் வேண்டும்.

    சமீபத்தில் ஒரு நிகழ்வினைப் பற்றி எனக்குத் தெரிந்தவர்கள் கூற நான் அறிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

    12 அல்லது 13 வயது சிறுமி தனியே செல்லும் போது ஒரு கொடூரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றாள். தன்னால் முடிந்த வரை போராடிய அவள் தன் நகங்களால் அவன் முகத்தில் நன்கு பிராண்டி காயங்களை ஏற்படுத்துகின்றாள். இதனையே போலீசிடம் சொல்லி அவர்கள் எளிதாக அவனை பிடிக்க முடிந்தது. இது போன்று தற்காப்பிற்காக போராடி அடையாளங்களை ஏற்படுத்த வேண்டும். பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் அவற்றினை பக்குவமாக நேரில் சொல்லித் தருவது நல்லது என்பதால் அதிகம் விவரிக்கவில்லை.

    ஏன் இப்படி சிலர் வன்முறையான உடலுறவு ஆசையில் சிக்கித் திண்டாடுகின்றனர்? இதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல காரணங்களைக் கூறலாம். ஆனால் அவற்றினை ஏற்க முடியாது. ஏனெனில் இது பல பெண்களின் வாழ்க்கையினையே அழிக்கும் விஷயம். ஆனால் இந்த குணம் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் இருக்கும்.

    * இவர்கள் சிந்தனை முழுவதும் இதிலேயே இருக்கும். இவர்களால் வேறு எதுவும் சிந்திக்க முடியாது. தவறான வீடியோக்களை பார்ப்பது, பெண்களிடம் தவறாக பேசுவது போன்றவை இருக்கும்.

    * நாள் கூட... கூட... இவர்களின் வெறித் தனமும் கூடுகின்றது. பெண்கள் குளிக்கும் இடம், தனியாக இருக்கும் பெண்கள் என அவர்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைவார்கள்.

    * பொறுப்புகளை மறந்து விடுவார்கள். வேலை, பள்ளி, குடும்பம் என்ற முறையான வாழ்க்கையில் இருந்து கழன்று வெகு தூரம் சென்று விடுவார்கள். * மனசாட்சி, தயவு, கருணை, இரக்கம் என்ற சொற்கள் இவர்கள் அகராதியிலேயே இருக்காது. * குற்ற உணர்வு, அசிங்கம், அவமானம் என்றெல்லாம் அவர்களுக்கு உரைக்காது.

    * ஒரு பெண்ணை அழித்த பிறகு அடுத்த பெண்ணை தேடி கிளம்புவார்கள். இவர்களது செயல்களே இவரை காட்டிக் கொடுக்கும்.

    * அமைதியாய் சகித்து செல்வது, வெளியில் செல்லாது இருப்பது போன்றவை பாதிப்பு அடைந்தவரை மனதளவில் கொன்று விடும். மேலும் பின்னாளில் இவரே குற்றவாளியைப் போல் சமூகம் பேசும்.

    * பாதிக்கப்பட்ட வரை 'குற்றவாளி' ஆக்கக் கூடாது. * மது, போதை இவை இரண்டும் அறவே நீங்க வேண்டும். * தவறான கீழ்தர ஜோக்குகளை அனுமதிக்காதீர்கள். * பெண்கள் படங்கள் ஆபாசமாய் சித்தரிக்கப்படுவதினை எதிர்த்து விடுங்கள்.

    * ஆண்களும் இந்த வன்முறை நடவடிக்கைகளை ஒழிக்க முற்பட்டால் ஒழியஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. செல்போன் மற்றும் இணையத்தில் வரும் மிரட்டல், உருட்டல்களால் பெண்கள் பயந்து விடுகின்றனர். தனிமையாகி விடுகின்றனர். தன்னம்பிக்கை இழந்து சேர்ந்து விடுகின்றனர். தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கு மன ரீதியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் இருந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

    பெண் எதிர்க்க மாட்டாள் என்ற தைரியம் இவர்களை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கொடூரனாக்கி விட்டது. இன்று காலம் மாறி விட்டது. பெண் எதிர்ப்பும், கடும் தண்டனைகளும் சற்று பயத்தின் காரணமாகவே இவர்களை அடக்கச் செய்கின்றன. இந்த எதிர்ப்பு 'பத்ரகாளி' போல் எழும்போது வன்முறை அரக்கன் அழிவான் அல்லது அடங்குவான்.

    சிறுமிகளுக்கான சுய பாதுகாப்பினையும் ஒரு தாய் அவசியம் சொல்லித் தர வேண்டும்.

    இத்தனை கூட்டு முயற்சிகளின் மூலமே இதற்கான தீர்வினை சமுதாயத்தில் காண முடியும். ஆணின் வீரம் பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தினை தருவதில்தான் உள்ளது என்பதனை ஒவ்வொரு ஆணின் பெற்றோரும் அச்சிறுவனின் ரத்தத்தில் பதிய வைக்க வேண்டும்.

    எழுத்திலும், பேச்சிலும் இவை எளிதாக இருக்கலாம். ஆனால் செயல்படுத்த கடும் உழைப்பு தேவை. ஆக ஒவ்வொரு தனி நபரும் இந்த பயங்கரத்தினை ஒழிக்க செயல் பூர்வமாக முன்வர வேண்டும். நான் இதனை என்னிடம் வரும் பெண்களுக்கான சிறு முயற்சியாக செய்கின்றேன்.

    Next Story
    ×