என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கடவுள் எப்போது கைகொடுப்பார்?
    X

    கடவுள் எப்போது கைகொடுப்பார்?

    • அன்றாடம் வாழ்வியலில் நாம் காணுகின்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் சில நமது ஆற்றலுக்கும்
    • நம்பிக்கையில் நடக்கிறது வாழ்க்கை.

    கடவுள் எப்போது கைகொடுப்பார்? என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வத்தோடு காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    அன்றாடம் வாழ்வியலில் நாம் காணுகின்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் சில நமது ஆற்றலுக்கும், இயல்புக்கும் மீறிய சக்தி உடையனவாகத் திகழும்போது அதனை அதீத ஆற்றலுடைய சக்தி என்கிறோம்; சில வேளைகளில் அந்த ஆற்றல், மனித ஆற்றலுக்கு மீறியதாகவும் திகழும்போது, அதனைக் கடவுள் என்று ஆத்திகவாதிகள் அழைத்து நம்பு கின்றனர்; ஆத்திகத்திற்கு எதிரான, கடவுளை நம்பாதவர்களோ அதனை இயற்கைச் சக்தி என இயல்பாக அழைக்கின்றனர்.

    எப்படியோ நமக்கு மீறிய, நம்மிலும் வலிமையான ஒரு சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறது; அதனைக் கடவுள் எனக் கொண்டால் அன்பு கலந்த பக்தியால் வழிக்குக் கொண்டு வரலாம்; அல்லது இயற்கை எனக் கொண்டால் அறிவு கலந்த மதியாலும், மனித ஆற்றலாலும் வயப்படுத்தி விடலாம்! என்பது உலகப் பொதுநம்பிக்கையாக இருக்கிறது. நமக்கு மீறிய அந்த ஆற்றலைக் 'கடவுள்' என்றே கொண்டு, அவர் எப்போது மனிதர்க்குக் கைகொடுத்து உதவுவார் என்பதை அறியப் புகுவோம்.

    நம்பிக்கையில் நடக்கிறது வாழ்க்கை. அது கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும் சரி; மனிதன் தன்னையே நம்புகிற தன்னம்பிக்கையாக இருந்தாலும் சரி. நம்பிக்கையோடு வாழ்வியற் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில் ஈடுபடும்போது, "மடுத்த வாயெல்லாம் பகடு" போல அவன் வலிமையோடு செயல்பட்டாக வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    "மடுத்த வாயெல்லாம்

    பகடன்னான் உற்ற

    இடுக்கண் இடர்ப்பாடு

    உடைத்து"

    அதாவது பாரம் ஏற்றப்பட்ட வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது; அந்தக்காலத்தில் மாடுகள் இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கரங்கள், இக்காலத்தைப் போல டயர்களால் செய்யப்பட்ட மெதுமெதுவானவை அல்ல; கடுமையான இரும்புப் பட்டைகள் பொருத்தப்பட்ட மரச் சக்கரங்கள்; மேலும் சாலைகளும் வழுக்கிக் கொண்டு செல்லும் தார்ச் சாலைகளோ சிமெண்ட் சாலைகளோ அல்ல; குண்டும் குழியுமாகக், கடுமையான மேடும் பள்ளங்களுமாக இருக்கும் சரளைக்கல் சாலைகள்.

    இந்த மாதிரியான வசதிக் குறைபாடுகளோடு, பொதியேற்றப்பட்டுள்ள வண்டியை இழுத்துக்கொண்டு மாடுகள் சென்றாக வேண்டும். இயல்பாகச் சென்று கொண்டிருக்கும் சாலையில் திடீரெனக் கற்களால், குண்டு குழிகளால், வண்டி நகராமல் போனாலோ அல்லது வண்டி குடை சாய்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டாலோ, மாடானது சோர்ந்து போகாமல், துணிந்து முயன்று, வண்டியைத் தொடர்ந்து இழுத்துச் செல்லும் முனைப்பிலேயே இருக்கும்.

    இவ்வகை மாடுகளே துன்பத்திற்கே துன்பம் கொடுக்கும் ஆற்றல் மிக்கவை; மனிதர்களும் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறும் மாட்டைப்போலத், தமக்கு நேர்ந்திடும் இடர்களையும் உறுதியுடன் இடர்களுக்கு உள்ளாக்கி வெற்றி காண வேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கே நமக்கான விடாமுயற்சியையும், துணிவையும், ஆற்றலையும் கடவுள் கொடுப்பாரா? அல்லது நமக்கு நாமே ஊட்டி வளர்த்துக்கொள்ள வேண்டுமா?.

    தான் நம்புகிற கடவுள் தன்னைவிடப் பேராற்றல் மிக்கது என்பதை மனிதன் முழுமையாக நம்புகிறான். மனித வாழ்க்கையில் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ திடீரென நிகழ்ந்து விடுகிற இக்கட்டுகளையும், துன்பங்களையும் கடவுளின் ஆற்றல் துணையோடு மட்டுமே கடக்க முடியும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் வழிபாடு, தியானம், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் போன்ற பல்வேறு வழிகளில் கடவுளின் ஆற்றல் துணையை வேண்டி நிற்கிறான்.

    கடவுளும் தன்னை நம்புகிற மனித வாழ்வியலின் பல்வேறு நிலைகளில் பங்கெடுத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குச் செய்வதாக மனிதர்கள் நம்புகின்றனர். மனிதர்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது குழப்பம் வந்தால், அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வழியை அடையாளம் காட்டுவதிலும், குழப்பத்தைத் தீர்த்துவைப்பதிலும் கடவுள் ஒரு தீர்க்கதரிசியைப் போல உதவுவார் என நம்புகின்றனர். அதே போல பெருமளவு வலிமையுடன் துன்பம் நம்மைத் துவைத்துப் போடுவதாக வந்தாலும் அதனை எதிர்கொள்வதா கிய உடல் மற்றும் மன உறுதியைக் கடவுள் வழங்குவார் எனவும் நம்புகின்றனர்.

    மனச் சலனங்களும், சச்சரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வியலைக் காட்டும் அமைதி வள்ளலாகக் கடவுள் திகழ்வதாகவும் நம்பிக்கை உண்டு. கடவுள் அவரை நம்புவோருக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் எனத் தேவைப்படும் அனைத்தையும் வழங்கிடும் பொறுப்பான பாதுகாவலராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, தம்மை நம்புகிற பக்தர்களுக்கு எந்தவித அபாயமோ, தீங்கோ நேர்ந்துவிடாமல் காக்கின்ற காவல் பொறுப்பையும் இடைவிடாது கவனித்து வருகிறார்.

    சுந்தர ஆவுடையப்பன்

    இந்த வகையில், " நல்லது தீயது நாம் அறியோம் அன்னை! நல்லது நாட்டுக! தீயது ஓட்டுக!" என்று மகாகவி பாரதி பராசக்தியின் மீது பாரத்தைப் போட்டது போலக், கடவுளின் மீது நம்பிக்கையைப் போட்டுவிட்டால், அவர் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகிற உதவிகளை வழங்கிக்கொண்டே இருப்பார். எல்லாம் சரி!. இப்படி எல்லா நிலைகளிலும் கடவுள் நம்பிக்கையோடு இருந்தாலும் அவர் எப்போது மனிதர்களுக்குக் கைகொடுப்பார்?.

    கடவுள் நம்பிக்கையில் சிறந்த ஒரு மனிதன், ஒரு மழைக்காலப் பொழுதில், நெடுஞ்சாலையில் தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். வண்டியை எடுக்கும்போதே 'கடவுளே காப்பாற்று!' என்று ஒருமுறை சொல்லிவிட்டுத் தான் வண்டியைக் கிளப்பினான். தூறிக் கொண்டிருக்கும் மழைச் சாலையில் வண்டி வழுக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    இப்படிப்பட்ட தருணங்களில் வண்டியை அதிக வேகமில்லாமல் கவனமாகச் செலுத்த வேண்டும் என்பது அந்த மனிதனுக்கு நன்றாகவே தெரியும்; வேகமெடுத்துச் செல்லும்போது, படக்கென்று பிரேக்கை மிதித்துவிட்டால், வண்டி நிலை தடுமாறிக் கவிழ்ந்து போவதற்கும் வாய்ப்பு உண்டு.

    ஆனாலும் அந்த வண்டி குறையாத வேகத்துடன்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென எதிரே வந்த ஒரு லாரி, வேகக் கட்டுப்பாடு இன்றி, இந்தக் கார்மீது மோத வருவதுபோல வந்ததால், 'கடவுளே! காப்பாற்று!' என்கிற ஓங்கிய அலறலுடன் காரைச் சாலையை விட்டு இடதுபுறமாகத் திருப்பினான் அந்த மனிதன்; அந்தோ பரிதாபம்; அந்தப்பக்கம் சாலைக்குக் கீழே ஆறடிப்பள்ளத்தில் கார் இறங்கிக் கவிழாமல் நின்றது. மீண்டும் 'கடவுளே காப்பாற்று!' மனிதனின் ஓசை; எந்த விதச் சிராய்ப்பும் இன்றிக் காரைவிட்டு வெளியே, மேலே சாலையோரத்திற்கும் வந்துவிட்டான் அந்த மனிதன்.

    கீழே பள்ளத்தில் நிற்கும் காரைப்பார்த்து மீண்டும், ' கடவுளே காரைக் காப்பாற்று!' என்று கூறினான் மனிதன். தொடந்து காரைப்பார்த்து, மனமுருகப் பிரார்த்தனை செய்து 'கடவுளே காப்பாற்று!' என நாலைந்து முறை உரக்கக் கூவினான். கார் மேலே வருவதாயில்லை. சாலை வழியே இருபக்கமும் செல்லும் வண்டிகள், இலேசாக வேகம் குறைத்து வேடிக்கை மட்டுமே பார்த்துச் சென்றன.

    பார்த்தான் மனிதன்; இனிக் கடவுளை நம்பிப் பிரயோசனமில்லை; களத்தில் நேரடியாக நாமே இறங்கிவிட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்து விட்டான். காரின் டிக்கியில் இருந்த நீளமான கயிற்றை எடுத்து, காரின் ஒரு முனையில் கட்டி, ஒருபக்கமாக இழுக்கத் தொடங்கினான். அப்போது சாலையில் ஒரு கார் நின்றது; அதிலிருந்து ஒரு மனிதர் இறங்கி வந்தார்; மளமளவென்று அந்த ஆறடிப் பள்ளத்திற்குள் சென்று, காரைத் தள்ளிவிட்டு உதவத் தொடங்கினார்; ஆச்சரியம்! அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கார் மேலே சாலைக்கு வந்துவிட்டது.

    பள்ளத்தில் இறங்கி உதவி விட்டு, மேலே சாலைக்கு வந்த மனிதரைப்பார்த்து, "ஐயா! மிக்க நன்றி!. கடவுள் வந்து உதவுவார் என்று நம்பினேன்; அவர் வரவில்லை; நீங்கள்தான் வந்தீர்கள் மிக்க நன்றி!" என்றான் காரோட்டி விபத்தில் சிக்கிய மனிதன். இப்போது உதவிய மனிதர் பேசினார், ''ஐயா! நான் சாலை வழியாகக் காரோட்டிக்கொண்டு செல்லும்போது உங்களை கவனித்தேன்!. நீங்கள் தனிமனிதராய் உங்கள் காரை மேலேற்றக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந் தீர்கள். உடனே உதவுவதற்காக நான் வந்தேன்.

    இது ஒரு மனிதனுக்கு ஒரு சக மனிதன் உதவுவது தானேயொழிய வேறெதுவுமில்லை. இதில் கடவுளை எங்கே இழுக்கிறீர்கள்? என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் உங்கள் காரை மேலே ஏற்றுவதற்காக முயற்சி செய்யாமல் வெறுமனே சாலையில் நின்று கொண்டிருந்தீர்கள் என்றால் நானும் மற்றவர்களைப் போல வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டே சென்றிருப்பேன்" என்றார்.

    உண்மையில், உதவ வந்த இந்த மனிதர்தான் கடவுள்! அல்லது கடவுள் அனுப்பிய மனிதர். எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாய் இருக்கும் மனிதருக்குக் கடவுள் எல்லா உதவிகளையும் செய்வார் என்றால் உண்மையில் கடவுள் மந்திரவாதியாக மட்டுமே பார்க்கப்படுவார். இங்கே கடவுள் என்பவர் மனிதர்களை இயங்க வைத்து, அவர்களின் முயற்சிகளுக்கு முழு இயக்கத்தையும் நல்குபவராக இருப்பவர்.

    நாம் நம்முடைய சொந்த முயற்சியில் ஒரு கையை உயர்த்தினால், கடவுள் அவரது கருணையினாலே இரண்டு கரங்களையும் கொடுத்துத் தூக்கிவிட ஆயத்தமாக இருப்பார். இந்தக்கதையில் விபத்துக்கு ஆளானவர் வெறுமனே நின்றுகொண்டு 'கடவுளே காப்பாற்று!' என்று கூவிக்கொண்டே இருந்த வரை, உதவிக்கு யாரும் வரவில்லை; ஆனால், அவரே களத்தில் இறங்கியவுடன் உதவிக்கு ஆள் வந்துவிட்டார்; செயலும் சிரமமின்றி நடந்தேறி விட்டது.

    திருவள்ளுவரும்,

    "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

    மெய் வருத்தக் கூலிதரும்"

    என்கிறார். கடவுளால் முடியாது என்று கை விடப்பட்ட செயலைக்கூடச் சொந்த முயற்சி கொண்டு முயன்று செய்தால், முயற்சிக்கேற்ற வெற்றிக்கூலி உண்டு என்பது இக்குறளின் பொருள். சொந்த உதவிக்குத் தயாராகிறவர்களைக் கடவுள் தனது உதவியையையும் வழங்கிச் செயல்துணை புரிகிறார். கடவுள் நம்பிக்கை என்பது அவனது அருளையே நம்பிக்கையாகக் கொண்டு, சொந்தமாகக் காரியத்தில் இறங்கிச் சாதித்துக் காட்டுவது ஆகும்.

    கடவுள் எப்போது கைகொடுப்பார்? ; அவரது அருளைத் துணையாகக் கொண்டு தன்னுடைய சுயவலிமையை மூலதனமாகக் கொண்டு ஒரு செயலில் இறங்கினால் கடவுள் நிச்சயம் கைகொடுப்பார். செயல் வலிமையானது!; செய்வதற்கும் வலிமை தேவைப்படும்; ஆயினும் கடவுளின் உதவி என்பது மனிதனுக்கு வலிமை தந்து அவனை வலிமையானவனாக ஆக்கி அவனது வலிமை மூலமே அவனை வெற்றிபெறச் செய்வது ஆகும். நாம் செயலை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் கடவுள் நமக்கு உதவ நம்மைநோக்கி இரண்டடி எடுத்துவைப்பார்.

    ஆம் கடவுள் எப்போதும் கைகொடுப்பார்!

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×