என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சனி மேடு சொல்லும் பலன்கள்
    X

    சனி மேடு சொல்லும் பலன்கள்

    • வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
    • சனி மேட்டில் சதுரம் காணப்பட்டால், சமூகத்தில் நல்ல புகழை பெற்றுத் தரும்.

    சனி மேடு என்பது நடுவிரலுக்கு (சனி விரல்) கீழே உள்ள பகுதியைக் குறிக்கும் ஒரு மேடு ஆகும்.

    சனி மேடு சனி பகவானுடன் தொடர்புடையது. சனி பகவான் நீதி, கர்மா, மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கிறார்.

    சனி மேடு ஒருவரின் பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு, மற்றும் தொழில் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒருவரது சனி மேடு வலுவாக இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் கடினமாக உழைத்து வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    சனி மேட்டில் ஒரு கோடு காணப்பட்டால், மிகுந்த செல்வம், கௌரவம், மரியாதை போன்ற அனைத்து வித நல்ல பலன்களையும் இந்த அமைப்பு உங்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுத் தரும். வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    சனி மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால், கலைகளில் ஈடுபாடு, உயர் பதவி உட்பட எண்ணற்ற யோக பலன்களை இந்த அமைப்பு உங்களுக்குப் பெற்றுத் தரும். வாழ்வில் கூட நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணுவீர்கள், உங்கள் பிற்கால வாழ்க்கையில் பலர் உங்களின் பேச்சிற்கு மதிப்பு அளித்து நடப்பார்கள்.

    சனி மேட்டில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் காணப்பட்டால், கலைத் துறையில் நுழைவதற்கான முயற்சிகள், செயல்பாடுகள், குழப்பங்கள் தரும்.

    இந்த அமைப்பின் படி நீங்கள் படித்தது ஒரு துறை, வேலை பார்ப்பது வேறொரு துறையாக இருக்கும். வாழ்வில் உங்கள் எதிர்பார்ப்பு இயல்பை விட அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் ஏமாற்றமும் அதிகம் காணப்படும். உங்கள் வாழ்வில் அதீத எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே நீங்கள் நலம் பெறுவீர்கள்.

    சனி மேட்டில் புள்ளி காணப்பட்டால், இந்த அமைப்பால் வாழ்வில் நம்பக் கூடாதவர்களை நம்பி நீங்கள் ஏமாற இடம் உண்டு. எனவே யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பாலும், முயற்சியாலும் மட்டுமே நீங்கள் முன்னேற இடம் உண்டு.

    சனி மேட்டில் பெருக்கல் குறி காணப்பட்டால், சமூகத்தில் நீங்கள் என்ன தான் நன்மை செய்தாலும் கூட அதற்கு உரிய நல்ல பலன்கள் உங்களை வந்து அடையாமல் போகலாம்.

    வாழ்வில் போராட்டங்களுக்கு குறைவு இருக்காது எனினும் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் உங்கள் உழைப்பின் பலனை மெல்ல, மெல்ல அடைவீர்கள். எப்படிப் பார்த்தாலும் முற்கால வாழ்க்கை அதிக போராட்டங்களாக இருக்கும்.

    சனி மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால், கலைத்துறையில் ஈடுபாடு, திறமை, செல்வம், பதவி போன்ற அனைத்து விதமான நல்ல பலன்களையும் நீங்கள் அடைவீர்கள். உழைப்பாலும், உங்கள் முயற்சியாலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். எதிர்காலத்தில் சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். நிறைய பணம் சம்பாதித்து செலவு செய்வீர்கள்.

    சனி மேட்டில் சதுரம் காணப்பட்டால், சமூகத்தில் நல்ல புகழை பெற்றுத் தரும். உங்கள் வாழ்க்கை வசதிகள் கூட எதிர்காலத்தில் மேம்படும். எனினும் பொறுமையாக இருந்தால் மட்டுமே வாழ்வில் நீங்கள் உங்கள் முயற்சியை காட்டிலும் அதிக சாதனை செய்வீர்கள். உங்களுக்கு அடிக்கடி கோப தாபங்கள் வரும் என்பதால் அதன் காரணமாகவும் கூட நீங்கள் சில இழப்புகளை சந்திக்கக் கூடும்.

    அ.ச. இராமராஜன்

    சனி மேட்டில் முக்கோணம் காணப்பட்டால், கலைத் துறையில் கவுரவம் கூடும். வாழ்க்கையில் துன்பங்கள் அநேகம் வந்து போனாலும் கூட வாழ்வை ரசித்து வாழ்வீர்கள். உங்கள் உழைப்பு உங்களுக்குப் பல விதங்களில் வெற்றியை பெற்றுத் தரும். எனினும், உங்களை யாராவது ஒருவர் உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தொடர் வெற்றிகளை பெறுவீர்கள். இந்த ஒரு இயல்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டால் உங்கள் வாழ்வு பல விதங்களில் மேம்படும்.

    சனி மேட்டில் வட்டம் காணப்பட்டால், இந்த அமைப்பு உங்களுக்கு புகழை தரும். சோதனைகள் அநேகம் இருந்தாலும் கூட வாழ்வில் அவற்றை எல்லாம் கடந்து வெற்றி பெறுவீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் பல முன்னேற்றம் தரும் மாற்றங்களை சந்திப்பீர்கள். எனினும் பணம் வருவதும் போவதுமாகவே இருக்குமே தவிர கையில் தங்குவது சற்று கடினம் தான். எனினும் சிலருக்கு பணமாக இல்லாமல் சொத்துக்களாகவும் செல்வம் சேருவது உண்டு.

    சனி மேட்டில் வலை காணப்பட்டால், கலைத் துறையின் மீது ஈடுபாடு இருந்தாலும் கூட, கலைகளில் ஓரளவுக்கு மேல் புகழ் அடைவது கடினம். அதனால் கலைத்துறையை பொழுது போக்காக மட்டுமே வைத்துக் கொள்வது நல்லது. அதே போல, நீங்கள் பணம் யாருக்காவது கொடுத்தால் அது திரும்பி வரும் என்று சொல்வதற்கு இல்லை.

    அதனால் பணம் - கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பிற்காலத்தில் உங்கள் பொருளாதாரம் ஓரளவு மேம்படும். எனினும் நீங்கள் சொத்துக்களை அல்லது வீடு வாங்கும் பாக்கியத்தை அடைவீர்கள்.

    சனி மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால், சூரிய மேட்டின் தன்மைகள் அமைவதால் உங்களுக்கு புகழ், பெருமை, செல்வாக்கு கூடும். சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டு விருதுகளை கூட நீங்கள் பெறுவீர்கள். எனினும் உங்கள் புகழுக்கு தகுந்த படி பொருளாதாரம் அதீதமாக சிறப்படைய வாய்ப்பில்லை. புகழ் அல்லது செல்வம் இரண்டில் ஒன்றைத் தான் வாழ்வில் நீங்கள் பெறுவீர்கள்.

    சனி மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால், இலக்கியத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். காதல் மற்றும் கலை உணர்வுகள் சற்று அதிகம் இருக்கும். பிறர் மனதை கவரும் குணங்களுடன் இருப்பீர்கள். எல்லோரிடமும் சற்று கவனமாக இருந்ததீர்கள் என்றால் நல்ல பலன்களை தரும். நீர் அல்லது திரவம் சார்ந்த தொழில்கள் இது போன்ற அமைப்பு உள்ள சிலருக்கு நன்மையை செய்து உள்ளதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.

    சனி மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால், போர் குணம் அதிகம் இருக்கும். வாழ்வில் அதிக ஏற்ற இறக்கங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. ரத்தம், ரத்தம் சம்மந்தமான சில குறைபாடுகளை நீங்கள் சந்திக்கக் கூடும். எனவே உணவில் அதிகம் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கையில் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு வெற்றியை தரும். தோல் மற்றும் சருமத்தில் சில பிரச்சினைகள் அடிக்கடி வந்து போகலாம்.

    சனி மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால், நீங்கள் அறிவாற்றலுடன் மிகுந்தது காணப்படுவீர்கள். சமூகத்தில் பிறர் மெச்சத்தக்க காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் நிலம், பூமி, வீடு என அனைத்து விதமான செல்வங்களையும் நீங்கள் பெறுவீர்கள், உழைப்பிற்கு தகுந்த நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இது ஒரு நல்ல அமைப்பு ஆகும்.

    சனி மேட்டில் சுக்கிரன் சின்னம் காணப்பட்டால், கலைத்துறையில் உங்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். உலக சுகங்களில் கூட உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கலாம். மேலும், யதார்த்த வாழ்வை விட கற்பனையான வாழ்வைத் தான் உங்கள் மனம் அடிக்கடி நாடிச் செல்லும், நீங்கள் அதிர்ஷ்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தீர்கள் என்றாலே வாழ்க்கையில் பல விதங்களில் வெற்றி அடைவீர்கள். உங்களது முற்கால வாழ்க்கை பல சோதனைகளை தந்தாலும் கூட பிற்கால வாழ்க்கை உங்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இருக்கும்.

    சனி மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கொண்டு இருக்கலாம். எதிரிகள், வஞ்சகர்கள், அவதூறு பேசுபவர்கள் அநேகம் பேர் இருந்தாலும் கூட நீங்கள் அவரவர் வழியில் சென்று பதிலடி கொடுக்கும் தன்மை கொண்டவர்கள். வாழ்வின் முற்பகுதியை காட்டிலும், பிற்பகுதியில் நீங்கள் சிறப்புடன் இருப்பீர்கள். எனினும் பிறர் விவகாரங்களில் நீங்கள் தலையிடாமல் இருந்து விட்டீர்கள் என்றாலே போதும், சமூகத்தில் உங்கள் மதிப்பு மேலும் உயரும். மற்றபடி, நீங்கள் நிதானமாக செயல் பட்டீர்கள் என்றாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    சனி மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவை இல்லாத பழி சொற்களுக்கு எதிர்காலத்தில் நீங்கள் ஆளாக நேரிடலாம். எனவே சுற்றத்தார்களுடன் கவனமாக இருங்கள். எனினும் மாற்று மதம் சார்ந்தவர்களால் உங்களுக்கு எப்போதுமே நன்மை உண்டு. உங்கள் உறவு வட்டாரத்தில் உங்கள் மதிப்பு குறையலாம் எனினும் உறவுகளை விட நண்பர்கள் கைகொடுப்பார்கள். துர்க்கையை வழிபட வாழ்வில் பல நன்மைகளை நீங்கள் பெறலாம்.

    சனி மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால், எலும்புகள், பற்கள் சம்மந்தமான பிரச்சினைகளை வாழ்வில் நிறைய சந்திக்கலாம். பொதுவாகவே உங்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட இடம் உண்டு. அதனால் உடல் நிலையை நீங்கள் பத்திரமாக | பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல, வாழ்வில் மிருகங்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிறருக்கு ஜாமீன் போடுவதை குறிப்பாக தவிர்ப்பது நல்லது. விநாயகப் பெருமானை நீங்கள் அதிகம் வணங்கி வருவது நல்லது.

    செல்பேசி- 9965799409

    Next Story
    ×