என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பற்களை பாதுகாப்பது எப்படி?
- பல் துலக்காமல் எந்த வேலையையும் செய்ய கூடாது என்பதாகும்.
- மனித உடல் தங்கு தடையின்றி இயங்க சரியான அளவில் சக்தி தேவை.
ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியத் திட்டத்தில், தினசரி கடைபிடிக்க வேண்டியவைகளில் காலை தண்ணீர் பருகுவதைப் பற்றி பார்த்தோம், பின்பு மலம் கழித்தல் மற்றும் அதற்கான மருந்துகளைப் பற்றி பார்த்தோம். அதற்கு அடுத்தப்படியாக நாம் செய்ய வேண்டியது பல துலக்குதல், பல் துலக்குதலுக்கு "தந்த தாவனம் " என்று பெயர்.
தந்த என்றால் பல், தாவனம் என்றால் அழுக்குகளை நீக்குதல் என்று பொருள்.
அவற்றை எவ்வாறு செய்வது என்று ஆயுர்வேதம் சொல்லிக்கொடுக்கிறது, என்ன... பல் விலக்க ஆயுர்வேதம் சொல்லிக்கொடுகிறதா? ஆம் ஆயுர்வேதம் என்பது ஆரோக்கியமாக வாழ மனிதன் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை முதலில் எடுத்துரைக்கிறது,மேலும் மனிதன் அவர்களுடைய வாழ்நாளில் 32 தவறுகளை செய்யக் கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
அவற்றில் இரண்டாவது தவறு பல் துலக்காமல் எந்த வேலையையும் செய்ய கூடாது என்பதாகும். எனவே பல் துலக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உடல் கருத்தரிக்கும் போது சில உடல் உறுப்பு அம்சங்கள் தாயிடமிருந்தும். சில உடல் உறுப்பு அம்சங்கள் தந்தையிடமிருந்தும் வருவதாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் பல்லானது தந்தையிடமிருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் 32 என்ற எண்ணிக்கையில் பல்லிருப்பதாகவும், அவற்றில் 8 பற்கள் நிரந்தமானவை, மீதமுள்ள பற்கள் விழுந்து முளைக்கக்கூடியவை என்றும், சராசரியாக ஒரு மனிதனுடைய பல்லின் நீளம் 2 அங்குலம் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பற்களை எவ்வாறு பராமரிப்பது என்று பார்ப்போம். மனித உடல் தங்கு தடையின்றி இயங்க சரியான அளவில் சக்தி தேவை. அந்த சக்தியை தருவது உணவு தான். மனித வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது. உடல் சக்தி, செயல்படும் திறன், உடல் வனப்பு, புத்திக் கூர்மை, இவை அனைத்தும் உணவை அடிப்படையாக கொண்டதே. ஆனால் மேற்கண்ட பலன்களை பெற வேண்டுமெனில் உண்ட உணவு நன்றாக சீரணமடைய வேண்டும். அந்த சீரணம் பற்களிலேயே தொடங்கி விடுகிறது, ஆம் பெரிய கடினமான உணவு பொருட்களை சிறிய மென்மையான உணவு பொருட்களாக மாற்றி சீரணமாகுவதற்கு ஏற்றவாறு மாற்றி தருவது பற்களே.
ரா. பாலமுருகன்
உயிர் வாழ அடிப்படையாகயிருக்கின்ற உணவை சீரணிக்க பயன்படும் பற்களை அதிக சிரத்தையுடன் பேணிக்காக்க வேண்டும் அல்லவா! மேலும் காண்போரை கவரவும், முக அழகிற்கும் காரணமாகயிருப்பது பற்களே, எனவே அவற்றிக்காவும் பற்களை பராமரிக்க வேண்டும். இல்லை எனில் நோயின் வாசலாக வாய் அமைந்து விடும். பற்களை நன்றாக துலக்குதல், நாக்கை சுத்தமாக்குதல், வாய் கொப்பளித்தல் என்ற மூன்று வழிகள் மூலமாக பற்களை பராமரிக்கலாம்.
முன்பு எல்லாம் மலம் கழித்த பின்பு வேப்பங்குச்சியை சுண்டு விரல் அளவுக்கு உடைத்து, நுனிப்பகுதியை கடித்து தூரிகையாக்கி நொடி பொழுதில் பல் துலப்பானை (டூத் பிரஷ்) தயார் செய்து பல் துலக்குதல், நாவை சுத்தம் செய்தல் என்று டு இன் ஒன் ஆக பயன்படுத்தினர். இந்த இயற்கை (organic) டூத் பிரஷை எப்படி டிசைன் செய்யலாம் என்பதையும், வடிவுருவம் பற்றி ஆயுர்வேதம் தெளிவாக விளக்குகிறது. இயற்கை டூத் பிரஷ் 12 அங்குலம் நீளமுள்ளதாக இருக்க வேண்டும். நன்றாக பரிச்சையப்பட்ட மரதிலிருந்து பறிக்கப்பட்ட குச்சியாகயிருக்க வேண்டும்.
நுனிப்பகுதி நன்றாக நசுக்கப்பட்டு மென்மையானதாக இருக்கு வேண்டும், அவற்றின் அளவு சுண்டு விரலின் நுனிப்பகுதி பருமன் அளவிற்குயிருக்க வேண்டும், பற்குச்சி கோணல் இல்லாதவாறு, கணுக்களில்லாதவாறு, நேராக இருக்க வேண்டும். மேலும் அக்குச்சிகள் துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு சுவை கொண்டதாகயிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நேர்த்தியாக எவ்வாறு செய்வது என்றால், குடும்பத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக செய்து பத்திரப்படுத்தி, பல் துலக்கும் போது ஈரமாக மாற்றி பயன்படுத்தலாம்.
அவசரகதியான , நவீனமயமான இக்காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்க தோன்றுகிறது அல்லவா! இந்த கேள்வி குறியில்லாத கேள்வியின் விளைவு நம் வீட்டு அருகில் கிடைக்கும் வேப்பம்குச்சி அயல் நாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. நம் நாட்டு பாரம்பரியம் அயல் நாட்டினருக்கு தெரிகிறது, நமக்கு தெரிவதில்லை.
சரி பிறந்ததிலிருந்து பிளாஸ்டிக் பற்குச்சியை பயன்ப்படுத்தி பழகியாச்சு, இப்போது வந்து இயற்கை பற்குச்சி என்றால் எப்படி, எப்போதும் வேண்டாம் வாரத்தில் சில நாட்களாவது பின்பற்றலாமே... அவ்வாறு செய்யும் போது எல்லோரும் வேப்ப மரத்தை நாடினால் என்னாவது, அதற்கும் மாற்று வழியை ஆயுர்வேதம் கூறுகிறது, பல் துலக்க வேப்ப மரம் மட்டுமில்லை ஆல மரம், வேங்கை மரம், கருங்காலி மரம், புங்க மரம், கருவேலம் மரம், நாயுருவி, மருத மரம் போன்ற மூலிகைளையும் பல் துலக்க பயன்படுத்தலாம்.
மேற்கண்ட மூலிகைகளை ஆராய்ந்தால் இவையனைத்தும் பற்களில் உள்ள கிருமிகளை போக்கி, பற்களுக்கு வலுவை கொடுக்க கூடிய மூலிகை என்பது புலப்படும்.
இவ்வளவு நன்மைக் கொண்ட பற்குச்சிகளை பயன்ப்படுத்தாமல் கவுரவம் என்று கருதி பல் குச்சியை புறக்கணித்ததின் விளைவு, பட்டி தொட்டி எங்கும் பெட்டி கடையில் பல வர்ணத்தில் தொங்கும் நவீன டூத் பிரஷ்.
சரி எப்படி விலக்குவது என்றால் பற்களை மென்மையாக அதிக துரிதமில்லாமல், மவுனமாக பல்லை துலக்க வேண்டும். அதன் பின் பற்பசையை பயன்படுத்த வேண்டும். என்ன... இன்னும் பல் துலக்குதல் முடியவில்லையா? ஆமாம் முடியவில்லை இனிமேல் தான் இருக்கிறது,. இதுநாள் வரையிலும் பற்பசை பற்களுக்கு தான் என்று கருதி இருந்தோம். ஆனால் பற்பசை ஈறுகளுக்கு தானாம். பற்குச்சி பற்களுக்கு, பற்பசை ஈறுகளுக்கு என்கிறது ஆயுர்வேதம். அதற்கு ஒரு பற்பொடி பால் முலாவையும் வழங்கி உள்ளது.
திரிபலா-நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்.
திரிகடுகு -சுக்கு, மிளகு, திப்பிலி
திரிஜாதக -இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி ஆகிய 9 மூலிகைளையும் சம அளவு எடுத்து பொடி செய்து காற்று புகாவண்ணம் பத்திரப்படுத்தி தேவைப்படும் போது தேவையான அளவு எடுத்து தேனில் குழைத்து பல் ஈறுகளில் மெல்ல மசாஜ் செய்வது போல் வட்ட வடிவில் தேய்த்த பின் வாய்க் கொப்பளிக்க வேண்டும். திரிபலா -பற்களில் ஏற்படும் ரக்த கசிவை போக்கும், பற்களின் உறுதி தன்மையை மேம்படுத்தும். திரிகடுகு- வாயில் உள்ள சுரப்பிகளை தூண்டும். திரிஜாதக -வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும்.
தேன் - வாய்ப்புண்ணை குணமாக்கும். மேலும் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை பல்லை துலக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பற்கள் பளிச்சிட வேண்டும் என்பதற்க்காக அடிக்கடி பல்லை தேய்த்து துப்பினால் தான் திருப்தி அடைகின்றனர். இது பற்களுக்கு நல்லதல்ல.
தின ஆரம்பம் அதாவது காலை வேளை பின்பு சாப்பிட்ட உடன் பற்களை துலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது ஆயுர்வேதம்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது இயல்பாகிவிட்டது. சிலர் நான்கு வேளை சாப்பிடுப்பவர்களும் உண்டு அப்போ நான்கு வேளை பல் துலக்க வேண்டுமா? இல்லை பொதுவாக ஒரு நாளைக்கு காலை மாலை என இருவேளை பல்லை துலக்கலாம். சாப்பிட்ட பின்பு நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும் அப்போது தூய்மையான அழுக்குகள் அற்ற நகங்கள் இல்லாத ஆள் காட்டி விரலை கொண்டு பற்களை மெல்ல தேய்த்து, ஈறுகளை மெல்ல வருடுவதின் மூலம் சுத்தம் செய்து கொள்ளலாம்.
சாப்பிட்ட அவசரத்தில் சாப்பிட உதவி புரிந்த பல்லையும் , ஈறுகளையும் ஈட்டி கொண்டு குத்துவது போல் தேய்க்க கூடாது இதனால் ஆதாயம் குறைவு சேதாரம் அதிகம். இயற்கை பற்குச்சிகளை கொண்டு பற்களை விலக்கி, ஆயுர்வேத பற்பசை கொண்டு ஈறுகளை மெல்ல தேய்த்து விரலுக்கும் ஈறுகளுக்கும் ஒரு ஆத்ம தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நரம்புகளும் நன்கு தூண்டப்படும், நொதிகளும் நன்கு சுரக்கும் என்பதில் ஐயமில்லை.






