என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருப்பை இறங்குவதை தடுக்க பிரசவத்தின்போது எச்சரிக்கை தேவை
    X

    கருப்பை இறங்குவதை தடுக்க பிரசவத்தின்போது எச்சரிக்கை தேவை

    • சில பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் இடுப்புத்தள தசை தளர்வடைவதால் சிறுநீர்ப்பை இறங்கி விடும்.
    • பிரசவத்தின்போது ஒரு சரியான மருத்துவர் இருக்க வேண்டும்.

    பெண்களை பாதிக்கின்ற கருப்பை குடலிறக்கம் பற்றி பார்த்து வருகிறோம். இது வயதான பெண்களை மட்டுமல்ல, இளம் வயது பெண்களையும் பாதிக்கிறது. பெண்களின் இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள இடுப்புத்தள தசை தளர்வு அடைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

    இளம் வயது பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால், இதற்கு எளிமையான நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. கருப்பை குடலிறக்கத்துக்கு முக்கிய காரணமான இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படுவதை தடுப்பதற்கு, இளம் வயது பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும்? பிரசவத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    முதல் குழந்தை பிறந்த பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்:

    இளம் வயது பெண்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படுவதால் சிறுநீர் கசிவு மற்றும் பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுவே 40 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு வருமா என்று கேட்டால் 10 சதவீதமான பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    குறிப்பாக பெண்களுக்கு இது, ஒரு பிரசவம் ஆன பின்பு ஏற்படுகின்ற பிரச்சினையாகும். இதில் அவர்களுக்கான முதல் பிரச்சினை தம்பதிகளின் பாலியல் உறவுகள் மூலம் ஏற்படுகிறது. இதுபற்றி சிகிச்சைக்கு வரும் பெண்கள் கூறும்போது, 'டாக்டர், எனது இடுப்புத்தள தசை மிகவும் தளர்வாக இருக்கிறது. இதனால் எனது கணவரை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை. பாலியல் உறவின்போது ஏதோ மாற்றம் இருப்பதாக எனது கணவர் கூறுகிறார். குழந்தை பெறுவதற்கு முன்பு இருந்தது போன்று இப்போது பாலியல் உறவு இல்லை என்கிறார்' என்பார்கள்.

    அதாவது முதல் பிரசவத்துக்கு பிறகு யோனிப்பகுதி மிகவும் தளர்வுடன் காணப்படுகிறது என்று சிகிச்சைக்கு வருகின்ற ஏராளமான பெண்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இதுபற்றி பொதுவாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்த பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும்போது தான் பல தம்பதியினர் இந்த விஷயத்தை சொல்கிறார்கள். குறிப்பாக முதல் குழந்தை பிறந்தவுடனே இந்த மாதிரியான பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்பார்கள்.

    சில பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் இடுப்புத்தள தசை தளர்வடைவதால் சிறுநீர்ப்பை இறங்கி விடும். அதனால் அவர்களுக்கு சிறுநீர் கட்டுப்பாட்டில் இருக்காது. சிகிச்சைக்கு வரும்போது அவர்கள் இதை சொல்வார்கள். 'டாக்டர், எனக்கு முதல் பிரசவம் ஆன பிறகு சிறுநீர் அவசரமாக வருகிறது. ஆனால் கழிவறைக்கு செல்வதற்கு முன்பு என்னை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டு விடுகிறது. அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல நேரங்களில் இருமும் போது, தும்மும் போது சிறுநீர் கசிவு அதிகமாக ஏற்படுகிறது' என்பார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுடன் நிறைய பெண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    சாதாரண பிரசவத்தின்போது விரிவடையும் இடுப்புத்தள தசை:

    பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு முக்கியமாக ஒருவித மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய உறவுகளில் ஏற்படும் பிரச்சி னையால் அவர்களுடைய திருமண வாழ்க்கை யிலும் பிரச்சினை வருகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மனரீதியாக கருத்து வேறுபாடும் ஏற்படுகிறது.

    பல நேரங்களில் இதை யாரிடம் போய் சொல்வது என்பது தெரியாத நிலையில் நிறைய பெண்கள் இந்த பிரச்சினைகளை தங்களுக்குள்ளேயே வைத்து தவித்து வருகிறார்கள். ஆனால் அந்த பெண்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு கண்டிப்பாக இருக்கிறது.

    முக்கியமாக பிரசவ நேரத்தின்போது இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால், முந்தைய காலத்தில் சிசேரியன் இல்லாத சாதாரண பிரசவத்தின்போது நிறைய பேருக்கு போர்செப்ஸ் என்ற கருவியை பயன்படுத்துவார்கள். போர்செப்ஸ் என்பது 2 உலோக கரண்டி போன்ற சாதனங்களை கொண்ட ஒரு கருவி ஆகும். அதை குழந்தையின் தலையை சுற்றி வைத்து குழந்தையை மெதுவாக வெளியே இழுப்பார்கள்.

    அந்த மாதிரி குழந்தை பிரசவம் ஆகும்போது பெண்ணின் இடுப்புத்தள தசை விரிவடைந்து விடும். ஏனென்றால் அந்த இடுப்புத்தள தசை விரிவடையும்போது தான், யோனியின் திறப்பும் அதிகமாகும். அப்போதுதான் குழந்தை வெளியே வரும். பல நேரங்களில் அந்த இடுப்புத்தள தசை விரிவடைந்து திரும்பவும் இயல்பான நிலைக்கு வருவதற்கு நாம் அதற்கு தேவையான சப்போர்ட்டிவ் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

    அப்படி சப்போர்ட்டிவ் அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் பல நேரங்களில் அந்த இடுப்புத்தள தசை கிழிந்துவிடும். அதை முறையாக குணப்படுத்தாவிட்டால், தசைகள் தளர்வாகி அதனுடைய செயல்பாட்டு தன்மை குறைவாகிறது.

    இடுப்புத்தள தசையை சீராக கிழிப்பதற்கு எபிசியோடமி முறை:

    நமது உடலில் உள்ள ஏதாவது தசைகளுக்கோ அல்லது திசுக்களுக்கோ காயம் ஏற்பட்டால் அதை சரியாக குணப்படுத்தினால் தான் அதன் செயல்பாடு மீண்டும் நன்றாக வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த பெண்களுக்கு பொதுவாக பிரசவ நேரத்தில் இடுப்புத்தள தசை விரிவடைந்துதான் குழந்தை பிரசவம் ஆகும். இந்த விரிவடையும் தசைகளை மீண்டும் சரிப்படுத்தி கொடுப்பதற்கு பல நேரங்களில் சப்போர்ட்டிவ் அமைப்பு சீராக இல்லையென்றால் இந்த தசைகள் காயம் அடைந்த பிறகு சரியான வகையில் குணம் அடைவதில்லை.

    அந்த காலத்தில் பெண்களுக்கு தாய் பிரசவம் பார்ப்பது, இடுப்புத்தள தசையை துண்டிக்காமல் சப்போர்ட்டிவ் கொடுப்பது ஆகிய விஷயங்கள் பின்நாட்களில் கருப்பை குடலிறக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபி டித்ததால்தான், பிரசவத்தின்போது இடுப்புத்தள தசையை சீராக கிழிப்பதற்கு எபிசி யோடமி என்ற முறை கண்டறி யப்பட்டது. இந்த முறையில் குழந்தை பிரசவமாகும் நேரத்தில் இடுப்புத்தள தசைகளை சீராக கிழித்து, குழந்தை பிறந்த பிறகு சீராக தையல் போடும்போது, இந்த பகுதி எளிதில் குணம் அடையும். எபிசியோடமி முறையில் இதை செய்து, அதற்கான சப்போர்ட்டிவ் கொடுக்கும் போது, இந்த இடுப்புத்தள தசையின் சிதைவு, காயம் ஆகியவை குறைவாகி, அதனுடைய குணமடைதல் தன்மையும் நன்றாக இருக்கிறது. அதனால் தான் சாதாரண பிரச வத்தின் போது மிகவும் சரியாக கவனமாக பெரிணியத்துக்கு சப்போர்ட்டை நாங்கள் கொடுப்போம். இதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

    பிரசவம் ஆகும்போது குழந்தையின் தலை எப்படி வேண்டுமானாலும் வரும். ஆனால் அதற்கான சப்போர்ட்டிவ் அமைப்பு கொடுக்கவில்லை என்றால் இந்த இடுப்புத்தள தசையில் ரொம்ப காயம் ஏற்பட்டு, அது சரியாக குணமடையாமல் அதனுடைய செயல்பாட்டு திறன் குறைவாகி பலவிதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    முறையான வகையில் பிரசவம் பார்க்க வேண்டும்:

    பிரசவத்தின்போது ஒரு சரியான மருத்துவர் இருக்க வேண்டும். எனவே தான் குழந்தை பிரசவம் ஆகும்போது அவர்களுக்கு எப்போதுமே பார்த்து ஆலோசனை சொல்லும் மருத்துவர்கள் வந்து விடுவார்கள். ஏனென்றால் இந்த மாதிரியான நுணுக்கமான விஷயங்கள் சில நர்சுகளுக்கு தெரிவது இல்லை.

    அதனால் தான் பிரசவத்தின்போது மருத்து வர்கள் எபிசியோடமி முறையில் இடுப்புத்தள தசையை சரியாக கிழித்து பின்னர் சரியாக தையல் போடும் போது குணமடைதல் நன்றாக இருக்கும். இடுப்புத்தள தசை தளர்வு என்பது குறைவாகும். இந்த பிரச்சினையை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால் பின் நாட்களில் அந்த பெண்களுக்கு பாலியல் உறவுகளின் போது வலிகள் ஏற்படலாம்.

    ஏனென்றால் சரியாக குணமடையாவிட்டால் அந்த தசைகளில் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே அவர்களுக்கு பாலியல் உறவின் போது வலிகள் இருக்கும். பல நேரங்களில் ரொம்ப தளர்வு அடைவதால் சரியான முறையில் அவர்களுக்கு திருப்தி இல்லாத நிலை ஏற்படலாம். சில நேரங்களில் இந்த பெண்களுக்கு வாயு வெளியேறும் போது யோனி வழியே போகிறது என்பார்கள். இவை எல்லாமே இடுப்புத்தள தசை தளர்வுகளால் ஏற்படுகின்ற விஷயம் தான்.

    இதனை தடுப்பதற்கான வழிமுறை என்பது முறையான பிரசவ முறை தான். எனவே பிரசவத்தை முறையாக பார்க்க வேண்டும். பல நேரங்களில் பெண்கள் இந்த பிரச்சினையில் கொஞ்சம் கவனக்குறைவாக இருப்பதால் இந்த பிரச்சினை சரியாவதில்லை. இன்றைக்கு நிறைய பேர் என்னிடம் பிரசவத்தின் போது டாக்டர், இடுப்புத்தள தசையை துண்டிப்பீர்களா, தையல் போடுவீர்களா என்று கேட்டு, அப்படி இல்லாமல் செய்யுங்கள் என்பார்கள். அது தவறு. இதை துண்டிப்பது எல்லாமே அவர்களுக்கு நன்றாக குணமடைவதற்கும், பிற்காலத்தில் பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்குமான வழிமுறைகள் தான்.

    இதெல்லாம் சரியாக செய்தால் கூட சில பெண்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படும். பிரசவத்துக்கு பிறகு இடுப்புத்தள தசை குணமாகும்போது பழைய வலிமை மீண்டும் வராத நிலை ஏற்படுகிறது. ஒருவர் குழந்தை பெற்றதும் அடிவயிறு தளர்வான பிறகு, கண்டிப்பாக அதில் சுருக்கங்கள், தளர்வுகள் ஏற்படும். இதனை சீராக்கி மீளுருவாக்கம் செய்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? அதற்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    Next Story
    ×