என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தாய்ப்பால் எனும் அருமருந்து!
- குழந்தையின் முதல் ஆறு மாத வயது வரையில் தாய்ப்பால் மட்டுமே முக்கியமான, போதுமான உணவு.
- நாற்பத்தியெட்டு விழுக்காடு மட்டுமே பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த வருடம் உலகத்தாய்ப்பால் வாரத்தின் கருப்பொருள் பச்சிளங்குழந்தைகளுக்கு "தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கவும், அதற்குத்தேவையான ஆதரவை மேம்படுத்தவும்" என்பதேயாகும்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் என்பது ஒரு அருமருந்து மட்டுமல்ல, அது பிறப்புரிமையும் ஆகும். இயற்கையான இச்செயலை ஏன் ஒவ்வொரு ஆண்டும் ஒருவார நிகழ்வாக உலகம் முழுவதும் பின்பற்றுகிறோம்?
ஏனென்றால் உலகளவில் தாய்மார்கள் தாய்ப்பால் தரும் சதவிகிதம் குறைந்துக்கொண்டே வந்தது, இதனால் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைந்து வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி குறைப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு இலக்காவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதை தடுப்பதற்கும், ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவுமே தாய்ப்பாலின் மேன்மை வலியுறுத்தப்படுகிறது.
குழந்தையின் முதல் ஆறு மாத வயது வரையில் தாய்ப்பால் மட்டுமே முக்கியமான, போதுமான உணவு. இதனை சரிவர பின்பற்றுவதில் தாய்க்கு மட்டுமல்லாது, கணவருக்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருமித்த கருத்தும், புரிதலும், ஈடுபாடும் இருத்தல் அவசியம்.
தாய்ப்பாலில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது? ஏன் வேறெந்த பாலையோ அல்லது டின் பவுடரையோ தரக்கூடாது? தாய்க்கும் சேய்க்குமான நன்மைகள் என்ன? இவற்றை ஒரு பச்சிளங்குழந்தையின் குடும்பத்தினர் நன்கு உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் மட்டுமே எவ்வித சூழ்நிலையிலும் தாய்ப்பாலைத்தவிர மற்ற உணவுப்பக்கம் யோசித்துப் பார்க்க மாட்டார்கள்.
பாலூட்டி இனங்களான பல மிருகங்கள் தத்தம் குட்டிகளுக்கு பாலூட்டுவதை பல முறை நாம் பார்த்திருப்போம். ஏன் நம் வீட்டில் வளர்க்கும் பூனை நாய் போன்றவைக்கூட!
"கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிறங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர"
என்ற திருப்பாவை வரிகளும் தம் இளங்கன்றை நினைத்த மாத்திரத்தில் பால் சுரப்பதாகக் கூறப்பட்டிருக்கும். அனைத்து பாலூட்டியினத்திற்கும் மனித இனத்தையும் சேர்த்து இது பொருந்தும்.
அப்படி இருக்கையில், ஏன் வெறும் நாற்பத்தியெட்டு விழுக்காடு மட்டுமே பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அறுபத்தியெட்டு விழுக்காடு குழந்தைகள் மட்டுமே ஆறுமாத வயது முடியும் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிறார்கள் என்றும் அறிக்கைகள் தெரியப்படுத்துகின்றன. அப்படியென்றால் மீதமுள்ள முப்பத்திரண்டு விழுக்காடு குழந்தைகளுக்கு மிக சீக்கிரமாகவே இணை உணவு அளிக்கப்படுகிறது என்பது அறியப்படுகிறது.
குழந்தையின் முதல் ஆறுமாதம் வரை கட்டாயம் வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது, முக்கியமானது என்று வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அரசு அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டிருக்கின்றன. ஆயினும் குழந்தையின் முதல் ஆறுமாதம் வரை கட்டாயத்தாய்ப்பால் என்ற இலக்கை நூறு சதவிகிதம் இன்னும் அடைய முடியவில்லை.
இந்நிலைக்கு பற்பல காரணங்கள் ஆராயப்பட்டிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு பலமுனை சப்போர்ட் சிஸ்டங்களை உறுதுணையாகக் கொண்டு இலக்கை அடைய முடியும் என்பதையே இந்த வருட தாய்ப்பால் வார விழா வலியுறுத்துகிறது. அந்த பலமுனை சப்போர்ட் என்ன?
அவை குழந்தைப்பெற்றத் தாயை சுற்றி இருப்பவையே. சாதாரணமாக ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றாலோ அல்லது ஏதாவது சந்தேகம் என்றாலோ நாம் என்ன செய்கிறோம்? அதே பிரச்சனையை சமாளித்தவர்களிடம் பேசி, அலசி ஆராய்ந்து எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக்கொள்கிறோமல்லவா?
சிம்பிள் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு புதிய ஊருக்கு நாம் பயணம் செய்கிறோமென்றால், அங்கு ஏற்கனவே சென்று வந்திருக்கும் நண்பர்களிடமோ, சுற்றத்தினர்களிடமோ ஏன் யூடியூபிலோ கூட பார்த்து தெரிந்துகொண்டால் நமக்கு ஓர் நம்பிக்கை,தெளிவு கிடைக்கிறது அல்லவா? அதேபோல், ஒரு புதிய தாய்க்கு அவரைப்போலவே குழந்தைப்பெற்று பால்குடுக்கும் சகத்தாய்மார்கள் உறுதுணையாக இருக்கிறார்கள், இருக்கலாம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது. எனவே இது ஒரு முதல் சப்போர்ட் சிஸ்டம்.
இரண்டாவது சப்போர்ட் சிஸ்டம் மருத்துவர்கள், செவிலியர்கள், சத்துணவு நிபுணர்கள், மற்ற பிற மருத்துவம்சார் துணை பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆவர். இவர்கள் தத்தம் துறைக்கேற்ப அந்தத்தாயின் சந்தேகங்களையும் தெளிவித்து, சவால்களை எதிர்க்கொண்டு சமாளித்து தாய்ப்பால் புகட்டும் சீரிய கடமையைச் செய்ய உறுதுணையாக இருக்கிறார்கள். எனவே இவர்களின் துணையையும் ஆலோசனைகளையும் நாடுவது நல்ல பலனளிக்கும்.
மிக முக்கியமான மூன்றாவது சப்போர்ட் அந்த பெண்ணின் குடும்பத்தினர். முதலில் அவரது கணவர். தமது குழந்தையின் வாழ்நாள் முழுவதற்குமான ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது தாய்ப்பால் என்பதை அறிந்து, உணர்ந்து, அதற்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் ஆதரவளிக்க வேண்டியது, கணவராக அப்பாவாக அவரது கடமையாகும். அந்தப் பெண்ணின் அம்மா, அப்பா, கூடப்பிறந்தவர்கள் என அனைவரும் சேய்க்கு சரிவர தாய்ப்பால் கிடைப்பதை அவர்களது உறுதுணை மூலமும் உற்சாகப்படுத்துவதன் மூலமும் உறுதி செய்யவேண்டும்.
பெண்ணின் புகுந்த வீட்டின் உறவுகளான மாமியார், நாத்தனார் என அத்தனை உறவுகளும் தங்கள் குலக்கொழுந்தின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை உணவான தாய்ப்பால் ஊட்ட வைப்பதில் துணைநிற்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெண்ணின் ஊண், உறக்கம், உற்சாகம், உடல் ஆரோக்கியம், மன அமைதி, என அனைத்தையும் முழுமையாகப்பெறுவதை உறுதிசெய்வதன் மூலம் அவளுக்கு ஒரு நல்ல சூழலையும் நம்பிக்கையையும், ஏற்படுத்துவது அவசியம்.
வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களுக்காகவும் பேறுகால விடுப்பும், மாற்றியமைக்கக்கூடிய வேலை நேர வசதி, வீட்டிலிருந்தே வேலை செய்யும் அமைப்பு போன்றவையை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அப்பெண்ணை பணியிலமர்த்துபவர்களும் ஒரு முக்கிய பங்காற்ற முடியும்.
இவற்றைத்தவிர, பிள்ளைக்குப் பாலூட்டுவதை ஓர் உன்னத செயலாகவேக் கருதி, இச்சமுதாயமும் அப்பெண்ணிற்கு நம்பிக்கையான வசதியான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் தாய்ப்பாலூட்டும் வசதிகள் இருப்பதை நாம் பல இடங்களில் கண்டிருப்போம். இதுவும் ஒரு சிறந்த சமுதாய நோக்கமே ஆகும். அவற்றை பயன்படுத்துவதற்கும் விழிப்புணர்வு அவசியம்.
பேராசிரியர் டாக்டர். ஆ.ஜ.ஹேமமாலினி ராகவ்
இத்தகைய சப்போர்ட் சிஸ்டம் அந்தத்தாயின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தாய்ப்பால் நன்கு சுரக்கவும், தாய்சேய் பிணைப்பு அதிகரிக்கவும் கட்டாயம் உதவும். இதன்மூலம் நூறு சதவீத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் அருமருந்து தங்குத்தடையின்றி கிடைத்து ஒரு ஆரோக்கியமான குழந்தையாக வளருவதுடன், ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்கும்.
எந்த சூழலிலும் பிறந்த குழந்தையின் ஆறு மாத முடிவு வரை புட்டிப்பாலைத்தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே தருவோம் என உறுதியெடுப்போம், அதனையே செயல்படுத்துவோம்!
பேராசிரியர் டாக்டர். ஆ.ஜ.ஹேமமாலினி ராகவ்,
சத்துணவு மருத்துவத்துறை.






