என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன்- இரண்டு இளநீர் மிதந்து வந்தது!
- தெய்வ வழிபாட்டில் அபிஷேகம் மிக முக்கியமானதாகும்.
- கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பலர் அபிஷேகம் செய்வது உண்டு.
முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகுந்த ஆற்றல் தரும் வலிமை கொண்டவை. எதை நினைத்து நாம் அவருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த பலனை நிச்சயம் நமக்கு தருவார்.
பொதுவாகவே தெய்வ வழிபாட்டில் அபிஷேகம் மிக முக்கியமானதாகும். சிவபெருமானுக்கு எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறார்களோ அதே அளவுக்கு முருகனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது உண்டு. திருச்செந்தூர் ஆலயத்திலும் முருகப் பெருமானுக்கு தினமும் பல்வேறு விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. சிலர் முருகனுக்கு நடத்தப்படும் மொத்த அபிஷேகத்தையும் ஏற்றுக் கொண்டு சர்வ அபிஷேகத்தை நடத்துவது உண்டு.
பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட குறை தீர வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பொருள் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்களில் அதிகம் பேர் பாலாபிஷேகம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அதிலும் முருகனுக்குரிய சஷ்டி திதி நாட்களில் அபிஷேகம் செய்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும். கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பலர் அபிஷேகம் செய்வது உண்டு.
முருகனுக்கு மட்டுமின்றி வேல், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கும் அபிஷேகம் செய்யலாம். முருகனுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் வள்ளி, தெய்வானைக்கு செய்தாலும் கிடைக்கும். முருகனுக்கு செய்யும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரக்கூடியதாகும். அதிலும் செவ்வாய்க்கிழமைகளில் குறிப்பிட்ட பிரச்சினை தீர்வதற்கு உரிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யலாம்.
எந்தெந்த பிரச்சினைகள் தீர்வதற்கு முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்தால் தோல் நோய்கள் நீங்கும். பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் நோய்கள் விலகி ஆரோக்கியம் பெருகும். பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலைகளை இந்த அபிஷேகம் பெற்று தரும். அதனால்தான் பக்தர்களில் அதிகம் பேர் பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
எலுமிச்சை அபிஷேகம் செய்தால் எம பயம் நீங்கும். இளநீர் அபிஷேகம் செய்தால் மனதிலும், குடும்பத்திலும் உற்சாகம் மற்றும் அமைதி உண்டாகும். தயிர் அபிஷேகம் செய்தால் குல விருத்தி ஏற்படும். பழ வகைகள் அபிஷேகம் செய்தால் அவரவர் துறைக்கு ஏற்ப புகழ் பெற முடியும்.
கரும்பு சாறு அபிஷேகம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சந்தன அபிஷேகம் செல்வங்களை அதிகரிக்க செய்து உங்கள் அந்தஸ்தை உயர்த்தும். விபூதி அபிஷேகம் செய்து பார்த்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பன்னீர் அபிஷேகம் செய்பவர்களுக்கு அவர்களது தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மஞ்சள் அபிஷேகம் செய்தால் வீட்டில் உள்ள பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தை பெறுவார்கள்.
இப்படி முருகனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும். ஒரு தடவை பக்தர் ஒருவர் சர்வ அபிஷேகம் செய்த போது திருச்செந்தூர் முருகன் ஒரு விளையாடல் நடத்தி அனைவரையும் வியக்க வைத்த சம்பவம் நடந்தது.
அந்த பக்தர் முருகனுக்கு அபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு பொருளாக பார்த்து... பார்த்து... சேகரித்துக் கொண்டு வந்திருந்தார். அபிஷேகம் தொடங்கியது. நல்ல எண்ணை, மஞ்சள், பால், தேன், தயிர் மற்றும் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பொருள் அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு மனம் குளிர்ந்தனர். திருச்செந்தூர் முருகா... என்று கரம்கூப்பி கண்ணீர் மல்க வழிபட்டனர். அப்போதுதான் சர்வ அபிஷேகத்துக்கு பொருட்கள் சேகரித்து வந்தவருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதற்கு காரணம் அபிஷேகத்துக்கு உரிய முக்கிய பொருட்களில் ஒன்றான இளநீர் வாங்கி வரவில்லை என்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. அபிஷேகம் தொடங்கி விட்ட நிலையில் இப்போது இளநீருக்கு எங்கே செல்வது என்று எதுவும் புரியாமல் திணறினார். இரண்டே இரண்டு இளநீர் கிடைத்தால்கூட போதும். சமாளித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் ஆலயத்துக்குள் எங்கு போய் இளநீர் வாங்க முடியும்.
ஆலயத்தை விட்டு வெளியே வந்த அவர் கடற்கரைக்கும், பிரகாரத்துக்கும் இடையே ஓடியபடியே இருந்தார். அப்போது ஒருவர் அவரிடம், "இந்த பகுதியில் இளநீர் கிடைப்பது கடினம். இளநீர் அபிஷேகம் செய்தது போல பாவனை செய்து கொண்டாலும் போதும். சாஸ்திரங்களில் பாவனை செய்து அபிஷேகம் செய்யப்பட்டதாக கூறினாலும் அதை முருகப்பெருமான் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
ஆனால் சர்வ அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இளநீர் கொண்டு வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தே தீரவேண்டும் என்று மன உறுதியுடன் இருந்தார். எதிரே வந்தவர்களிடம் எல்லாம் இங்கே இளநீர் எங்கே கிடைக்கும் என்று கேட்டபடி அலைந்தார்.
அப்போது எதிரே மாற்று மதத்தை சேர்ந்த ஒரு இளைஞர் வந்தார். அவரிடமும் அந்த நபர், "உங்கள் வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் இருந்து இரண்டு இளநீர் தர முடியுமா? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்" என்றார். அதை கேட்டதும் மாற்று மதத்தை சேர்ந்தவர் கேலியும், கிண்டலுமாக சிரித்தார். உங்களுக்கு இளநீர் தர மாட்டேன் என்று ஏளனமாக கூறினார். இதை கேட்டதும் சர்வ அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவருக்கு கண்ணீர் வந்தது.
அப்போதும் மாற்று மதத்தை சேர்ந்தவரின் மனம் இரங்கவில்லை. அவர் மீண்டும், "உங்களுடைய முருகனுக்கு ஆறுமுகம், பன்னிரண்டு கைகள் இருக்கிறது அல்லவா? அந்த பன்னிரண்டு கைகளால் உங்களுக்கு கேட்டதையெல்லாம் வாரி வாரி தருவதாக சொல்கிறீர்களே? அவரிடம் கேட்க வேண்டியது தானே? பன்னிரண்டு கை வைத்திருப்பவரால் இரண்டே இரண்டு இளநீர் தர முடியாதா? என்று கேலி செய்தார். இதை கேட்டதும் சர்வ அபிஷேக ஏற்பாட்டாளருக்கு கடும் கோபம் வந்தது. முருகா... என்று அழைத்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அந்த சமயத்தில் கடலில் அலைகளின் ஆரவாரம் மிக அதிகமாக கேட்டது. அனைவரது பார்வையும் கடலை நோக்கி திரும்பியது.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கடல் அலைகளில் மிதந்தபடி இரண்டு இளநீர் வந்தது. கடல் அலைகள் சுருண்டு சுருண்டு கரையை நோக்கி வந்தபோது அந்த இரண்டு இளநீரும் கரையை நோக்கி வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த இரண்டு இளநீர்களும் கரை ஒதுங்கின.
அபிஷேக ஏற்பாட்டாளருக்கு அதை பார்த்தபோது மெய்சிலிர்த்தது. தான் காண்பது கனவா? அல்லது நினைவா? என்று திணறினார். கண்ணீர் மல்க முருகா... என்று கூவியபடி கடலோரத்துக்கு ஓடினார். அந்த இரண்டு இளநீர்களையும் கையில் எடுத்து ஆலய கோபுரத்தை நோக்கி வணங்கினார்.
பிறகு இரண்டு இளநீரையும் ஆலயத்துக்குள் எடுத்துக் கொண்டு ஓடினார். அவர் சன்னதிக்குள் செல்லவும் அர்ச்சகர் இளநீர் கேட்கவும் சரியாக இருந்தது. எந்தவித சிறு இடையூறும் இல்லாமல் இளநீராலும் முருகனுக்கு அபிஷேகம் நடந்தது.
இதை அறிந்ததும் மற்ற பக்தர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். அபிஷேக ஏற்பாட்டாளரை கிண்டல் செய்த மாற்று மதத்தை சேர்ந்தவரும் வாயடைத்து போனார். அபிஷேகத்துக்கு கடலில் மிதந்து வந்த இந்த இரண்டு இளநீர்களும் யாரால் போடப்பட்டு இருக்கும்? அந்த இரண்டு இளநீர்களும் மிக சரியாக திருச்செந்தூர் கடலோரத்தில் எப்படி கரை ஒதுங்கியது? முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் அவை எப்படி கிடைத்தன? என்பது எல்லாம் விடை காண முடியாத கேள்விகளாகவே உள்ளன.
இது திருச்செந்தூர் முருகன் நடத்திய அற்புதமான திருவிளையாடல்களில் ஒன்று என்று பக்தர்கள் இன்றும் சொல்கிறார்கள். திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூல் எழுதிய பகழி கூத்தரும் இந்த திருவிளையாடலை தனது தொகுப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது போன்ற மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.






