என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாவிகளே... சிறுமிகளை விட்டு விடுங்கள்....
- பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் எப்போதும் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்வது போல் இருக்கின்றது.
- என் குழந்தைக்கு இதெல்லாம் நடக்காது என கண் மூடிய பூனையாய் இருக்காதீர்கள்.
ரீல்ஸ் தலைமுறை என்று புதிய தலைமுறை தற்போது உருவாகி வருகிறது. சமூக வலைதளங்களால் இந்த தலைமுறை உருவாகி இருக்கிறது. இது இளைஞர்களில் கணிசமானவர்களை வக்கிரப்புத்தி கொண்டவர்களாக மாற்றி இருக்கிறது. அதோடு சில சமயங்களில் சிறுமிகள், இளம்பெண்களை பாலியல் ரீதியாக சீண்டும் அளவுக்கும் கொண்டு போய் விடுகிறது.
ஏற்கனவே பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளனர். வயதானவர்களைக் கூட நம்ப முடியவில்லை என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பலர் நல்லவன் முகமூடியுடன் பழகி, கடைசியில் பாலியல் ரீதியாக பெண்களை சூறையாடி விடுகிறார்கள்.
பெண்களை தெய்வமாக நினைக்கும் நமது நாட்டிலா இப்படி? நினைத்தாலே மனதை பதற வைக்கும் இந்த கொடூரத்தில் இருந்து சிறுமிகள், இளம் பெண்களை காப்பாற்றுவது எப்படி? மாலைமலர் மருத்துவர் கமலி ஸ்ரீபால் வழி காட்டுகிறார்... வாருங்கள் படிக்கலாம்....
ஒரு சிறுமி உணவு முறை, சூழ்நிலை இவற்றுக்கேற்ப 10 முதல் 12 வயதிலேயே பருவம் எய்தி விடுகின்றாள். இருப்பினும் அவள் மனதளவில் சிறுமிதான். ஆனால் காலத்தின் கொடூர நிகழ்வுகள் தலை விரித்து ஆடுகின்றன. 6 வயது ஏன் 3 வயது பெண் குழந்தை கூட பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றது. பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் எப்போதும் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்வது போல் இருக்கின்றது. இந்த குழந்தைகளை இத்தகு தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாப்பது?
பெற்றோராக இருப்பது என்பது தாயும், தந்தையும் விரும்பி ஏற்கும் பொறுப்பு. ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி தன் வாழ்க்கையே அந்த குழந்தைக்காகத்தான் என முடிவு எடுத்து மாறி விடுகின்றனர். அவர்களின் ஜீவ நாடியே அந்த குழந்தைதான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் உயிர் அந்த குழந்தை அல்லது குழந்தைகள் மீதுதான் இருக்கின்றது.
இன்றைய கால சூழ்நிலை- நிகழும் கொடூர நிகழ்வுகளால் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நிகழும் தாக்குதல்களால் பெற்றோர்கள் கதி கலங்கி அச்சத்தில் உறைந்து உள்ளனர் எனலாம். எப்படி என்னால் என் குழந்தையை பாதுகாக்க முடியும் என்ற பீதி அனைவரிடமும் உள்ளது.
உலகம் இன்று பெண்களை, பெண் குழந்தைகளை, பெண் சிறுமிகளை மிகவும் அச்சுறுத்துகின்றது. ஆய்வு ஒன்று கூறுவது....
* ஐந்தில் ஒரு பெண்ணாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவாள், ஆளாகின்றாள்.
* 10 பாலியல் கொடுமை நிகழ்வுகளில் 8 பேருக்கு அவர்கள் அறிந்தவர்களாலேயே நிகழ்கின்றது.
* 60 சதவீத பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் புகார் அளிக்கப்படாமலே இருக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்த விஷத்தன்மை வாய்ந்த செயல்களை வேர் அடி வரை சென்று அறுக்க வேண்டும். இதில் முதல் முக்கியத்துவம் பெறுபவர்கள் பெற்றோர்கள்தான். ஆம் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களால் அவர்கள் முயற்சியால் நிறைய மாற்றங்களை, நல்லவைகளை கொண்டு வர முடியும்.
* முதலில் குழந்தை ஆணோ, பெண்ணோ இரு பாலருக்குமே மனதில் படியும் படியான சில அறிவுரைகள் அவசியம் தான்.
* என்ன செய்ய முடியும் என்று விக்கித்து நிற்கக் கூடாது. செய்ய முடியும் என்ற முயற்சி வேண்டும்.
* என் குழந்தைக்கு இதெல்லாம் நடக்காது என கண் மூடிய பூனையாய் இருக்காதீர்கள்.
* 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தோன்றும். ஆனால் காலத்தின் கட்டாயம்.
* எப்படி தெரியாதவர் பிஸ்கட், மிட்டாய் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று சின்ன குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கின்றோமோ அதுபோல...
* யாரும் உன்னை தூக்கக் கூடாது... கண்ட இடங்களைத் தொடக்கூடாது... என்று சொல்லித்தான் வளர்க்க வேண்டும்.
* பேசுங்கள், குழந்தைகளோடு நன்கு பேசுங்கள். அவர்கள் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். எதனையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று அந்த குழந்தை மனதில் ஆணித்தரமான நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
* குழந்தைகளுக்கு சங்கடம் இல்லாது பெற்றோரிடம் ஆரம்பத்திலேயே எதனையும் பகிர்ந்து கொள்ளலாம்.
* பல சிறுமிகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப் பற்றி பக்குவமாக அவர்களிடம் பேசுங்கள். இன்றைய 8 அல்லது 10 வயது குழந்தைக்கு சூழ்நிலை தெரிய வேண்டும். எந்த இடத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அம்மா, அப்பாவிடம் சொல்லி விட வேண்டும் என்று கண்டிப்பாய் புரியும். இதுவே அவர்கள் வளரும் காலத்திலும், திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டாலும் தன்னை காத்துக் கொள்ளும் தைரியத்தினை, நம்பிக்கையினைத் தரும்.
* அப்பா, அம்மாவிடம் ஒரு குழந்தையாய் எதனையும் பகிர்ந்து கொள்ள முடிந்தாலும், அந்த பிரச்சினையைத் தீர்க்க தயக்கமின்றி பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும் அந்தச் சிறுமியை மட்டுமல்ல, மற்ற குடும்பங்களுக்கும் ஒரு ஆதரவாய் இருக்கும்.
* முடிந்த வரை தனியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
* யாராவது சிறுமிகளிடம் வலிய வந்து பேசினால் கூட உஷார் ஆகி விட வேண்டும்.
கமலி ஸ்ரீபால்
* யாரையும் பழக்கமில்லாத புதிய நபரை நம்ப வேண்டாம் என்பதனை குழந்தைகள் உணரட்டும்.
குறிப்பிட்ட நபர்கள் தவிர அவர்களை யாருடனும் அனுப்பக் கூடாது என்பதனை பள்ளியிலும் சொல்லி விடுங்கள். பெற்றோர்களாகிய நீங்கள் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்து தான் வாழ வேண்டும்.
குட் டச், பேட் டச் என்பதனை சிறு வயதிலேயே சொல்லித் தாருங்கள்.
வீட்டில் ஆண் வேலை உதவியாளர்களைத் தவிருங்கள். பிறரின் உதவியைப் பெறுங்கள். பிறருக்கும் ஓடி உதவுங்கள்.
உங்கள் மீதான நம்பிக்கை உங்கள் குழந்தைகளுக்கும் மற்ற பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும்.
15 வயதினை நெருங்கும் பெண் சிறுமிகளுக்கு உடல் ரீதியான உண்மைகளை சொல்லிக் கொடுங்கள்.
இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வினைக் கூட்டும்.
சிறு குழந்தைகளுக்கு தன் பெயர், பெற்றோர் பெயர், வீட்டு விலாசம், பெற்றோர் அலைபேசி, தொலைபேசி எண் இவற்றினை மனப் பாடமாய் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அன்றாடம் ஒருமுறை சொல்லச் சொல்லி கேளுங்கள்.
குழந்தைகளுக்கு-(13-18 வயது சிறுமிகளுக்கு) செல்போன் கொடுக்கும்பொழுது அது சில ஆபத்துகளையும் கொண்டு வரலாம். எனவே 'போன்' உங்கள் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் இருக்கட்டும்.
உங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கின்றதா?
ஏதாவது மாற்றம், பய உணர்வு தெரிகின்றதா? உடலில் காயங்கள், வலி இருக்கின்றதா? அவளது தோழிகளுடன் மகிழ்ச்சியாய் இருக்கின்றாளா? பள்ளி செல்ல ஏதும் முரண்டு செய்யாமல் செல்கின்றாளா? என ஒவ்வொரு சிறு மாற்றத்தினையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே தற்காப்பு கலை, கராத்தே போன்றவை அவசியம் கற்றுக் கொடுங்கள். கூடவே யோகா, தியானம் இவற்றினை கற்றுத் தருவது உறுதியான மனதினைத் தரும்.
* பெண் குழந்தைகளையும் நன்கு படிக்க வையுங்கள். வீட்டில் 'பொத்தி' பாதுகாப்பது பாதுகாப்பே ஆகாது. பெண்ணாய் பிறப்பது 'பாவம்' கிடையாது.
அதே நேரத்தில் ஐந்தில் ஒரு சிறுமி யாவது பாலியல் சீண்டல்கள், துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இவர்கள் வாழ்க்கையே பயந்து ஒடுங்கி விடுகின்றது என்பதனையும் மறக்கக் கூடாது. தாய் ஒரு சிறந்த வழிகாட்டியாக, எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
பொதுவில் உலக அளவில் விடலை பருவ பெண்களின் பெற்றோர் அவர்களை கையாள்வது கடினமாக இருக்கின்றது என்றே கூறுகின்றனர்.
நம் நாட்டில் மீண்டும் நாம் கூட்டுக் குடும்ப முறையை ஆதரித்தால் ஆண், பெண் இரு பாலருக்கும் சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்றும் தோன்றுகின்றது.
பெண் குழந்தை ஆண் குழந்தைக்கு சமமே. முதலில் இதனை பெண்ணின் மனதில் நன்கு பதிய வையுங்கள். இது அவர்களுக்கு தேவையான சுதந்திரம், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஏற்படுத்தும். தீமைகளை தகர்த்து, மிதித்து முன்னேறும் மனோதிடம் உண்டாகும்.
8 வயது ஆகும் பொழுது பெண்களும் 9 வயது ஆகும் பொழுது ஆண்களும் சற்று மாறுதலாக இருப்பர் என ஆய்வுகள் கூறுகின்றன. அடம், எதிர்த்து பேசுதல், பொய் கூறுதல் போன்றவை இருக்கலாம். அன்பாலும், அரவணைப்பாலும் மட்டுமே இதனை மாற்ற முடியும். தேவைப்படின் 'கவுன்சிலிங்' எடுத்துக் கொள்ளுங்கள். 12, 14 வயதிலும் செல்போன் வழியாகவே நிறைய தவறான விஷயங்கள் மனதில் பதியும்.
உடல் நலம், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தர பழகுங்கள். நல்ல பேச்சாளர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு பற்றி யூடியூப்- வீடியோக்கள் ஆக்கப் பூர்வமான பேச்சாளர்கள் இவர்கள் பேச்சினை கேட்கச் செய்யுங்கள்.
* எல்லைகளை சரியாக வகுத்திடுங்கள்.
* சரியாக, தெளிவாக பேசி புரிய வையுங்கள்.
* ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக பேசாதீர்கள். குழந்தைகள் குழம்பி விடுவார்கள். * தொடர்ந்து இதனைச் செய்யுங்கள்.
* பாதுகாப்பு முதல் முக்கியம் என புரிய வேண்டும். * 'ஏன்' என்று விளக்குங்கள்.
* பொறுமையாய் அவர்கள் பேசுவதை கேளுங்கள்.
* விழிப்புணர்வோடு இருக்க கற்றுக் கொடுங்கள். பொதுவில், வாழ்க்கை எந்திர வாழ்க்கை ஆகிவிட்டது. தாயும், தந்தையும் ஓடு ஓடு என ஓடுகின்றனர். பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் மிகக் குறைந்து விட்டது. கூட்டு குடும்பமும் இல்லை. இதுவே ஆண், பெண் இரு குழந்தைகளுக்குமே பிரச்சினை தான். சொல்ல, பகிர யாரும் இல்லாத நிலை என்று ஆகிவிடுகின்றது. இதற்கு தீர்வு கண்டாலே பல முன்னேற்றங்கள் வரும்.
இவைகளை பின்பற்றுவதால் மட்டுமே குற்றங்களை அடியோடு களைந்து விட முடியாது. நன்கு கட்டுப்படுத்த முடியும். தனி மனித ஒழுக்கம் ஏற்படும் பொழுது மட்டுமே சமுதாய முன்னேற்றம் ஏற்படும்.
மேலும் குழந்தைகள்
* தன்னை யாரேனும் வேண்டுமென்று தொடர்ந்து கமெண்ட் அடித்தால், வம்பிழுத் தால் 'என்ன?' என்று எதிர்த்து சத்தமாய் கேட்கும் துணிவு வேண்டும்.
* சற்று சத்தம் போட்டு ஊரை கூட்ட வேண்டும். * தனித்து இருக்கக் கூடாது.
* பஸ்சில் வேண்டுமென்றே மேலே அருவருப்பாக உரசுகின்றார்களா, பெரிய பின் கொண்டு சற்று குத்தி விடுங்கள். பரவாயில்லை.
* சிறு குடை வைத்து அவனை தள்ளி விடுங்கள். ஏதோ ெதரியாமல் நடந்தது போல் இருக்கட்டும்.
* காலை நன்கு மிதித்து 'சாரி' என சொல்லி விடுங்கள். ஆனால் இவை நிரந்தர தீர்வாக அமையாது. அப்படியானால் தீர்வு என்ன?
.....தொடரும்






