என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மன வலிமையா? உடல் வலிமையா?
    X

    மன வலிமையா? உடல் வலிமையா?

    • எல்லாவகை உயிரினங்களின் வாழ்க்கை ஆயுளும் அவ்வவற்றின் வலிமையைப் பொறுத்தே நீளவும் குறையவும் செய்கின்றது.
    • ‘வலிமை உள்ளது வாழும்’ என்பது இயற்கை நமக்குக் கற்றுத்தருகிற வாழ்தலியல் தத்துவம்.

    வலிமையைப் பெற என்றுமே விருப்பம் கொள்ளும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    உலகில் உள்ள, புல் முதலான மனிதர் ஈறான உயிரினங்கள் அனைத்தையும் ஓரறிவு தொடங்கி, ஆறறிவு வரையில் உள்ளவைகளாகத் தொல்காப்பியர் பகுத்துக் காண்பார். இவற்றில் எல்லாவகை உயிரினங்களின் வாழ்க்கை ஆயுளும் அவ்வவற்றின் வலிமையைப் பொறுத்தே நீளவும் குறையவும் செய்கின்றது. 'வலிமை உள்ளது வாழும்' என்பது இயற்கை நமக்குக் கற்றுத்தருகிற வாழ்தலியல் தத்துவம்.

    "ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்

    காழ்கொண்ட கண்ணே களிறுஇணைக்கும்

    கந்தாகும்

    வாழ்தலும் அன்னதகைத்தே ஒருவன்தான்

    தாழ்வின்றித் தன்னைச் செயின்"

    என்கிற புகழ்மிக்க நாலடியார் பாடல், 'வலிமையுள்ளது வாழும்' என்கிற கோட்பாட்டை நம்பிக்கைக் கோட்பாடாக வலியுறுத்துகிற பாடலாகும். ஒற்றையடிப் பாதையில், நடந்துபோகிற கால்களால் மிதிபடுமாறு ஒரு இளஞ்செடி கிடக்கிறது. எத்தனை மிதி பட்டாலும் அந்தச் செடி, மனம் தளர்ந்து போகாமல், வாடிப்போகாமல், மனம் மற்றும் உடல் வலிமையோடு போராடிப் போராடி, பெருஞ் செடியாகிப், பெரு மரமாகி விடுகிறது. சிறு செடியாக இருந்தபோது மிதித்துக் கடந்தவர்கள் எல்லாம் இப்போது மரமானவுடன் விலகி விலகிக் கடந்துபோகத் தொடங்குகின்றனர்.

    உருவத்திலும் வலிமையிலும் பெரிய ஆண் யானையைக்கூட அம்மரத்தில் கட்டி வைக்கவும் செய்கிறார்கள். இளம் வயதில் தோல்விகளும், துன்பங்களும் நம்மைத் தொடர்ந்து துன்புறுத்தல் செய்தாலும், தோல்விகளில் தளர்ந்து விலகிக் கொள்ளாமல், தன்னம்பிக்கை மற்றும் உடல், மன வலிமையோடு தன்னை உருவாக்கிக் கொண்டு மேலே வர முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

    வாழ்க்கையை நாம் விரும்பிய திசைகளில் எல்லாம் நடத்திச் செல்வது கடினமானதுதான். என்றாலும் விரும்புகிற திசை களில் வாழ்க்கையைச் செலுத்தும்போது உண்டாகிற பல்வேறுவிதமான தடைகளையும் தடைகளின் தன்மைக்கேற்ப அவற்றை எதிர்கொண்டு வெல்வதற்கு நமக்கு வலிமை வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் வலிமை என்பது உடல் சார்ந்ததாகவும், உள்ளம் சார்ந்ததாகவும் இருக்கிறது. இவற்றை அன்றாடம் வளர்க்கவும், பெருக்கவும் இடைவிடாத பயிற்சிகளிலும், முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். துன்பமும், எதிர்ப்பும் இல்லாச் சூழ்நிலைகளில் உடம்பை உடற்பயிற்சிகள் மூலமாகவும், மனத்தை யோகம், தியானம் போன்ற மனப் பயிற்சிகள் வழியாகவும் வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். திடீரென்று ஏற்பட்டுவிடுகின்ற இடர்ப்பாட்டுக் காலங்களிலும் வலிபொறுக்கும் வலிமையும், வலிமாற்றும் வலிமையும் நம்முள் பெருகிடுமாறு முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    மகாகவி பாரதி, 'உறுதிகொண்ட நெஞ்சும், கடுமைகொண்ட தோளும்' வலிமைக்கு அடையாளங்களாகக் கூறுகிறார். 'நெஞ்சில் உறுதி' என்பது மன வலிமை ஆகும்; 'கடுமை கொண்ட தோள்கள்' என்பது உடல் வலிமை ஆகும். இதில் எந்த வலிமை சிறந்தது என்று நிறுத்துப் பார்த்தால், மன வலிமை, உடல் வலிமை ஆகிய இரண்டுமே ஒன்றற்கொன்று வலிமையிற் குறைந்ததோ கூடியதோ கிடையாது என்பது புலப்படும். உடல் தளரும்போது, 'நானிருக்கிறேன் தளராதே!' என வலிமையான உள்ளம் உற்சாகப்படுத்துகிறது; உடலால் இயலாத செயலை அறிவின் துணைகொண்டு எவ்வளவுதூரம் எளிமையாக்கிச் செய்யமுடியுமோ அவ்வளவுதூரம் எளிமையாக்குவதற்கான வழிமுறைகளை புத்தி ஆராய்ந்து கண்டுபிடித்து செயல்படுத்துகிறது.

    ஏற்கனவே செய்து தோற்றுப் போன ஒரு செயலை மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறதே என்று மனமும், அறிவும் தளரும்போது, ஆரோக்கியமான உடம்பு, உற்சாக வலிமையுடன் மீண்டும் முயன்று பார்ப்போமே! என மார்தட்டி ஓர் அடி முன்னெடுத்து வைக்கிறது. உடலும் மனமும் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஒன்றற்கொன்று உதவிக்கொண்டு செயல் அக்கறை காட்டும்போது, இயலாத காரியம்கூட இமாலய வெற்றி அடைகிறது.

    அறிவை மூலதனமாகக் கொண்டு மனம் வலிமை பெறுகிறது; அறிவு படிப்பறிவு மூலமாகவும், பட்டறிவு வாயிலாகவும் பெறப்படுகிறது. ஒரு மனிதன் தனது அறிவை நுட்ப அறிவினதாக ஆக்கிக் கொள்வதற்கு இடைவிடாத பயிற்சியும் முயற்சியும் கைகொடுக்கின்றன. நடைபெறும் காரியங்கள் சிக்கல்களை உடையனவாக மாறும்போது, அவற்றின் மூலங்களை உணர்ந்து, எந்தவிதச் சேதாரமுமின்றி, வெற்றிகரமான தீர்வினை எட்டுவதற்கு, அனுபவமும் துறைசார்ந்தஅறிவும் இணைந்த ஆழ்ந்த ஞானம் கைகொடுக்கிறது.

    அதேபோல உடலை வலிமையாக்குவதற்குச் சத்துள்ள உணவும், உட்கொள்ளும் முறையும் அவசியமானது ஆகும். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றில்லாமல், உண்ண வேண்டிய உணவை, உண்ண வேண்டிய முறையில், உண்ண வேண்டிய நேரத்தில், உண்ண வேண்டிய அளவில் உண்ண வேண்டும்; 'கற்க கசடற' என்று வள்ளுவப் பெருந்தகை வாசிப்புக்குச் சொன்ன அதே அளவுகோல்களை உண்பதற்கும் வைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்; அறிவு வலிமை பெறுவது போல, உடலும் நோய்நொடியற்ற நிலையில் வலிமை பெறும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    ஒரு காலத்தில் ஒரு மல்யுத்த வீரன், ஊர் ஊராகச் சென்று தனது உடல் வலிமையைக் காட்டி, ஊர்மக்களை வெற்றிகண்டு அந்தந்த ஊர்களைத் தனக்குச் சொந்தமெனப் பட்டாப் போட்டுக் கொண்டிருந்தான். அவன் எந்த ஊருக்குள் நுழைந்தாலும் என்னவிதமான போட்டியாக இருந்தாலும் கலந்துகொண்டு அந்தப் போட்டியில் அவனே வென்று அந்த ஊரைச் சொந்தமாக்கி விடுவான். அடுத்து தங்களது ஊருக்குத்தான் அந்த பயில்வான் வரப்போகிறான் என்பதைக் கேள்விப்பட்ட ஓர் ஊரின் மக்கள், அவனது வெற்றியை எப்படித் தடுப்பது என்று கூடி ஆலோசனை செய்தார்கள்.

    அந்த ஊரின் எல்லையில் கோட்டைச் சுவர் ஒன்று இருக்கிறது.

    அந்தச் சுவருக்கு அருகில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தடியில் கடந்த வாரம்தான் ஒரு துறவி வந்து தங்கியிருப்பதைப் பற்றி ஆலோசனையில் ஊர்மக்கள் பேசிக் கொண்டனர். அவரிடம் சென்று உதவிகேட்டால் என்ன? என்றும் ஊர்மக்களில் சிலர் பேசினர். ஒரு மாமிசமலை பயில்வான் ரூபத்தில் உடல் வலிமையோடு போட்டிக்கு அழைக்கும்போது, வற்றல்போல உடல் இளைத்த துறவியால் என்ன செய்ய முடியும்? என்று சிலர் ஏளனமாகவும் பேசினர். வேறு வழியில்லாமல் இறுதியில் துறவியிடமே சென்று உதவி கேட்பது என்று முடிவு செய்து, அனைவரும் துறவியை நாடிச்சென்று விவரங்களைச் சொன்னார்கள். துறவி அமைதியாகச் சொன்னார்," அந்த பயில்வான் ஊருக்குள் வந்து போட்டிக்கு அழைக்கும்போது அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன்!".

    இரண்டு, மூன்று நாட்களில் பரிவாரங்கள் புடைசூழ பயில்வான் அந்த ஊருக்குள் நுழைந்தார்; ஊர்மக்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பதுபோல வரவேற்றனர். ''என்ன போட்டி வைத்துக் கொள்ளலாம்?.. மல்யுத்தமா? வில், வாள் சண்டையா? அல்லது வலுதூக்கும் போட்டியா?" என்று தோள்களைத் தட்டி ஊர்மக்களைப் பார்த்து கர்ஜித்தார் பயில்வான். ஊர்ப் பெரியவர் ஒருவர், "ஐயா! போட்டிகளை ஊரோரத்திலுள்ள கோட்டைச் சுவர் அருகில் வைத்துக் கொள்ளலாம்!. போட்டியில் எங்கள் ஊர்மக்கள் சார்பில் அங்கிருக்கும் துறவி கலந்து கொள்வார்!" என்று கூறிவிட்டு பயில்வானைக் கோட்டைச் சுவர்ப் பக்கம் அழைத்துச் சென்றார்.

    உடல் வற்றி வலிமையின்றி நின்றிருந்த துறவியைப் பார்த்துப் பயில்வான், "இவரா என்னோடு போட்டி போடப் போகிறார்?" என்று கேட்டார். என்னுடைய உடல் வலிமை எங்கே? இவரது வலிமை எங்கே?" என்று கூறிச் சிரித்து விட்டு, "ஐயா துறவியாரே! இதோ நம் கண்முன்னே கிடக்கிறதே ஒரு பெரிய பாறாங்கல், அதனை ஒற்றைக் கையால் தூக்கித் தோளில் நிறுத்தி, அதோ அந்த கோட்டைச் சுவருக்கு அப்பால் பத்தடி தூரம் தாண்டி விழும்படி செய்யட்டுமா? அப்படி உம்மாலும் செய்ய முடியுமா? எனக்குப் போதுமான உடல் வலிமை உள்ளது!; உமக்கு எப்படி?" என்று நக்கலாகக் கேட்டார் பயில்வான்." ஐயா பயில்வானே! எனக்கு உங்கள் அளவுக்கு உடல்வலிமை கிடையாது; இருந்தாலும் புத்தி வலிமை என்று சொல்லக்கூடிய மனோ வலிமை உண்டு.

    நீங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்தப் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிக் கோட்டைச் சுவருக்கு அப்பக்கமாக எறிய வேண்டாம். ஒரே ஒரு எளிய காரியத்தை மட்டும் செய்யுங்கள் போதும். இதோ இந்த இளைஞனின் கைக்குட்டைத் துணியை வாங்கி உங்கள் கையில் தருகிறேன்; அந்தக் கைக்குட்டையை இங்கிருந்தே எறிந்து அந்தக் கோட்டைச் சுவர்தாண்டி விழும்படி செய்யுங்கள்! அது போதும்!" என்றார். அவ்வளவுதான்; பயில்வான் வாங்கிப் பலமுறை முயற்சி செய்தும், கைக்குட்டை அந்த இடத்தைவிட்டு ஒரு அடி தாண்டிக்கூட விழவில்லை; இருந்தாலும், ''இந்தக் கைக்குட்டையை நீங்கள் எப்படிக் கோட்டைச் சுவர்தாண்டி விழச் செய்வீர்கள்?" என்று அப்பாவியாய்க் கேட்டார் பயில்வான். அந்தக் கைக்குட்டை முனையில் ஒரு கல்லைவைத்து முடிச்சுப் போட்டு, வீசியெறிய, கைக்குட்டை இறக்கை முளைத்த பறவை போலக் கோட்டைச் சுவர் தாண்டி அப்பக்கமாக வீழ்ந்து மறைந்தது.

    ஊர்மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; ''உடலைமட்டும் வளர்த்து வலிமையாக்கி, புத்தியை வளர்க்காமல் கோட்டைவிட்ட நான் பலசாலி இல்லை! நீங்களே பலசாலி!" என்று துறவிக்குப் புகழாரம் சூட்டிவிட்டு, இனி அறிவு வளர்க்கும் வேலையில் நானும் ஈடுபடுவேன் என்று ஊரைவிட்டுக் கிளம்பினார் பயில்வான்.

    உடல் எவ்வளவுதான் ஆரோக்கியமானதாகவும், பலமுடையதாகவும் இருந்தாலும் அறிவுபலம் அதனைச் செலுத்தினால்தான், உண்மையிலேயே பயனுள்ள காரியங்களில் மனிதர்கள் வெற்றி அடைய முடியும்.

    மனநிலை சரியில்லாதவர் கையில் கொள்ளிக்கட்டை கிடைத்தால், அவர் சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் உன்னத காரியத்தில் ஈடுபடுவதற்குப் பதில், சமையல் கூடத்தையே கொளுத்திவிடும் தீச்செயலில் ஈடுபட்டுவிடுவார். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் பெரும்பான்மையும் உடல் பலமுள்ளவர்களாக இருந்தாலும் வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிப்பவர்கள் நிச்சயம் மனோபலமும் நுட்ப அறிவும் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

    இன்றைய இணைய வாழ்வியல் மனிதனை உடலியல் ரீதியாக இயங்க விடாத, நளினப் பணியாளர்களாக மாற்றிவிட்டது. அலுவலகம் வரைகூடச் செல்வது அவசியமற்றது என 'வீட்டிலிருந்த படியே வேலை' அறிவித்து விட்டது. உணவு விடுதி, பலசரக்கு, காய்கறிக் கடை, துணிக்கடை, திரையரங்கம் என எல்லாமே செயலிகளாக மாறிவிட்ட சூழலில், 'உடம்பு சிறுத்து, மூளைமட்டுமே பெருத்து' எனும் அவலநிலை எதிர்காலத்தில் உருவாகிவிடுமோ?.

    கவனம் வைப்போம் மன வலிமையோடு கூடிய உடல் வலிமை கூட்டுவோம்!

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×