என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோய் வராமல் தடுக்கும் கவசம் திரிபலா
    X

    நோய் வராமல் தடுக்கும் கவசம் திரிபலா

    • ‘திரிபலா’ என்ற சொல் ஆயுர்வேத மருத்துவரின் மந்திரச்சொல் எனலாம்.
    • கடுக்காய் - உடலை சுத்தம் செய்வதால் இதற்கு பத்யா என்று பெயர்.

    சென்ற வார கட்டுரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினசரி கடைபிடிக்க வேண்டிய நடைமுறையில் காலையில் பருகும் தண்ணீர் குறித்தும் அதன் பின் மலம் கழித்தல் குறித்தும் பார்த்தோம். அதில் திரிபலா சூரணத்தை மலச்சிக்கலுக்கு பிரயோகப்படுத்தும்படி பரிந்துரைக்கப்பட்டது, அது என்ன என்பதை விளக்குவதே இப்பகுதி...

    'திரிபலா' என்ற சொல் ஆயுர்வேத மருத்துவரின் மந்திரச்சொல் எனலாம். ஏன் என்றால் எது அதிகமுறை சிரத்தையுடன் உச்சரிக்கப்படுகிறதோ அல்லது எழுதப்படுகிறதோ அதுவே மந்திரச்சொல் எனலாம். எனவே ஆயுர்வேத மருத்துவர்கள் நோய்களை குணமாக்கவும், நோய் வராமல் தடுக்கவும் அதிகம் பயன்படுத்தும் மருந்து திரிபலா கலவைதான்.

    பல ஆச்சர்யங்களை கொடுக்கும் திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்ற மூன்று மூலிகைகளின் கலவையாகும். ஒரு வியாதியை குணமாக்க நான்கு அம்சங்கள் முக்கியமாக தேவை என்கிறது ஆயுர்வேதம். அந்த நான்கு அம்சங்கள் யாது என்றால் மருத்துவர், மருந்து, செவிலியர், நோயாளி. மேற்கண்ட நான்கும் சீராக முழு தகுதியுடன் செயல்பட்டால் தான் ஒரு வியாதியை முழுமையான குணப்படுத்தமுடியும்.

    மருத்துவர் மேன்மையுடன் வைத்திய சாஸ்திரத்தை அறிந்துயிருந்தாலும் மீதமுள்ள மூன்று அம்சங்கள் சரியில்லை என்றால் வியாதி குணமாகாது.

    அதைப்போல மருந்து எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறையை ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. அதாவது ஒரு மருந்து பல வியாதிகளை குணமாக்கக்கூடியதாகயிருக்க இருக்க வேண்டும். மிக முக்கியமாக உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், அவ்வுடலுக்கு ஏற்பட்டுயிருக்கிற தீங்கை மட்டும் நிவர்த்தியக்கக்கூடிய தோடு மட்டுமில்லாமல் புது வியாதியை ஏற்படுத்தாமல் நோய் எதிர்பாற்றலை ஏற்படுத்தக்கூடிய மருந்தாகயிருக்க வேண்டும். அதுவே சிறந்த மருந்து, இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு 'திரிபலா'.

    மனித உடலை பராமரிப்பதே முதன்மையான வேலையாகயிருக்க வேண்டும் என்ற ஆயுர்வேதம் கூறுகிறது. அதற்கு திரிபலா என்ற மூன்று மருந்தின் கலவை உறுதுணையாகயிருக்கும். ஏன் எனில் ஆயுர்வேத மருத்துவத் துறையில் அதிகமாக பயன்படுத்தும் மருந்து திரிபலா என்பதாகும்.

    ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையின் நோக்கம் கேடடைந்த வாதம் பித்தம் கபம் என்ற உடல் இயங்க காரணமாக இருக்கின்ற இந்த மூன்று தோஷத்தை சீர்நிலைக்கு கொண்டுவருதலாகும். இதற்கு சம விகிதத்தில் எடுத்து தயாரித்த திரிபலா உதவுகிறது.

    ரா. பாலமுருகன்

    கடுக்காய் - உடலை சுத்தம் செய்வதால் இதற்கு பத்யா என்று பெயர். கடுக்காயில் அறுசுவைகளில் உப்பை தவிர அனைத்து சுவைகளும் இருக்கிறது. ஆனால் துவர்ப்பு சுவை பிரதானம், உலகிலேயே துவர்ப்பு சுவையில் மிக சிறந்தது கடுக்காய் தான். எல்லா துவர்ப்பு சுவைகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தும், ஆனால் கடுக்காய் துவர்ப்பு சுவையாக இருந்த போதிலும் மலத்தை இளகச் செய்யும், வாயுவை குறைத்து சீரான வழிக்கு கொண்டு செல்லும். இதற்கு அனுலோமனம் என்று பெயர்.

    மேலும் கடுக்காய்யை தாயை விட சிறந்தது என்று உவமைப்படுத்தி உள்ளனர், ஏன் எனில் தாயானவள் குழந்தைக்கு உணவு ஊட்டி உடலை தேற்றுவாள். அதுபோல் கடுக்காய் பிணியிலிருந்து உடலை தேற்றும். நெல்லிக்காய் - மக்களிடத்தில் மிக பிரபலமானது நெல்லிக்காய். அறுசுவைகளில் உப்பை தவிர அனைத்து சுவைகளும் நெல்லிக்காயில் இருக்கிறது. ஆனால் புளிப்பு சுவை பிரதானம். உலகிலேயே புளிப்பு சுவையில் மிக சிறந்தது நெல்லிக்காய் தான், எல்லா புளிப்பு சுவைகளும் பித்தம் என்ற உடல் சூட்டை அதிகரிக்கும்.

    ஆனால் நெல்லிக்காய் புளிப்பு சுவையாக இருந்தாலும் பித்தத்தை குறைக்கும், புளிப்பு சுவையாக இருந்த போதிலும் ஆண்மையை அதிகரிக்கும்.

    தான்றிக்காய் - நோய்களின் பயத்தை போக்குவதால் இதற்கு விபீதகி என்று பெயர். திரிபலா என்ற கேங்கில் பெரிய கை தான்றிக்காய் எனலாம். அந்த அளவிற்கு கில்லி போல் வேலை செய்யும். பொதுவாக கப தோஷத்தை குறைக்கும். கடுக்காய், நெல்லிக்காய் வாத பித்த அளவில் தான் வேலை செய்யும். ஆனால் தான்றிக்காய் தாதுக்கள் அளவில் வேலை செய்யக்கூடியது. ஆம் உடல் கட்டமைப்பிற்கு காரணமான தாதுக்களை சம நிலையில் வைக்க உதவுகிறது. அதனால் தான் இக்காயை பெரிய கை என்று உவகைப்படுத்தினோம்.

    இவ்வளவு சிறப்பு மிக்க திரிபலாவை எப்படி பயன்படுத்துவது:

    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய இந்த மூன்று மூலிகையின் விதைகளை நீக்கி நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து காற்றுபுகாவண்ணம் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த திரிபலா பொடி கடைகளிலும் கிடைக்கும், இதனை 1 தேக்கரண்டி விகிதம் சுடுதண்ணீரில் இரவு உணவு உண்ட பின் 1 மணி நேரம் கழித்தப்பின்பு எடுக்கலாம், இதன் மூலம் மலம் நன்றாக வெளியேறி குடல் சுத்தமடையும். அதன் மூலம் உடல் சுத்தமடையும். உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை பரவச்செய்து ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு செல் பழுதுடைவது தடுக்கப்பட்டு உடல் உற்சாகமாக செயல்பட வைக்கிறது.

    கண் பார்வைத் திறன் மேன்மையடைய, கண் நோய் வராமல் தடுக்க திரிபலா பொடியுடன் தேன் அதற்கு பாதியாக நெய் கலந்து இரவில் உண்ணலாம். மேலும் நீரிழிவு, தோல் நோய், வயிற்று புண். வாய் புண் கேச நோய்கள் போன்றவற்றிக்கு திரிபலா பயனுள்ளதாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து எடுத்து கொள்ளலாமா என்றால், தாராளமாக எடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க தினமும் இரவு வேளையில் எடுத்துக்கொள்ளலாம். மற்ற மருத்துவமுறை மருந்துகள் எடுக்கும் போது திரிபலா எடுக்கலாமா என்றால் தாராளமாக எடுக்கலாம், எந்தவித எதிர்வினையும் பக்க விளைவும் ஏற்படாது.

    மேலும் இந்த ஒரு மருந்துக்கலவையை வெளி உபயோகத்திற்க்கும், உள் உபயோகத்திற்க்கும் பயன்படுத்தலாம். திரிபலா என்ற மூன்று மருந்தின் கலவை சூர்ண வடிவில் மட்டும்மில்லாமல், கஷாயம், தைலம், நெய், டானிக், மசி, மாத்திரை என்று பலவகையில் கிடைக்கிறது.

    திரிபலாவை எண்ணெய்யாக செய்து உள்ளங்கால் மற்றும் தலையில் தினமும் தேய்த்து வர கண் நோய் வராமல் தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாக வளர வழிவகைச் செய்யும், இதையே கஷாயமாக செய்து வாய் கொப்பளிக்க வாய் புண் குணமாகும். இதை கொண்டு புண்களை கழுவ விரைவில் ஆறிவரும், மருத்துவரின் ஆலோசனையின்படி தேனில் குழைத்து பல் தேய்க்க ஈறுகளில் கசியும் ரக்தம் தடுக்கப்படும், இவ்வளவு சிறப்புமிக்க திரிபலாவை யாருக்கு எப்போது எதனுடன் எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதை, மனித உடலுக்கு தக்கவண்ணம் ஆயுர்வேத மருத்துவர் தீர்மானிப்பார்.

    Next Story
    ×