என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உழைத்தால் மட்டும் போதுமா?
- நாம் செய்த முதலீட்டுக் காலம் முடிந்துவிட்டால், பணத்தைக் கையில் தராமல் மறுமுதலீடு செய்யும்படி அழுத்தம் தருவார்கள்.
- பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்வதே கடின உழைப்பாளிகள் பணக்காரர்கள் ஆவதற்கு மேற்கொள்ள வேண்டிய தாரக மந்திரம்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனம் நோக்கி நாம் படிப்படியாக ஏறி வருகிறோம். பலவிதமான முதலீட்டு வழிகள் பற்றியும், அதில் நிகழும் மேஜிக்குகள் பற்றியும் பார்ப்பதற்கு முன் நம் பாதையை செப்பனிடும் வேலையில் தற்போது இருக்கிறோம்.
நீங்கள் நன்கு கவனித்தால் ஒரு விஷயம் புரியும் - நமது நாட்டில் இருக்கும் செல்வம் பெரும் பணக்காரர்களிடமே குவிந்துள்ளது. பணக்காரர்கள் மேலும், மேலும் பணக்காரராவதும், ஏழைகள் இன்னும் இன்னும் ஏழைகளாவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
குவிந்திருக்கும் செல்வத்தைப் பரவலாக்கி, நாமும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிப்பதற்குக் கடினமான உடல் உழைப்பு மட்டும் போதாது. நெப்போலியன் ஹில் என்னும் புகழ்பெற்ற எழுத்தாளர் "கடும் உழைப்பாளிகளிடம் பெரிய அளவு பணம் சேர்வதில்லை" என்று கூறுகிறார். இதனைப் பல பொருளாதார மேதைகளும் வழிமொழிகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குரலில் இப்படிக் கூறுவதற்குக் காரணமாக கடும் உழைப்பாளிகள் செய்யும் தவறுகள் என்னென்ன?
1.உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொள்ளுதல்
ஆதி காலத்தில், வேட்டையாடியும், விவசாயம் செய்தும் உணவை ஈட்ட கை கொடுத்த உடலுரம், போர்க்காலத்திலும் அத்தியாவசியத் தேவையாக இருந்தது. அரசர்களாகவும், தளபதிகளாகவும், போர் வீரர்களாகவும் உருவெடுக்க உடல் உரம் உதவியது. அதனால் சமூகத்தில் உடல் உரமும், கடின உழைப்பும் இருந்தால்தான் பெரிய அளவில் பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை பரவியது. இன்று 13.70% வேலைகளுக்கே உடலுரம் தேவை; அந்த வேலைகளும் அதிக வருமானம் தரக்கூடியவை அல்ல என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
2.காலம் நிகழ்த்திய மாற்றத்தை அறியாதிருத்தல்
கடந்த நூற்றாண்டில் உடல் உரத்தை விட, மூளையை உபயோகித்துச் செய்யும் புதிய முயற்சிகளும், கண்டுபிடிப்புகளும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. இது கணினிகளின் காலமாக மாறியுள்ளது. எல்லாத் துறைகளிலும் கணினிமயமாக்கல் பெருகப் பெருக உடல் உழைப்பின் தேவை குறைந்துகொண்டேதான் போகும். உங்கள் உடல் உழைப்பு அல்ல; உங்கள் மூளையின் உழைப்புதான் பணத்தை குவிக்க வல்லது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
உலக அளவில் மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும், இந்திய அளவில் இன்போசிஸ், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களும் நம் கண் முன்னாலேயே பல கோடிகளை உரிமையாளர்களுக்குத் தேடித் தந்துள்ளன. இவையெல்லாம் மூளை பலத்தாலேயே சாத்தியம் ஆகியது. உலகம் மாறிவிட்டது. இந்தப் புதிய உலகில் பணக்காரர் ஆவதற்குத் தேவை அறிவின் பலமே ஒழிய, உடலின் பலம் அல்ல. துரதிர்ஷ்டவசமாக உடல் உழைப்பாளிகள் இந்த மாற்றத்தை உணரவில்லை.
3.பொருளாதார அறிவு மேம்பாட்டுக்கு நேரம் ஒதுக்காதிருத்தல்
கத்தியைத் தீட்டாதே; உந்தன் புத்தியைத் தீட்டு என்ற பாடல் வந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. ஆனால் புத்தியைத் தீட்டுவது என்பது மிகக் கடினமாகையால் மிகச் சிலரே அதில் ஈடுபடுகிறார்கள். வேலை செய்து பொருள் ஈட்டுவதில் நேரத்தை செலவிடுவது போல அதிலிருந்து கிடைக்கும் பொருளைப் பாதுகாத்து வளர்க்கும் அறிவை அடையவும் நேரம் செலவிடப்படவேண்டும். அதற்கு நாம் அதிகம் வாசிக்கவேண்டும்; கேட்கவேண்டும்; கற்க வேண்டும். இதைத் தவிர்க்க விரும்பி மேலும், மேலும் உடலுழைப்பில் ஈடுபடுவதன் மூலம் வருமானத்தை ஓரளவு மேம்படுத்த முடியுமே தவிர, செல்வத்தைப் பெருக்க இயலாது. துரதிர்ஷ்டவசமாக உடல் உழைப்பாளிகள் இந்த மாற்றத்தையும் உணரவில்லை.
4.பழையன கழியும்; புதியன புகும்
வங்கி முதலீடுகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பழைய முதலீட்டு முறைகள் மங்கியுள்ளன. அதே நேரத்தில் அவை முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. நம்மிடம் இருக்கவேண்டிய பல முதலீட்டு முறைகளில் ஒன்றாக அவை மாறியுள்ளன. முன்பு அதிகம் விரும்பப்படாத பங்குச் சந்தை மட்டுமின்றி, அதன் குழந்தையான மியூச்சுவல் பண்டும் மக்களின் செல்வ வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளன.
அது போலவே முதலீடுகளை நாம் கையாளும் வழிகளும் மாறியுள்ளன. முன்பு போல யாரும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் வங்கிக் கிளைகளுக்கோ, இன்சூரன்ஸ் கிளைகளுக்கோ செல்வதில்லை. டெக்னாலஜி உதவியால், இருந்த இடத்தில் இருந்தே சேமிப்பு, முதலீடு, கடன் போன்ற அத்தனை பணப் பரிவர்த்தனைகளையும் நடத்த இயலும். ஆனால் இவற்றைக் கையாளத் தேவையான பொருளாதார அறிவையும், டெக்னிக்கல் ஆற்றலையும் நம்மில் பலர் இன்னும் முழுவதுமாகப் பெறவில்லை.
சுந்தரி ஜகதீசன்
5. சீட்டுக் குழுக்களை நம்புதல்
சீட்டுக் குழுக்கள் நடத்தி பின் மாயமாகும் தனியார் நிறுவனங்கள் பற்றிய நடப்புச் செய்திகளை அறியாமல் இருப்பவர்கள், இது போன்ற மோசடிகளில் பணத்தை இழக்க நேர்கிறது. தனியார் சேர்ந்து நடத்தும் சீட்டுக் குழுக்களில் ரிஸ்க் அதிகம். சீட்டு நடத்தும் நபர் வீடு, வாசல் என்று வசதியாகவே இருந்தாலும், சீட்டுப் பணம் இல்லை என்று கைவிரித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்?
இதில் உள்ள ஆபத்து புரியாமல், சிலர் சீட்டு நடத்துபவருக்கு உதவியாக அக்கம்பக்கத்தில் தவணைப் பணம் வசூல் செய்து கொடுக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தீபாவளிச் சீட்டு நடத்துபவருக்கு உதவி வந்தாள். மொத்தமாக 50 குடும்பங்களில் இருந்து மாதா மாதம் தலா 1000 ரூபாய் வசூல் செய்து, அவரிடம் கொண்டு தருவாள். மாதம் ரூ.1000/ என்று வருடத்துக்கு ரூ.12000/ கட்டினால் தீபாவளியின் போது, பலசரக்கு, பட்டாசு, எவர்ஸில்வர் பாத்திரங்கள், துணிமணி என்று ஒவ்வொருவருக்கும் 15000/ பெறக்கூடிய பொருட்கள் தருவதாக ஒப்பந்தம்.
தீபாவளி வந்தது. சீட்டு நடத்தியவர் அந்தப் பெண்ணிடம் ஏழரை லட்சத்திற்கு பதில் நான்கு லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து, "எனக்குப் பெரிய நஷ்டம் வந்து விட்டது. போலீஸில் வேறு என்னைத் தேடுகிறார்கள். இதை வைத்து சமாளி. நான் பிறகு வந்து மீதியைத் தருகிறேன்" என்று கூறிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்.
திடீரென சீட்டு நடத்துபவர் தலைமறைவாகி விட்டால், ஏமாந்தவர்களின் கோபம் அவருக்கு உதவியாக வசூல் செய்து தந்தவர்கள் மீதுதான் பாயும். அந்த 50 குடும்பங்களின் கேள்விகளையும், சந்தேகங்களையும் சமாளிப்பதற்குள் அந்தப் பெண் பட்ட பாடு! தலையை அடகு வைப்பது ஒன்றுதான் பாக்கி! இப்படிப் பல தரப்பு மக்களையும் பாதிக்கிறது இந்தச் சீட்டு.
நகைச் சீட்டும் ஏமாற்றம் தரக்கூடியதுதான் என்று சமீப காலத்தில் சில நம்பகமான நகைக்கடைகளே காட்டி விட்டன. சிட்பண்டில் சேர விரும்பினால், பல வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுத் தொழில் நடத்திவரும் கம்பெனிகளில் சீட்டு சேர்வது உத்தமம்.
6.பொன்சி திட்டங்களில் ஏமாறுதல்
சார்லஸ் பொன்ஸி என்னும் இத்தாலியன் ஆரம்பித்து வைத்த பொன்சி ஊழல் இன்றைக்கும் நம் ஊர்களில் சக்கை போடு போடுகின்றன. இதில் தாங்கள் ஷேர்மார்க்கெட்டில் அல்லது எக்ஸ்போர்ட் வியாபாரத்தில் அல்லது தங்கத்தில் அல்லது பிட்காயினில் அதிக அளவு சம்பாதிப்பதாகவும், தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு மிக அதிகமான அளவு வருமானம் சம்பாதித்துத் தருவதாகவும் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். நாம் தரும் பணத்தில் இருந்தே கொஞ்சத்தைக் கிள்ளி எடுத்து, நமக்கு சில மாதங்களுக்கு வட்டி மாதிரி கொடுப்பார்கள். நிறைய கிளைகளை ஆரம்பித்து, அதில் வாடிக்கையாளர்கள் அதிகம் சேர்ந்தபின் மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவார்கள்.
பொன்ஸி நிறுவனங்களை எப்படி அடையாளம் காண்பது?
பொன்ஸி திட்டங்களில் லைசன்ஸ் என்னும் பெயரில் காட்டப்படும் ஆவணங்கள் சரியாக இருக்காது.
முதலீட்டுத் திட்டத்தில் உடனே சேரச்சொல்லி அவசரப்படுத்துவார்கள்.
எங்கே முதலீடு செய்கிறீர்கள், எப்படி லாபம் சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால், நீட்டி முழக்கி நமக்குப் புரியாத மாதிரி ஏதேதோ கூறுவார்கள்.
நமக்குத் தரும் அறிக்கைகளில் தவறுகள் இருக்கும்.
முதலில் ஒழுங்காக வரும் மாதாந்திர வட்டி, போகப் போக லேட்டாகும். அடுத்த மாதம் மொத்தமாகத் தருகிறோம்; இன்னும் அதிக வட்டி சேர்த்துத் தருகிறோம் என்றெல்லாம் தாமதிப்பார்கள்.
நாம் செய்த முதலீட்டுக் காலம் முடிந்துவிட்டால், பணத்தைக் கையில் தராமல் மறுமுதலீடு செய்யும்படி அழுத்தம் தருவார்கள்.
7. பம்ப் அண்ட் டம்ப் திட்டங்கள்
கோவிட் சமயத்தில் பங்குச்சந்தை தந்த வருமானத்தால் ஈர்க்கப்பட்டு, நிறையப் பேர் ஷேர் ட்ரேடிங்குக்குள் வந்தார்கள். சந்தையில் அதிக அனுபவம் இல்லாத இவர்களைக் குறி வைத்து, சிலர் யூட்யூப், ட்விட்டர், டெலிக்ராம் போன்ற பிளாட்பார்ம்களில் குழுக்கள் அமைத்து இவர்களை ஏமாற்றி வருவது பற்றி கேள்வியுறுகிறோம். அத்தனை ஏமாற்று வழிகளும் பம்ப் அண்ட் டம்ப் – விலையைப் பொய்யாக ஏற்றி வெளியேறுதல் - என்று சொல்லப்படும் வித்தையையே சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பணம் வளர்க்கும் தாரக மந்திரம்
இந்த உண்மைகளை உணராமல் பகலெல்லாம் உடல் உழைப்பில் ஈடுபட்டு, களைப்பாற மாலைப் பொழுதில் டிவியைத் தஞ்சம் அடைவது என்பது நம் வாழ்க்கையை வளம் பெறச் செய்யாது. கடின உழைப்பு கண்டிப்பாகத் தேவை; ஆனால் அதிலிருந்து கிடைக்கும் செல்வத்தைப் பாதுகாத்து வளர்க்கவும், மூளையைப் பட்டை தீட்டி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், ஏமாற்றுத் திட்டங்களில் பணத்தை இழக்காமல் இருக்கவும், நாட்டு நடப்பை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குவது மிக முக்கியம்.
இன்றைய காலகட்டத்தில் இது ஓரளவு எளிது. பொருளாதாரப் புத்தகங்களைப் படிக்கப் பொறுமையும், நேரமும் இல்லாதவர்களுக்கு உதவியாக அவை ஆடியோ வடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தினமும் ஒரு அரை மணி நேரம் அவற்றைக் கேட்கலாம். பல அச்சு ஊடகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நம் பொருளாதார அறிவை வளர்க்கும் பணியை மிகுந்த பொறுப்புடன் செய்து வருகின்றன. யூட்யூபில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார வீடியோக்களும் கூட நம் அறிவை வளர்க்கும்.; கூடவே நம் பணத்தையும்.
பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்வதே கடின உழைப்பாளிகள் பணக்காரர்கள் ஆவதற்கு மேற்கொள்ள வேண்டிய தாரக மந்திரம்.
உங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்யும் விஷயங்கள் என்னென்ன?






