என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இடைவிடா முயற்சி! இணையிலா வெற்றி!!
    X

    இடைவிடா முயற்சி! இணையிலா வெற்றி!!

    • இன்னும் சொல்லப்போனால் முயல்வது என்பது இடைவிடாது முயன்றுகொண்டே இருப்பதும் ஆகும்; இதுவே இடைவிடாத முயற்சி.
    • ஒன்றும் பதில் சொல்லாமல், வேடனைக் கடுகடுவென்று பார்த்துக் கொண்டிருந்தார் துறவி.

    இடைவிடாத முயற்சியில் என்றுமே தோற்றுப் போகாத அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    முயற்சி என்பது ஒரு செயலில் அல்லது ஓர் இலக்கில் கருத்தை வைத்து, அதை வெற்றிகரமாக எட்டிப் பிடிப்பதற்கு முயல்வது ஆகும். முயல்வது என்றால், இலக்கை எட்டிப் பிடிப்பதற்கான திட்டங்களை வகுப்பது, பிறகு செயலை அதனடிப்படையில் நடக்கும்படி செயல்படுத்துவது ஆகியவை மட்டுமன்று; எடுத்த முயற்சியை, செயல் முடியும்வரை இயக்கிக் கொண்டே இருப்பதும் ஆகும்; இன்னும் சொல்லப்போனால் முயல்வது என்பது இடைவிடாது முயன்றுகொண்டே இருப்பதும் ஆகும்; இதுவே இடைவிடாத முயற்சி.

    எந்தவொரு திட்டமிடலுக்கும் செயலாக்கம் அவசியம். அந்தச் செயலாக்கத்தை நெறிப்படுத்துவதும்; தகுந்தவகையில் ஊக்குவிப்பதும் முயற்சியே ஆகும். தனிப்பட்ட வகையிலோ அல்லது கூட்டான திட்டமிடலிலோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; மேற்கொள்ளத் தொடங்கும் எந்த முயற்சியும் எடுத்த எடுப்பிலேயே வெற்றி கண்டுவிடும் என்பது உறுதியில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இடைவிடா முயற்சியே அவசியமானதாகக் கூறப்படுகிறது.

    இடைவிடா முயற்சி என்பது, ஒரு செயலில் இறங்கி வெற்றியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்படும் தொய்வுகளுக்கும் தொந்தரவுகளுக்கும், தடங்கல்களுக்கும், இடையூறுகளுக்கும் சுணங்கிப் போகாமல், வெற்றி ஒன்றையே இலக்காக்கிக் கொண்டு முன்னேறுவது ஆகும். திருவள்ளுவர்,

    "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

    மெய் வருத்தக் கூலிதரும்"

    என்று குறிப்பிட்டிருப்பது விடாமுயற்சியை வலியுறுத்துவதற்காகவே ஆகும். தொடங்குகிற எல்லாச் செயலும் மனித முயற்சிகளினாலும், மனிதத் திட்டமிடல்களினாலுமே தொடக்கம் காண்கின்றன. ஆனால் அவற்றில் பல, மனிதக் கணக்குகளையும் தாண்டிய தோல்விகளில் போய் முடிவடைந்து விடுகின்றன. இந்த இடங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைப்பதாக' நம்மில் பலர் நொந்து கொள்கிறோம்: தோல்விகளுக்கான காரணங்களை விதியின்மேல் போட்டுவிட்டு அந்தச் செயல்முயற்சியிலிருந்து விலகிக்கொள்ளவும் செய்கிறோம்.

    ஆனால், எத்தனை தோல்விகள் எதிர்ப்பட்டாலும், உனது முயற்சியைக் கைவிட்டுவிடாதே!; மனவருத்தம் வருகிறதா? பொறுத்துக் கொள்!; உடல் வருத்தம் மேலிடுகிறதா? தாங்கிக் கொள்! இடைவிடா முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இரு! முயற்சிக்கேற்ற பலன் நிச்சயம் உனக்குக் கிட்டும் என்பதே வள்ளுவ வாக்கு.

    தொடர் முயற்சி என்பதே பல தோல்விக் கண்ணிகளால் கோர்க்கப்பட்ட சங்கிலி என்றே அர்த்தம்; சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் அதனதன் அளவில் முடிவு பெற்றவைதான் என்றாலும், அவற்றை வாகாக ஒன்றன்பின் ஒன்றாக ஒருங்கிணைத்து, அறுந்துபோகாமல், விடாமுயற்சியுடன் கோர்க்கத் தொடங்கினால், வெற்றியின் இலக்கை அந்தச் சங்கிலி அறுந்துபோகாமல் எளிதில் எட்டிப் பிடித்து விடும் அல்லவா!. ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்வது பயிற்சி ஆகும். நேற்றைவிட இன்றைய பயிற்சியில் சற்று முன்னேற்றம்!; இன்றைவிட நாளைய பயிற்சியில் சற்றுத் தெளிவு, என நாளுக்குநாள் பயிற்சியைப் பெருக்கப் பெருக்க, அந்த முயற்சியில் நுணுக்கமும் மெருகும் கூடிக்கொண்டே போகும்; நுணுக்கமும் மெருகும் பெருகப் பெருக, வெற்றியின் தொலைவு சுருங்கிப்போகும்; வெற்றி நம் காலடியில் வந்து 'ஏற்றுக்கொள்!' என்று இன்பப் பரணி பாடும். அந்த வகையில், பயிற்சி என்பதே இடைவிடா முயற்சிக்கு அடிப்படையாக அமைவது தான்.

    சுந்தர ஆவுடையப்பன்


    எந்தச் செயலிலும் ஒற்றை முயற்சியில் வெற்றிகண்டோர் மிக மிகக் குறைவு, எந்தச் செயல் முயற்சியிலும் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு படிப்பினை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; தோல்வியைப் பயிற்சி என்று ஏற்றுக் கொண்டால், முயற்சியில் தொய்வுகள் ஏற்படாது. வெற்றியின் பாதைக்கான தொலைவை உணர்த்தும் மைல் கற்களாக, நமக்கு ஏற்படும் தோல்விகளே திகழுகின்றன. செயல் முயற்சிப் பாதையில் நிகழுகின்ற தோல்விகள், நமது பயண தூரத்தை நீட்டித்துக் கொண்டே போகலாம்; ஆயினும் எத்தனை தோல்வித் துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம், புதிய புதிய பாடங்களாகவும், வழிகளாகவும் ஏற்றுக் கொண்டால் இடைவிடா முயற்சியின் பயணம் இன்பப் பயணமாக அமைந்து விடும்.

    இடைவிடா முயற்சி மேற்கொள்ளுதலில், தளர்ந்து போகாத நம்பிக்கை ஊன்றுகோலாகத் திகழவேண்டும். தளர்ந்து போகாத நம்பிக்கை, நமக்கு மேலும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி, இடைவிடா முயற்சியை இனிய அனுபவமாக மாற்றிவிட வேண்டும்.

    ஒருகாடு. அங்கே அடர்ந்த வனப்பகுதியில் ஒரு துறவி அமர்ந்து ஓராண்டுக்கும் மேலாகத் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவருடைய தவத்தின் அடிப்படையான நோக்கம், கடவுளை நேருக்கு நேராகக் காண வேண்டும் என்பதாகும். ஒருநாள் ஒரு வேடர்தலைவன் வில் அம்பு சகிதமாகத் துறவி இருக்கும் பக்கமாக வந்தான். 'இந்த அத்துவான வனப்பகுதிக்குள் யார் இங்கே அமர்ந்திருப்பது?; அதுவும் அமர்ந்த நிலையிலேயே கண்களைத் திறக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்!' என்ற சிந்தனையோடு, தவமிருக்கும் துறவியைத் தொட்டு எழுப்பினான் வேடன். "ஐயா! யார் நீங்கள்?. உங்களுக்கு உறங்குவதற்குப் பாதுகாப்பான வேறு இடம் கிடைக்கவில்லையா?" என்று கேட்டான்.

    துறவிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது, 'தவத்தைக் குலைத்து எழுப்பிவிட்டது மட்டுமில்லாமல் ஏன் உட்கார்ந்தபடியே உறங்குகிறாய் என்றுமல்லவா கேட்கிறான்?' ஒன்றும் பதில் சொல்லாமல், வேடனைக் கடுகடுவென்று பார்த்துக் கொண்டிருந்தார் துறவி. "ஐயா! உங்களைத்தான். யார் நீங்கள்? எதற்காக இந்த வனப்பகுதிக்குள் வந்து அமர்ந்திருக்கிறீர்?" மீண்டும் கேட்டான் வேடன். 'இவனிடம் போயெல்லாம் நம் தகுதிக்குப் பதில்சொல்ல வேண்டியிருக்கிறதே!' என்று வேண்டா வெறுப்பாக நினைத்துக்கொண்டு, "ஐயா! நான் அருகிலிருக்கும் நகரத்திலிருந்து இந்தக் காட்டிற்குள் வந்திருக்கின்றேன்!. கடவுளை நேருக்கு நேராகப் பார்க்க வேண்டும்! என்கிற ஒரே குறிக்கோளோடு இங்கு வந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றார் துறவி.

    "ஓ! கடவுள் என்பவர் மனிதர்கள் வாழும் நாட்டில் வாழாமல், மிருகங்கள் வாழும் இந்தக் காட்டில்தான் இருக்கின்றாரோ? நல்லது! நல்லது!. சரி ஐயா! அந்தக் கடவுள் என்பவர் எப்படி இருப்பார்? எனக்கு அவரின் அங்க அடையாளங்களைக் கூறுங்கள்!. முடிந்தால் நானும் தேடி உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறேன்" என்றார் வேடர் தலைவன். 'நாட்டில் கற்க வேண்டிய அறிவு எல்லாவற்றையும் கற்ற நம்மாலேயே கடவுளைக் காண முடியவில்லை; காட்டில் எந்த அறிவும் இல்லாமல், வெட்டு! குத்து! என்கிற வன்முறைச் சொற்களையே கற்ற இந்தக் காட்டுவாசியிடம், கடவுளைப் பற்றிப் பேசி என்ன பயன்?' என்று மனதில் நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார் துறவி.

    ஆனாலும் வேடன் துறவியை விடுவதாயில்லை. "ஐயா! சும்மா சொல்லுங்கள்! நான் இந்தக் காட்டுக்கே ராஜா; வேடர் தலைவன்!. இந்தக் காட்டில் வாழும் எல்லா உயிரினங்களும் எனக்கு அத்துபடி. சொல்லுங்கள்! கடவுள் எப்படி இருப்பார்?; சிங்கம், புலி, மான், யானை, நரி இப்படி எந்த மிருகத்தைப் போல இருப்பார்? அல்லது மனிதனைப் போல இருப்பாரா?. இந்தக் காட்டில் எனக்குத் தெரியாத இடங்களே கிடையாது; அடையாளத்தை நீங்கள் சொன்னால் போதும்; இன்று இருட்டுவதற்குள் கடவுளை நான் நிச்சயம் கண்டுபிடித்து உங்களுக்குக் காட்டிவிடுவேன்!" என்றான் வேடன்.

    'எப்படியாவது நம்மைத் தொந்தரவு செய்யாமல் அந்த வேடன் இந்த இடத்தைக் காலிசெய்தால் போதும்' என்று நினைத்த துறவி, "ஐயா! கடவுள் சிங்கத்தின் தலையோடும் மனிதனின் உடம்போடும் இருப்பார்!; முடிந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்" என்றார் துறவி. கடவுளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வேடர்தலைவன் விடா முயற்சியுடன் இறங்கித் தேடத் தொடங்கினான். ஆனால் மாலை வரை வேடனின் கண்களில் 'சிங்கத்தலை மனிதஉடல்' கடவுள் தென்படவே இல்லை; 'இருட்டுவதற்குள் கடவுளைக் காட்டுகிறேன் என்கிற எனது உறுதிமொழி என்னாவது? கடவுளே என் கண்முன்னால் வரமாட்டாயா? வாக்குத் தவறிய நான் உயிரோடு இருந்தாலென்ன? மாண்டால் என்ன?' என்று எண்ணிக்கொண்டே அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரைக் கழுத்தில் இறுக்கிகொண்டு செத்துப் போகத் துணிந்தான் வேடன்!.

    அப்போது அருகிலிருந்த புதருக்குள் இலைகள் அசையும் ஓசை கேட்டது. வேடன் திரும்பிப் பார்த்தான், சிங்கத் தலை மனித உடம்போடு ஓர் உருவம் புதரிலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்தது. அவ்வளவுதான், அந்த இடத்திலிருந்து மகிழ்ச்சிப் பெருக்கோடு ஓடித், தவத்திலிருந்த துறவியை அழைத்துக் கொண்டு வந்து, "இதோ நீங்கள் தேடிக்கொண்டிருந்த கடவுள் இவர்தானே! நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று வேடன் காட்டினான். சிங்கத்தின் தலையோடும் மனிதனின் உடம்போடும் கடவுள் இருந்ததைக் கண்ட துறவிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை; இருந்தாலும் கடவுளின்மீது ஒரு சிறு வருத்தமும் துறவியின் மனத்தில் உதயமானது.

    "நான் கடந்த ஓராண்டிற்கும் மேலாக உரிய மந்திர உச்சாடனங்களோடு உம்மைக் காணத் தவமாய்த் தவமிருந்து இங்கு வனத்தில் காத்துக் கிடந்தேன்; என் கண்முன்னே நீர் வரவேயில்லை; ஆனால், எந்தப் படிப்பறிவும் இல்லாத இந்த வேடன் தேடத் தொடங்கியதும், ஒரே நாளில் அவன் தேடிய உருவத்திலேயே வந்து காட்சியளித்து விட்டீரே எப்படி?" துணிச்சலோடு கடவுளிடம் கேட்டு விட்டார் துறவி.

    கடவுள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார், "நீ என்னைக் காண்பதற்காக தவம் என்கிற கருவி கிடைத்துவிட்டதால் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு, என்னைக் காணக் காத்திருந்தாய்; என்னைக் காணும் ஆவலும் நம்பிக்கையும் உனக்கு இரண்டாம் பட்சமாய்ப் போய்விட்டது. ஆனால், வேடனோ முழு நம்பிக்கையுடனும், வேட்கையுடனும் இடைவிடா முயற்சியோடு தேடத் தொடங்கினான்; தேடுவதும் கண்டடைவதுமே அவனுக்கு வாழ்நாள் குறிக்கோள் ஆயின; அதனால் அன்றே அவன் பயனை அடைந்தான். இடைவிடாத நம்பிக்கையும் முயற்சியுமே எச்செயலின் வெற்றிக்கும் அடிப்படைகளாகும்!" என்றார்.

    இறுதி பயப்பினும் எஞ்சாது, கொண்ட குறிக்கோளில் இடைவிடாது கவனம் வைத்து முயற்சி செய்தால், கடவுளையே காணலாம் என்னும்போது, வெற்றிச் சாதனைகளை மட்டும் எட்டிப் பிடிக்க முடியாதா என்ன?.

    தொடர்புக்கு - 9443190098

    Next Story
    ×