என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஹெல்த் இன்சூரன்ஸ்
- ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் பாதுகாப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் தேவையான ஒன்று.
- ஒவ்வொரு குடும்பமும், ரூ.5 லட்சம் வரைக்கான மருத்துவ வசதிகளை ஒவ்வொரு வருடமும் இலவசமாகப் பெறலாம்.
'ஹெல்த் இஸ் வெல்த்' என்ற ஆங்கிலப் பழமொழி பொய்யல்ல என்று கொரோனா நன்றாகவே நிரூபித்துவிட்டது. 6 லட்சம், 7 லட்சம் என்பது அதிக பட்ச ஆஸ்பத்திரி செலவு என்று நாம் எண்ணியிருக்க, கொரோனாவுக்கு 15 லட்சம், 20 லட்சம் என்று செலவானதைப் பார்த்தோம். இதனால் பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தினர் உயிரை மட்டுமின்றி, தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் மருத்துவமனை பில் கட்டியே இழந்தன. இன்றைய சூழ்நிலையில், மருத்துவப் பணவீக்கம் 14 சதவீதம் என்னும் உச்ச அளவில் இருக்கும்போது, ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் பாதுகாப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் தேவையான ஒன்று.
ஹெல்த் இன்சூரன்ஸ்
நாம் ஒரு நல்ல இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நமக்குத் தேவையான அளவு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு தொகையை பிரீமியமாகக் கட்ட வேண்டியிருக்கும். நாம் என்ன காரணத்துக்காக சிகிச்சை பெற்றாலும், இன்சூரன்ஸ் நிறுவனம், டாக்டர் பீஸ், மெடிக்கல் டெஸ்ட்டுகள், ஆம்புலன்ஸ் செலவு, ஆஸ்பத்திரி செலவுகள் போன்றவற்றை ஈடு கட்டும். ஒரே பாலிசியில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் கவர் செய்யும் பேமிலி ப்ளோட்டர் பாலிசிகளும் உள்ளன. நிறைய கம்பெனிகள் பணியாளர்களுக்காக குரூப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கின்றன.
ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள்
கேஷ்லெஸ் வசதி இது முன்பணம் ஏதும் கட்டாமலேயே மருத்துவம் பெறும் வசதி. முன்பெல்லாம் நம் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட நெட் ஒர்க் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வசதி கிடைத்தது. இப்போது நம் நாட்டில் உள்ள 40,000 மருத்துவமனைகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் பயனாளிகள் கேஷ்லெஸ் சிகிச்சையைப் பெறலாம். அந்த மருத்துவமனை குறைந்த பட்சம் 15 படுக்கைகள் கொண்டதாகவும், க்ளினிக்கல் எஸ்டாப்லிஷ்மென்ட் ஆக்ட்படி அந்தந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும். மருத்துவமனையில் சேர்வதற்கு 60 நாட்கள் முன்னும் / பின்னும் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டும் வசதி உள்ள பாலிசிகள் உள்ளன.
நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் செலவும் ஈடுகட்டப்படுகிறது. ஒருவர் முந்தைய வருடத்தில் எந்த இழப்பீடும் கேட்காமல் இருந்திருந்தால் போனசாக சில வசதிகள் தரப்படுகின்றன. சில நிறுவனங்கள் இலவச ஹெல்த் செக் அப்புகளை வழங்குகின்றன.
மருத்துவமனையில் தங்கும் அறைக்கான செலவுகள், ஐ.சி.யு. செலவுகள் போன்றவை பாலிசியைப் பொறுத்து ஈடுசெய்யப்படுகின்றன. 45 வயதுக்கு முன் பாலிசி எடுப்பவர்கள் கட்டாய ஹெல்த் செக் அப்பை எடுக்கத் தேவையில்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கும்பட்சத்தில் அவை குறித்து தெரிவித்தால் போதும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கத் தேவையான ஆவணங்கள்
வயதுச் சான்று – பிறப்புச் சான்றிதழ், 10th அல்லது 12th மார்க் ஷீட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வோட்டர் ஐ.டி. – இவற்றில் ஒன்று. அடையாளச் சான்று – டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வோட்டர் ஐ.டி., பான் கார்ட், ஆதார் கார்ட் – இவற்றில் ஒன்று. முகவரிச் சான்று – கரன்ட் பில், போன் பில், ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் –இவற்றில் ஒன்று. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 45 வயதுக்கு மேற்பட்டவரானால் மெடிக்கல் செக் அப் ரிப்போர்ட் கேட்கப்படலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் வகைகள்
தனி மனிதருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் – இதன் கீழ் பாலிசி எடுத்தவருக்கு ஏற்படும் மருத்துவமனை செலவுகள் காப்பீடு செய்யப்படுகின்றன. பாலிசிதாரரின் வயதைப் பொறுத்து பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும். குடும்பத்துக்கான ப்ளோட்டர் இன்சூரன்ஸ் – இதில் ஒரே பாலிசியில் ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கிறது.
சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்சூரன்ஸ் இதில் 60 வயதைக் கடந்தோருக்கு ஏற்படக்கூடிய அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
சுந்தரி ஜகதீசன்
அறுவை சிகிச்சை மற்றும் தீவிர நோய்களுக்கான இன்சூரன்ஸ் –சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், புற்று நோய், மாரடைப்பு போன்ற தீவிர நோய்கள் இதன் கீழ் காப்பீடு பெறுகின்றன. இந்த சிகிச்சைகளுக்கான செலவு அதிகம்; ஆகவே பிரீமியமும் அதிகம்.
மகப்பேறுக்கான இன்சூரன்ஸ் இதன் கீழ் மகப்பேறுக்கு முன்பும், பின்பும் ஏற்படக்கூடிய செலவுகள், பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவுகள், ஆம்புலன்ஸ் செலவுகள் போன்றவை காப்பீடு பெறுகின்றன. விபத்து இன்சூரன்ஸ் –இந்தப் பாலிசி விபத்து ஏற்படும்போது, அதற்கான செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது.
யூனிட் லிங்க்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் –இது இன்சூரன்சும், சேமிப்பும் கலந்த கலவையாகும். காப்பீட்டுக்குப் பெறப்படுவதை விட சற்று அதிகத் தொகை பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகை சேமிக்கப்பட்டு, சிகிச்சை சார்ந்த மற்ற செலவுகளுக்கு உதவுகிறது.
அபோல்லோ, மேக்ஸ் பூபா போன்ற தனியார் நிறுவனங்கள், எஸ்.பி.ஐ., எல்.அண்ட்.டி, பஜாஜ், ஹெச்.டி.எப்.சி. போன்ற குழுமங்களின் நிறுவனங்களுடன், அரசு நிறுவனங்களான நேஷனல் ஹெல்த் இன்சூரன்சும், எல்.ஐ.சி.யும் கூட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகின்றன.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோருக்கான அரசுத் திட்டங்கள்
இன்று இந்தியா பொருளாதாரத்தில் நன்கு முன்னேறி, மக்கள் பலரும் நல்ல மருத்துவ வசதி, அதற்கான பொருளாதார வசதி போன்றவற்றைப் பெற்று விட்டாலும், பெரும்பாலானோர் இன்னும் கூட ஏழ்மையில் உழல்வதைப் பார்க்க முடிகிறது. மருத்துவச் செலவுகள் என்னும் பெரும் தடையைத் தாண்டுவதற்கு இவர்களுக்கு உதவ, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்
தமிழ் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு, பென்ஷன் பெறுவோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பலவித இன்சூரன்ஸ் திட்டங்கள் இருந்தாலும், ஏழை, எளியோருக்கான முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் பெரும் உதவி ஆற்றி வருகிறது. ரூ.1,20,000/ க்குக் குறைவான வருட வருமானம் பெறுவோருக்குக்கான இந்தத் திட்டம், ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமாக ஒவ்வொரு வருடமும் ரூ.5 லட்சம் அளவுக்கான ஹெல்த் இன்சூரன்சை இலவசமாக வழங்குகிறது.
இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள்
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
மத்திய அரசாங்கத்திலும் குறைந்த அளவு பிரீமியத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமைக் கோட்டின் கீழ் வரும் ஏழை, எளியோருக்கான ஆயுஷ்மான் பாரத் இலவச ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் பிரபலமாக உள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு குடும்பமும், ரூ.5 லட்சம் வரைக்கான மருத்துவ வசதிகளை ஒவ்வொரு வருடமும் இலவசமாகப் பெறலாம்.
முதியோருக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்
பென்ஷன், வாடகை, வட்டி வருமானம், பிள்ளைகளின் உதவி போன்றவற்றின் துணையுடன் காலத்தைக் கடத்தி வரும் முதியவர்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள்தான். முதியோருக்கு காப்பீடு வழங்குவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மிகுந்த தயக்கம் உள்ளது. ஆகவே முதியோருக்கான காப்பீடு என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. இதனை உணர்ந்து இவர்களுக்கு உதவுவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது மத்திய அரசு. இதற்கு முன்பான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வருடத்துக்கு ரூ. 5 லட்சத்திற்குக் காப்பீடு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அமலுக்கு வரும் திட்டத்தின்படி வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, 70 வயது நிறைந்த அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும். வசதியானவர்கள், வசதி குறைந்தவர்கள் என்ற பாகுபாடு இருக்காது.
ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் குடும்பம் முழுமைக்குமாக கார்ட் பெற்றிருந்தாலும், அந்தக் குடும்பத்தின் முதியோர்களுக்கென்று தனியாக இன்னொரு ரூ.5 லட்ச ரூபாய்க்கான கார்ட் வழங்கப்படும்.
ஜன் ஔஷதி திட்டம்
இது இன்சூரன்ஸ் திட்டமல்ல. ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்திட உதவும் மருந்துக் கடைகள். மருத்துவ விலை உயர்வு விண்ணை முட்டுகிறது; இதனால் நம் சேமிப்பு பாதிப்படைகிறது என்று அங்கலாய்க்கும் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ்நாட்டில் 940 ஜன் ஔஷதி கடைகள் இருக்கும் விஷயம் தெரியும்? சென்னையில் மட்டும் 140 கடைகள் உள்ளன. சிரமம் பாராமல் நம் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஜன் ஔஷதி கடைகளுக்குச் சென்று மருந்துகள் வாங்குவதன் மூலம், மருத்துவச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.
முக்கியமாக, நீண்ட காலமாக மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களால் அவதியுறுபவர்களுக்கு 50 சதவீதம் டிஸ்கவுன்ட்டில் மருந்துகள் தரும் இந்தக் கடைகள் ஒரு வரப்பிரசாதம்
இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கான வரிவிலக்குகள்
வருமானவரி பழைய முறையின் கீழ் ஒருவர் தனக்கும், தன் குடும்பத்துக்குமான பிரீமியம் தொகையில் ரூ.25000/ வரைக்கும், 60 வயதுக்குக் குறைந்த பெற்றோர்களுக்கான பிரீமியத்தில் ரூ.25000/ வரைக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கான பிரீமியத்தில் ரூ. 50000/ வரைக்கும் வரி விலக்கு பெறலாம். சீனியர் சிட்டிசன்கள் தங்களுக்கான பிரீமியத்தில் ரூ.50000/, தங்கள் பெற்றோருக்கான பிரீமியத்தில் ரூ. 50000/ வரை வரிவிலக்கு பெறமுடியும்.
இன்சூரன்ஸ் கிளெய்ம் பெறும் முறை
இப்போதெல்லாம் அனேகமாக எல்லா மருத்துவமனைகளிலும் இன்சூரன்ஸ் கிளெய்ம்களை நிர்வாகம் செய்ய தனியாக ஒரு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் நமது இன்சூரன்ஸ் சார்ந்த விவரங்களைத் தெரியப்படுத்தி விட்டால் கிளெய்ம் பெறும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். இன்சூரன்ஸ் நிறுவனமும், மருத்துவமனையும் கை கோர்த்து செயல்படுவதால், மருத்துவமனைகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நமக்கான இன்சூரன்ஸ் தொகையை பெற்றுக் கொள்கின்றன.
சிகிச்சைக்கான செலவுகளை விட கிளெய்மில் கிடைத்த தொகை குறைவாக இருந்தால் மீதி உள்ள தொகையை மட்டும் நாம் கட்டினால் போதும்.
உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? ஜன் ஔஷதி கடைகள் உங்கள் வீட்டில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளன?






