என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வெற்றிலை எப்படி வெற்றி இலையாகிறது?
    X

    வெற்றிலை எப்படி வெற்றி இலையாகிறது?

    • வெற்றிலை மங்களப் பொருள் மட்டுமல்ல, மருத்துவப் பின்னனியும் நிறைய இருக்கிறது.
    • வெள்ளை நரம்பு கொண்ட வெற்றிலையே பெரும்பாலும் உண்பதற்கு பயன்படுகிறது.

    பேச்சு வழக்கில் வெத்திலை ஆகிவிட்ட வெற்றிலைதான் இன்று நம்முடைய கருப்பொருள்.

    வெற்றிலை ஒரு மங்களப் பொருள். வெற்றிலை என்றாலே சுபம், சந்தோஷம் அனைவருக்கும் விருப்பமான ஒரு பொருள்.

    நல்ல காரியங்களுக்கு, முக்கியமாக திருமண நிச்சயத்தார்த்த விழாவில் கதாநாயகனே வெற்றிலைதான், வெற்றிலை மாற்றிக்குங்க என்று சொல்வதும் அதனால்தான்.

    ஜெயஸ்ரீ சர்மா

    சில நேரங்களில் நையாண்டியாக "ஆமா வெத்தல பாக்கு வச்சு அழைக்கணும்" என்பர். அந்த வார்த்தையின் ஆழத்தில் இருப்பது வெற்றிலைக்குரிய முக்கியத்துவம்தான்.

    "கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல'',''வெத்திலை வெத்திலை வெத்திலையோ'' என்று வெற்றிலையை மையமாக வைத்து எத்தனையோ சினிமா பாடல்கள், வசனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. வெற்றிலைக்கு ஏன் இவ்வளவு புனிதம், பெருமை! மரியாதை!

    கடவுளுக்கு படைப்பதிலும், சீர் செய்வதிலும்,அர்ச்சனை தட்டிலும், திருமண தாம்பூலத் திலும், வரவேற்பு வாசலிலும் என்று எங்கும் வெற்றிலையின் ஆதிக்கம்தான்.

    இது வெற்றிலையாக இருந்திருக்க முடியாது, வெற்றி இலையாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதற்கேற்ப இதன் உண்மையான பெயரே வெற்றிலைதானே. வெற்றிலை மங்களப் பொருள் மட்டுமல்ல, மருத்துவப் பின்னனியும் நிறைய இருக்கிறது, அங்கேதான் நான் வருகிறேன்.

    இந்த கட்டுரையை படித்த பிறகு நீங்களும் வெற்றிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவது நிச்சயம்.

    சீரில் மங்களப் பொருளாக வைக்கப்படும் வெற்றிலையை பெரும்பாலான வீடுகளில் காய்ந்த இலையாக மாற்றி தூக்கி தான் போடுவார். அதன் மருத்துவ பலன்களை தெரிந்தால் ஒருநாளும் அவ்வாறு செய்ய மாட்டோம். தாம்பூலம் தரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றிலையை பாக்கு சுண்ணாம்போடு எடுத்துக் கொள்வர். எளிதாக சாப்பிட பான், பீடா வகையறா...

    வெற்றிலை ஒரு கொடி. முக்கியமாக அகத்திக்கீரை மரங்களில் ஊடுபயிராக இந்த வெற்றிலை கொடியை நீர் வளம் நிறைந்த பகுதிகளில் வளர்ப்பதை பார்க்கலாம். வெற்றிலையில் பல ரகங்கள் உண்டு. வெள்ளை நரம்பு கொண்ட வெற்றிலையே பெரும்பாலும் உண்பதற்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டில் கும்பகோணம், சோழவந்தான் வெற்றிலைகள் மிகவும் புகழ் பெற்றதாகும்.

    பொதுவாக கர்ப்பிணிகளையும் பிரசவித்த பெண்களையும் வெற்றிலையை சேர்த்துக் கொள்ளச் செல்வர். பிரசவ லேகியத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொடுப்பர். சில நாட்டு மருந்துகளையும் கூட வெற்றிலையில் வைத்து மடித்து உண்ணச் சொல்வர். கர்ப்பிணிகள் உணவுக்கு பிறகு வெற்றிலையை லேசாக வாயில் மென்று, உமிழ் நீரை விழுங்கும் பொழுது ஜீரணம் சமன்படுவதோடு வாயு தொல்லை குறையும் வாந்தி வருவது நிற்கும்.

    சிறு குழந்தைகளுக்கு இருமல் சளிக்கு தயாரிக்கப்படும் கஷாயத்தில் வெற்றிலையும் முக்கியமாக இடம் பெறும், வெற்றிலையை நெருப்பில் காட்டி வயிற்றில் பற்று போட்டு விடுவதும் உண்டு, வயிற்றுப் பொருமலுக்காக... காயங்களுக்கு கூட வெற்றிலைச் சாறை அல்லது வெற்றிலையை நேரடியாக வைப்பவர்களும் உண்டு.

    வெற்றிலையில் ஆன்டிஆக்சிடென்ட் ஆன்டி இன்ப்ளமேட்டரி, ஆண்டி மைக்ரோபியல் போன்ற பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் தான் பாட்டி வைத்தியத்தில் மட்டுமல்ல சித்த வைத்தியத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

    வெற்றிலையின் தனிப்பட்ட மணத்திற்கும் மற்றும் மருத்துவ குணங்களுக்கும் காரணமாய் விளங்குவது பைட்டோ கெமிக்கல்ஸ் என்று சொல்லப்படும் தாவர வேதிப்பொருட்கள் ஆகும். கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், குரோமியம் மற்றும் சிறிதளவு புரோட்டின், கார்போஹைட்ரேடுகளும் நிறைந்ததுதான் வெற்றிலை. தாவர வேதிப்பொருட்களில் முக்கியமாக ஹைட்ராக்சி சாவியோல் கேன்சரை தடுக்கக்கூடிய வல்லமையோடு விளங்குகிறது.

    நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் சில டாக்டர்கள் வெற்றிலை-பாக்கு போடுபவர்களுக்கு வாயில் புற்றுநோய் வரும் என்று கூறுகிறார்களே என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது. வெறும் வெற்றிலை மட்டும் மெல்பவர்களுக்கு எல்லா மருத்துவ பலன்களும் கிடைக்கும். அதற்கு சுண்ணாம்பு தடவி, விதம் விதமான பாக்கு, கூடுதலாக புகையிலையையும் சேர்த்து சதா குதப்பும் போதுதான் கேன்சர் என்ற சிக்கல் எழுதுகிறது.

    பல்வேறு சத்துப் பொருட்களும், நோய் தடுக்கும் வேதிப் பொருட்களும் நிறைந்திட்ட வெற்றிலையை ஒரு நாளைக்கு ஓன்று என்ற கணக்கில் கூட மென்று முழுங்குவோம். காரணம் அது நான் முதலிலேயே சொன்னது போல வெற்றி இலை நம்மை காக்கும் கவச இலை.

    வாட்ஸ்அப்: 8925764148

    Next Story
    ×