என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மக்காச் சோள உணவு எப்படி வந்தது?
    X

    மக்காச் சோள உணவு எப்படி வந்தது?

    • பண்ணை மாடுகளுக்கு முதன்மை உணவாக இருப்பது மக்காச் சோளமே ஆகும்.
    • மக்காச் சோளத்தில் நார்ச்சத்து அதிகம்.

    உலகம் முழுதும் விளைவிக்கப்படும் பெருந்தானியங்கள் மூன்று. நெல், கோதுமை, கார்ன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மக்காச்சோளம் ஆகிய இம்மூன்றும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அரிசி முதன்மை இடம் பிடிக்கக் கூடியது. உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் அரிசிப் பயன்பாடு அதிகம். இன்றைய மொத்த மக்கட்தொகையான 810 கோடிகளில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதி இவ்விரு கண்டங்களே. இவர்களின் முதன்மை உணவு அரிசிதான்.

    கோதுமை அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதைப்போலவே மக்காச் சோளமும். நம்முடைய நாட்டுச் சோள வகைகளைக் கதிராக வைத்திருந்தால் தானியம் சில வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் கதிரில் இருந்து தானியத்தைப் பிரித்து விட்டால் சோளம் எளிதில் மக்கி விடும். ஆனால் மஞ்சள் நிறத்தில் உள்ள சோளமான மக்காச் சோளம் அவ்வளவு எளிதில் கெட்டு விடுவதில்லை. அதனால் தான் நம்மக்கள் இதற்கு மக்காச் சோளம் என்று பெயர் வைத்தனர். அதாவது மக்கிப் போகாமல் தாக்குப் பிடிப்பது மக்காச் சோளம். நம்முடைய நாட்டு வகைச் சோளத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நாட்டுச் சோளமும் மக்காச் சோளமும் வெவ்வேறு ரகத்தைச் சேர்ந்தவை. இருப்பதிலேயே பெரிய தானியம் மக்காச் சோளம் தான்.

    மக்காச் சோளத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகளிலும், வட, தென்னமெரிக்க நாடுகளிலும் தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு மாடுகளுக்கான தீவனம் தான். பலவகையான தானியங்கள், தானியப் பொட்டுகள், உமிகள் போன்றவற்றைச் சேர்த்து அரைத்து மாட்டுக்குத் தீவனமாக அளிக்கிறார்கள். நமக்கு மாடு வீட்டு விலங்கு. பசுமாட்டினை வீட்டில் வளர்ப்போம். அது பாலும் தரும் உழவுக்கும் உதவும். காளை மாடுகள் உழவுக்கு, வண்டி இழுக்க எனப் பல்வேறு வகைகளிலும் வேளாண் உழைப்பிற்கு ஒத்துழைக்கக் கூடிய சாதுப் பிராணி.

    ஆனால் மேற்கத்தியர்களும் மற்ற பல நாட்டினருக்கும் மாடு பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்காகும். மேய்ச்சலுக்கெல்லாம் அவற்றை ஓட்டிப் போக முடியாது.

    வரலாற்றுக் காலம் தொட்டே ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தான் விவசாயம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை எப்படி விதைத்து அறுவடை செய்து கதிரை அறுத்து தானியமாகச் சேமித்து பல ஆண்டுகளுக்கும் பாதுகாத்து வைப்பது என்ற உற்பத்தி முறையை நாம் 20000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டடைந்து விட்டோம். ஆனால் பரந்த நிலவெளி இல்லாத மேற்கு நாடுகளில், சீரான மழைப்பொழிவு இல்லாத நாடுகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆடு, மாடுகளையே நம்பி இருந்தனர்.

    அதுதான் அவர்களுக்கு உணவு ஆதாரமும். மாட்டுப் பால், பாலின் பதப்படுத்திய வடிவங்களான பாலாடைக்கட்டி (chease), வெண்ணை, உப்பிட்டுப் பதப்படுத்திய வெண்ணை, மாட்டுக் கொழுப்பில் இருந்து தயாரிக்கும் வெண்ணை (margarine) போன்றவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவார்கள். நாம் தான் பாலை நேரடியாக நிறையப் பயன்படுத்துகிறோம். அதனை நொதிக்கச் செய்து, தயிர், மோர், நெய் என்று நம்முடைய வெப்பச் சூழலுக்கு ஏற்ப நீர்த்த வடிவத்தில் பயன்படுத்துகிறோம்.

    மேற்கத்தியர்கள் அவர்களது குளிர்வுச் சூழலுக்கு ஏற்ப பாலின் உறைந்து இறுகிய வடிவத்திலான பண்டங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். விவசாயம் இல்லாத அவர்களுக்கு மாடுமேய்த்தலே ஆதாரத் தொழில். மாட்டின் பால் ஒருபுறம் என்றால் மாட்டு இறைச்சி அவர்களுக்கு முதன்மையான உணவு. மாடுகளை நாம் வேளாண்மை உழைப்பிற்குப் பயன்படுத்துவதால் அதன் இறைச்சிப் பயன்பாடு நம்மிடத்தில் குறைவு. போக வீட்டு உறுப்பினர்கள் போல மிகவும் நெருக்கமாக இருப்பதாலும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும் அவற்றின் இறைச்சியை நாம் அவ்வளவாக எடுத்துக் கொள்வது பழக்கமாக இல்லை. வயதில் முதிர்ந்து இறந்து விடும் மாடுகளை அதன் இறைச்சிக்காக நிலமற்ற விவசாயக் கூலி உழைப்பாளர்களிடம் கொடுத்து விடுவர். கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு மாட்டிறைச்சி தான் முதன்மையான புரதம் ஆகும்.

    போப்பு

    உழைப்பிற்குரிய ஆதாரமான சத்துக்களை வழங்குவது புரதச்சத்தே ஆகும். வயது முதிர்ந்து விவசாய உழைப்பிற்கு உதவாத மாடுகளையும் இறைச்சிக்காக சந்தையில் விற்பது உண்டு. மாட்டுக்கு நிகராக நிலத்தில் உழைக்கும் மக்கள் மாட்டிறைச்சியைத் தின்றே தமது உழைப்பிற்குரிய ஆற்றலைப் பெற முடியும். விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டிராத மேற்கத்தியர்களுக்கோ (வரலாற்றுக் காலத்தில்) நேரடியாக மேய்ச்சல் தான் ஒரே தொழில் நூற்றுக்கணக்கான மாடுகள், ஆடுகளை பசுமையான நிலத்திற்கு ஓட்டிச் சென்று மேயவிட்டு வளர்த்து அவற்றின் பாலையும், இறைச்சியையும், தோலையும் தமது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தார்கள். இன்றும் நம்மைக் காட்டிலும் அதிகமான இறைச்சி உண்போர் நம்மைக் காட்டிலும் மேற்கத்திய, அமெரிக்க நாட்டினரே அதிகம். நம்மில் பெரும்பாலான மக்கள் இறைச்சி எடுத்துக்கொள்பவர்கள் தான். ஆனாலும் அன்றாட உணவில் இறைச்சிப் பயன்பாடு இல்லை.

    அதிலும் நம்மவர்களுக்கு ஆடு, மாடு, கோழி, மீன், காடை, முயல் எனப் பலவகையான இறைச்சியை நுகர்கிறோம். மேற்கத்தியருக்கு முதன்மையான இறைச்சி மாட்டிறைச்சியே ஆகும். இறைச்சிக்குத் தொட்டுக் கொள்ளவே சிறிதளவு ரொட்டி. சுமார் ஐநூறு ஆண்டுகளாக அவர்கள் தொழில்துறையில் இறங்கி விட்டதால் மாடு மேய்ச்சல் அறுகி விட்டது. எனினும் இறைச்சிக்காகப் பண்ணைகள் வைத்து மாடுவளர்ப்பில் ஈடுபடுகின்றனர். அதுவும் பல்லாயிரக்கணக்கான மாடுகளை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு ஆலைத் தொழில் போல நடத்துகின்றனர். பண்ணைக்குள்ளேயே மாடுகளை அறுத்து இறைச்சியைப் பதப்படுத்தி அன்றாடம் டன் கணக்கில் மாட்டிறைச்சி ட்ரக்குகளில் ஏற்றப்படும்.

    அவையெல்லாம் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. குறைந்த நிலப்பரப்பினைக் கொண்டு அதிக (இறைச்சி) நுகர்வுக்காக விரைவில் சதைபோடும் வகையிலான மாடு வளர்ப்பிற்கு மக்காச்சோளம் போன்ற தானியங்கள் அவர்களுக்குப் பெரும் பயனாக இருக்கிறது. மேற்கத்திய, அரபு நாடுகளின் தேவைக்காக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் பண்ணை வைத்து மாடுகளை வளர்ப்பது இன்று முக்கியத் தொழிலாக இருக்கிறது. ஆலைகளில் இறைச்சியைப் பதப்படுத்தி குளிர்வுக் கண்டெய்னர்களில் அவை மும்பை, கொல்கத்தா போன்ற துறைமுகங்களில் ஏற்றுமதியாகின்றன. வெப்ப மண்டல நாடுகளான இந்தியா, ஆப்பிரிக்க நாட்டு மாட்டு இறைச்சிகள் சதைப்பற்றுக் குறைவானவை என்றாலும் சத்துக்கள் குறிப்பாக நுண்சத்துக்கள் மிகுந்தவை ஆகும்.

    இந்தப் பண்ணை மாடுகளுக்கு முதன்மை உணவாக இருப்பது மக்காச் சோளமே ஆகும். ம.சோளத் தானியம் எப்படி பருத்து இருக்கிறதோ அதுபோல அதனை உணவாகக் கொண்டு வளரும் மாடுகளும் நல்ல சதைப்பற்றோடு விளங்கும்.

    மக்காச்சோளம் நமது நாட்டுத் தானியமல்ல. கோதுமையைப் போலவே 1960 களின் மத்தியில் இந்தியாவின் உணவுத் தேவைக்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. அந்நாட்களில் நேரடியாக மக்காச் சோள ரவையாகவே ஐம்பது மூட்டைக் காகிதப் பைகளில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. இந்த மக்காச் சோள ரவையை பெயருக்கு ஒரு தாளிப்புப் போட்டு உப்புமாவாகக் கிண்டி பள்ளி மதிய உணவில் போடுவார்கள். உணவு உற்பத்தி குறைவான அக்காலத்தில் வயிற்றுக்கு ஏதாவது கிடைத்தால் போதுமென்று தான் கருதுவார்களே தவிர அது எவ்வளவு சுவையாக இருக்கிறது, எவ்வளவு சத்துக் கூறுகள் நிறைந்தது, தொட்டுக்கொள்ள துணைவுணவு என்ன என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்றும் பெரும்பகுதி மக்கள் அப்படிப் பார்க்கும் நிலையை எட்டி விடவில்லை. என்றாலும் உணவே கிடைக்காத நிலை உலகில் பரவலாக இல்லை.

    மக்காச் சோள ரவையில் செய்யும் உப்புமா இன்றளவும் பரவலடையவில்லை. மேலே விரிவாகச் சொன்னது போல அது பண்ணை மாடுகள் வளர்ப்பிற்குத் தான் முதன்மைப் பொருளாக உள்ளது. மேற்கத்தியரின் முதன்மை உணவாக இறைச்சியே இருப்பதால் அவர்களுக்குச் சர்க்கரை சார்ந்த நோய்கள் இல்லை. ஆனால் உடல் பருமன், கொழுப்பு சார்ந்த நோய்கள் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை. மக்காச் சோளத்தில் நார்ச்சத்து அதிகம். மற்ற தானியங்களை விட நார்ச்சத்து அதிகம் என்பதால் இதனை நேரடியாகப் பயன்படுத்தினால் குடல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும், கொழுப்புச் சத்துப் பிரச்சனைகளில் இருந்தும் மக்கள் விடுபடலாம்.

    ம.சோளக் கதிரை அப்படியே வேகவைத்து உண்ணும் பழக்கம் நம்மிடத்தில் பரவிவருவது நல்ல பழக்கம் ஆகும். அதுபோலவே பச்சைக் கதிரை அதன் மேல்த் தோகை நீக்கி நெருப்பில் நேரடியாகச் சுட்டு உண்பது மிகவும் நல்ல பழக்கம் ஆகும். சிறுவயது முதற்கொண்டு இப்படிச் சாப்பிட்டுப் பழகி வந்தால் தற்பொழுது பரவலாகி வரும் பல் பிரச்சனைகள் பலவற்றைத் தவிர்க்க முடியும்.

    செல்-96293 45938

    Next Story
    ×