என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒரு மகன், மகான் ஆன கதை!
    X

    ஒரு மகன், மகான் ஆன கதை!

    • எல்லோருக்கும் நோய் வரும் என்றும் நோயே வராதவர் யாருமில்லை என்றும் அவன் சொன்னான்.
    • புத்தரை அழைத்துவரச் சென்ற தூதர்களெல்லாம் புத்தரின் சீடர்களாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

    கவுதமன் பிறந்துவிட்டான். அவனுக்கு ஜாதகம் கணிக்க வேண்டும். தன் மகனின் ஜாதகத்தைக் கணிக்க ஜோதிடர்களை அழைத்தார் தந்தையான மாமன்னர் சுத்தோதனர். ஒருவர் மீதமில்லாமல் எல்லா ஜோதிடர்களும் உறுதியாகச் சொன்னார்கள், `மன்னா, உங்கள் மகன் ஜாதகத்தில் சன்யாக யோகம் இருக்கிறது!` என்று.

    அந்தத் தந்தையின் அன்பு மனம் பதறியது. தன்னை விட்டுப் போய்விடுவானா தன் மகன்? தன்னால் அதை எப்படித் தாங்க முடியும்? தனக்குப் பிறகு நாட்டை ஆளவேண்டிய வாரிசு அல்லவா தன் மகன்? அவன் சன்யாசியானால் நாடு என்ன ஆகும்?

    கவுதமனை சன்யாசி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரே வழி. மகனைப் பொத்திப் பொத்தி வளர்த்தார் மன்னர் சுத்தோதனர். உலகின் அவலங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாமல் இருக்கும்படிக் கவனித்துக் கொண்டார். ஆனந்தமே வடிவாக அவர் மகன் கவுதமன் வளரலானான்.

    ஒரு நோயாளியை அவன் பார்த்ததில்லை. ஒரு முதியவனைக் கண்டதில்லை. ஒரு சடலத்தை அவன் காண நேர்ந்ததில்லை. திட்டமிட்டே இவையெல்லாம் அவன் கண்ணில் படாமல் தடுத்தார் தந்தை சுத்தோதனர்.

    வாலிப வயதை அடைந்தான் கவுதமன். அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் இல்லறத்தில் ஆழ்ந்து விடுவான். இல்லற இன்பத்தை அனுபவித்தபின் அவன் மனம் துறவை நாடாது. நம்பினார் சுத்தோதனர்.

    தேடித் தேடிப் பேரழகியான ராஜகுமாரி யசோதரையை அவனுக்கு மணம் செய்து வைத்தார். அவர்களது இல்லற வாழ்வின் சாட்சியாக ராகுலன் என்ற அழகான ஒரு மகனும் பிறந்தான். ஆனால் விதி வலியது. ஒருநாள் தேரில் வீதிவலம் போனான் கவுதமன். ஒரு நோயாளியைச் சந்தித்தான். ஏன் வாட்டம் என விசாரித்தான். எல்லோருக்கும் நோய் வரும் என்றும் நோயே வராதவர் யாருமில்லை என்றும் அவன் சொன்னான்.

    அதே நாளில் அதே தேரில் மேலும் சென்றபோது மூத்துத் தளர்ந்த ஒரு முதியவனைக் கண்டான். ஏன் இந்தத் தளர்ச்சி எனக் கேட்டான். எல்லோருக்கும் முதுமை வரும் என்றும் முதுமையை யாரும் தவிர்க்க முடியாது என்றும் அறிந்துகொண்டான்.

    மேலும் ஓடியது தேர். எதிரே ஒரு சடலத்தைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நான்கு பேர். தேரை நிறுத்தி அவர்களிடம் எதை எடுத்துச் செல்கிறார்கள் எனக் கேட்டான். இறந்தவன் உடலை எரிக்க எடுத்துச் செல்வதாகவும் எல்லோரும் என்றேனும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும் என்றும் சொன்னார்கள் அவர்கள்.

    சிந்தனையில் ஆழ்ந்த கவுதமன் அரண்மனை திரும்பினான். பிணி, மூப்பு, சாக்காடு...இவைதான் வாழ்வு என்றால் இந்த வாழ்வில் துன்பமில்லாமல் இருப்பது எப்படி? துன்பத்திற்குக் காரணம் என்ன? அறிய விழைந்தது அவன் மனம்.

    அன்று நள்ளிரவு தன் அழகிய மனைவி யசோதரையையும் தன் அழகு மகன் ராகுலனையும் துறந்து யாருக்கும் எதுவும் சொல்லாமல் கானகம் சென்றான். கானகத்திற்கு கவுதமனை அழைத்துச் சென்றவன் தேரோட்டி சன்னா. தேரிலிருந்து இறங்கி தன் தலைமுடியைத் தன் கைவாளாலேயே வெட்டி சன்னா கையில் முடிக் கற்றையைக் கொடுத்தான். இனித் தவ வாழ்வில் வாள் தேவையில்லை எனத் தன் வாளையும் கொடுத்தான்.

    தான் ஞானம் பெறுவதன் பொருட்டுத் தவம் செய்ய வேண்டிக் கானகம் செல்வதாகத் தன் தந்தையிடமும் மனைவியிடமும் அறிவிக்கச் சொன்னான்.

    அதன் நிரூபணமாகத் தன் வாளையும் முடிக் கற்றையையும் கொடுக்கச் சொன்னான். எல்லாம் அப்படியே நடந்தன...

    கானகம் சென்ற கவுதமன் கடும் தவத்தில் ஈடுபட்டான். பல்லாண்டுகள் தவம் செய்து ஒரு பேருண்மையைக் கண்டுபிடித்தான். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதே அந்தப் பேருண்மை. அந்தப் பேருண்மையைக் கண்டறிந்த கெளதமன் தவத்தால் விளைந்த ஞானப் பிரகாசத்தோடு புத்தரானார்.

    திருப்பூர் கிருஷ்ணன்


    புத்தர் இராஜகிருக மாநகருக்கு அருகில் உள்ள மங்களகிரி என்ற மலைப் பிரதேசத்தில் தங்கியிருந்த தருணம். விவரமறிந்தார் புத்தரின் தந்தை சுத்தோதனர். புத்தரைத் திரும்ப அழைத்து மன்னனாக்க விரும்பினார். தலைநகரான கபிலவஸ்துவுக்கு அவர் திரும்ப வரவேண்டும் எனச் சொல்லி ஒரு தூதரை அனுப்பினார். சென்ற தூதர் புத்தரின் திருமுகத்தைப் பார்த்தார். என்ன பிரகாசம் இது? கடவுள் தானா இவர்? புத்தரைச் சுற்றி அவரின் ஏராளமான சீடர்கள் அமர்ந்து அவரின் போதனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தானும் கேட்கலானார் அந்தத் தூதர். அவர் புத்தரின் அடியவராகி அவரின் சீடரானார்.

    என்ன ஆச்சரியம்! புத்தரை அழைத்துவரச் சென்ற தூதர் திரும்பி வரவில்லையே? இரண்டாம் தூதரை அனுப்பினார் சுத்தோதனர். முன்னவர் எடுத்த முடிவையே பின்னவரும் எடுத்தார். அவரும் புத்தரின் சீடரானார். இப்படிப் பலரை அனுப்பிப் பார்த்தார் சுத்தோதனர். வந்த தூதர்களால் புத்தரின் சீடர்கள் எண்ணிக்கை தான் அதிகரித்தது! கடைசியாக சுத்தோதனர் தன்மேல் மிகுந்த விஸ்வாசமுடைய தன் மந்திரி காலோதயனை அழைத்தார். `நீ போய் புத்தரை அழைத்துவா!` என அனுப்பினார்.

    காலோதயன் கட்டாயம் ராஜ கட்டளையை மீற மாட்டான். அவன் புத்தரை அழைத்துவருவது நிச்சயம் என்றே சுத்தோதனர் நம்பினார்.

    காலோதயன் தேரோட்டி சன்னாவுடன் மங்களகிரிக்குத் தேரில் சென்றான். அவனுக்கும் அதே மனநிலைமைதான் தோன்றியது. புத்தரின் உபதேசங்களைக் கேட்கக் கேட்க வாழ்வின் நிலையாமையை அவன் மனமும் புரிந்துகொண்டது. புத்த சங்கத்தில் சேர அவனும் விருப்பம் கொண்டான்.

    ஆனால் ராஜகட்டளைக்குக் கட்டுப்பட்டது அவன் மனம். புத்தர் ஒரே ஒருமுறையேனும் கபிலவஸ்து நகருக்கு வரவேண்டும் என வேண்டினான் அவன்.

    அந்த அன்பு வேண்டுகோளைத் தட்ட புத்தருக்கு மனம் வரவில்லை. புத்தர் தம் சீடர்களான துறவியர் கூட்டத்தோடு மங்களகிரியிலிருந்து கபிலவஸ்து நகரை நோக்கி நடக்கலானார். அறுபது நாட்களில் அவர்கள் அனைவரும் தலைநகரான கபிலவஸ்துவுக்கு வந்துசேர்ந்தார்கள்.

    தன் மனைவி யசோதரையையும் தன் மகன் ராகுலனையும் புத்தர் பார்த்தால் துறவு நெறியிலிருந்து நீங்கி மறுபடியும் மன்னராவார் எனக் கணக்குப் போட்டது புத்தரின் தந்தையான சுத்தோதனரின் மனம்.

    புத்தர் அடைந்துள்ள மாபெரும் ஞானநிலை பற்றி சுத்தோதனர் உணரவில்லை. ஆனால் தலைநகரில் வசித்த குடிமக்கள் புத்தரைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப் பட்டிருந்தார்கள். அவரது நகர விஜயம் குறித்து அவர்கள் அளவற்ற ஆனந்தமடைந்தார்கள்.

    புத்தரை வரவேற்கும் நோக்கில் எண்ணற்ற விளக்குகளைத் தெருவெங்கும் வரிசை வரிசையாக ஏற்றி வைத்தார்கள். புத்த பெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களை வாங்க முடியாத ஏழைகளுக்கு மற்றவர்கள் தீபம் வாங்கி தானமளித்தார்கள்.

    புத்தரின் வருகைக்கு முன்பாகவே அவர் வரும் செய்தியாலேயே மக்களின் மனங்களில் அறவுணர்வு பெருகியிருந்தது.

    நிலவுபோல் ஒளிவீசும் புத்தரைப் பிரதானமாய்க் கொண்ட துறவிகள் கூட்டம் எதிரே வந்து கொண்டிருந்தது. 'புத்தம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி!' என்ற குரல்கள் எழுந்து அடங்கின.

    தூய்மையே வடிவாக, சலனங்களை வென்ற நிறைவோடு, சாந்தி தவழும் முகத்தோடு கபிலவஸ்து நகரின் ராஜவீதியில் வெண்ணிலவு மண்ணில் இறங்கியதுபோல் நடந்து வரலானார் புத்தர். புத்தர் கெளதமனாக இருந்தபோது கரம்பிடித்து அவர் மனைவியான ராணி யசோதரா, மகன் ராகுலனோடு புத்தரை வந்து தரிசித்தாள். தன் தந்தையான புத்தரின் பாதங்களில் விழுந்து வணங்கி நிமிர்ந்து அவர் திருமுகத்தைப் பார்த்தான் ராகுலன். அதில் தென்பட்ட அளவற்ற ஞான ஒளியாலும் மகத்தான சாந்தியாலும் கவரப்பட்டான். அடுத்த கணமே உடன்வந்த துறவியர் கூட்டத்தில் தானும் ஒரு துறவியாக அவன் இணைந்து கொண்டான்.

    புத்தரின் முன்னாள் மனைவியான யசோதரையும் புத்தரைப் பரவசத்தோடு பார்த்தாள். இப்போதிருப்பவருக்கும் தன் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அதே உடல்தான். ஆனால் உள்ளிருக்கும் ஆன்மா பெரிய அளவில் பக்குவப்பட்டு விட்டது. இனி அது சுகபோகங்களை விரும்பாது. அனைவரும் ஏதேனும் ஒரு பிறவியில் அடைய வேண்டிய இறுதி லட்சியத்தை இதோ இந்தப் பிறவியிலேயே தன் கணவர் அடைந்துவிட்டார். இதை அவரைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொண்டது அவள் மனம்.

    புத்தரை அழைத்துவரச் சென்ற தூதர்களெல்லாம் புத்தரின் சீடர்களாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படி மாறாதிருந்தால் தான் ஆச்சரியம். புத்தரின் சான்னித்தியத்தில் தன் மனமும் மெல்ல மெல்லப் பக்குவப் படுவதை உணர்ந்தாள் யசோதரை. தன் மாமனார் சுத்தோதனரின் பாதங்களைப் பணிந்தாள். `நானும் என் மகனைப் போலவே புத்தரின் நெறியில் வாழ விரும்புகிறேன்` என அறிவித்தாள். ஒரு கணத்தில் அவளும் புத்தரின் பெண்துறவியர் வரிசையில் தானும் சேர்ந்து துறவியானாள்.

    தன் மருமகளும் பேரனும் எடுத்த முடிவைப் பார்த்து திகைத்தவாறு நின்றிருந்தார் புத்தரின் தந்தை சுத்தோதனர். அவர் மனமும் கூட புத்தரது புனிதப் பேரொளியால் கவரப் பட்டிருந்தது. ஆனால் நாட்டைக் காக்கும் கடமை அவருக்கு இருக்கிறதே? தன்னையறியாமல் தன் மகன் புத்தரை நோக்கி அவர் கரங்கள் குவிந்தன. சலனமே இல்லாமல் புத்தர் தொடர்ந்து நடந்தார். அவரைப் பின்பற்றித் தாங்களும் நடந்தார்கள் அவரின் சீடர்கள்.

    அந்தச் சீடர்களோடு சீடர்களாய் இணைந்து நடந்தார்கள் யசோதரையும் ராகுலனும். கபிலவஸ்துவின் மக்கள் அனைவரும் புத்தர் சென்ற திக்கை நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்...

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×