என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கரு ஆரோக்கியமாக வளர கவனிக்க வேண்டிய விஷயங்கள்
    X

    கரு ஆரோக்கியமாக வளர கவனிக்க வேண்டிய விஷயங்கள்

    • ஆல்பா பீட்டா புரோட்டின் அதிகமாக இருந்தாலும் டவுன் சின்ட்ரோம் வரலாம்.
    • பொதுவாக தசை சிதைவு உள்ளிட்ட சில பாதிப்புகள் குடும்ப வழிமுறைகள் மூலம் வரும்.

    மகப்பேறு சிகிச்சையில் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருத்தரிக்கும் முன்பு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்ப காலத்தின்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். கருத்தரிக்கும் பெண்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்வதற்கு என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

    ஸ்கிரினீங்-டயக்னோஸ்டிக் பரிசோதனை முறை இடையேயான வித்தியாசம்:

    மகப்பேறுக்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யும்போது, அந்த பரிசோதனையானது கர்ப்பத்தில் உள்ள கருவை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே பனிக்குடத்தில் இருந்து நீர் எடுத்து பரிசோதனை செய்வது, கருவில் இருந்து திசுவை எடுத்து பரிசோதிப்பது எல்லாமே ஆபத்தை விளைவிக்கும்.

    ஏனென்றால் இதை மிகவும் எளிமையான முறையில் ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் சில பிரச்சினைகளை சில வகையான இன்வேசிவ் (ஊடுருவும்) முறையில் தான் உறுதி செய்ய முடியும்.

    பொதுவான ஸ்கிரீனிங் பரிசோதனை முறைகளில் பரிசோதிக்கும் போதே நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படும் டயக்னோஸ்டிக் பரிசோதனையில் கண்டிப்பாக குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறது அல்லது இல்லை என்பது உறுதி செய்யப்படும். இதுதான் இதில் உள்ள ஸ்கிரினீங் பரிசோதனை முறைக்கும், டயக்னோஸ்டிக் பரிசோதனை முறைக்கும் உள்ள வித்தியாசம்.

    அந்த வகையில் தான் 12 முதல் 14 வாரத்துக்குள் ஒரு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, ஆல்பா பீட்டா புரோட்டீன் ரத்த பரிசோதனை, பீட்டா எச்.சி.ஜி பரிசோதனை செய்ய வேண்டும். கருவுக்கு ஏற்படும் குறைபாடுகளை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாக மருத்துவர்கள் பரிசோதிப்பதற்காக ஒரு கணக்கீடு அட்டவணை போடுகிறார்கள்.

    அதில் எச்.சி.ஜி, ஆல்பா பீட்டா புரோட்டீன் மற்றும் இந்த கருவின் நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி மற்றும் நாசி எலும்பு ஆகிய அளவுகோல்களை வைத்து டிரிபிள் மார்க்கர்ஸ் ஸ்கிரீனிங் என்கிற ஒரு ரத்த பரிசோதனையை செய்கிறார்கள். மேலும் ஸ்கேன் மூலமாக இந்த குழந்தைக்கு பாதிப்பு காரணிகள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டறிகிறார்கள்.

    குழந்தையை பாதிக்கும் குரோமோசோம் குறைபாடுகள்:

    இந்த பரிசோதனைகளை எதற்காக எடுக்கிறார்கள் என்றால், டவுன்ஸ் பாதிப்புகள், அதாவது மரபணு ரீதியாக அறிவுசார் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் டிரைசாமிக் 13, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் டிரைசாமிக் 18 ஆகிய குரோமோசோம் குறைபாடுகள் மூலம் இந்த குழந்தைக்கு பாதிப்புகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என்பதை மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

    இதன் மூலமாக இந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பாதிப்பு இருந்தால் அதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்துவதற்கான சோதனை செய்து அது உறுதியாகும் போது கண்டிப்பாக தாயின் நலம் மட்டுமல்ல, கருவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

    அதனால் கருத்தரிக்கும் கருவானது குழந்தையாக வெளிவரும்போது, ஒரு பாதிக்கப்பட்ட கருவாக இருந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு கேடாக அமையும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் என்ன வழிமுறைகளை கையாளலாம் என்பது பற்றி நாம் யோசிக்க முடியும். அதனை தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து, அந்த குழந்தையை சரி செய்ய முடியுமா? அல்லது ஏதாவது மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடியுமா என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியும்.

    இந்த வகையில் முதல் 3 மாதத்தில் ரத்த பரிசோதனை மூலமாக கிருமி தொற்றுகளினால் கருவிற்கு குறைபாடு வருமா என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவதாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமாக நாசி எலும்பு, நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி மற்றும் பெரிய வகையிலான குறைபாடுகள், முதுகு தண்டுவடம் ஆகியவற்றில் ஏதாவது பாதிப்புகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யலாம்.

    100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதியாகும்:

    இவை தவிர ரத்த பரிசோதனையில் நான் ஏற்கனவே சொன்னது போல் டவுன் சின்ட்ரோமை கண்டறிய சில பரிசோதனைகள் உள்ளன. அதாவது, பீட்டா எச்.சி.ஜி. குறைவாக இருந்தால் டவுன் சின்ட்ரோம் வர வாய்ப்புள்ளது. பீட்டா எச்.சி.ஜி. அதிகமாக இருந்தால் பல நேரங்களில் அந்த குழந்தைக்கு கருவில் மரபணு ரீதியிலான குறைபாடுகள் வரலாம். ஆல்பா பீட்டா புரோட்டின் அதிகமாக இருந்தாலும் டவுன் சின்ட்ரோம் வரலாம்.

    இதெல்லாம் சில பரிசோதனை முறைகள் தான். ரத்தத்தில் பயோகெமிக்கல் முறையில் சோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக பாதிப்புகள் இருந்தால் அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்.

    சரி இதற்கு அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்பதை பார்க்க வேண்டும். இது ஆரம்ப பரிசோதனை முறைதான். இந்த பரிசோதனையின்போது பாசிட்டிவ் என்று வந்தால் அந்த குழந்தைக்கு பாதிப்பு என்று அர்த்தமல்ல. அதாவது இதுபோன்ற பரிசோதனையில் பாசிட்டிவ் வரும் நிலையில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    அப்படியென்றால் அதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டாவது முறையாக சில பரிசோதனை முறைகளை செய்ய வேண்டும். இதில் முக்கியமாக சில விஷயங்கள் உள்ளன.

    ஒன்று கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங். இந்த பரிசோதனை என்பது நஞ்சுக்கொடியில் இருந்து செல்களை எடுத்து குழந்தைக்கு குரோமோசோம் குறைபாடுகள் மற்றும் மரபணு குறைபாடுகள் உள்ளதா என்பதை கண்டறியும் முறையாகும். இதற்காக 12 முதல் 14 வாரத்தில் நஞ்சுவில் இருந்து செல்களை எடுத்து அதில் இருந்து டி.என்.ஏ. மரபணு பரிசோதனை செய்து பாதிப்புகள் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.

    பொதுவாக தசை சிதைவு உள்ளிட்ட சில பாதிப்புகள் குடும்ப வழிமுறைகள் மூலம் வரும். வியாதிகளை இந்த முறையில் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலமாக ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கும் போது இதற்கான தீர்வும், வழிமுறையும் கண்டிப்பாக கிடைக்கும்.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    உடல் உறுப்புகளின் முழுமையான வளர்ச்சியை அறியும் பரிசோதனை:

    அடுத்ததாக புளோரசன்ஸ் இன் சிட்டு ஹைப்ரிடைசேஷன் (பிஷ்) தொழில்நுட்பம் மூலமாக பனிக்குட நீரில் இருந்து செல்களை எடுத்து கல்ச்சர் செய்து, அதன் மூலம் இந்த கருவில் ஏதாவது பாதிப்புகள் இருக்கிறதா, ஏதாவது குறைபாடுகள் இருப்பதற்கான அறிகுறி தென்படுகிறதா என்று பார்க்க முடியும். மேலும் அதில் ஏற்படுகின்ற சில பயோகெமிக்கல் பாராமீட்டர் மாற்றங்களை வைத்து அந்த குழந்தைக்கு மரபணு ரீதியான நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த வகையில் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பதை பனிக்குட நீரை எடுத்து பரிசோதிக்கலாம். அந்த கருவின் கோரியானிக் வில்லஸ் சாம்பிள் எடுத்தும் பார்க்கலாம்.

    இதற்கு அடுத்து 22-வது வாரத்தில் முறையாக ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது இருதயம் உள்ளிட்ட எல்லா முக்கியமான பகுதிகள், முக்கியமான உடல் உறுப்புகள் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சியும், குறைபாடு இல்லாத நிலையும் கண்டுபிடிக்கப்படும்.

    இதன் மூலமாக இந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தைபேறு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்த வகையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கர்ப்பிணிகள் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதாவது 22 வாரத்துக்குள் ஒரு குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா, உருவத்தில் இயல்பாக உள்ளதா என்கிற எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து விடலாம்.

    இது இல்லாமல் சில வகையான பிரச்சினைகளான மேப்ரல் சிரப் நோய் என்ற வகையில் கருவை சுற்றி இருக்கும் அம்னியோடிக் திரவத்தை பாதிக்கிற நோய்க்கு அந்த திரவத்தை எடுத்து அதனையும் பரிசோதித்து நோய் தாக்கத்தை கண்டுபிடிக்கலாம். அதன் மூலமாக இந்த கரு வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பை தடுத்து ஆரோக்கியமான குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறையை பெறலாம்.

    இவை தவிர சில குழந்தைகளுக்கு சிறுநீர்க்குழாய் வாழ்வுகள் போன்ற சில சில மாற்றங்கள் இருக்கும். இவற்றினை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் தேவையில்லாமல் பிற்காலத்தில் வருகிற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை தடுக்க முடியும். அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும். எனவே மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பதை கண்டிப்பாக எல்லா பெண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு வயது வரம்பு என்கிற வித்தியாசம் கிடையாது. வயது குறைவான பெண்களுக்கு கூடசில நேரங்களில் இந்த மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக வரலாம். எனவே கரு ஆரோக்கியமாக இருக்க பெண்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் கண்டிப்பாக ஆரோக்கியமான குழந்தைபேறு பெற முடியும்.

    Next Story
    ×