என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சந்தனக் கொடிமரம் கொண்டு வந்த எருமை
- கொடி மரத்துக்காக திருச்செந்தூர் ஆலயத்தில் திருவிழா தடைபடக் கூடாது என்று முருகனிடம் முறையிட்டனர்.
- கடலுக்குள் சற்று தொலைவில் சந்தன மரம் ஒன்று மிதந்தபடி வந்து கொண்டு இருந்தது.
திருச்செந்தூர் கோவிலில் இரண்டு கொடி மரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒன்று தங்கக் கொடிமரம், மற்றொன்று செம்புக் கொடிமரம். திருச்செந்தூர் ஆலயத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் மற்றும் பிரமோற்சவத்துக்கும் இந்த செம்புக்கொடி மரத்தில்தான் கொடியேற்றி விழாவை தொடங்குவார்கள்.
இந்த செம்புக் கொடிமரம் பாண்டிய மன்னன் ஒருவனால் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சிறப்பாக வழங்கப்பட்ட ஒன்றாகும். அந்த பாண்டிய மன்னனின் மகள் முகம் மாறுபட்ட வகையில் இருந்தது. அதாவது மன்னனின் மகள் முகம் குதிரை முகத்தை போன்று இருந்தது. இதனால் அவளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் பாண்டிய மன்னன் தவித்து வந்தார்.
மகளின் குதிரை முகத்தை மாற்றி நல்ல முகமாக தரவேண்டும் என்று அந்த பாண்டிய மன்னன் திருச்செந்தூர் செந்திலாண்டவன் முன்பு தினமும் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்வது உண்டு. முருகன் அருளால் பாண்டிய மன்னன் மகள் திருச்செந்தூர் கடலில் நீராடி வழிபட்டதும் அவளது குதிரை முகம் மறைந்து நல்ல முகம் தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பாண்டிய மன்னன் திருச்செந்தூர் ஆலயத்துக்கு செம்பு கொடிமரம் நிலைநாட்டித் திருவிழாக் கொண்டாடினான்.
காலப்போக்கில் அந்த கொடிமரம் இற்று பழுதடைந்து போய்விட்டது. இதனால் அந்த கொடி மரம் கொடியேற்றும் திருநாள் வரும் முன்பு விழுந்துவிட்டது. இதன் காரணமாக திருவிழா கொண்டாட இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இதை அறிந்த முருக பக்தர்கள் கண்ணீர் விட்டு புலம்பி வேதனைப்பட்டனர்.
கொடி மரத்துக்காக திருச்செந்தூர் ஆலயத்தில் திருவிழா தடைபடக் கூடாது என்று முருகனிடம் முறையிட்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்செந்தூர் முருகன் ஒரு அற்புதமான திருவிளையாடலை நடத்தினார்.
அந்த கால கட்டத்தில் எருமை மாடு ஒன்று திருச்செந்தூர் கோவிலை வலம்வருவதை வழக்கத்தில் கொண்டு இருந்தது. முதலில் இதை சாதாரணமாக பார்த்த பக்தர்கள் நாளடைவில் அந்த எருமை மாட்டுக்கு முருகன் அருள் இருப்பதாக பேசத் தொடங்கினார்கள். அந்த எருமை மாடு பற்றி தென்தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த எருமை மாடு திருச்செந்தூர் ஆலயத்தை வலம் வந்ததும் சண்முக விலாசம் பகுதிக்கு வந்து சிறிது நேரம் நிற்கும். அந்த சமயத்தில் அந்த எருமை மாட்டின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிந்தோடும். அந்த எருமை மாடு எதற்காக ஆனந்த கண்ணீர் விடுகிறது என்பது பக்தர்களுக்கு புரியாத புதிராக இருந்தது.
ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது. அதாவது திருச்செந்தூர் ஆலயத்தை குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வலம் வருவதன் மூலம் அந்த எருமை மாடு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பினார்கள். இதனால் திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்த முருக பக்தர்கள் அனைவரும் எருமை மாட்டின் அதிசயத்தை கண்டு அதையும் வழிபட்டனர்.
இந்த நிலையில்தான் பாண்டிய மன்னன் அமைத்து கொடுத்திருந்த செம்புக் கொடி மரம் பழுதடைந்து விழுந்து இருந்தது. அந்த கொடிமரம் ஒடிந்து விழுந்த தினத்தன்று அந்த எருமை மாட்டிடம் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டதை பக்தர்கள் கண்டனர்.
அந்த எருமை மாடு திருச்செந்தூர் கோவிலைச் சுற்றி சுற்றி வந்தது. கொடி மரம் இருந்த திசையை நோக்கி கத்திக் கொண்டே வலம் வந்தது. இதை கண்டு பக்தர்கள் மிரண்டு போனார்கள். அந்த எருமை மாடு கோவிலை வலம் வந்தபோது பக்தர்களும் அதனைப்பின் தொடர்ந்தனர்.
அப்போது திடீரென வெறி கொண்டது போல அந்த எருமை மாடு திருச்செந்தூர் கடலுக்குள் பாய்ந்தது. இதை கண்டதும் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். எதற்காக அந்த மாடு கடலுக்குள் பாய்ந்து செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். கொடி மரமும் விழுந்து விட்டது. எருமை மாடும் கடலுக்குள் போகிறது. இது அபசகுணமாக இருக்குமோ? பக்தர்களில் சிலர் கதறினார்கள்.
இதை கேட்டதும் மற்ற பக்தர்களுக்கும் அந்த சந்தேகம் வந்து விட்டது. முருகா... முருகா.... என்று கோஷமிட்டனர். அப்போதும் அந்த எருமை மாடு தொடர்ந்து கடலுக்குள் சென்று கொண்டே இருந்தது. அந்த மாட்டை பக்தர்கள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர்.
அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது. கடலுக்குள் சற்று தொலைவில் சந்தன மரம் ஒன்று மிதந்தபடி வந்து கொண்டு இருந்தது. கடலுக்குள் சென்றிருந்த எருமை மாடு தனது கொம்புகளால் அந்த சந்தன மரத்தை கடலோரத்தை நோக்கி தள்ளிக்கொண்டு வந்தது. இதைக் கண்டதும் பக்தர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சந்தன மரத்தை கடலுக்கு வெளியே கொண்டு வந்தபிறகு தான் அதை தள்ளுவதை எருமை மாடு நிறுத்தியது. அந்த சந்தன மரத்தை பக்தர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். அப்போது அவர்களுக்கு ஒன்று புரிந்தது. கொடி மரம் வைப்பதற்கு ஏற்ப சரியான அளவுபடி கனகச்சிதமாக அந்த சந்தன மரம் இருந்தது. தகவல் அறிந்ததும் ஆலய நிர்வாகிகளும் கடற்கரைக்கு வந்தனர்.
அந்த சந்தன மரத்தை ஆய்வுசெய்தனர். அது கொடி மரத்துக்கு உரிய ஐதீகத்துடன் இருப்பதை கண்டதும் மெய்சிலிர்த்து போனார்கள். முருகன் அருளால் அவன் எருமை மாட்டை அனுப்பி கடலுக்குள் இருந்து சந்தன மரத்தை எடுத்து வந்ததை மிகப்பெரிய அற்புதமாக கருதினார்கள். அந்த சந்தன மரத்தை கொண்டு புதிய கொடி மரம் தயாரிக்கப்பட்டது.
உரியமுறையில் குறிப்பிட்ட தினத்தன்று புதிய கொடிமரத்தை ஆலயத்தில் நிறுவினார் கள். இதை கண்டு மற்ற மதத்தினரும் ஆச்சரியப்பட்டனர். குறிப்பாக கொடி மரம் விழுந்ததை கிண்டல் செய்த புத்த மதத்தை சேர்ந்த ஒருவர் கந்தவேலே கண்கண்ட தெய்வம் என்று பணிந்தார். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகளையும், பெருமைகளையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த அவர் இலை விபூதி பெற்று நெற்றியில் பூசிக் கொண்டார்.
கடலில் இருந்து திருச்செந்தூர் ஆலயத்துக்கு சந்தன கொடி மரம் கிடைத்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சந்தனக் கொடி மரம் கடலுக்குள் எப்படி வந்தது? அதை அங்கு யார் கொண்டு வந்து போட்டு இருப்பார்கள்? என்றெல்லாம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. விரைவில் அதற்கு விடையும் கிடைத்தது.
கொடி மரம் ஒடிந்து விழுந்த தினத்தன்று திருச்செந்தூர் முருகன்இலங்கை கண்டியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னனின் கனவில் தோன்றினான். மன்னனிடம், "என் கோவிலுக்கு உள்ளே இருந்த கொடிமரம் பழுதாகி விட்டது. புதிய கொடி மரம் நிறுவ வேண்டும். நீ உடனே சந்தன மரம் வெட்டி அனுப்பு" என்றார். இதை கேட்டதும் மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "முருகா எப்படி உடனே சந்தன மரத்தை நான் திருச்செந்தூருக்கு அனுப்பி வைப்பேன்" என்று கேட்டார்.
அதற்கு முருகப்பெருமான் ஒரு வழிகாட்டினார். அதாவது மன்னனிடம், "ஒரு சந்தன மரத்தை வெட்டி அதை கடலில் உருட்டி விட்டு விடு. அதுஅலையில் மிதந்து கொண்டே இலங்கையில் இருந்து திருச்செந்தூருக்கு என்னிடம் வந்து சேர்ந்து விடும்" என்றார்.
இதை கேட்டதும் கண்டி அரசன் திருச்செந்தூர் முருகன் சொன்னபடி சந்தன மரத்தை கடலுக்குள் கொண்டு வந்து போட்டான். அந்த மரம்தான் திருச்செந்தூருக்கு மிதந்து வந்தது. அதைத்தான் அந்த எருமை மாடு கடலுக்குள் பாய்ந்து சென்று தனது தலையால் முட்டி... முட்டி... கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது.
இந்த தகவல் இலங்கையிலும், தமிழகத்திலும் வரலாற்று குறிப்புகளாக உள்ளன. திருச்செந்தூர் முருகனின் அற்புதமான திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது. அதோடு திருச்செந்தூர் முருகன் நின்று விடவில்லை. தனக்குரிய கொடி மரத்தை கடலுக்குள் சென்று கொண்டு வந்த எருமை மாட்டை கவுரவிக்க முடிவு செய்தான்.
ஒருநாள் திருச்செந்தூர் ஆலயத்தில் தலைமை அர்ச்சகர் மீது முருகன் அருள்பாலித்து பேச வைத்தார். அந்த அர்ச்சகர் ஆவேசத்துடன் எருமை மாட்டை நோக்கி, 'திருச்செந்தூர் ஆலயத்துக்கு புதிய கொடி மரம் கொண்டு வந்து திருப்பணி செய்ய நீ செய்த உதவியை யாராலும் மறக்க முடியாது. உன்னை இந்த தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களும் வழிபட வேண்டும். எனவே இங்கே நீ கல் எருமையாக நிலைத்திருப்பாய்!" என்று அருள் புரிந்தார்.
அதன்படி திருச்செந்தூர் ஆலயத்தை வலம் வந்த சிறப்புக்குரிய அந்த எருமை மாடு தனது முதிய பருவத்தில் குறிப்பிட்ட நாளில் கல் எருமையாக மாறியது. அதை ஆலய நிர்வாகிகள் சிறப்பித்து அபிஷேகம் செய்து ஆலயத்துக்குள் நிறுவினார்கள்.
அந்த எருமை மாடு சிலை நீண்ட நாட்கள் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்தது. கடந்த நூற்றாண்டில் திருச்செந்தூர் ஆலயத்தில் அடுத்தடுத்து நடந்த திருப்பணிகளின் போது அந்த சிலை கவனிப்பார் இல்லாமல் மறைந்து போனதாக கூறப்படுகிறது. இன்று திருச்செந் தூர் ஆலயத்தின் எந்த பகுதியிலும் அந்த எருமை சிலையை நாம் காண இயலவில்லை.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்னொரு எருமை மாடும் முருகனின் அருள் பெற்று இருந்தது. அந்த எருமை மாடு பற்றிய அதிசய தகவலை அடுத்த வாரம் பார்க்கலாம்.






