என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அமைதி தரும் சக்கரை அம்மா கோவில்!
- யாரையும் தோற்றம், உடையை வைத்து எப்போதும் எடை போட வேண்டாம்.
- சித்தர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்தான்.
அமைதி என்ற இந்த வார்த்தையினை இன்று இப்போது சொல்லும் போது யுத்தமற்ற நிலை- மக்களின் கூக்குரலற்ற நிலை என்பது தான் நம் மனதில் தோன்றும்.
* அமைதி அழகானது. தெய்வீகமானது.
* இருளை ஒளிதான் நீக்க முடியும். யுத்தம் நாட்டிலோ, வீட்டிலோ, மனதிலோ வந்தால் அமைதிதான் அதனை நீக்க முடியும்.
* ஆனால் அமைதி என்பது யுத்தம், போராட்டம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. அதற்கும் மேலான ஒரு ஆனந்த உணர்வு.
* அன்பின் உயர்ந்த வெளிப்பாடு.
* நம்மால் இந்த அமைதியினை நம் முன் பெற்றுக் கொள்ள முடியும்.
* பரபரப்பான வாழ்க்கையினைத் தவிர்த்தாலே பாதி அமைதி வந்து விடும்.
ஒரு கண்ணுக்கு மறு கண் என்று எதிர்ப்பது உலகில் அனைவரையும் பார்வை அற்றவராக ஆக்கி விடும்- மகாத்மா காந்தி.
* ஏற்பட்ட மன வலியினை மறப்பது கடினம்தான். ஆனால் அதனை சுமந்து வாழ்வது என்பது அதனை விட கடினம்.
* உங்கள் உள் அனுமதி இல்லாமல் யாரும் உங்களை காயப்படுத்த முடியாது.
* பரபரவென்று எந்த வேலையினையும் செய்ய வேண்டாமே.
* மன சோர்வு, கவலை இருக்கின்றதா? நீங்கள் கடந்த காலத்தில் வாழ்கின்றீர்கள். ரொம்ப படபடப்பு இருக்கின்றதா? நீங்கள் வருங் காலத்திற்கு சென்று விட்டீர்கள். அமைதியாக இருக்கின்றீர்களா? நீங்கள் இப்போது இந்த நொடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.
* ஓரளவு மற்றவர்கள் இடம் இருந்து சற்று தள்ளி இருந்து பாருங்களேன். நிறைய அமைதி இருக்கும்.
* ஏதாவது தவறு செய்து விட்டால் மனதார 'Sorry' சொல்லி விடுங்கள். மனம் லேசாக இருக்கும்.
* யாரையும் தோற்றம், உடையை வைத்து எப்போதும் எடை போட வேண்டாம்.
* யாரைப் பற்றியும் தவறாக பேச வேண்டாமே. இது எத்தனை அமைதி தரும் தெரியுமா?
* அவ்வப்போது ஒரு நிமிட தியானம் செய்யலாம்.
இப்படி எதற்காக அமைதியினைப் பற்றி திடீரென பேசுகின்றோம். இன்றைய சூழலில் 'அமைதி' என்பது மனிதனுக்கு மிக அவசியம் ஆகி விட்டது.
நாட்டில் அமைதியின்மை, வீட்டில் அமைதியின்மை, நண்பர்கள், உறவுகள் என எவ்விடத்திலும் அமைதியின்மை நிலவுகின்றது. பரபரப்பான செய்திகள், பதற வைக்கும் செய்திகள், பாதுகாப்பின்மை, நிதி பற்றாக்குறை, ஆரோக்கியமின்மை என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கின்றது.
இதனால் தான் மனிதர் எப்போதும் மனநலம் கெட்டு இருக்கின்றான். இது உடல் நலத்தினையும் கெடுக்கின்றது.
இந்த நிம்மதியினை, அமைதியினை தேடி அலையும் போது தியானம், யோகா, ஆன்மீகம், பக்தி, வழிபாடுகள் இவை மனதினை நிலை படுத்துகின்றன.
யோகா, தியானம் இதனை முறையாக கற்று பிறகு பயிற்சி செய்ய வேண்டும். இது தரும் பலன்கள் அதிகம். ஆன்மீகம், வழிபாடு இவை அவரவர் குடும்ப வழக்கப்படி பின்பற்றப்படும். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
அநேகர் குரு வழிபாடு, சித்தர் வழிபாடு என்றும் ஈடுபடுவர். பலரும் அன்றாட பிரச்சினைகளில் இருந்து விடுபடவே பல வழிபாட்டு தலங்களுக்கு செல்லவேண்டி உள்ளது. காரணம் தாங்க முடியாத பிரச்சினைகள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தில் அதிக பிடித்தம் ஏற்படுகின்றது. கடவுளிடம் சொல்லி விட்டால் பாரம் நிறைந்து மனம் அமைதி பெறுகின்றது.
கடைசியில் மனிதன் உடல் ஆரோக்கியம், மன நிம்மதி இதனை மட்டுமே அடைய படாத பாடு படுகின்றான். இதனைப் பெற ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கை அநேகருக்கு உதவுகின்றது.
பிரபல கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இவற்றிற்கு என்றும் மரியாதை இருக்கத்தான் செய்கின்றது. பல சித்தர் கோவில்கள் ஆக்கிய மா முனிவர், மச்ச முனிவர் என ஆரம்பித்து ஷீரடி பாபா, ராகவேந்திர சுவாமிகள், ராமானுஜர், ரமணர், காஞ்சி மகா பெரியவர் என புத்தகம் எழுதும் அளவு பட்டியல் நீளும். இப்படி அனைத்து மதங்களிலும் கூற முடியும்.
அவ்வகையில் நான் மிகவும் லயித்து பார்த்த ஒரு சித்தர் கோவிலைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
சர்க்கரை அம்மா சித்தர்
சென்னையில் திருவான்மியூர், கலாஷேத்ரா சாலையில் அமைந்துள்ளது சக்கரை அம்மா திருக்கோவில். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ஆனந்தம்மா. இவரை பறவை சித்தர் என்றும் அழைப்பர். பறவையைப் போல் வானில் நொடியில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர். அஷ்டமா சித்திகளைப் பெற்றவர். இடுப்பை சுற்றி நாகப் பாம்பினை அணிந்து நடமாடுவதனை அநேகர் பார்த்துள்ளனர்.
1854-ம் ஆண்டு திருவண்ணாமலை அருகில் உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தில் சேஷ குருக்கள், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பெரிய நாயகி அம்மன் கோவிலில் குருக்களாக சேவை புரிந்து வந்தார். சிறு வயதில் ஆனந்தம்மா மற்ற குழந்தைகளைப் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டாது சிவ சுலோகங்களைப் படிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.
அந்த கால முறைப்படி இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இவரது 20 வயதில் கணவன் இறந்தார். அதன் பின்னர் இவர் செங்கல்பட்டில் (அவர் கணவரது ஊர்) கோமளீஸ்வரர் கோவிலில் தியானத்தில் இருந்தார். பின்னர் தன் சகோதரர் இருந்த போலூர் என்ற ஊருக்கு வந்தார். அங்கு இருந்த நட்சத்திர குன்றில் உள்ள கோவிலில் தியானம் செய்ய சென்ற காலத்தில் அங்கிருந்த பெண் துறவி இவரை தன் சீடராக ஏற்றார். பெண் சித்தரின் பெயர் குளும்மா. இவர் பல ஆன்மீக ரகசியங்களை ஆனந்தம்மா அன்னைக்கு தீட்சையாக வழங்கினார். மேலும் ஸ்ரீ சக்கர உபாசன முறையினையும் அருளினார். இதில் லகிமா சக்தி முறையினையும் கற்று தன் உடலை எளிதாக்கி பறவை போல் வானில் பறந்து செல்லும் முறையினையும் அறிந்தார். கவுதம புத்தர் அவரது சீடர்களும் இப்படி வானில் பறக்கும் முறையினை அறிந்து இருந்தனர். சித்தர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்தான்.
ஆனந்தம்மா தன் வீட்டு மாடியிலேயே கடும் தவத்தினை தொடர்ந்த நிலையில் பிரபஞ்சத்தில் இருந்து பேரருள் அவருள் இறங்கியது. அது பேரானந்த நிைல அல்லவா. குடும்ப நபர்களால் இந்த நிலையினை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அன்னையின் சகோதரருக்கு உடல் நலம் இல்லாது போகவே டாக்டர் நஞ்சுண்ட ராவ் அவர்கள் இந்த வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தார். அவரால் அம்மாவின் ஆன்மீக உயர்வினை புரிந்து கொள்ள முடிந்தது.
அவர் செல்லும் கோவில்களுக்கு டாக்டர் நஞ்சுண்ட ராவும் பின் தொடர்ந்தார். சீடரானார். இந்த நிலையில் இவர் ஸ்ரீ சக்கரத்தினையும், சிவபெருமானையும் பூஜித்ததால் சக்கர அம்மா என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் அது சக்கரை அம்மா என்று மாறியது. சக்கரை அம்மாவை தரிசனம் செய்தவர்கள் வாழ்வில் பல நன்மைகள் நடந்தன. அம்மாவின் மகிமை தானே பரவியது. இவர் விண்ணில் பறந்து திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியினை தரிசித்ததாகவும் கூறப்படுகிறது.
1900 வருடம் சக்கரை அம்மா மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். திரும்பும்போது ஒரு இடத்தினை டாக்டரிடம் வாங்கி அன்னையின் மறைவுக்குப் பிறகு அவர் அந்த இடத்தில் இருந்து தன் ஆசியினை வருபவர்களுக்கும், வேண்டுபவர்களுக்கும் அளிக்கப் போவதாக கூறினார். டாக்டரும் அந்த இடத்தினை வாங்கினார். 1901 பிப்ரவரி 28-ல் அம்மாவின் பூவுலக மறைவுக்குப் பின் அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு டொனேஷன் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்வதில்லை. பூ வாங்கி பலர் வருகின்றனர். பலர் தீபம் ஏற்றுகின்றனர். இது அவரவர் விருப்பம்.
ஆனால் இங்கு வந்தவுடன் இனம் புரியாத அமைதி ஒருவரை ஆட்கொள்கின்றது. மனதிற்கு இதமாய் இருக்கின்றது. வருகின்ற அனைவரும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதை மகிழ்ச்சியாய் கூறுகின்றனர். மிக சுத்தமான சூழ்நிலை. சத்தம் இல்லா சூழ்நிலை. அம்மாவின் கருணை, அருள் இதனை ஒவ்வொருவரும் உணர முடிகின்றது. கருவறை, தியான மண்டபம் இதனை விட்டு வெளிவர மனதில்லை. அமைதியின் அர்த்தம் புரிகின்றது. இந்த அமைதிக்காகத் தானே மனிதன் அலையாய் அலைகின்றான்.
சக்கரை அம்மா என்று தேடினால் இணையத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கும். மேற்கூறப்பட்ட செய்திகள் இணையத்தில் சேகரித்து எழுதப்பட்டுள்ளது. நேரில் சென்ற அனுபவமும் சேர்ந்துள்ளது.
வெளியூரில் இருக்கின்றீர்களா? வர முடியவில்லையா? 'சக்கரை அம்மாவை மனதில் நினைத்து தியானம் செய்யலாமே. ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வழிபாடுகளில் ஜாதி, மதம் என்று எதுவும் இல்லை. இப்படி நம்பதான் வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. விருப்பம் இருப்பவர்கள் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. காஞ்சி மகா பெரியவர் 5 நாட்கள், தொடர்ந்து இங்கு தியானம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு வருபவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அதிசயங்களைப் பற்றி கூறுகின்றனர். ரோஜா பூ மாலை விரும்பி அணிவிக்கின்றனர். அடிமுடி சித்தர் அம்மா அளித்த கூழை குடித்து மறவாதிருந்தால் பிறவாது இருக்கலாம். பிறவாது இருந்தால் இறவாது இருக்கலாம். என்று ஆசி அருளினார். ரமண மகரிஷி அவர்களோ பிறக்கும் போதே முழு தெய்வ அருளோடு பிறந்தவர் என்று அருளி உள்ளார்.
பாம்பன் சுவாமிகள், விவேகானந்தர் போன்றவர்கள் தரிசித்தவர். நம் நாட்டின் மிகப்பெரிய பெருமை சித்தர்கள் தான். ஒளியை விட வேகமாக பயணித்து அண்டத்தை கண்டு வந்து அதனை பதிவும் செய்தவர் திருமூல சித்தர். வெவ்வேறு சித்தர்களை அங்கு பார்க்க முடியும் என்றவர் அவரே.
உலக வாழ்வில் சில கோட்பாடுகள் நமக்கு அவசியம்
* இறப்பை பற்றிய பயம் இருக்கக் கூடாது. இருந்தால் நாம் வாழும் காலமும் இறந்தது போல்தான்.
* நமது ஒவ்வொரு நாள் வாழ்வும் நமக்கு போனஸ்தான்
* தடைகள் பாதையில் இயல்புதான்
* வாழும் போதே நம் வாழ்நாள் குறுகியது என்பதனை உணர்ந்து நேரம் வீணடிக்காமல் வாழ வேண்டும்
* எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையில் அமைகின்றது
* இல்லாத ஒன்றுக்காக ஏங்கி தவிக்க கூடாது
* நம்பிக்கை வாழ்வில் ஒளியேற்றம் ஒன்று. எதனையும் ஆராய்ந்து பிறகு நம்புங்கள்
* ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 40 வயதில் படித்தவரும் சரி படிக்காதவரும் சரி உழைப்பு, சம்பாத்தியம், குடும்ப பொறுப்பு என்று இருக்கின்றனர்.
* 50 வயதில் அனைவருக்கும் முக சுருக்கம் வரத்தான் வரும்.
* 60 வயதில் ஓய்வு பெற்ற பின் அவர் உயர் அதிகாரியினை நிமிர்ந்து பார்ப்பதில்லை.
-இதெல்லாம் வாழ்வின் யதார்த்தம் தானே!






