என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாரதிதாசன் தோட்டத்து முல்லை
- உலகத் திருக்குறள் உயராய்வு மையம் இவருக்கு `குறள் ஆய்வுச் செம்மல்` என்ற பட்டம் வழங்கியது.
- தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தைத் தொடங்கிய பெருமையும் அவருக்கு உண்டு.
முல்லை முத்தையா தமிழறிஞர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. முல்லைப் பூக்களைச் சரம் சரமாய்த் தொடுத்ததுபோல் இலக்கிய மணம் கமழும் சொற்றொடர்கள் அவர் மேடைப் பேச்சில் இயல்பாக வந்து விழும்.
தங்குதடையற்றுச் சலசலத்துப் பாயும் தெளிந்த நீரோடை போன்ற பேச்சு அவருடையது. செயற்கைப் பூச்சில்லாமல் மிக இயல்பாகப் பேசும் ஒரு தனி ஆற்றல் அவரிடமிருந்தது.
முத்தையா பெற்ற விருதுகளும் பெருமைகளும் பலப்பல. திருக்குறள் நெறிபரப்பு மையம் நடத்திய விழாவில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் முன்னிலையில் நாவலர் நெடுஞ்செழியன் இவருக்கு `திருக்குறள் நெறித்தோன்றல்` என்ற பட்டம் அளித்தார். கல்லை தே. கண்ணன் தலைமையில் `வள்ளுவர் வழி வாசகர் வட்டம்` நடத்திய விழாவில் தஞ்சைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சி. பாலசுப்பிரமணியம் `திருக்குறள் சீர் பரவுவார்` என்ற பட்டத்தை வழங்கினார்.
உலகத் திருக்குறள் உயராய்வு மையம் இவருக்கு `குறள் ஆய்வுச் செம்மல்` என்ற பட்டம் வழங்கியது. `பாவேந்தர் சீர் பரவுவார்` என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கம்பன் கழக விழாவில் நீதிபதி மு.மு. இஸ்மாயீல் இவருக்கு மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசை வழங்கிப் பெருமைப்படுத்தினார். பாவேந்தர் விழாவில் கலைஞர் கருணாநிதி இவருக்கு சால்வையளித்துப் பாராட்டிப் பேசியுள்ளார். இவர் பெற்ற பெருமைகள் இன்னும் பற்பல.
முத்தையா தாம் செய்த தொழிலால் பதிப்பாளர் என்று அறியப்பட்டவர். ஆனால் அவரைப் பதிப்பாளர் என்ற சின்னச் சிமிழில் அடைத்துவிட முடியாது.
அடிப்படையில் பழந்தமிழ், நவீனத் தமிழ் இரண்டிற்கும் அவர் மாபெரும் ரசிகராக இருந்தார். தி. ஜானகிராமன், லா.ச.ரா. உள்ளிட்ட பல அண்மைக்கால இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் பற்றி அவரால் மணிக்கணக்கில் பேச முடியும். எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அந்தப் புத்தகத்தின் நயங்கள் பற்றி ஒரு முழுமையான ஆய்வுபோலத் தம் பேச்சை நிகழ்த்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.
அவர் பேசிவிட்டு அமர்ந்தால் ஓர் இனிமையான சங்கீதக் கச்சேரி நிறைவு பெற்றதுபோல் தோன்றும். கச்சிதமான வடிவமைப்போடு பேசும் ஆற்றல் கொண்டவர். லா.ச. ராமாமிருதம் உள்ளிட்ட பலர் அவரது பேச்சைப் பாராட்டியிருக்கிறார்கள்.
முழுநேரப் பேச்சாளராக இயங்கும் தகுதி அவருக்கு இருந்தும் அவர் பேச்சுத் துறையில் புகழ்பெறும் வகையில் அதிக மேடைகளில் பேசியதில்லை.
பதிப்புத் தொழில்தான் தன் தொழில் எனத் தேர்வு செய்துகொண்டிருந்தார். அந்தத் துறையில் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்டினார்.
திருப்பூர் கிருஷ்ணன்
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பேரன்பைப் பெற்ற மிகச் சிலரில் ஒருவர். பாவேந்தரின் ஆதரவில் "முல்லை" என்ற இலக்கிய மாத இதழை நடத்தியதன் காரணமாகத்தான் அவருக்கு முல்லை முத்தையா என்ற பெயர் ஏற்பட்டது.
'அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, நல்ல தீர்ப்பு, காதல் நினைவுகள், தமிழியக்கம்' உள்ளிட்ட, பாரதிதாசனது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர் அவரே. அவ்வகையில் தற்காலக் கவிதை இலக்கியத்தில் என்றும் நிலைத்து நிற்கும் புத்தகங்களை வெளியிட்ட பெருமை அவருடையது.
புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு வீடு வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான். அந்த வீடுதான் தற்போது அரசு அருங்காட்சியகமாக விளங்குகிறது.
தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தைத் தொடங்கிய பெருமையும் அவருக்கு உண்டு. அதன் செயலாளராக இருமுறை பணியாற்றியுள்ளார்.
முல்லை இதழ் மட்டுமல்ல, பஞ்சாயத்து நகராட்சி நலனுக்காக `நகரசபை` என்ற மாதம் இருமுறை இதழும் அவரால் வெளியிடப்பட்டது.
பஞ்சாயத்து நிர்வாகம் பற்றி `பஞ்சாயத்துச் சட்டம், பஞ்சாயத்தை நடத்துவது எப்படி?` என்பன போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய ஒன்பது புத்தகங்களை அக்கால அமைச்சர்கள் பலர் பாராட்டியுள்ளனர். பெருந்தலைவர் காமராஜ், அவரது பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்பான நூல்களை மனமாரக் கொண்டாடியுள்ளார்.
தமிழ்ப் பற்றும் கல்வியிலும் கலைகளிலும் பற்றும் மிக அதிகமாக முல்லை முத்தையாவிடம் இருந்ததில் வியப்பு எதுவுமில்லை. மாபெரும் கல்வியாளரான வித்துவான் நாகப்பச் செட்டியார் முத்தையாவின் தந்தைவழித் தாத்தா. முத்தையாவின் தீவிர தமிழ்ப் பற்றுக்கான ஊற்றுக்கண் அங்கிருந்து வந்திருக்கலாம்.
புத்திக் கூர்மையில் முத்தையாவை மிஞ்ச ஆளில்லை. அஷ்டாவதானக் கலையில் தேர்ச்சி பெற்று அதனாலேயே அஷ்டாவதான சிவசுப்பிரமணியச் செட்டியார் எனப் பெயர் பெற்றிருந்தவர் அவரது தாய்வழித் தாத்தா என்பதால் தாய் வழியிலும் புத்திசாலிப் பரம்பரை அவருடையது.
பழனியப்பச் செட்டியாருக்கும் மனோன்மணி ஆச்சிக்கும் 1920 ஜூன் 7 அன்று மகனாகப் பிறந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டைதான் பிறந்த ஊர். பதினைந்து வயதில் தந்தையின் கடையை நிர்வகிப்பதற்காக பர்மா சென்றார். அந்தக் காலகட்டத்தில்தான் நிறையப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார்.
இரண்டாம் உலகப் போர் மூண்ட தருணம் அது. முல்லை முத்தையா, வெ. சாமிநாத சர்மா, கண. முத்தையா, க.அ. செல்லப்பன் உள்ளிட்ட பலர் பர்மாவிலிருந்து நடந்தே இந்தியா திரும்பினார்கள்.
பர்மாவில் இருந்தபோதே பாவேந்தர் பாரதிதாசன் எழுத்துகளை விரும்பிப் படித்த முத்தையா தமிழகம் வந்ததும் பாவேந்தரை அவர் இல்லத்திற்குச் சென்று அடிக்கடிச் சந்திக்கலானார். பாரதிதாசனின் இலக்கியத்தின்மேல் கொண்ட ஈடுபாட்டால் பாரதிதாசனுக்கென்றே ஒரு பதிப்பகம் தொடங்க நினைத்தார்.
கமலா பிரசுராலயம் என்ற பெயரில் பதிப்பகம் தொடங்குவதாக முத்தையா கூறியதும், `கமலா என்ற பெயர் எதற்கு? முல்லை என்று வையுங்கள்!` என்றார் பாரதிதாசன்.
அப்படி பாரதிதாசனால் பெயர்பெற்ற முல்லைப் பதிப்பகம் விறுவிறுவென பதிப்பகத் துறையிலும் பெயர்பெற்றது. இவர் முல்லை முத்தையா எனப் பெயர்பெறவும் அதுவே காரணமாக அமைந்தது.
பாரதிதாசன் நூல்களை மட்டுமல்ல, மூதறிஞர் ராஜாஜி நூல்களையும் முல்லைப் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டது. சுயமுன்னேற்றக் கட்டுரையாளரான எம்.எஸ். உதயமூர்த்தியின் தொடக்க கால நூல்களையும் முல்லைப் பதிப்பகமே வெளியிட்டது.
முத்தையா கற்ற கல்வி பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் கற்றதுதான். உயர்நிலைப் பள்ளி வரைதான் படித்தார். இரண்டு ஆண்டுகள் சமஸ்கிருதத்தையும் பயின்றார். ஆனால் தம் வாழ்நாளில் அவர் வாசித்த நூல்கள் கணக்கில் அடங்காதவை. வாசிப்பே தம் தொழில் என்பதுபோல வாசித்துத் தள்ளினார் அவர்.
உழைப்புக்கு அஞ்சாதவர். முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தவர். பதிப்பாளர் என்ற வகையில் மட்டுமல்ல, எழுத்தாளர் என்ற வகையிலும் பெயர்பெற்றார்.
`தமிழ்ச்சொல் விளக்கம், பெர்னாட்ஷா வாழ்வும் பணியும், அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு` உள்ளிட்ட இன்னும் பற்பல நூல்களை எழுதியிருக்கிறார். முல்லை முத்தையாவின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கின்றன.
லியோ டால்ஸ்டாயின் `அன்னா கரீனினா`, மாக்சிம் கார்க்கியின் `தாய்`, குஸ்தாவ் பிளாபர் எழுதிய `மேடம் பவாரி` போன்ற புகழ்பெற்ற நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் சுருக்கி எல்லோரும் வாங்கும் மலிவு விலையில் வெளியிட்டவர். `தாய், அன்னா கரீனினா` ஆகிய இரு புதினங்களும் தமிழ் வாசகர்களிடையே தமிழ்ப் புதினங்களைப் போலவே இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன என்றால் அதற்கு முல்லை முத்தையா அன்றைக்கு இட்ட அடித்தளம்தான் முக்கியக் காரணம் என்று சொல்லவேண்டும்.
தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்., நாவலர் சோமசுந்தர பாரதியார், தனித்தமிழ்த் தந்தையான வேதாசலம் என்கிற மறைமலை அடிகள், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, அறிஞர் அண்ணா, புதுமைப்பித்தன், பரலி.சு. நெல்லையப்பர், அறிஞர் வ.ரா., தில்லானா மோகனாம்பாள் நாவல் மூலம் பெரும்புகழ் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், கவியரசர் கண்ணதாசன் போன்ற பல முன்னோடிப் படைப்பாளிகளுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவராய் இருந்தவர் முத்தையா.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தீவிர அன்பராக இருந்தாலும், கடவுள் பக்தி நிறைந்தவர். பழந்தமிழின் பக்தி இலக்கியத்திலும் இவருக்கு வற்றாத ஈடுபாடு இருந்தது. அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் நூலுக்கு உரை எழுதியிருக்கிறார். இந்த உரைநூல் சென்னை கந்தசாமி கோயிலில் வெளியிடப்பட்டது.
"அகலிகை" பற்றி புதுமைப்பித்தன், கு.ப.ர.., ச.து.சு. யோகியார் போன்ற தற்கால இலக்கியப் படைப்பாளிகள் எழுதிய படைப்புகளையெல்லாம் தொகுத்து, 'தொன்ம வளர்ச்சியில் அகலிகை' என்ற கண்ணோட்டத்தில் நூல் வெளியிட முனைந்தார். அந்த முயற்சி இவர் வாழ்நாளில் வெற்றி பெறவில்லை.
இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் க. கைலாசபதி, இவரது முயற்சியைப் பாராட்டி, ஆனால் அந்த நூல் வெளிவராதது பற்றி வருந்தி தமது 'அடியும் முடியும்' என்ற புத்தகத்தில் குறிப்பு எழுதியுள்ளார்.
பின்னர் அந்தத் தொகுப்பு நூல் இவரது புதல்வரும் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் பேரன்பைப் பெற்றவருமான மு. பழநியப்பன் அவர்களால் வெளியிடப்பட்டது.
முத்தையாவுக்கு மூன்று புதல்வர்களும் மூன்று புதல்விகளும் உண்டு. மாபெரும் தமிழ் அறிஞராய் இலக்கியப் பெருவாழ்வு வாழ்ந்த முல்லை முத்தையா 2000ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று காலமானார்.
முல்லை முத்தையா நிறுவிய புகழ்பெற்ற முல்லை பதிப்பகம் அவரது புதல்வர் மு. பழனி மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தாம் எழுதிய நூல்களிலும் தாம் பதிப்பித்த புத்தகங்களிலும் தம் எழுத்துகள் வழியே தொடர்ந்து வாழ்கிறார் தமிழறிஞர் முல்லை முத்தையா.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com






