என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோதுமை பயன்பாடும் உடல் நலமும்
    X

    கோதுமை பயன்பாடும் உடல் நலமும்

    • கடுமையான உடல் உழைப்பு செலுத்தக் கூடியவர்கள் பசைத்தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளுதல் தவறாகாது.
    • சப்பாத்தியை உண்பதால் ஏற்படும் வறட்சி தோன்றாது.

    கோதுமை என்றாலே சப்பாத்தி தான் நாம் அறிந்த உணவாக இருக்கிறது. அதிலும் சப்பாத்தியை மெத்தென்று மிருதுவாகத் தயாரிக்க மாவினை முட்டை ஊற்றிப் பிசைதல், நெய்யூற்றிப் பிசைதல், கடைகளில் டால்டா ஊற்றிப் பிசைதல் என டிசைன் டிசைனாக இறங்கி விடுகிறார்கள் நம் மக்கள்.

    உண்மையில் சப்பாத்தியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் அதையே முதன்மை உணவாகக் கொண்டவர்கள் அந்தமாவினை இந்தப்பாடுபடுத்துவதில்லை. தண்ணீர் தெளித்துத் தெளித்துப் பிசைகிறார்கள். பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரம் ஊறவிடுகிறார்கள். தேய்த்து சூடேற்றிய வறண்ட கல்லில் போட்டு எடுக்கிறார்கள்.

    அது சீறும் பாம்பினைப் போல புஷ்சென்று உப்பிக் கொண்டு வருகிறது. இரண்டு மூன்று அடுக்குகளாகப் பிரிந்து வருகிறது. மென்று சாப்பிட மெத்தென்றும், சுவையாகவும் இருக்கிறது. மாவைப் பிசையும்பொழுது சேர்க்கிற நீரின் அளவும், அதன் பதத்தன்மையும் சரியாக இருந்தால் போதும் அது உப்பிக் கொண்டுதான் வரும். நாம் அதில் கூடுதல் வித்தைகள் எதையும் காட்ட வேண்டியதில்லை. ஆனால் நாம் கோதுமை விளைகிற நிலப்பரப்பிற்கு மாறுதலான வெப்பச் சூழலில் வசிப்பவர்கள் என்பதால் சப்பாத்தி சற்றே ஈரத் தன்மையுடனும், அதன் வறள்பண்பை நீக்கும் எண்ணைத் தன்மையுடனும் விரும்புவது சரியானதே.

    புறச்சூழலில் குளிர்ச்சி நிலவும் வடயிந்தியப் பகுதிகளில் அதனை வறண்டத் தன்மையில் உண்பதையே விரும்புவார்கள். எதுயெப்படியானாலும் கோதுமையின் பசைப்பண்பு அதனைச் சமைக்கிற பொழுது உப்பி வருவது இயல்பானதே. கோதுமையின் பசைப்பண்பு அதன் புரதச்சத்தின் வெளிப்பாடே ஆகும். அது தசைநார்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடியதாகும். பொதுவாக பசைத்தன்மை என்றாலே அதுயேதோ உடலுக்கு ஆகாத கெட்ட கூறு என்ற கற்பிதம் பொதுவாக பரவியுள்ளது. நம்முடைய உணவில் நார்த்தன்மை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவதால் மாவுத்தன்மையே மிகுந்து கொண்டு வருவதால் பசைத்தன்மை கூடாது என்ற கருத்தோட்டம் பரவலாகி விட்டது.

    ஆனால் கடுமையான உடல் உழைப்பு செலுத்தக் கூடியவர்கள் பசைத்தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளுதல் தவறாகாது. நடுத்தர வர்க்கத்தினர், உடல் உழைப்பு இல்லாதவர்கள் பசைத்தன்மை உள்ள உணவைத் தவிர்ப்பது சரி என்பதால், நடுத்தர வர்க்கத்தினரே கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் என்பதால் பசைத்தன்மை ஆபத்தானது என்ற போக்கு பரவலாகி விட்டது. கோதுமை தன்னளவில் பசைத்தன்மையுடன் இருப்பதோடு அதன் மேலோடு நார்த்தன்மையுடன் தான் இருக்கிறது. இந்த மேலோடு நீக்கப்படாமல் மிகவும் மென்மையாக அரைக்கப்படாமல் சற்றே குருணைப் பதத்தில் (ரவைக்கு அடுத்த நிலையில்) அரைத்து சப்பாத்தியாக சமைத்து துணை உணவாகக் காய்கறி, தேங்காய் அரைத்து விட்ட சொதிபோன்ற ஒன்றைச் சமைத்து உண்டால் அது முற்றிலும் சத்தான உணவாகவே இருக்கும்.

    வட இந்தியர்களைப் போல உருளைக்கிழங்கு, பருப்பு மட்டுமே துணை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நமக்கு அவ்வளவு பொருத்தமாக இராது.

    கோதுமை மாவின் பசைத் தன்மையையும், புரதச் சத்தினையும் சமன் செய்யும் விதமாக வெங்காயத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

    கோதுமை மாவினைச் சப்பாத்திப் பதத்தில் பிசைந்து அதனோடு வெங்காயத்தைச் சன்னமாக அரிந்து உடன் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல நாட்டுக் கொத்துமல்லித் தழையையும் அதனோடு பொடியாக அரிந்து மாவுடன் பிசைந்து சப்பாத்திக்கு உருட்டி சற்றே நெய் அல்லது வெண்ணை காட்டி சுட்டு எடுத்தால் மெத்தென்றும் இருக்கும்.

    நல்ல சுவையும், சத்தும் தரக்கூடியதாக இருக்கும். துணைவுணவு இன்றியே சாப்பிடலாம். இச்சப்பாத்தியை ஆறுமணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை எனில் உடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்துக் கொள்ளலாம். உடன் ஏதும் கலக்காத மாவைச் சப்பாத்தியாகச் சுட்டு எடுத்துக்கொண்டு வெறும் பச்சை வெங்காயம், பொடியாக அரிந்த தக்காளி, மேற்சொன்னவாறு கொத்துமல்லித் தழை, சிறிதளவு இடித்த மிளகு, சீரகம் பச்சையாகவே பிசைந்து விரும்பினால் தேங்காய்ப்பூ கலந்து இந்தக் கலவையைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தி சாப்பிட்டால் செரிமானம் நன்றாக இருக்கும்.

    போப்பு

    சப்பாத்தியை உண்பதால் ஏற்படும் வறட்சி தோன்றாது. சப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு மேற்படி அவசரத் தயாரிப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். காலில் பித்தவெடிப்பு உள்ளவர்கள், சிறுநீர்ப் பிரிதலில் சரளத் தன்மை இல்லாதவர்கள், சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதையே தவிர்த்து விடுவது நல்லது. கோதுமைச் சப்பாத்தி தவிர்த்து இன்று பரவலாகி விட்ட கோதுமை உணவு உப்புமா. கோதுமையைக் குருணையாக உடைத்து அதில் உப்புமா, பொங்கல் போன்றவை சமைத்து உண்பது பரவலாகி வருகிறது.

    ரத்தத்தில் சர்க்கரையை நிதானமாக ஏற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு கோதுமை உப்புமா அல்லது பொங்கல் பொருத்தமான உணவாகும். அதிலும் பொங்கலுக்கு தோல் நீக்கிய பாசிப்பருப்பை விட தோலுடன் கூடிய பாசிப்பருப்பு சேர்த்து சமைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். வயிற்று உப்பிசம், வாயுப்பிடிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும், சாப்பிட்டவுடன் தூக்கம், மயக்கவுணர்வு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு பொங்கல் மிகவும் நல்லது. இதற்குத் துணையாக தேங்காய் பொட்டுக்கடலை, இஞ்சி சேர்த்து அரைத்த சட்னி மிகவும் நல்லது.

    உடலில் சர்க்கரைச் சத்து மிகுந்து விட்டதாகக் கருதுபவர்கள் தேங்காயைக் கண்டாலே ஒவ்வாமை கொள்கிறார்கள். இதுவெற்றுப் பீதியே ஆகும். உடலின் உடனடி ஆற்றலுக்கும், ஆற்றல் சேமிப்பிற்கும் தேங்காய் ஓர் முக்கியமான உணவாகும். தேங்காயைப் பூவாகவும், மென்மையாக அரைத்துச் சேர்க்காமல் குருணைப்பதத்தில் அரைத்து எந்த உணவுடனும் சமையலில் சேர்த்துண்பது எதிர்விளைவுகளைத் தராது. அடிக்கடி ஆற்றல் பற்றாக்குறையில் நடுக்கம் கொள்ளும் மேற்படி வகையினர் தேங்காயின் மூலம் நல்ல பலனை அடையலாம். தேங்காய் குறித்தும் சர்க்கரை மிகுந்தவர்கள் என்று அடையாளமிடப்பட்டோர் குறித்தும் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். கோதுமையின் மேலோட்டினை நீக்கி அரைத்தால் கிடைப்பதே மைதா. மைதா மாவில் சமைத்த உணவு இன்று வெகுவாகப் பரவலடைந்து உள்ளது. இன்று ஊருக்கு ஊர் கேக், ப்ரட் போன்ற மைதாமாவுப் பண்டங்கள் விற்கும் பேக்கரிகள் பெருகி விட்டன.

    இத்தகைய பண்டங்களில் மைதா மாவினால் ஏற்படும் உடலுக்கு எதிர் விளைவுகள் ஒருபுறமிருக்க, மேற்படி கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும் இனிப்பு, நிறமி, ரசாயன பதனிகள் (prerservatives) போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் மிக அதிகமாகும். பேக்கரி பண்டங்கள் குறித்து அவ்வளவாக எச்சரிக்கை கொள்ளாதவர்கள் தான் பரோட்டா என்றதும் பீதியடைகிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினர் கேக் போன்ற பேக்கரிப் பண்டங்களை கிட்டத்தட்டத் தினமும் எடுத்துக் கொள்கின்றனர். மென்மையாக அரைக்கப்பட்ட மைதாமாவுடன் மற்ற பலமாவுகளும் கலக்கப்படுவதால் சுவையூட்டி, நிறமூட்டிகளும் மண்ணீரல் தொடங்கி சிறுநீரகம் வரை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்.

    இதனால் அடுத்த பத்தாண்டுகளில் தேசிய வளமே குன்றும் அளவிற்கு அபாயகரமான பண்டங்கள் இன்று பரவலாகி வருகின்றன. இதுகுறித்த பெரும் விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். அரசின் சுகாதாரத்துறையின் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

    கோதுமை தானியத்தின் மேலடுக்கில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டுக் கிடைக்கும் மைதா மாவினால் ஏற்படும் உடல் நலக்கேடு குறைவுதான். ஆனால் மைதா மாவினை வெளுப்பேற்றப் (bleach) பயன்படுத்தும் ரசாயனங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளே அதிகம். தசைநார்களை முறுக்கிப் பிழியும் விதமாக கடின உழைப்பை மேற்கொள்ளும் உழைப்பாளர்களுக்கு பரோட்டா ஒருவகையில் சாத்தியமான எளிய உணவே ஆகும்.

    ஆனால் உடலுழைப்பு இல்லாதவர்கள் அடிக்கடி பரோட்டா உண்பது மலச்சிக்கல், மூலநோய், சதை இறுக்கம் போன்ற பல பிரச்சனைகளை உருவாக்கும்.

    மலச்சிக்கல் தொடர்ந்து நீடித்தால் பித்தப்பைக் கல், சிறுநீரகக்கல் போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து தோன்ற ஆரம்பித்து விடும். இவையெல்லாம் இன்று பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கே ஏற்பட்டு விடுகிறது. அபாயகரமான இத்தகைய உடல் உபாதைகள் சிறுவயதில் தோன்றினால் அடுத்தடுத்த உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்க வாய்ப்பு அதிகம். எனவே கோதுமையைப் பயன்படுத்தும் விதத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவும் கவனக்குறைவுடன் பயன்படுத்தினால் அதுவே ஆபத்தான உணவாகவும் மாறிவிடும் அபாயமும் உள்ளது. மிக எளிய முறையில் ஆரோக்கியமான முறையில் கோதுமையைப் பயன்படுத்துவது குறித்துத் தொடர்ந்து பார்க்கலாம்.

    செல்- 96293 45938

    Next Story
    ×