என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு
- சினைப்பையை எடுக்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் வேகமாக குறையும்.
- கர்ப்பப்பை எடுத்ததால் ஹார்மோன் உடனடியாக குறைவாகும்போது ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு உடல் அளவில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளுக்காக மருத்துவர்கள் கர்ப்பப் பையை அகற்றுகிறார்கள். கர்ப்பப் பையை அகற்றும்போது சினைப்பையை சேர்த்து எடுப்பார்களோ என்கிற சந்தேகம் பல பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றிய விளக்கங்களையும், கர்ப்பப்பையை எடுத்த பெண்கள், பாலியல் உறவில் ஆர்வம் ஏற்பட என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
கர்ப்பப்பையை எடுக்கும்போது நிறைய பெண்கள் டாக்டரிடம் கேட்பார்கள், டாக்டர் கர்ப்பப்பையை மட்டும் எடுப்பீர்களா அல்லது சினைப்பையையும் சேர்த்து எடுப்பீர்களா என்பார்கள். பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு சினைப்பைகளின் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். 60 வயதுக்கு மேல் சினைப்பையில் புற்றுநோய் வரலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டால் கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பையையும் எடுத்து விடுவோம்.
புற்றுநோய் அபாயம் இருந்தால் சினைப்பையை எடுக்க வேண்டும்:
வயதான பெண்கள், மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சினைப்பையை அகற்றினால் கூட, அதில் இருந்து சில ஹார்மோன்கள் வருகிறது. குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் வருகிறது. இது ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் போன்ற ஒரு ஹார்மோன் ஆகும். இந்த டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு சினைப்பையில் இருந்து வருகிறது. அவர்களுக்கு சினைப்பையில் வருகிற ஈஸ்ட்ரோஜன் நின்று விடுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸ் வந்து விட்டாலே ஈஸ்ட்ரோஜன் குறைவாகி விடும் அல்லது ஈஸ்ட்ரோஜன் இல்லாமலே போய்விடும். மெனோபாஸ் வந்த பெண்களுக்கு சினைப்பையில் டெஸ்டோஸ்டிரோன் தான் சுரக்கும். இதை நாம் அகற்றுவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாகி, இந்த பெண்களுக்கு பாலியல் உறவு கொள்வதற்கான தூண்டுதல் ரொம்பவும் குறைவாகிறது. அதில் உள்ள ஆர்வமும் மிகவும் குறைகிறது.
ஏனென்றால் இந்த பாலியல் ஆர்வமும், அதற்கான தூண்டுதலும் வருவதற்கு முக்கியமான ஹார்மோன் அடிப்படையே டெஸ்டோஸ்டிரோன் தான்.
இதில் அடுத்த விஷயம், பல நேரங்களில் சினைப்பையை எடுக்கும்போது ஈஸ்ட்ரோஜன் குறைபாடுகள் உடனடியாக ஏற்படும். 42 வயதாகும் பெண்களுக்கு இன்னும் 4 வருடங்கள் சினைப்பை செயல்படும்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அல்லது புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை என்றால் அந்த சினைப்பையை எடுக்க வேண்டும். குழந்தைப் பேறு வந்துவிட்டது. இனி குழந்தை பெற வேண்டியது இல்லை என்கின்ற நிலையில் அந்த பெண்களுக்கு சினைப்பையை எடுப்பார்கள்.
சினைப்பையை எடுக்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் வேகமாக குறையும். இதைத்தான் துல்லியமான மெனோபாஸ் என்று சொல்வோம். இந்த மெனோபாஸ் வரும்போது ஹார்மோன் தகவமைப்பில் நிறைய பிரச்சினைகள் உருவாகி பெண்களுக்கு யோனி பகுதியில் உலர்வு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் பாலியல் உறவு பாதிக்கப்படுகிறது. அந்த பெண்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகிறது.
கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் எப்போது உறவு கொள்ளலாம்?
கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் பல நேரங்களில் பாலியல் உறவு குறித்து மருத்துவர்களிடம் வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். ஆனால் என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு நான் தெளிவாக சொல்லி விடுவேன். கர்ப்பப்பையை அகற்றிய பிறகு எப்போது உறவு கொள்ளலாம்? உறவு கொள்ளும்போது என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பது பற்றி எடுத்து சொல்வேன்.
கர்ப்பப்பையை அகற்றிய பிறகு கூடுமானவரை 6 முதல் 8 வாரங்கள் கழித்து பாலியல் உறவு கொள்ளலாம். அப்போது அவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக அறுவை சிகிச்சைக்கு முன்பே சொல்லும்போது, அந்த பெண்கள் தம்பதிகளாக வந்து கேட்கும்போது நல்ல ஒரு தெளிவு கிடைக்கிறது.
இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்ற பயம், பெண்மை குறைந்து விடுமோ என்கிற சந்தேகம், மன அழுத்தம் ஆகியவை குறைவாகிறது.
அடுத்ததாக பாலியல் உறவின்போது உச்சக்கட்டம் அடைவதற்கு முக்கியமான உறுப்பாக பெண்ணுடைய கர்ப்பப்பை வேண்டும் அல்லது கர்ப்பவாய் வேண்டும். இவை இல்லாமல் அவர்களுக்கு பாலியல் உறவுக்கான தூண்டுதல் குறைவாக இருக்கிறது, சுருங்கி விரியும் தன்மையும் குறைவாக இருக்கிறது.
ஒருவேளை நீங்கள் கேட்கலாம், பாலியல் உறவுக்கு முக்கியமான விஷயம், யோனி பகுதிக்குள் உணர்வை ஏற்படுத்தும் ஜி ஸ்பாட் மற்றும் கிளிட்டோரிஸ் ஆகியவை தானே? அது பெண்களுக்கு பாதிப்பு அடையாதே என்று கேட்கலாம். அது கண்டிப்பாக பாதிக்காது.
அந்த வகையான தூண்டுதல், எப்போதுமே பாலியல் உறவுக்கு ஆர்வத்தை கொடுப்பதற்கு நல்ல ஒரு வழி முறையாக இருக்கும்.
குறிப்பாக ஜி ஸ்பாட், கிளிட்டோரிஸ் ஆகிய அனைத்துமே பெண்களின் பாலியல் உறவுகளை தூண்டுவதற்கும், அதற்கான ஆரோக்கியத்தை கொடுப்பதற்கும் முக்கியமான உறுப்புகள் ஆகும். கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது இவை கூடுமானவரைக்கும் பாதிக்கப்படுவது இல்லை.
ஏனென்றால் பல நேரங்களில் புற்றுநோய்க்காக சில அறுவை சிகிச்சைகளை செய்வார்கள். அப்போது கிளிட்டோரிஸ் பகுதிக்கு வருகிற நரம்புகளை மருத்துவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். கர்ப்பப்பையை அகற்றும்போது கூட இந்த நரம்புகளை துண்டிக்க மாட்டார்கள். அந்த வகையில் இதனால் ஏற்படும் பாலியல் உணர்வுகள் என்றுமே மாறாதது. அதுபற்றி பெண்கள் அச்சப்பட தேவையில்லை.
கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கு பாலியல் கவுன்சிலிங்:
முக்கியமாக பெண்கள் இதில் கவலைப்பட வேண்டியது 2 விஷயங்கள் தான். இவர்களுக்கு கர்ப்பப்பை எடுத்ததால் ஹார்மோன் உடனடியாக குறைவாகும்போது ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இது வந்தால் நமக்கு ஏதோ பிரச்சினை என்று நினைப்பதை விட்டுவிட்டு, இயற்கையாக வரக்கூடிய விஷயம், இதை நாம் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வு காண முடியும்.
இரண்டாவது முக்கியமான விஷயம், இந்த பெண்களுக்கு இதைப்பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.
அவர்கள் எந்த வகையில் உறவு கொள்வார்கள், என்ன மாதிரியான தூண்டுதல் அவர்களுக்கு தேவை, எது அவர்களை பாதிக்கும், எதனால் பிரச்சினைகள் வரலாம் என்பதை பற்றி தெளிவாக சொல்லும்போது, அவர்களுக்கு இதைப்பற்றி உள்ள பயம், சந்தேகம் எல்லாம் குறைந்து, இதற்கு என்ன தீர்வு என்கிற விஷயத்துடன் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் தயார் ஆவார்கள்.
இப்படி தயாராகும் பெண்களுக்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு இருக்கின்ற மன அழுத்தம், பயம், கணவனின் உறவில் மாறுபாடு வந்து விடுமோ என்கிற கவலை ஆகிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் முழுமையான தீர்வு கிடைக்கும். எல்லா வற்றுக்கும் மேலாக இந்த பெண்களுக்கு இதைபற்றி தெளிவான ஒரு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
முதலிலேயே அவர்களின் உறவுகளை பற்றி சொல்ல வேண்டும். எப்பொழுது உறவு கொள்ளலாம் என்று சொல்ல வேண்டும். இவர்கள் உறவு கொள்ளும்போது என்னென்ன பிரச்சினையை எதிர்கொள்வார்கள்? அதாவது எந்த அளவு தூண்டினாலும் கூட லூப்ரிகேஷன்ஸ் குறைவாக இருக்கலாம். அதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும்.
இதற்காக லூப்ரிகேஷன் ஜெல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும்போது எரிச்சல் குறைவாகும், விரிந்து கொடுக்கும் தன்மை வரும். மேலும் அவர்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்றுநோய் கண்டிப்பாக வரும். இதை சரி செய்வதற்கு அவர்கள் பெண் உறுப்பின் சுகாதாரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் சில மருந்துகள் மூலமாக இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
தேவையில்லாத சந்தேகங்கள், மனக்குழப்பங்களில் இருந்து தெளிவு:
அந்த வகையில் கர்ப்பப்பையை எடுத்த பிறகு தனது பாலியல் உறவு பற்றி யோசிக்க கண்டிப்பாக பெண்கள் நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் மருத்துவரிடம் சென்று அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நிறைய நேரங்களில் கர்ப்பப்பையை எடுக்கும்போது யோனியின் நீளம் குறைந்து விடும். அதனால் அவர்களுக்கு உறவு கொள்வதில் பிரச்சினைகள் வரும். அதனால்தான் கர்ப்பப்பையை எடுக்கும்போது யோனியில் நீளம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். யோனி பகுதியை துண்டிக்க வேண்டாம் என்று பெரும்பாலான மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கர்ப்பப்பையை எடுத்த பிறகு முதலில் உறவு கொள்ளும்போது தூண்டுதலில் ஏற்படுகிற திரவ சுரப்பு குறைவாக இருக்கும். இந்த காலகட்டங்களில் ஜெல் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஜெல் பயன்படுத்துவதால் அவர்களுக்கு உலர்வு தன்மை குறைவாகும். பாலியல் ஆர்வம் கூடும். உறவு கொள்ளும்போது கஷ்டங்கள், வலிகள் இருக்காது. இந்த மாதிரியான விஷயங்களை அவர்களுக்கு முதலிலேயே தெளிவாக சொன்னால் அவர்களுக்கு இதை பற்றிய ஒரு விழிப்புணர்வு மற்றும் பக்குவம் ஏற்படுகிறது. தேவையில்லாமல் இதைப் பற்றி ஏற்படுகிற சந்தேகங்கள் மற்றும் மனக்குழப்பங்கள் தெளிவாகிறது. கர்ப்பப்பையை எடுத்த பெண்கள் தங்களது உடல் மன ஆரோக்கியத்தை விட, முக்கியமாக உறவு கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்தி, தேவைக்கேற்ப மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அதற்கான வழிமுறைகளை சீராக்கும்போது அந்த பெண்களுக்கு கர்ப்பப்பையை எந்த காரணத்துக்காக எடுத்தாலும், அதனால் வருகின்ற பின்விளைவுகள், பாதிப்புகள் என்பது ரொம்ப ரொம்ப குறைவாகும்.
மேலும் கர்ப்பப்பையை எடுத்த பிறகு அந்த பெண்களுக்கு ரத்தப்போக்கு இருக்காது, வலி இருக்காது, மன அழுத்தம் இருக்காது. அவர்களுக்கு பாலியல் உறவில் ஆர்வம் அதிகமாகும். இது அவர்களுக்கு மாறுபாடான நல்ல ஒரு வாழ்க்கை முறையை கொடுக்கும்.






