என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் பள்ளியறை பூஜை
    X

    மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் பள்ளியறை பூஜை

    • சிவ வழிபாட்டின் ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.
    • ஞாயிற்று கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள்.

    உலக இயக்கத்தை கட்டுப்படுத்த நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அச்சக்திக்கு பெயர் இறைவன் கடவுள். அந்த இறைவனை அவரவருக்கு தெரிந்த முறையில் மரியாதை செலுத்தி வழிபடுவது பூஜையாகும். அதாவதுபக்தியின் வெளிப்பாடு பூஜை. இந்து மதத்தில் மிகவும் முக்கியமான சடங்கான பூஜை ஆன்மீக வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இறை தொடர்பான பூஜை மூலம் கடவுளிடம் தங்கள் அன்பையும், பக்தியையும், நம்பிக்கையையும் பெற முடியும்.

    பூஜை மூலம் கடவுளுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதாக நம்புகிறார்கள். இதில் மந்திரங்கள் ஓதி வழிபடுவது, மலர்கள் அணிவித்து பிரார்த்திப்பது, தீபம் ஏற்றுதல் மற்றும் தான தர்மங்கள் வழங்குதல், போன்ற செயல்கள் அடங்கும். சில பூஜைகள் வீடுகளில் செய்யப்படுகின்றன, சில கோவில்களில் செய்யப்படுகின்றன, சில பொது இடங்களில் செய்யப்படுகின்றன. கோவிலில் செய்யப்படும் பூஜைகளில் மிகப் பிரசித்தி பெற்றது பள்ளியறை பூஜை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இதன் பொருள், கோவில்கள் இல்லாத ஊரில் வசிப்பது நல்லது அல்ல.

    கோவில்கள் ஒரு ஊரின் சமூக மற்றும் கலாச்சார மையங்களாக கருதப்படுகிறது அங்கு மக்கள் கூடி, விழாக்கள் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பழகினால் ஊரின், சமூக பிணைப்பு அதிகமாகி அமைதியும் சுபிட்சமும் பெருகும்.

    பள்ளியறை பூஜை என்பது சிவாலயங்களில் நடைபெறும் விசேஷமான பூஜை. சிவா லயங்களில் இரவு நேர பூஜைகளில், குறிப்பாக அர்த்த ஜாம பூஜையின் போது, பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது. இரவில் கோவில் நடை சாற்றும் முன்பு சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறையில் ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடி பூஜிக்கும் ஒரு வகை பூஜை . இது சிவ வழிபாட்டின் ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது, குறிப்பாக கணவன், மனைவி ஒற்றுமை மற்றும் குடும்ப நல்வாழ்வுக்காக இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில், சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் பள்ளியறையில் உள்ள ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு தாலாட்டுப் பாடல்கள் பாடப்பட்டு, பூஜித்து வணங்கப்படும்.

    ஐ.ஆனந்தி

    இந்த பூஜையின் போது, சுவாமி பல்லக்கில் எழுந்தருளி தாயார் சன்னதிக்கு வலம் வருவார். இந்த பூஜையை தரிசிப்பதால், குடும்ப ஒற்றுமை, திருமண யோகம், குழந்தைப்பேறு, நோய்கள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நாம் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களின் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் அந்த ஊரை காவல் காக்கும் நற் சக்திகளின் நல்லாசிகள் கிடைக்கும். நான் பல பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் பள்ளியறை பூஜை பார்த்திருக்கிறேன். சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் சிவலோக வாத்தியங்கள் முழங்க தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். கைலாயமே பூலோகத்திற்கு வந்து விட்டதோ என்று வியக்கும் வகையில் இருக்கும்.

    இறைவனும் இறைவியும் ஒன்றாக மகிழ்சியாக இருக்கும் நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு தீராத தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. ஒவ்வொரு நாள் பள்ளியறை பூஜைக்கு ஒரு சிறப்பு உள்ளது. அதை கிழமை வரிசையாக பார்க்கலாம்.

    ஞாயிற்று கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். இது சிவ பூஜைக்கு மிக உகந்த நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பள்ளியறை பூஜை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அன்று சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும் சூரிய தசை, புத்தி நடப்பவர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு/கேது தோஷம். கிரகண தோஷம் அகலும். ராகு திசையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் நீங்கும். தந்தை மகன் உறவில் சுமூகம் ஏற்படும். இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் அகலும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்யலாம்.

    சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாளான திங்கட்கிழமையில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் மன சஞ்சலம், மன அமுத்தம் , மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சந்திர தசை, புத்தி நடப்பவர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன்+ கேது சேர்க்கைக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்தில் இருந்து மீள முடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண் , மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மேலும் பலன் பெற திங்கள் கிழமை பச்சரிசியால் செய்த உணவு தானம் செய்ய வேண்டும்.

    இந்த நாளில் செவ்வாயின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். செவ்வாய் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் இனம் புரியாத நோய், அடிக்கடி விபத்து, கண்டம் அகலும்.விளையாட்டு வீரர்கள், ராணு வம், போலீஸ் துறையினரின் ஏற்றம் மிகுதி யாகும். ரியல் எஸ்டேட், கட்டிட கலைஞர்களுக்கு தொழில் அபி விருத்தி ஏற்படும். விருச்சக லக்னம், ராசியினருக்கும் செவ்வாய் தசை, செவ்வாய் புத்தி நடப்ப வர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான தோஷம் அகலும். செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் அகலும்.கடன் நிவர்த்தி ஆகும்.உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்களில் இருந்து மீள முடியும். பலனை அதிகரிக்க மாதுளை சாறால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    புத பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளான புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

    மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் புதன் தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக குற்றம் நீங்கும். புதன் நீசம் பெற்றதால் வரும் கெடு பலன் நீங்கும்.

    கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளைகளும் படிக்கும். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். கணக்கு பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இள வயது குழந்தைகளின் தவறான நட்பால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். நண்பர்களிடையே நல்ல நட்பு நீடிக்கும்.

    காலி நிலம் தொடர்பான சர்ச்சைகள் அகலும்.தோல் வியாதி, நரம்பு மண்டல பாதிப்பு நீங்கும். ஜோதிடர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு வேலையில் இருந்து வரும் இடர்கள் குறையும். பத்திரம், அடமானம், ஜாமின் பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

    புதனை வலிமைப் படுத்த பச்சை பயிறு சுண்டல் தானம் நல்ல பலன் தரும்.

    குரு கடாட்சம் மிளிரும் நாளான வியாழக்கிழமையில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் வாழ்வாதாரம் உயரும். தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும் குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக நீதியான தோஷம் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீசம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடு பலன் குறையும். தர்மகர்மாதிபதி யோக பலன் முழுமையாக கிடைக்கும்.

    கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியில் இருந்த பிரச்சிினை தீரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் சுப மங்கல நிகழ்வுகள் ஏற்படும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். அடமானத்தில் இருக்கும் நகை மீண்டு வரும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும். வராக்கடன் வசூலாகும்.

    மேலும் பலனை அதிகரிக்க மஞ்சள் நிற லட்டை தானம் தர வேண்டும்.

    சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் லட்சுமி கடாட்சம் கூடும். ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் சுக்கிர தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக குற்றம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருள்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

    சனிக்கிழமைகளில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள். சனிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் ஜாதக ரீதியான சகல விதமான தோஷங்களும் விலக்கும். மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் சனி தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றவர்களுக்கு தொழில் முடக்கம் தீரும்.

    பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, குல தெய்வ குற்றம் அகலும். கடன் வாங்கி வட்டியும் அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு நலம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும், எதிரிகளின் தொல்லை அகலும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கர்ம வினை தாக்கம் குறையும். தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.

    ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோயினால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் சேருவார்கள் எதிரி தொல்லைகள் விலகும்.

    வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள், வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நிறைவேறும்.முன்னோர்கள் செய்த பாவமும் குலத்திற்கு ஏற்பட்ட சாபமும் நீங்கும். முந்தைய ஏழு பிறவிகளில் செய்த பாவம, முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்களால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும். இழப்புகள், விரயங்கள் ஏற்படாது. மனக்கவலை, வறுமை நிலை, இயற்கையால் பாதிப்பு அறவே நீங்கும். ஒவ்வொருநாளும் தன்னுடைய பல கடமைகளுக்காக ஒடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையை எளிமையாக்குவது ஜோதிடம்.

    மனிதனும், மனித வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்ற செல்வமாகும். இத்தகைய செல்வம் ஒரு மனிதனின் முன்வினை பயனுக்கு ஏற்ப அமைகிறது. விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவைகள் இருந்தாலும் பலர் வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் பிரச்சினைகள், இழப்புகள், விரயங்கள், மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இதை பள்ளியறை பூஜை வழிபாட்டால் சரி செய்ய முடியும்.

    மனித வாழ்க்கை பயணம் சுமூகமாக ஜோதிடம் கூறும் தீர்வு பள்ளியறை பூஜை.தினமும் அரை மணி நேரம் இறை வழிபாட்டிற்கு ஒதுக்கி வைத்தால் வாழ்க்கை இலகுவாகும்.

    செல்: 98652 20406

    Next Story
    ×