என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சுய பரீட்சை அவசியம்!
- எளிமையான வாழ்க்கை முறை மிக ஆரோக்கியமானது.
- வாழ்வில் வெற்றியோ, தோல்வியோ அந்த தனி நபரின் உணர்ச்சிகளுக்காக உலகம் நிற்காது.
உங்களைப் பற்றி நீங்களே நன்கு அறிந்து கொள்ள கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள். இந்த சுய பரீட்சை ஆரோக்கியத்திற்கு அவசியம்.
* என்னுடைய பலம் என்ன? * நான் எதனைப் பற்றி அதிகம் கவலைப் படுகின்றேன்? * எனது குறுகிய கால குறிக்கோள் என்ன? * எனது நீண்ட கால குறிக்கோள் என்ன? * என்னை எது அதிகம் பாதிக்கின்றது? * எனக்கு உதவுபவர்கள் யார்? * எதனைச் செய்ய நான் சங்கடப்படுகின்றேன்? * எதனை நான் விரும்பி செய்ய முற்படுகின்றேன்? * எதில் எனக்கு நம்பிக்கை அதிகம்? * எதற்கு நான் அதிக மதிப்பு கொடுக்கின்றேன்? * நான் எங்கு பாதுகாப்பாக உணருகின்றேன்? * யார் எனக்கு ஆதரவு, நிம்மதி கொடுக்கின்றனர்? * என் வாழ்வில் எது என்னுடைய மிகப்பெரிய தோல்வி? * எனக்கு பயம் என்ற ஒன்று இல்லையென்றால் நான் எதையெல்லாம் செய்வேன்? * என் வேலை, தொழிலில் நான் மிகவும் விரும்புவது என்ன? * என் வேலை, தொழிலில் நான் விரும்பாதது என்ன? * என் மனதில் நிலையாய் இருக்கும் மகிழச்சியான சம்பவம் எது? * நான்அதிகம் ரசித்த புத்தகம் எது? *எதனைப் பற்றி, யாரிடம் அதிக நன்றி உள்ளவனாக இருக்கின்றேன்? * தனிமை எனக்கு அமைதி கொடுக்கின்றதா? * என்னிடம் எனக்குப் பிடித்தது என்ன? * எது இல்லை என்று நான் வருந்துகின்றேன்? அது வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? * என்னிடம் இருக்கும் அழிவுப்பூர்வமான எண்ணங்கள், செயல்கள் என்ன? * எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் அறிவுரை என்ன?
இந்த கேள்விகளுக்கு உண்மையாய் பதிலை நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இதனை அடிக்கடி படியுங்கள். உங்கள் வாழ்க்கை தானே வளமாய் மாறும்.
ஆரோக்கியமான இதயம் பெற:
* தினம் இருமுறை கிரீன் டீ குடிக்கலாமே. இருதய பாதிப்பு. பக்க வாதம் போன்ற தாக்குதல்கள் வெகுவாய் குறையும் வாய்ப்புகள் உண்டு.
* சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். இருதய பாதிப்பினையும், பக்கவாதத்தினையும் குறைக்கும். எனவே மருத்துவர் மூலம் அறிவுரை பெற்று இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
* கெட்ட கொழுப்புகள் உணவில் வேண்டாம்.
* தினம் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் நல்ல பலன் இருக்கும்.
* எதனையும் நம்பிக்கை இன்றி அரைகுறையாகச் செய்யாதீர்கள்.
* ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், மகிழ்ச்சியுடன் இருப்பதும் அதிசயங்களைச் செய்யும்.
* சர்க்கரை உணவு வேண்டாமே.
* புகை, மதுவை அகராதியில் இருந்தே நீக்கி விட வேண்டும்.
* பூசணி விதை, ஆளி விதை, சியா விதைகளை அன்றாட உணவில் அவசியம் இடம் பெறச் செய்யுங்கள்.
இது மக்னீசியம் குறைபாட்டினை நீக்கும். மக்னீசியம் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும். வீக்கத்தினை குறைக்கும். இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டும்.
* குடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.
கமலி ஸ்ரீபால்
* யோகா, பிராணாயாமம் இயற்கையிலேயே உடலை அமைதிப்படுத்தும்.
* அளவான எடை அவசியம்.
* ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அவ்வளவுதான். உங்கள் இருதயம் ஆரோக்கியமாக இருக்குமே.
இது மட்டும் இருதயத்திற்குப் போதுமா? மேலும் கொஞ்சம் ஆரோக்கியம் கூட்டுவோமே. இது சாத்தியமா? என்று தோன்றலாம். முயற்சி செய்வோமே.
* யாரையும் வெறுக்கக் கூடாது. அவர்கள் எத்தனை கெடுதல்களை நமக்கு செய்திருந்தாலும் அவர்களை வயிறெரிந்து திட்டுவது. கெடுதல் நினைப்பது கூடாது.
* எளிமையான வாழ்க்கை முறை மிக ஆரோக்கியமானது.
* நம்மை நாமே மன்னிக்க வேண்டும். புழுங்கி, புழுங்கி வேதனைப்படுவது ஆரோக்கியத்தினை வெகுவாய் கெடுக்கும்.
* இறைவனை பிரார்த்திக்கும் போது உலகத்தில் அனைவரும் நன்கு இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.
* வாழ்வில் வெற்றியோ, தோல்வியோ அந்த தனி நபரின் உணர்ச்சிகளுக்காக உலகம் நிற்காது. சுழன்று கொண்டேதான் இருக்கும். ஆக எதிர்பார்ப்புகள் வேண்டாம்.
* ஒருவர் வாழ்வின் போக்கு 100 சதவீதம் அவர் கையில் மட்டுமே.
* அலுவலகமோ, வீடோ நம் தலையில்தான் அத்தனை பொறுப்பும். நான் இல்லையென்றால் கடினம் என்று நினைக்க வேண்டாம். நொடியில் நாம் மாற்றப்படலாம். வேலைகள் இயல்பாய் தொடங்கலாம். எதற்கு இந்த மார் தட்டிய வீர வசனம்? மாரடைப்பு தான் வரும்.
* பிறரை கடுமையாக பேசுபவர்கள், வேதனைப் படச் செய்பவர்கள் தங்கள் குறைகளை மறக்கவே இவ்வாறு செய்கின்றனர். இவர்களே மன நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்தான்.
* 24 மணி நேரமும் கடுமையாய் உழைத்தேன். பலனில்லை என முடங்குபவர்கள் சரியான பாதையில் அந்த உழைப்பு சென்றதா? என்று சோதனை செய்ய வேண்டும்.
* வெற்றி, தோல்விகளால் மட்டுமே ஒருவர் கணிக்கப்படும் உலகம் ஆகி விட்டது. ஒருவரின் நல்ல எண்ணங்களும், முயற்சிகளும் எங்கும் மதிப்பினை பெறுவதில்லை.
* ஒரு மணி நேரம் வீணே கழிந்தாலும் அது பெரிய இழப்புதான்.
* இந்த எண்ணங்களும், செயல்பாடுகளும் இருதய ஆரோக்கியத்திற்கு அவசியம்தான்.
* இத்தோடு அதிக சிரிப்பு, குறைந்த கோபம், அதிக நடை, இவையெல்லாம் ஆரோக்கியத்தின் விதிமுறைகள் தானே.
இன்றைக்கு அடிக்கடி பேச வேண்டிய பாதிப்புகளில் சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டு இருக்கின்றது. ஆகவேத்தான் சில அறிகுறிகளை தவற விடக்கூடாது.
* அடிக்கடி சிறுநீர் செல்லுதல் * அதிகம் தாகம்-திடீரென காரணம் இன்றி உடல் இளைத்தல் * அடிக்கடி பசி, கலங்கிய மங்கிய பார்வை * சோர்வு * மெதுவாய் ஆறும் புண்கள். அடிக்கடி கிருமி தாக்குதல் இவையெல்லாம் சர்க்கரை நோய் தாக்குதலின் அறிகுறிகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆக இவற்றில் கவனம் தேவை. ஏனெனில் சர்க்கரை நோய்
* பக்க வாதம் பாதிப்பு ஏற்படுவதை 4 மடங்கு அதிகரிக்கின்றது.
* மூச்சு காற்றில் ஒருவித வாசனை போன்று உணர்வது சர்க்கரை நோய் பாதிப்புன் வீரியத்தினைக் குறிப்பிடுகின்றது.
* உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து ரத்த குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இருதய பாதிப்பு அதிகரிக்கின்றது.
* நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
* சிகிச்சை இல்லாத நீரிழிவு பாதிப்பு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம்.
* கண் பாதிப்பு பார்வை இழப்பு வரை நிகழலாம்.
* வறண்ட சருமம் போன்ற பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது, மருத்துவர் ஆலோசனை பெற்று நடப்பது போன்றவை நன்மை பயக்கும்.
10 ஆயிரம் அடிகள் தினமும் நடந்து செல்லுங்கள்
இந்த வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேட்கின்றோம். சிலர் தினமும் 20 நிமிடம் அல்லது 40 நிமிடம் நடை பயிற்சி, உடற்பயிற்சி என செய்து விட்டு மீதி நேரம் சற்றும் அசையாது அமர்ந்த இடத்திேலயே அமர்ந்து இருப்பர். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கே. ஆகவேத் தான் வீடோ, அலுவலகமோ ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடக்கச் சொல்கின்றனர்.
இந்த நடை கலோரி சத்தினை எரிக்கின்றது. எடை குறைப்பிற்கு உதவுகின்றது. உடலின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டுகின்றது. செரிமானம் சீராகின்றது. வயிறு உபாதைகளை குறைக்கின்றது. இருதயத்தினை பலப்படுத்துகின்றது. உயர் ரத்த அழுத்தம் குறைய உதவுகின்றது. உடலின் சக்தி கூடுகின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றது. தொப்பை கரைய உதவுகின்றது. தூக்கம் சீராய் இருக்கும். மனநலம் நன்கு இருக்கும். ஸ்ட்ரெஸ் குறையும். கால்கள், மூட்டுகள் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும்.
இப்போது எல்லாம் கடிகாரம் போல் ஒன்று விற்கப்படுகின்றது. அதனை கையில் கட்டிக் கொண்டால் காலை முதல் இரவு வரை நீங்கள் நடந்த அடி எண்ணிக்கை தெரிந்து விடும். செயல்படுத்தி பயன் பெறுவோமே.
வாழ்வின் விதிகள்: கடந்த கால நிகழ்வுகளில் அமைதி கொள்ளுங்கள். நிகழ்காலம் குழப்பம் இன்றி இருக்கும்.
* காலம் எல்லாவற்றினையும் ஆற்றும். அதற்கு அவகாசம் கொடுங்கள்.
* பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
* பிறர் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிடுவது வேண்டாமே.
* ரொம்ப, ரொம்ப அதிகமாக யோசிக்காதீர்கள். சில கேள்விகளுக்கு விடை தெரியா விட்டால் பரவாயில்லை.
* நம் மகிழ்ச்சிக்கு நாம் மட்டுமே பொறுப்பு. எனவே புன்னகையுங்கள். உலகின் அத்தனை பிரச்சினைகளுக்கும் நீங்கள் பொறுப்பல்ல.






