என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாவமும் புண்ணியமும்!
    X

    பாவமும் புண்ணியமும்!

    • அறம் என்பது மற்றொரு நிலையில் 'தர்மம்' என்பதற்கும்.
    • பாவ புண்ணியம் அறிந்து வாழும் செம்மையான வாழ்க்கையை நாள்தோறும் விரும்பிடும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    அன்றாட உலகியல் வாழ்க்கையில் 'நல்லது' என்றும் 'கெட்டது' என்றும் நாம் பகுத்து வாழும் கோட்பாடுகளை ஆன்மீகவியல் நோக்கில் 'புண்ணியம்' என்றும் 'பாவம்' என்றும் குறிப்பிடுகிறோம். ஆன்மீகவியல் நோக்கில் எவையெவை நல்லவை என்று குறிப்பிடப்பட்டுள்ளனவோ, அவற்றிலிருந்து சற்றும் பிறழாமல் செயல்படுவதைப் 'புண்ணியச் செயல்கள்' என்று குறிப்பிடுகிறோம். இந்தச் செயல்கள் அனைத்திற்கும் ஏறுக்கு மாறான முறைகளில் மாறுபட்டுச் செயல்படுவோமேயானால் அவை 'பாவச் செயல்கள்' ஆகும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறாவது அறிவாய்ப் 'பகுத்தறிவு' வழங்கப்பட்டிருக்கிறது. பகுத்தறிவின் துணைகொண்டு எது நல்லது? எது தீயது? என்று பகுத்தறிந்து செயல்படவேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சமூகவியல் நோக்கில், வாழ்க்கை என்பது 'நன்மை' 'தீமை' என மாறிமாறி நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது; ஆன்மீகவியல் நோக்கில் இந்த மானுட உடம்பு 'அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால்' கட்டப்பட்டிருப்பதாக மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். நல்லது, கெட்டது தெரிந்துகொண்டு, பாவ புண்ணியம் புரிந்துகொண்டு, தரப்பட்டுள்ள வாழ்க்கையைச் செம்மையாகச் செலுத்த வேண்டும் என்று அற நூல்கள் வலியுறுத்துகின்றன.

    மகாகவி பாரதியைப் போன்று பக்தியில் ஆழ்ந்து போனவர்களோ,

    "நல்லது தீயது நாம் அறியோம் அன்னை!

    நல்லது நாட்டுக! தீயது ஓட்டுக!"

    என எல்லாப் பாரத்தையும் தெய்வத்தின் மீது போட்டுவிட்டு வாழ்க்கைக் கடமையாற்றக் கிளம்பி விடுகிறார்கள். ஆன்மீகச் சார்புடைய வாழ்வியல் செயல்பாடு இயல்பாகவே அறம், பாவம் குறித்த செயல்களுக்கு அஞ்சி நடப்பதாகவும், இயல்பாகவே நன்மையானதை மட்டும் செய்வதற்கு ஆர்வம் மிக்கதாகவும் ஆகிப்போகும். அறம் என்பது மற்றொரு நிலையில் 'தர்மம்' என்பதற்கும். 'தர்மம்', 'புண்ணியம்' என்பதற்கும் இணையான நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை ஆகும். அறச்சிந்தனை வாய்ந்த மனது என்பதற்கும் ஆன்மீகச் சிந்தனை நிறைந்த மனது என்பதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அழுக்கற்ற நற்சிந்தனைகள் நிறைந்திருப்பதே 'புண்ணிய ஆத்மா'வாகவும், 'நல்ல மனம்' ஆகவும் திகழுகின்றது. திருவள்ளுவரும், "மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்" என்று வலியுறுத்திக் கூறுகிறார். ஒருவன் அடிப்படையில், மனத்தளவில் குற்றமற்றவனாக இருந்துவிட்டால் போதும்; அவன் உலக அளவில் அற மனிதனாகப் பேறுபெற வாழலாம்.

    திருக்குறள் முதலான அற நூல்கள், ஞானியர் வாக்குகள் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல்கள், சமயக் கோட்பாடுகள் போன்றவை வலியுறுத்துகிற அறக்கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள் வழிச், சிந்திப்பதும், செயல்படுவதும் 'புண்ணியம்' ஆகும். குறிப்பாக அன்பாக நடந்து கொள்ளுதல், சக உயிர்களிடம் கருணை இரக்கத்தோடு பழகுவது, அடுத்தவர்களுக்குப் பிரதிபலன் கருதாமல் தாராள குணத்தோடு உதவி செய்வது, நீதி மற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கையைச் செலுத்துவது, சுயநலம் தவிர்ந்த பொதுநல நோக்கோடு சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, பிறந்து வளர உதவிடும் பூமியை எந்தக் காயமுமின்றி, எந்த மாசுமின்றிக் காத்து வளம்குறையாது செழிக்கப் பாடுபடுவது, முன்னோர் மரபை மீறாமல் மரபைப் பேணும் வகையில் மரபுசார்ந்த வாழ்க்கை வாழ்வது, உண்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வது போன்றவை புண்ணியச் செயல்கள் ஆகும்.

    சுந்தர ஆவுடையப்பன்


    இதுபோன்ற புண்ணியச் செயல்கள் செய்து வாழ்கிற வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. நற் செயல்களால் வாழும் மனிதன், எப்போதும் குறையாத மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரனாக இருக்கிறான். நேர்மையான வாழ்க்கை, மனச் சலனமற்ற மன நிலையை அவனுக்குள் நிரந்தரமாக ஏற்படுத்தி விடுகிறது. எதிர்மறையான அபசகுணச் சொற்கள் அவனது வாயிலிருந்து உதிர்வதே இல்லை. புண்ணியம் செய்திடும் மனிதர்களைக் காணும் போதெல்லாம், ஒரு நேர்முறையான, நம்பிக்கை தருகிற மகிழ்ச்சி அதிர்வலைகள் காணும் அனைவருக்குள்ளும் பரவிப் பரவசம் ஏற்படுத்தும். அவர்களிடமிருந்து வெளியாகும் சிந்தனை, சொல், செயல் எல்லாமே உயர்வானதாகவே இருக்கும்; ஏனெனில் அவர்கள் உயர்வானவையோடு மட்டுமே உறவும் தொடர்பும் வைத்திருப்பவர்கள்.

    ' பாவம்' என்பது எவையெல்லாம் 'நல்லவை' என்று வலியுறுத்தப் படுகின்றனவோ அவையனைத்தும் அல்லாத 'அல்லவை' செய்தல் ஆகும். தீயவை என்பதைத் திருவள்ளுவர் 'அல்லவை' என்கிறார்.. உலகில் நல்லவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராக உள்ள அல்லாதவையை 'அல்லவை' என்கிறார். "நல்லவை நாடி இனிய சொன்னால் அல்லவை தேய அறம் பெருகும்' என்கிறார். பேசுகிற பேச்சில் தூய்மையும் இனிமையும் இல்லாமல் பொய் சொல்வது 'பாவம்' ஆகும். ஏமாற்றுவது, திருடுவது, பொறாமைப்படுவது, வஞ்சனை செய்வது, கோபப்படுவது, சொந்த உழைப்பின்றி அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி உண்பது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது என நல்லொழுக்கங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எச்செயல்களும் பாவச் செயல்களாகும்.

    'பாவம்' செய்கிற மனிதன், மரணத்திற்குப் பின் செல்லுகிற மறு உலகில் மட்டுமல்ல, இவ்வுலகில் வாழும்போதே நரகத் துன்பங்களை அனுபவிப்பான் என்பது கண்கூடு. " முற்பகலில் அடுத்தவர்க்குச் செய்த துன்பங்களை, மனிதன் பிற்பகலிலேயே அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவச் சட்டமாகும். பாவம் என்பது குற்றமாகும்போது, குற்றத்திற்கான தண்டனையையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். அவன் செய்த பாவங்களே மனிதனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி அன்றாடம் எதிர்மறை மனிதனாகச், சமூக மதிப்பின்றி உலவ விடும்.

    எதிரிகள் யாரும் இல்லாமலேயே அவனது வீழ்ச்சிக்கு அவனது பாவங்களே காரணம் ஆகி விடும். சமூக நன்மைகள் புண்ணியம் செய்பவர்களால் நிகழும் என்றால், சமூகத் தீமைகள் பாவம் செய்பவர்களால் நடைபெறுவதாக மக்கள் நம்புகின்றனர். " நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் மழை பெய்யும்" என்று நம்புகிற மக்கள், "பாவம் செய்பவர்கள் தலையிலே இடிவிழும்" என்றும் நம்புகின்றனர். இயற்கை நிகழ்வுகளுக்கும் பாவ புண்ணியம் செய்தவர்களைக் காரண கர்த்தாக்களாக வைத்து மதிக்கவும் தூற்றவும் செய்கின்றனர்.

    ஒரு சிறு கிராமம்; மொத்தம் 200 குடிசைவீடுகளே அவ்வூரில் உண்டு; அந்த வீடுகளில் சரியாக 300பேர் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சமயம் அவ்வூரில் விடாத அடைமழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக நிற்காத மழை பெய்து கொண்டிருப்பதால், கிராமத்திலுள்ள எல்லாக் குடிசைகளும் ஒழுகத் தொடங்கி விட்டன. ஊரின் நடுவில் ஒரு பெரிய கல்மண்டபத்தோடு கூடிய அழகான கோயில் ஒன்று உண்டு; மழைக்காலங்களில் அந்தக் கோயில் மண்டபமே அவ்வூர் மக்களுக்குப் புகலிடமாக விளங்கும். ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து கல்மண்டபத்திற்குள் நின்று கொண்டார்கள்.

    'மழை எப்போது விடுவது; நாம் எப்போது அவரவர் சொந்தக் குடிசைகளுக்குத் திரும்புவது?' என்கிற கவலை அவர்கள் எல்லோருக்கும். பெரும் சத்தத்தோடு மழை பெய்து கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்த 300 பேரில் ஒருவர்," நம்ம ஊரிலும் புண்ணியம் செய்த யாரோ ஒரு மகராசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது!; அதுதான் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது!" என்றார். "அப்படியா! புண்ணியம் செய்தவருக்காக மழை பெய்யுமா? நல்லது. பாவம் செய்தவர் இருந்தால் அவருக்காக என்ன நடக்கும்?" கொஞ்சம் இடக்கான கேள்வியைக் கேட்டான் ஒரு இளைஞன். "நல்லவர் தலையிலே மழை பெய்து வாழ வைக்கும்!; கெட்டவர் தலையிலே இடி விழுந்து அவர்களை அழிக்கும்!. மழைக்காலம் இந்த இரண்டு காரியங்களையுமே செய்யும்!" என்று அனுபவப் பட்டவர் போல ஒரு பெரியவர் பேசினார். உடனே கல் மண்டபத்திற்குள் அடைந்து கிடந்த கிராம மக்கள் அனைவரும் சலசலவெனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

    'நமக்குள் எத்தனை பேர் பாவம் செய்தவர்கள்?; எத்தனைபேர் புண்ணியம் செய்தவர்கள்?' என்று எப்படித் தெரிந்துகொள்வது? எப்படிப் பிரித்துப் பார்ப்பது?' என்பது அவர்களுக்குள் விவாதப் பொருள் ஆகி விட்டது. ஒரு பேரச்சமும் பற்றிக்கொண்டது. "நாம் எல்லாருமே புண்ணியம் செய்தவர்களாக இருக்க முடியாது; ஒன்றிரண்டு பாவ ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்; கெட்டவர்கள் மீது இடி விழும் என்னும்போது, அந்த ஒன்றிரண்டு பேரைக் குறிவைத்து, நமது கல்மண்டபத்தில் இடிவிழுந்தால், அவர்கள் மட்டுமா சாவார்கள்? மண்டபத்தில் இருக்கும் பாவம் செய்யாத மற்றவர்களும் அல்லவா செத்துப் போவார்கள்?. இதைத் தவிர்க்க நாம் ஒரு உபாயம் கண்டுபிடித்தாக வேண்டும்" என்கிற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

    ஒரு பெரியவர் ஒரு வழி சொன்னார். " நமது கல்மண்டபத்திற்கு எதிரே நூறு மீட்டர் தொலைவில் இருக்கிற பனைமரத்தை, இந்தக் கல்மண்டபத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் மழையில் நடந்துகொண்டே சென்று தொட்டு, இரண்டு நிமிடம் நின்று திரும்பி வரவேண்டும். இடி எப்போதும் பச்சை மரத்தின்மீதுதான் விழும். அவர்கள் பாவம் செய்தவர்களாக இருந்தால் அங்கேயே இடிவிழுந்து அவர்கள் அந்தப் பச்சைமரத்தோடு எரிந்து போவார்கள்; மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நாம் இங்கு மண்டபத்தில் பாதுகாப்பாக இருப்போம்" என்றார். பெரியவரின் ஆலோசனைப்படி கூட்டத்திலிருந்த 299 பேர்கள் பனைமரம்வரை சென்று தொட்டுத் திரும்பினார்கள்; எவர்மீதும் இடி விழவே இல்லை; கடைசியாக ஒரே ஒருவர் பாக்கி இருந்தார்; நான் சென்று, நான்தான் பாவி என்று என்மீது இடி விழுந்தால் என்ன செய்வது? என்று கலக்கத்தோடு தயங்கினார். எல்லாரும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    அந்தக் கடைசி நபர் மழையில் நனைந்துகொண்டே சென்று அந்தப் பனை மரத்தைத் தொட்டார். அவ்வளவுதான்; பலத்த சத்தத்தோடு பெரும் இடி விழுந்தது!; பனை மரத்தின் மீது அல்ல; அந்த 299 பேர்களும் இருந்த கல்மண்டபத்தின்மீது!. உண்மையில் யார் புண்ணியவான்கள்?.

    நம்மில்பலர் நாம் செய்கிற பாவங்கள் எல்லாம் பாவங்கள் அல்ல என்று நினைக்கிறோம்; தெய்வங்களையோ, ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களையோ பரிகாரங்களாக எண்ணிப் பங்குகளைச் செலுத்திவிட்டால் பாவங்கள் எல்லாம் புண்ணியங்களாகப் புனிதப் பட்டுப்போகும் என நம்புகிறோம். உண்மையில் எது பாவம் என்பதும் எது புண்ணியம் என்பதும் நம் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். உள்ளத்தால் நல்லனாக வாழ்வதே அற வாழ்க்கை.

    தொடர்புக்கு- 9443190098

    Next Story
    ×