என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடலையும் உணர்வையும்  மேம்படுத்தும் யோகா!
    X

    உடலையும் உணர்வையும் மேம்படுத்தும் யோகா!

    • நம் செயல்பாடுகளில் அதிக உள் அமைதியையும் ஆழமான வலிமையையும் வருகிறது.
    • பயிற்சியின் போக்கில் ஆன்மீக விளைவுகள் படிப்படியாகவும், மிகவும் தனிதன்மையானதாகவும் தோன்றும்.

    யோகா என்றாலே நிறைய ஆசனங்களும், சில மூச்சுப் பயிற்சிகள், தியான முயற்சிகளும் என்று பொதுவாக வழக்கத்தில் உள்ளது. பண்டைய யோக விஞ்ஞானம் ஆழ்ந்த தத்துவங்கள், விதிகள், ஒழுங்குகள், விவரணைகள், தீர்வுகள், பயிற்சிகள் கொண்டதொரு அக தரிசனமாகும். அந்த பரந்துவிரிந்த ஆலமரத்தின் ஒரு விழுதுதான் ஆசனம். ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, உடலிறுக்கத்தை தளர்த்தவே ஆசனங்கள் பயிலப்படுகின்றன.

    ஆற்றல் உடலெங்கும் முழுமையாகப் பாயாமல் உள்ளுறுப்புகள், தசைகள் இறுகியிருக்கும். அந்த இறுக்கத்தை, ஆற்றல் முடிச்சுகளைக் கரைத்து, ஆற்றலைப் பாயச்செய்ய வேண்டும். நாம் இதனை சட்டெனச் செய்ய முடியாது, மென்மையாகவும், பொறுமையாகவும் இதனைச் செய்யபழக வேண்டும்.

    இறுக்கமான தசைகள் இயங்க, தன்னை தளர்த்திக்கொள்ள அதிக ஆற்றலைக் கோருகின்றன; அவை உடலின் பலத்தை அதிகம் எடுத்துக் கொள்கின்றன. ஆசனப்பயிற்சியின் பொழுது தசைகளை உணர்ந்து கவனமாகப் பயில்வதின் மூலமும், அதன் மீது கவனத்தைக் குவித்து சுவாசிப்பதன் மூலமும் நன்மைகள் வாய்க்கும்.

    இவ்வளவு நன்மைகளைக் கொடுக்கும் ஆசனம் யோகம் என்கிற பரந்துவிரிந்த ஆலமரத்தின் ஒரு விழுதுதான். ஒன்றின் முழுமையை அறிந்து கொள்ளாமல் அதன் ஒரு தனிப்பகுதியை மட்டும் மக்கள் பயின்று வருகின்றனர்.

    பதஞ்சலி போன்ற மகான்களின் வரையறையின்படி யோகத்திற்கு எட்டு அங்கங்கள், அதில் ஒரு அங்கம்தான் ஆசனம். உடலின் ஒரு அங்கத்தை மட்டுமே நாம் பயன்படுத்தினால் நாம் எவ்வாறு முழுமை பெற இயலாதோ அதுபோலவே இந்த யோகத்தின் ஓரிரு அங்கங்களை மட்டும் செயல்படுத்தினால் நமக்கு முழுமையில்லை. ஆனால் இப்பொழுது ஆசனங்கள் மட்டுமே யோகம் என்று பரவலாகிப் போன நிலையில் ஆசனங்களின் பலன்களைப்பற்றி பார்ப்போம்.

    ஆசனங்கள் உடலின் வெவ்வேறு மண்டலங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இயக்கவியல் மண்டலத்தில்..

    * எலும்பு அமைப்பை மேம்படுத்துகிறது.

    * மையத் தசைகளை வலுப்படுத்துகிறது.

    *முதுகெலும்பை நிமிர்த்தி உறுதிப்படுத்துகிறது.

    * தசை ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து அதன் மூலம் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தி நீட்டுகிறது.

    *இயக்க திறன்களை மேம்படுத்துகிறது

    இரத்த சுற்றோட்ட மண்டலத்தில்..

    * இரத்த ஓட்டம் மற்றும் உள் உறுப்புகளின் இரத்தத்தின் ஊடுருவலை மேம்படுத்துகிறது.

    *இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

    செரிமான மண்டலத்தில்..

    ஆசிரியர் ரகுராம் மெய்யோகம்

    * உள் உறுப்புகளை மசாஜ் செய்து அதன் மூலம் உறுப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    * வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

    * செரிமானத் திறன் மற்றும் கழிவு நீக்கச் செயல்முறையைத் தூண்டுகிறது.

    மூச்சு மண்டலத்தில்..

    * மூச்சு மேலான விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.

    *காற்றுப் பாதைகளைத் திறக்கிறது.

    * மூச்சினை ஆழமாக்குகிறது மற்றும் மூச்சின் கொள்ளளவை மேம்படுத்துகிறது.

    * ஆழமாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் உடலில் அமிலத்தன்மையை மட்டுப்படுத்துகிறது.

    *உயிர்காற்றின் உட்பரவலை அதிகரிக்கிறது.

    நரம்பு மண்டலத்தில்..

    *நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

    *நரம்பு மண்டலத்து இறுக்கத்தை எளிதில் தளர்த்துகிறது.

    * நரம்புப் பாதைகளின் கடத்துந் திறனை மேம்படுத்துகிறது (உணர்வு மற்றும் இயக்க சமிக்ஞைகள் விரைவாக செயலாக்கப்படுகின்றன).

    மனம் மற்றும் உணர்வுச் சூழலில்..

    * மேம்பட்ட கவனக்குவிப்பு திறன்.

    * மேம்பட்ட அறிவாற்றல்.

    * மேம்பட்ட உடல் மேலான விழிப்புணர்வு.

    அறிவு மற்றும் நினைவுத் தளத்தில் ..

    விழிப்புணர்வு சார்ந்த மற்றும் தியானம் சார்ந்த படிப்படியாக பயிற்சியில் ஆசனங்களை ஒருங்கிணைக்கும் பொழுது, சமநிலை, நினைவாற்றல் மற்றும் தன்னைச் சரியாக அறிந்து வெளிப்படுத்துதல் நிகழ்வதால் அன்றாட வாழ்க்கையில், நம் செயல்பாடுகளில் அதிக உள் அமைதியையும் ஆழமான வலிமையையும் வருகிறது.

    ஆன்மிகத் தளத்தில்..

    * பயிற்சியின் போக்கில் ஆன்மீக விளைவுகள் படிப்படியாகவும், மிகவும் தனிதன்மையானதாகவும் தோன்றும்.

    * தன்னை அறிதலும், தனது மூலத்தை அறிந்து பின் இந்த பிறப்பு இறப்பு தளையிலிருந்து வெளியேறுதலுக்கான வழிகளும் புலப்படத் தொடங்கும்.

    வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் பெரும்பாலும் இந்த ஆசனங்கள் இந்தப்பலனைக் கொடுக்கும் என்கிற போக்கில் உள்ளது. ஆசனங்கள் உடலளவில் என்னென்ன செய்கிறது என்று பேசப்படுவதுபோல அதன் பின்னால் உள்ள உளவியல் காரணிகள் பேசப்படுவதில்லை.

    பொதுவாக ஆசனங்கள் உடலியலாக இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    முன்னோக்கிய வளைவுகள்

    பின்னோக்கிய வளைவுகள்

    பக்கவாட்டுச் சாய்வுகள்

    முறுக்கல் நிலைகள்

    தலைகீழ் நிலைகள்

    அமர்வு நிலைகள்

    முன்னோக்கிய வளைவுகள் - (உத்தானாசனா, மார்ஜரியாசனா, ஜானு சிரசாசனா)

    * உடற்கூறியல் பார்வையில், முன்னோக்கிய வளைவுகள் உடலின் பின்புறத்தினை நன்கு நீட்டுவிக்கிறது, கால்களின் பின்புறம் மற்றும் கீழ் முதுகில் உள்ள தசைச் சங்கிலிகள் யாவும் நன்கு நீட்டப்படுகின்றன.

    * முன்னோக்கி உடலை வளைக்கும் பொழுது, குறிப்பாக நின்ற மற்றும் அமர்ந்த நிலையில், வயிறு சுருங்குவதால் உள் உறுப்புகள் தீவிரமாக அழுத்தப்படுகின்றன. இந்த அழுத்தத்தால் அபான வாயு ஊக்கமாகச் செயல்பட்டு முறையாக கழிவு நீக்கம் நடக்கிறது.

    * உளவியலாக முன்னோக்கி ஒருவர் வளைவது பக்தி மற்றும் பணிவினைக்காட்டுகிறது. என் சிந்தனை, திட்டமிடல், நான்தான் பெரிது என்று செருக்கு மேலோங்காமல் நம்மை விட உயர்ந்த, நம் உயர்விற்கு அடிப்படையான ஒன்றின் முன் நாம் தலை வணங்கும் பண்பு நமக்கு வாய்க்கிறது.

    *அந்தச் செருக்கு கர்வம் நீங்கிய நிலையில், நாம் நம்மை ஆராய உட்சூழல் வழி செய்கிறது.

    * முன்னோக்கிய வளைவுகளை, முறைப்படி பயிலுகையில் மனம் மற்றும் ஆற்றல் அமைப்பில் குளிர்ச்சியும், அமைதியும் விளைகின்றன.

    பின்னோக்கிய வளைவுகள் - ( நடராஜாஸனா, உஷ்ட்ராசனா, கபோட்டாசனா)

    * பின்புறம் உடலை வளைப்பதால் அளவு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, முதுகெலும்பின் விறைப்பை, நீட்சியை உறுதிசெய்கிறது. இதனால் முதுகில் கூன் விழுவதும், முதுகுத்தண்டு சிக்கல்களும் குறைகின்றன.

    * பின்புறமாக உடலை வளைக்கும் ஆசனங்கள் ஆற்றல் அமைப்பில் கிளர்ச்சியையும், சுறுசுறுப்பையும், வெப்பத்தையும் உருவாக்குகின்றன; அவை மார்புப் பகுதியை விரிவாக்கி மூச்சினை ஆழப்படுத்துகின்றன.

    * பின்புற வளைவுகள் முதுகினை வலுவாக்க உதவுகின்றன, நேராக நிமிர்ந்து அமர்வதற்கான திறனை வளர்க்கின்றன.

    * நேராக அமர்வதால் நம்முள்ளே நாம் ஆழ்ந்து செல்ல வாய்க்கிறது மற்றும் வாழ்க்கையை உயர் இலட்சியங்களுடனும் நம்பிக்கையுடனும் நகர்த்த உதவுகிறது.

    * இதய வெளியில் ஒரு திறந்த உணர்வை உருவாக்கி, அன்பு, இரக்கம் போன்ற குணங்களை, தன்மீதும் பிறர்மீதும் கொள்ள வகை செய்கிறது.

    பக்கவாட்டுச் சாய்வுகள் - (திரிகோணாசனம், பார்ஸ்வ கோணாசனம், பரிகாசனம்)

    * பக்கவாட்டுச் சாய்வுகள், உடலை இடது வலதாக இரு திசைகளிலும் பயிற்சி செய்யப்படுவதால், அவை முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஆழமான முதுகு தசையை அழுத்தி நீட்டுகின்றன.

    * இந்த அழுத்தமானது நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், குடல் பாதை மற்றும் உதரவிதானம் போன்ற உள் உறுப்புகளைத் தூண்டுகிறது.

    * பக்கவாட்டுச் சாய்வுப்பயிற்சிகள் முதுகெலும்பு மற்றும் உடற்பகுதியின் பல ஏற்றத்தாழ்வுகளை, சமச்சீரற்ற தன்மையை சரிசெய்து தோற்றத்தைச் சீராக்கும்.

    * பக்கவாட்டுச் சாய்வுகளின் எதிரெதிர் இயக்க விசைகளின் காரணமாக, விழிப்புணர்வு உடலின் உள் அச்சுக்கும் மனத்தின் உள் மையத்திற்கும் செல்வது ஆழமாகிறது.

    *பக்கவாட்டுச் சாய்வுப் பயிற்சிகள் சமான வாயுவைத் தூண்டி செரிமானத்தை சீராக்க உதவுகின்றன.

    முறுக்கல் நிலைகள் - (மத்ஸ்யேந்திராசனம், மேரு வக்ராசனம், சர்பாங்காசனம்)

    *முதுகெலும்புகள் தனது நீளமான அச்சை மையமாகக் கொண்டு இரு திசைகளிலும் சுழல்கிறது. உடல் தொடர்ந்து அதன் சுழலும் திறனை இழப்பதால், முதுகெலும்பினை முறுக்கும் நிலைகளை தொடர்ந்து பயிற்சி செய்வது முக்கியம்.

    * முறுக்கல் பயிற்சிகள் தோற்றத்தைச் சரிசெய்கின்றன, உடலின் இடது வலது சமநிலைத் தன்மையைப் பேணுகின்றன.

    *முறுக்கல் பயிற்சிகள் உடலை ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிப்பு செய்கின்றன. செரிமானத்தைத் தூண்டி, உணவை ஆற்றலாக மாற்றுவதில் உதவுகின்றன.

    * உடலின் வலது பக்கம் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்க, தீவிரமான அறிவுசார் பக்கமான இடது மூளையுடன் தொடர்புடையது, உடலின் இடது பக்கம் நமது உள்ளுணர்வு, உணர்ச்சி, குளிர்ச்சி, கற்பனை மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்களுடன் தொடர்புடையது. இந்த முறுக்கல் பயிற்சிகள் உள்மையத்தை நோக்கி நம்மைத் திருப்புவதால் உணர்வு/அறிவு சமநிலையை உண்டாக்குகின்றன.

    தலைகீழ் நிலைகள் - (சிரசாசனம், சர்வாங்காசனம், அதோமுக ஸ்வநாசனம்)

    * தலைகீழ் நிலையில் இதயம் தலைக்கு மேலே இருக்கும். இந்நிலையில் ஆழமான, மெதுவான வயிற்று சுவாசம், உதரவிதானம் உள்ளிட்ட உறுப்புகளை பின்னுக்குத் தள்ள அனுமதிக்கிறது, இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

    * தலைகீழ் பயிற்சிகள் கால்களிலிருந்து நிணநீர் திரவம் திரும்புவதை ஊக்குவிக்கின்றன, இது வீங்கிய பருத்த கால்களுக்கு நன்மை பயக்கும்.

    * இந்தத் தலைகீழ் மாற்றத்தினால் உடல் புத்துணர்வு கொள்வதுபோல, நமது பார்வையும் கண்ணோட்டமும் மாறி மாறுபட்டு நம்மால் சிந்திக்க இயலும். மனதிலும் பெரிய மாற்றம் வாய்க்கும்.

    அமர்வு நிலைகள் - (பதுமாசனம், சித்தாசனம், வஜ்ராசனம்)

    * மேற்கண்ட பல ஆசன நிலைகளில் பயிற்சியை நிறைவு செய்தபின்னர் தியானத்திற்கென அமர்வு நிலைகள் உள்ளன.

    * இது உடலைத் தளர்த்திச் சீராக்கவும், மனதை உள்முகமாகத் திருப்பி அகமுகமாகச் சாதனை செய்யவும் உதவுகின்றன.

    பண்டைய யோக தத்துவ வரையறையின்படி, யோகா என்ற சொல் ஒன்றுதலை, இணைதலைக் குறிக்கிறது. தன்னை அறிதலின் மூலம், தன் மூலத்தை அறிதலின் மூலம் அந்த ஒன்றுதல் நடக்கிறது. ஒன்றுதலின் மூலம் மனவளமும் உணர்வு வளமும் முதலில் வாய்க்கிறது. பின்னர் உயர்ந்த நிலையான முக்தி வாய்க்கிறது. இந்த செயைலச் செய்ய தியான உணர்வைப்பெற வேண்டும். அதற்கு உடலைப்பக்குவப்படுதவே ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    ஆக யோக சாதனையில் ஆசனப்பயிற்சிகளின் முதல் நோக்கம் ஆசன சித்தி - இதன் மூலம் ஒருவர் நெடுநேரம் அமர்ந்து தியானிக்கலாம்.

    இரண்டாம் நோக்கம் அங்க இலாகவம் - இதன் மூலம் ஒருவர் உடலில் ஆற்றல் தங்குதடையின்றிப் பாய்கிறது.

    மூன்றாம் நோக்கம் தாதுக்களின் வலிமை - இதன் மூலம் ஒருவர் உடலை நோயிலிருந்து தடுக்கிறார்.

    முதல் நோக்கத்தை ராஜ யோகம் என்றும், மற்ற நோக்கங்களை அடையும் வழியை ஹத யோகம், க்ரியா யோகம் என்றும் அழைப்பது மரபு.

    செல்: 70107 77127

    Next Story
    ×