என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன்
    X

    பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன்

    • 1954இல் புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்க வேண்டும் என ஒரு பேரியக்கம் உருவாயிற்று.
    • புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்குவதற்கு மன்னர் மன்னனும் ஒரு காரணம் எனலாம்.

    தமிழறிஞர் மன்னர்மன்னன் புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் கருத்து உரைஞராகப் பணியாற்றியவர்.

    பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே புதல்வர் என்ற பெருமைக்கு உரியவர். அவையத்து முந்தி இருக்கச் செய்த தம் தந்தை வழியை எழுத்திலும் தொடர்ந்த வாரிசு. தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தம் தந்தையைப் போலவே தாமும் அளவற்ற மொழிப் பற்றுடன் வாழ்ந்தவர்.

    தமிழறிஞரும் இதழியலாளரும் எழுத்தாளருமான மன்னர்மன்னனுக்கு தந்தையின் சாயல் தென்படும் முகம். முகத்திற்குக் கீழே உள்ள மீசையிலும் சரி, மூளைக்குள் பதிந்துள்ள கருத்துகளிலும் சரி, தந்தையின் தீவிரத் தாக்கம். முழுமையாகத் தந்தையின் தாக்கம் பெற்ற இத்தகைய புதல்வர்கள் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும்.

    கண்களில் தந்தையைப் போன்றே கண்ணாடி. அந்தக் கண்ணாடியால் பார்க்கும் கண்பார்வை மட்டுமல்ல, சமுதாயத்தைப் பார்க்கும் சமூகப் பார்வையும் கூட அப்பாவுடையதே போன்ற பகுத்தறிவுப் பார்வைதான்.

    பாவேந்தர் பாரதிதாசனைப் பாராதவர்கள் அவர் புதல்வரான மன்னர்மன்னனைப் பார்த்தால் பாவேந்தர் தோற்றத்தில் இப்படியேதான் இருப்பார் என்று புரிந்து கொள்ளலாம்.

    பாரதிதாசனைப் பிரதியெடுத்தது போன்ற மன்னர்மன்னனின் தோற்றம் பாரதிதாசனைப் பார்த்தவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தும்.

    கொள்கையில் மட்டுமல்லாமல், எழுத்து, பேச்சு, இதழியல் ஆர்வம் என அனைத்திலும் தம் தந்தையைப் போன்றே வாழ்நாள் முழுதும் பிடிப்புக் கொண்டிருந்தார்.

    1944இல் முரசு என்றொரு கையெழுத்து இதழ் நடத்தினார். மன்னர்மன்னனின் முரசு மன்னர் முரசாக இல்லாமல் மக்கள் முரசாகத்தான் ஒலித்தது. மொழிப் பற்று தேவை என்பதை அந்தக் கையெழுத்து இதழ் முரசறைந்து பேசியது.

    அது மட்டுமல்ல, வாழ்வில் அவசியம் கைக்கொள்ள வேண்டிய பற்பல விழுமியங்களை அது முன் நிறுத்தியது. முக்கியமாக இந்திய தேசத்தின் விடுதலைக்காக அது அச்சமற்றுத் துணிச்சலாக ஓங்கிக் குரல்கொடுத்தது.

    மோசிகீரனார் முரசு கட்டிலில் அயர்ந்து துயின்றபோது, அந்தத் தமிழ்ப் புலவருக்குக் கவரி வீசும் பெருந்தன்மை சங்ககாலத்தைச் சார்ந்த தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனுக்கு இருந்தது எனத் தமிழ் இலக்கிய வரலாறு சொல்கிறது.

    ஆனால் மன்னர்மன்னனின் பத்திரிகையான முரசை சகித்துக் கொள்கிற சகிப்புத் தன்மை பிரஞ்ச் அரசுக்கு ஒருசிறிதும் இருக்கவில்லை. மன்னர்மன்னன் அரசுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து எழுத்தில் வெளியிட்டு வருகிறார் என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

    கவிஞர் தமிழ்ஒளியுடன் இணைந்து மன்னர்மன்னன் அந்த இதழை வெளியிட்டு வந்ததால், தமிழ் ஒளிமேலும் குற்றம் சாட்டப்பட்டது.

    இருவரில் மன்னர்மன்னனுக்கு அப்போது பதினான்கு வயதுதான் என்பதால் அவர் தண்டனையிலிருந்து தப்பினார். அதன்பின் கோபதி என்ற தம் இயற்பெயரை மாற்றிக் கொண்டு மன்னர்மன்னன் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.

    இப்படி ஒருமுறையல்ல, பலமுறை மன்னர்மன்னன் மீது குற்றம் சாட்டப்படுவதும் அவர் நீதிமன்றம் செல்வதும் வழக்கமாயிற்று. எதன் பொருட்டும் மன்னர்மன்னன் தம் துணிச்சலை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை.

    1947 இல் பிரஞ்ச் ஆட்சியினரை எதிர்த்து மாணவர் இயக்கங்கள் நடைபெற்றன. ஏற்கெனவே தீராத விடுதலை வேட்கை கொண்டிருந்த மன்னர் மன்னன், அந்த இயக்கங்களில் தீவிரமாய்ப் பங்கு கொள்ளலானார். பல ஊர்வலங்களுக்கு அவர் தலைமை வகித்தார்.

    அண்ணாதுரை தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநிலக் கிளையை 1949இல் தோற்றுவித்த ஐவரில் தமிழறிஞர் மன்னர்மன்னனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் கிருஷ்ணன்


    1954இல் புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்க வேண்டும் என ஒரு பேரியக்கம் உருவாயிற்று. விறுவிறுவென்று பரவிய அந்த இயக்கத்தில் மனம்விரும்பிப் பங்கேற்று அந்த இயக்கத்திற்கு வலிமை சேர்த்தார் மன்னர் மன்னன். இன்று புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்குவதற்கு மன்னர் மன்னனும் ஒரு காரணம் எனலாம்.

    1965இல் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தோன்றியது. தீ பரவுவதுபோல் எல்லா ஊர்களிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் பேரணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

    அந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றார் மன்னர்மன்னன். அரசு அவரைக் கைது செய்தது. மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பொருட்டு மன்னர்மன்னன் 45 நாள் சிறைவாசம் செய்ய நேரிட்டது.

    சிறைவாசத்தை அவர் பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அதன்பொருட்டு அவர் தனிப் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

    தமிழ் முரசு இதழில் துணையாசிரியர், வானம்பாடி என்ற சிறுவர் இதழின் ஆசிரியர், வழிகாட்டி என்ற சமுதாயச் சீர்திருத்த இதழின் ஆசிரியர் என இவரது இதழியல் பணிகள் இன்னும் பல.

    வாழ்நாள் முழுதும் ஏராளமான வார மாத இதழ்களில் பொதுவாகவும் தம் தந்தையின் இலக்கியம் தொடர்பாகவும் நிறையக் கட்டுரைகள் எழுதி வந்தார். பல மாத இதழ்களின் தீபாவளி மலர்களை இவரது கட்டுரைகள் தொடர்ந்து அலங்கரித்தன.

    சுயமரியாதை நிறைந்த இவர் எந்தப் பெருமையையும் தேடிச் செல்லவில்லை. என்றாலும் பல பெருமைகள் தாமே இவரைத் தேடிவந்தன.

    தமிழ்நாடு தமிழ்க் கவிஞர் மன்றக் கேடயம், பாரதி நூற்றாண்டு விழாப் பட்டயம், இயற்றமிழ்ச் செல்வர் பட்டம் போன்ற பல பெருமைகளை இவர் பெற்றார். உயர்தரத் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த மரபுக் கவிஞரும் கூட. தம் தந்தையான பாரதிதாசனைப் போலவே ஓசை நயத்தோடு இலக்கணம் பிறழாமல் மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றல் நிறைந்தவர். பல கவியரங்கங்களில் பங்கு பெற்றிருக்கிறார்.

    மேடைகளில் தங்கு தடையின்றிப் பழந்தமிழ் இலக்கியம் குறித்தும் பாவேந்தர் இலக்கியம் குறித்தும் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசக் கூடிய சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்.

    பாரதிதாசனைப் பற்றி யாரும் அறிந்திராத புதிய புதிய தகவல்களைத் தம் பேச்சினிடையே அவர் சொல்லிக் கைதட்டல் பெறுவதுண்டு.

    மன்னர்மன்னன் பலதுறை சார்ந்து மொத்தம் பதினாறு நுல்களை எழுதியிருக்கிறார். பழந்தமிழில் மட்டுமல்லாமல், நவீன இலக்கியத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடாகப் பற்பல சிறுகதைகள் எழுதினார். அவை `நெஞ்சக் கதவுகள்` என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.

    கச்சிதமான வடிவ நேர்த்தியோடு கூடிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

    நாடக ஆசிரியர். பற்பல வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். நாடக நடிகரும் கூட.

    புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். பின்னர் சென்னை வானொலி நிலையத்திலும் பணியாற்றினார். தம் இருபதாண்டு கால வானொலிப் பணியில் பல உயர்பதவிகளை வகித்தார். வானொலி மூலம் தமிழறிஞர்கள் பலரின் புலமை வெளிப்படக் காரணமாக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    `கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்` என்ற தலைப்பில் தந்தையைப் பற்றி எழுதி தமிழக அரசின் பரிசைப் பெற்ற வாழ்க்கை வரலாற்று நூலைத் தம் மனைவி திருமதி சாவித்திரியின் நினைவுக்குத்தான் காணிக்கை ஆக்கியிருந்தார். பாவேந்தர் பற்றிய படிக்கப் படிக்கத் திகட்டாத அழகிய சொற்சித்திரம் அது.

    பாரதிதாசனின் இலக்கியம் குறித்து அவர் எழுதிய `பாவேந்தரின் இலக்கியப் பாங்கு` என்ற நூல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது. புதுவை சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகளை `நிமிரும் நினைவுகள்` என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

    தம் தந்தையின் புகழைப் பரப்பும் பணியில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டிருந்தார். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பாரதிதாசனின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவர முயற்சிகள் மேற்கொண்டார்.

    `பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம்` என்றெல்லாம் பாரதிதாசனைப் பற்றிப் பற்பல நூல்களை எழுதினார். பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள உறவு பற்றி `பாட்டுப் பறவைகள்` என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார்.

    இவரது தமிழ்ப் புலமைக்காக இவர் பெற்ற விருதுகளும் பரிசுகளும் பற்பல. புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது, திரு.வி.க விருது போன்றவை அவற்றில் சில.

    தொண்ணூற்றிரண்டு வயது நிறைவாழ்வு வாழ்ந்தவர் மன்னர் மன்னன். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் எழக் காரணமாக இருந்தார். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் இவரே.

    பாவேந்தர் நினைவுகளின் தொகுப்பாக மன்னர்மன்னன் எழுதிய பல நூல்களில் ஒரு நூலின் தலைப்பு `குயில் கூவிக்கொண்டிருக்கிறது` என்பது. தம் தந்தையின் பெருமையை மன்னர்மன்னன் என்ற குயில் தொடர்ந்து கூவிக் கொண்டிருந்தது. புதுச்சேரியில் வாழ்ந்துவந்த மன்னர்மன்னன் தம் 92ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

    `மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை எந்நோற்றான் கொல்எனும் சொல்` என்ற திருக்குறளின் விளக்கமாக அமைந்த வாழ்வு மன்னர்மன்னனுடையது. இலக்கியத் தந்தையரை வாரிசுகள் எப்படிப் போற்றவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் தமிழறிஞர் மன்னர்மன்னன் எனலாம்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×