என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

குகனுக்கு காட்சி கொடுத்த திருச்செந்தூர் முருகன்!
- ராமருடன் இணைந்து புகழ்பெற்ற குகன் பல்வேறு சிறப்புகளை கொண்டவர்.
- ஒரு கால கட்டத்தில் ராமர் மீதான நினைவு குகனை ஆக்கிரமித்தது.
கம்ப ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களில் குகன் பாத்திரம் மிகவும் வித்தியாசமானது. வலுவானது. ராமருடன் இணைந்து புகழ்பெற்ற குகன் பல்வேறு சிறப்புகளை கொண்டவர்.
ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல கங்கை கரைக்கு வந்தபோது அவரை குகன் வரவேற்று அழைத்து சென்றார். கங்கை ஆற்றின் கரையில் சிருங்கிபேரம் என்ற இடத்தை தலைமை இடமாக கொண்டு குகன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
குகனின் மூதாதையர்கள் மலைவாழ் இன மக்களில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். அவர்கள் வேட்டுவர் குலத்தினர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள்தான் கங்கை கரையில் உள்ள மலைவாழ் இன மக்களுக்கு அரசர்கள் போல திகழ்ந்தனர்.
எனவே கங்கை கரையோரத்தில் குகன் மூதாதையர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. பாரம்பரியமாக அவர்களுக்கு சிருங்கிபேரத்தில் மிக பிரமாண்டமான அரண்மனை இருந்தது. அங்கு அவர்கள் முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்து வழிபட்டு வந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
கங்கை கரையோரத்தில் ஏராளமான மலைவாழ் இன மக்கள் உள்ளனர். அவர்களில் இவர்கள் பில் என்ற உயர்ந்த வகையை சார்ந்தவர்களாக கருதப்பட்டனர். எந்த செயலை தொடங்கினாலும் முருகா... என்று சொல்லி விட்டு தான் அவர்கள் தங்கள் பணியை தொடங்குவார்கள்.
அந்த அளவுக்கு அவர்களுக்கு முருகன் மீது பக்தி இருந்தது. "ஓம் முருகா" என்று ஒரு தடவை சொன்னாலே பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் நிலவியது.
குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஓம் முருகா என்று சொல்லி வந்தால் பிறவிப் பெருங்கடலை மிக எளிதாக கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்பட்டது. இதனால் இந்த வேட்டுவர் இன மக்கள் வாழ்வியல் நடைமுறைகள் முழுக்க முழுக்க முருக கடவுளை சார்ந்தே இருந்தது.
அதனால்தான் அந்த வேட்டுவர் குல மக்கள் தங்களது வாரிசுகளுக்கு முருகனின் பெயரையே சூட்டி அழைத்தனர். அவர்களில் ஒருவராகதான் குகன் இருந்தார். குகையில் முருகனை வழிபட்டதால் இந்த பெயர் முருகனுக்கு ஏற்பட்டதாக சொல்வார்கள்.
குகன் வேட்டுவர் குல தலைவனாக இருந்த போது கங்கை கரைகளில் முருக வழிபாடு உச்சம் பெற்று இருந்தது. இதை ராமனின் மூதாதையர்கள் அறிந்து இருந்தனர். எனவேதான் அவர்கள் ராமரை குகன் வரவேற்று உபசரிப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கங்கை கரையில் ராமரை சந்தித்த குகன் அவரை தனது இல்லத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். ராமர், சீதை, லட்சுமணன் மூவருக்கும் உணவாக தேனும், மீனும் கொடுத்து உபசரித்தார். அவரது அன்பிலும், பாசத்திலும் ராமபிரான் உருகிப் போனார்.

ராமருக்கு தேவையான ஒவ்வொன்றையும் குகன் பார்த்து பார்த்து செய்தார். அதனால்தான் ராமாயணத்தில் குகனை "தாயினும் நல்லான்" என்று கம்பர் புகழ்ந்து பாடி இருப்பார். சிருங்கிபேரத்தில் இருந்த சில நாட்களிலேயே ராமரின் உள்ளத்தில் குகன் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். அதனால்தான் குகன் பற்றி சொல்லும்போது, "நாங்கள் குகனோடு ஐவரானோம்" என்று ராமர் சொன்னதாக கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாள் விருந்துக்கு பிறகு சிருங்கி பேரத்தில் இருந்து கங்கையை கடந்து காட்டுக்கு செல்ல ராமர், லட்சுமணர், சீதைக்கு தனது படகுகளை குகன் கொடுத்து உதவினார். அதோடு அடர்ந்த காட்டுக்குள் சென்று ராமரையும், சீதையையும் விட்டு விட்டு வந்தார்.
சிறிது நாட்கள் கழித்து ராமரை தேடி பரதன் வந்தார். அவர் குகனிடம் ராமரை காட்டுக்குள் எங்கு அழைத்து சென்றாய் என்று கேட்டார். இதை கேட்டதும் குகனுக்கு சந்தேகம் வந்து விட்டது. ராமரை கொல்வதற்காக ரகசிய திட்டத்துடன் பரதன் வந்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்.
எனவே பரதனுடன் போர் நடத்த ஆயத்தமானார். ஆனால் அதன் பிறகு பரதனின் நல்ல குணம் குகனுக்கு தெரிய வந்தது. பரதனுக்கும் அவர் உதவி செய்தார்.
14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமரை பிரிந்த பிறகு அவரது நினைவோடு குகன் வாழ்ந்து வந்தார். ராமர் எப்போது திரும்பி வருவார்? அவரை எப்போது பார்க்க போகிறோம்? என்று ஏங்கி தவித்து போனார்.
ஒரு கால கட்டத்தில் ராமர் மீதான நினைவு குகனை ஆக்கிரமித்தது. உணவு உண்ணாமல் எப்போதும் ராமா.... ராமா... என்று சொல்லியபடியே இருந்தார். தூக்கமும் இல்லாமல் போய் விட்டது. இதனால் அவரது உடம்பு மெலிந்து செயலிழக்க தொடங்கியது.
குகனின் உதடுகள் மட்டும் ராமா... ராமா... என்று சொன்னபடியே இருந்தன. ராமரை பார்ப்பதற்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று குகன் வேண்ட தொடங்கினார். குறிப்பாக தனது குல தெய்வமான முருகனிடம் மன்றாடி வேண்டினார்.
குகனின் வேண்டுதலை கேட்ட முருகனின் இரு சக்திகளில் ஒருவரான வள்ளிக்கு இரக்கம் ஏற்பட்டது. குகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வள்ளிதேவி முடிவு செய்தாள். குகன் ராமா... ராமா... என்று புலம்பியபடி இருப்பதை முருகனுக்கு காட்டினார். இதனால் குகன் மீது முருகனுக்கும் இரக்கம் ஏற்பட்டது.
அப்போது முருகனை பார்த்து வள்ளிதேவி, "சுவாமி இவர் ராமர் மீது நிகரற்ற பாசம் வைத்திருக்கிறார். அதே சமயத்தில் இவரது குல தெய்வம் நீங்கள்தான். உங்களது திருப்பெயர்களில் ஒன்றைதான் அவர் தாங்கி இருக்கிறார். ஆகையால் அவரை காப்பாற்றுங்கள். அவரது ஆசையை நிறைவேற்றி வையுங்கள். உங்களையே நம்பி இருக்கும் வேட்டுவர் இன தலைவனை கைவிட்டு விடாதீர்கள்" என்று கோரிக்கை விடுத்தாள்.
அப்போது அருகில் இருந்த தெய்வானையும் அதை ஆமோதித்தார். குகனுக்கு எந்த வழியிலாவது உதவி செய்யுங்கள் என்று தெய்வானையும் கேட்டுக் கொண்டாள். வள்ளி-தெய்வானையின் இரக்கம் மிகுந்த தாய் உள்ளத்தை முருகப்பெருமான் புரிந்து கொண்டார்.
குகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரது மனம் தீர்மானித்தது. அதே சமயத்தில் முருகப்பெருமானுக்கு மற்றொரு யோசனையும் எழுந்தது. குகன் ராமரைதானே பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படி இருக்கும்போது நாம் காட்சி கொடுத்தால் குகன் மனம் திருப்தி அடையுமா? என்று யோசித்தார்.
அடுத்த வினாடி அவர் மனதில் மற்றொரு மாற்று திட்டம் தோன்றியது. அதன்படி முருகப்பெருமான் ராமனாக மாற முடிவு செய்தார். ராமனாக மாறி விட்டார். அவர் கையில் இருந்த வேல் மறைந்து வில் தோன்றியது.
அவரது இரு சக்திகளான வள்ளியும், தொய்வானையும் சீதையாகவும், லட்சுமணராகவும் உருவம் மாறினார்கள். அவர்கள் மூவரும் சாட்சாத் ராமர், சீைத, லட்சுமணர் போலவே இருந்தனர். அந்த கோலத்தில் குகன் முன்ப 3 பேரும் தோன்றி காட்சி அளித்தனர்.
இதை கண்டதும் குகன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமா வந்து விட்டாயா? என்று கண்ணீர் விட்டு கதறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஓடி சென்று ராமர் வடிவில் இருந்த திருச்செந்தூர் முருகனின் கால்களில் விழுந்து வணங்கினார்.
குகனை வாரி அணைத்த முருகப்பெருமான் அவனை ஆறுதல் படுத்தினார். குகனே கவலைப்படாதே... என்னை நினைத்து நீ வருந்தக் கூடாது... நீ வருந்தி... வருந்தி... உன் உடல்நலத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறாய்? இனி உடல்நலத்தை பார்த்துக் கொள் என்று முருகன் தேற்றினார்.
அது மட்டுமின்றி குகனிடம் அவர், "எங்களுக்கு இன்னும் சிறிது காலத்துக்கு வனத்தில் முக்கிய பணிகள் உள்ளன. அதை செய்து முடிக்க இன்னும் காலம் கைகூடி வரவில்லை. வெகுகாலம் அதற்காக நாங்கள் காட்டுக்குள் இருக்க வேண்டும். அதுவரை நீ எங்களுக்காக இப்படி மனமுருகி கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உன் உடல்நலத்தை பார்த்துக் கொள்" என்றார்.
மேலும், "வனவாசம் முடிந்ததும் நாங்கள் இங்குதான் திரும்பி வருவோம். உன் இல்லத்தில் சிறிது நாட்கள் இருப்போம். அதன் பிறகு நீ எங்களுடன் அயோத்திக்கு வரலாம்" என்று ராமர் வேடத்தில் இருந்த திருச்செந்தூர் முருகன் அருளினார். இதை கேட்டதும் குகன் மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெற்றான்.
இனி கவலைப்படாமல் இருப்பதாக உறுதியும் அளித்தான். அவனுக்கு ஆசி வழங்கிய முருகப்பெருமான் வாழ்த்தி விட்டு விடைபெற்றார். அதன் பிறகு குகன் நிம்மதியாக வாழ்ந்தான் என்று புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் புராணத்திலும் குகனின் இந்த கதை சுவாரசியமாக இடம் பெற்றுள்ளது. திருச்செந்தூர் புராணத்தில் இதுபற்றி இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில்....
சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும்
காட்டிஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும்
கொடுத்து வேத
மந்திரக் குகச் சுவாமி என்னவும்
வாய்த்தது பேர்
குகனைக் காத்ததால் குகசுவாமி என்று
பேர் வாய்த்ததோ....
என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் யுகங்களை கடந்த திருச்செந்தூர் முருகன் செய்து இருக்கும் அற்புதங்கள் நமக்கு தெரிய வருகிறது.
இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.






