என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நல்லதே நடக்கும்!
- 'நல்லதுக்குக் காலமில்லை' என்கிற வாசகமும் நமது வாழ்வில் அன்றாடம் பழகிப்போன ஒன்றாக ஆகி விட்டது.
- சில அதிர்ஷ்டங்கள் இல்லையென்றால், அவனுக்கு நற்பலன்கள் விளைவதே இல்லையே! அது ஏன்?".
'நல்லது செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள அருமை வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
வாழ்க்கையில் எவ்வளவு முயன்று நல்லது செய்தாலும் அதற்குப் பிரதிபலனாக நல்லது நடக்காமல், பொல்லாததே நடக்கிறதே! அதற்கு என்ன செய்வது? என்று அன்றாடம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்?. ஆம்! என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்காகத் தான்!. " நல்லதுக்குப் பொல்லாப்பு!" என்கிற வாசகம் பலருக்கு இயல்பாகவே நடந்துவரும் செயலாக மாறிப்போய் விட்டது. அதனால்தான் 'நல்லதுக்குக் காலமில்லை' என்கிற வாசகமும் நமது வாழ்வில் அன்றாடம் பழகிப்போன ஒன்றாக ஆகி விட்டது.
பொதுவாகவே, "தினை விதைத்தவன் தினை அறுப்பான்! வினை விதைத்தவன் வினை அறுப்பான்!" என்கிற கோட்பாடு, 'நல்லது செய்தால் நல்லது விளையும்! தீயது செய்தால் தீயதே விளையும்!' என்பதை விளக்க வந்த உறுதியான வாசகமாகும். இதில் இம்மியளவு பிசகு நடந்தாலும், உலகின் இயங்கியல் கோட்பாட்டில் தவறு உண்டாகிக், கீழது மேலாக மேலது கீழாக எல்லாமே தலைகீழாக மாறிப்போகும்; வாழ்வியல் நியதி இப்படி இருக்கையில், உலகியலின் நடப்பியல் நியதி வேறு மாதிரி இருக்கிறதே! என்ன செய்ய? என்று சிலர் கேட்கலாம். ஒரு திரைப்படப் பாடலில், நன்மை செய்து துன்பங்களையே பரிசாகப் பெறும் ஒரு நல்லமனிதன், பகவான் கண்ணனைப் பார்த்து, 'நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்' என்று பாடுவதாக ஒரு வரி வருகிறது. நன்மைக்குப் பலன் தீமையும் துன்பமும் என்றால், எதற்காக நல்லவராக வாழவேண்டும்?. எதற்காக நன்மைகளையே செய்யவேண்டும்? என்கிற கேள்விகள் நமக்குள் இயல்பாக எழத்தானே செய்யும்?.
மனிதன் நல்லவனாக வாழ்வது என்பது, அவன் செயலில் மட்டும் நல்லது செய்வது என்பதை வலியுறுத்துவதற்காக மட்டுமன்று. அவன் இயல்பிலேயே அன்பு மிக்கவனாக, கருணையும் கனிவும் செறிந்தவனாகவும், எப்போதும் நேர்முறைச் செயலூக்கம் வாய்ந்தவனாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். இவ்வகை நற்குணங்கள் மனிதனை, தாராள மனமுள்ளவனாகவும், சுயநல குணம் இல்லாதவனாகவும், பொதுநல அக்கறையோடு, உலகில் உடன் வாழும் உயிரினங்கள் அனைத்தினோடும் உயிர் இரக்கம் மிக்கவனாகவும் மாற்றி விடுகின்றன. பொது நலத் தொண்டே நற்தொண்டு என்று ஆகிப்போனால், விளைவுகள் சுயநலமற்றவையாக இருக்கும் போது, நன்மை தீமைகளைப் பற்றி மனிதன் ஏன் கவலைப்பட வேண்டும்?. அதனால்தான் கீதை, 'கடமையைச் செய்! பலனை எதிர் பாராதே!' என்று கட்டளை வாசகம் செப்புகிறது.
ஒரு குருநாதரிடம் ஒரு சீடன் ஒரு கேள்வி கேட்டான். "குருநாதரே! ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவன் எவ்வளவு விருப்பத்துடன் அடுத்தவர்களுக்கு அளவற்ற நன்மைகள் செய்தாலும், அவனுக்கு எனச் சில அதிர்ஷ்டங்கள் இல்லையென்றால், அவனுக்கு நற்பலன்கள் விளைவதே இல்லையே! அது ஏன்?".
"நல்லவன் எந்தச் சூழ்நிலையிலேயும் வீழ்வதே இல்லை. 'நல்லவன் வாழ்வான்!'என்பதே ஆகச் சிறந்த வாசகம். நற்காரியங்கள் ஆற்றும்போது, இடையிடையே சிறு சிறு தடைகள், பின்னடைவுகள் தோல்விகள் ஏற்படத்தான் செய்யும். அவையெல்லாம் தற்காலிகமானவையே தவிர நிரந்தரத் தோல்விகள் அல்ல; இதை விளக்க உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேள்!" என்று கதையை ஆரம்பித்தார் குருநாதர்
ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். சிந்தனை செயல் அனைத்திலும் அடுத்தவரது நன்மையையே கவனத்தில் வைத்துக்கொண்டு அவர் செயலாற்றி வந்தார். ஊர்மக்கள் அனைவரும் அவர்மீது மட்டில்லாத மரியாதையும் அன்பும் வைத்திருந்தனர். அவரது நல்ல குணத்திற்கு, அவர் இறப்பிற்குப் பின்னர், மேலோகத்தில் சொர்க்கத்திற்கே போவார்; அங்கே அவர் சுகமாக வாழ்வார் என்று ஊர்மக்கள் ஒருமனதாகப் பேசிக் கொண்டனர். ஒருநாள் அந்த நல்ல மனிதர் காலமாகி விட்டார். நேராக மேலுலகம் புகுந்தார்.
சுந்தர ஆவுடையப்பன்
அங்கே மேலுலக நுழைவு வாயிலில் ஒரு தேவதை பரபரப்பாகக் கணினி போன்றதொரு கருவியோடு அமர்ந்திருந்தார். அவர்தான் மேலுலக வரவேற்பு அதிகாரி. மேலே வருகிற மனித ஆத்மாக்களின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்த்து, அவற்றிற்கு சொர்க்கமா? நரகமா? என்று முடிவு சொல்லி அனுப்பி வைக்கும் பொறுப்பானவர். நமது நல்ல மனிதர் அந்த வரவேற்பாளர் முன் நின்ற போது, வேறு ஏதோ வேலைப் பரபரப்பில், இவரைப்பற்றிய புண்ணியக் கணக்குகளை அந்தத் தேவதை சரிவரப் பார்க்கவில்லை. அவரைக் கண்ணை மூடிக்கொண்டு நரகத்திற்கு அனுப்பி வைத்துக் கணக்கை முடித்தது.
நமது நல்ல மனிதருக்கு சொர்க்கமென்ன? நரகமென்ன? இரண்டும் ஒன்றுதான். நரகத்திற்குள் சென்று வழக்கம்போலத் தம்மால் முடிந்த நல்ல செயல்களை அடுத்தவர்களுக்கு முயன்ற வரை செய்து வந்தார். ஒருமாதம் ஆயிற்று; நரகத்தில் குழப்பம் பெருகிப் புயலாய் வீசத் தொடங்கியது. நரகத்தின் தலைவனாக இருக்கிற பூதம், நமது நல்ல மனிதரை அழைத்துக்கொண்டு, பாவ புண்ணியக் கணக்குப் பார்க்கும் வரவேற்பு அதிகாரியிடம் வந்தது. "என்ன கணக்குப் பார்த்து, இவரை நரகத்திற்கு அனுப்பி வைத்தாய்?.
இவர் நரகத்திற்கு வந்த இந்த ஒருமாதத்தில் நரகத்தை நரகமாக நடத்த என்னால் முடியவில்லை. நரகத்தில் பார்க்கிற மனிதர்களையெல்லாம் இவர் அன்பொழுகப் பார்க்கிறார்; கருணையோடு கட்டித் தழுவுகிறார். அவர்களது வலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறார்; பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆறுதலாய் ஏதாவது நாலு வார்த்தைகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவரது செயல்களில் மயங்கி நரகர் அனைவரும் நல்லவர்களாக மாறிவிடுவார்களோ என்கிற அச்சம் இப்போது என்னைப் பற்றிக் கொண்டு விட்டது. ஒழுங்கு மரியாதையாக இவரைச் சொர்க்கத்தில் போட்டுவிடு!; அப்போது தான் என்னால் நரகத்தில் என்னுடைய வேலையை நரகத்தனமாக நான் செய்ய முடியும்!" என்று கூறி, நமது நல்ல மனிதரை சொர்க்கத்தில் தள்ளிவிட்டு, நரகத்தை நோக்கி நடந்தது நரகத்தின் தலைவனான பூதம்."
குருநாதர் இப்போது சீடனைப் பார்த்து மேலும் கூறினார், " நீ நல்லவனாக, நல்லதே செய்துவந்தால், சில இயந்திரக் கோளாறு அல்லது தேவதைக் கோளாறு காரணமாக நரகத்திற்கே மாறிச் செல்ல நேர்ந்தாலும், நரகத்தின் தலைமைப் பூதத்தால் நீ சொர்க்கத்திற்கு நல்லபடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவாய். உண்மை என்றும் தோற்றுப் போகாது!; நன்மை என்றும் அழிந்து போகாது. இந்த வகையில் நன்மை வாழ்வதற்குத் தீமையும் உறுதுணையாக நிற்கும்!". குருநாதர் சீடனிடம் கூறிய கதை, மேலோகம் வரை சென்று நல்லது செய்தவருக்கு நியாயம் பெற்றுத் தந்தாலும், அது பூலோகத்திலேயே நல்லவருக்கு மானுடப் பிழைகளால் நிகழும் சில தீமைகளுக்கும் தீர்வுகள் கிட்டும் என்கிறது.
நற்செயல்கள் செய்வது, மனிதரை முழுமை மனிதராய்த் தன்னிறைவு பெற்றவராக மாற்றுகிறது. மனமெங்கும் அன்பு பெருகித் ததும்பியிருந்தால்தான் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வு பெருக்கெடுக்கும். அன்புபெருக ஒரு செயலைச் செய்யும்போது. சிந்தையில் முழுமையான திருப்தி நிறைந்து நிற்கும். திருப்தி பரவப் பரவ நாம் வாழ்வதன் உண்மையான பொருள் ஒளிரத் தொடங்கி விடும்.
அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது தேவைப்படுவோருக்குத், தேவைப்படும் தருணத்தில் செய்வது ஆகும். அது அன்புதவியாக இருக்கலாம்; பணம், பொருள் உதவியாக இருக்கலாம்; செயல் உதவியாக இருக்கலாம். எவ்வகை உதவியாக இருந்தாலும் மானுடம் தழைக்க ஆற்றுகிற பிரபஞ்ச உதவியாக அது போற்றப்படும். மற்றவர்களுக்குச் செய்கிற உதவியென்னும் நற்காரியம், தினையளவு இருந்தாலும், அதன் பயனைப் புரிந்து கொள்பவர்கள் அதனைப் பனையளவாக எண்ணிக் கொண்டாடுவார்கள். இந்த உலகம் நன்றியறிதல் மிக்க உலகமாகச் செழித்து வளரும். மக்கள் தனி நபர்களாகத் திகழ்ந்தாலும் இவ்வகை உதவிக் கைமாறுகள் மூலம் உலக மக்கள் முழுவதும் உறவுச் சமூகத்தினராய் மாறி உன்னத நிலையை எட்டுவர்.
சக மனிதர்மீது அன்பு காட்டுவது, கருணை மற்றும் கனிவோடு நடந்துகொள்வது, எந்த எல்லைக்கும் சென்று உதவி செய்வது ஆகிய செயல்கள் மனிதர்களின் உள்ளத்தை நலமுள்ளதாகவும் வலிவுள்ளதாகவும் ஆக்குவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். நம்முடைய மனப் பரபரப்பையும், மன அழுத்தத்தையும் தணிக்கும் செயல்களை நாம் ஆற்றும் நற்காரியங்கள் சாதித்துக் காட்டுகின்றன. நல்ல செயல்கள் நம் மனமெங்கும் நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவதால், மன நலம் மட்டுமல்லாமல் உடல்நலமும் பெருகிச் சிறக்க நற்செயல்கள் உதவுகின்றன.
'நல்லதே செய்ய வேண்டும்!' என்கிற உறுதியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலைச் செய்து முடிக்கும் வரை 'நல்லதே நடக்கும்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு ஈடுபட வேண்டும். நம்பிக்கையற்ற சலனங்களோடு நல்ல செயல்கள் மட்டுமல்ல, கெட்டவற்றைச் செய்தாலும் அது எண்ணியபடி நடவாமல் போய்விடும். எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும்! அதுவும் திண்ணியதாக இருக்க வேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் செயல் முடிவும் நல்லதாகவே வெற்றியை எட்டும். தொடர்ந்து ஏற்படுகிற ஒன்றிரண்டு தோல்விகள் மனம் தளர்ந்துபோக வைத்து விடும். நம்பிக்கை இழப்பு மனிதனைக் குறுக்கு வழிக்குச் செல்லத் தூண்டிவிடும்; ஆனால் அப்போதும் தோல்வியே பரிசாக வந்து நிற்கும். உலகில் எந்தக் குறுக்கு வழியும் வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச் செல்வதில்லை என்பதே கண்கண்ட உண்மை.
''அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்"
என்னும் வள்ளுவ வாக்கு, தொடர்ந்து நல்ல சொற்களைச் சிந்தனைகளாக நெஞ்சில் தேக்கி, நல்லவை நடப்பதற்காகத் திட்டங்கள் வகுத்து ஈடுபட்டால், தீயவையே நிகழாது!; அல்லவை தேய்ந்து போக அறம் பெருகிவிடும். மனிதனை அற மனிதனாக மாற்றிவிடும்.சமூகம் அறச்சமூகமாக மலர்ந்து விடும் என்கிறது.
எந்தவொரு செயலையும் நேர்முறைச் சிந்தையோடு தொடங்குவதே வெற்றியின் முதல்படி. நல்லது செய்தால் தீயதுதானே விளைகிறது என எதிர்மறைச் சிந்தையில் புலம்பித் தவிக்காமல், "நல்லதே நடக்கும்!" என நம்பிக்கையோடு செயல்பட்டால், நல்லதே நடக்கும்! நமக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும்!
தொடர்புக்கு 9443190098