என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மகத்துவம் நிறைந்த இயற்கை மருத்துவம்!
- உடலுக்கென்று இயல்பான கட்டுப்பாட்டு முறைமைகள் உள்ளன.
- உணவு என்பது உடலுக்கான கட்டுமானப் பொருள்.
இயற்கை மருத்துவம் என்பது –உடலையும் மனதையும் சமநிலையில் பராமரித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் உன்னத சிகிச்சை முறையாகும்.
உங்களின் உடல்நலனுக்காக யார் மிகவும் கவலைப்படுவார்கள்? நீங்களா..? இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினரா?
இல்லை... ஒரு நிமிடம் யோசிக்கவும்!
உங்கள் உடல்நலத்துக்காக அதிகமாக கவலைபடுவது வேறு யாரும் இல்லை, –உங்கள் சொந்த உடலே!
ஆம், நீங்கள் தவறான வாழ்க்கை முறை கொண்டிருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் கொண்டவராக இருந்தாலும், கூட, உங்கள் உடல் எப்போதும் உங்களைப் பாதுகாக்கவும் உங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்.
எனவே நமது உடலுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அதனை மதித்து போற்றி உடல் நலத்துக்கு உறுதுணையாக இருக்க வழிகாட்டுவதே இயற்கை மருத்துவம் ஆகும்.
இயற்கை மருத்துவ சிகிச்சையின் நம்பிக்கை என்னவென்றால், உடல் இயற்கையாகவே நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதற்கான சரியான சூழலை நம்மால் உருவாக்க முடியுமானால், உடல் தானாகவே குணமடையும் என்ற கோட்பாட்டை கொண்டது.
உடலுக்கென்று இயல்பான கட்டுப்பாட்டு முறைமைகள் உள்ளன–. அவை உணவு, ஓய்வு, தூக்கம். இவற்றை நாம் முறையாக பின்பற்ற வேண்டும்.
இயற்கை மருத்துவத்தில் மூலிகைகள், சுவாசப் பயிற்சி, யோகாசனம், உளவியல் ஆலோசனை, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்தல், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, உள்ளிட்ட அம்சங்கள் மூலம் இயற்கை முறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.
நோயின் அடிப்படை காரணத்தை நிவர்த்தி செய்வது (Treating the Root cause):
ஒரு இயற்கை மருத்துவர், உடலை தனித்தனி உறுப்புகளாகப் பார்க்க மாட்டார். அது ஒரு முழுமையான அமைப்பாகவே கருதப்படுகிறது.
ஒரு நோயாளர் மைகிரேன் தலைவலியுடன் வருகிறார் எனில், முதலில் கேட்கப்படும் கேள்வி என்னவாக இருக்கும் தெரியமா?
"அவரிடம் ஜீரணம் எப்படி உள்ளது என்று தான் கேட்போம்.?"
ஏனெனில் பெரும்பாலான மைகிரேன் நோயாளிகள், அஜீரண கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆகவே, தலைவலிக்கு மருந்து கொடுக்க மாட்டோம். –வயிற்றை சரி செய்வோம். தலைவலி தானாகவே போய்விடும்.
மற்றொரு எடுத்துக்காட்டு:
சாலையில் ஒரு வாழைப்பழத் தோல் வீசப்பட்டுள்ளது. அதன் மீது ஏராளமான ஈக்கள் மொய்க்கின்றன. நாம் என்ன செய்வோம்?
ஈக்களை கொன்று பிரச்சினையை தீர்த்துவிட முடியுமா?
இல்லை! அது தற்காலிக தீர்வு மட்டுமே.
சரியான தீர்வு – வாழைப்பழத் தோலை அகற்றுவதே.
அதுபோலவே, நோயின் வேர் காரணத்தை கண்டறிந்து, தனிப்பட்ட முறையில் தீர்வளித்து, நீடித்த குணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நமது நோக்கம் நோயாளி குணமடைய வேண்டும் என்பதுடன், நோயாளிகளே தங்களின் மருத்துவராக மாற்றும் வகையிலான தெளிவை கொடுப்பதாகும்.
இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்:
உடல் தானாகவே குணமடையும்,
குணமாக்கும் சக்தி வெளியில் இருந்து வருவதல்ல; உடலுக்குள்ளே உள்ளது.
நோய்க்கு முக்கிய காரணம் – சரியான முறையில் ரத்த ஓட்டம் இல்லாமை மற்றும்– சரியான முறையில் கழிவுகள் வெளியேற்றப்படாமல் உடலிலேயே சேருவது.
டாக்டர் நிஷா
உதாரணம்:
சரியாக ஜீரணமாகாத உணவால் யூரிக் அமிலம் தேக்கமாகுதல்
பித்தம் அதிகரிப்பு காரணமான காமாலை ஏற்படுதல்.
குறுகிய காலத்திற்கு வரும் நோய்கள் என்பது உடலை சுத்தமாக்கும் ஒரு செயல்முறை ஆகும்.
உதாரணம்:
மூக்கோட்டம். வயிற்றுப் போக்கு – இவை உடலிலுள்ள விஷப்பொருட்களை வெளியேற்றும் இயற்கை வழிகள்.
உணவு என்பது உடலுக்கான கட்டுமானப் பொருள். ஆனால் அதன் நன்மைகள் உடலின் உயிர்தன்மை மீது சார்ந்துள்ளது. உணவின்றி உடலுக்கு ஓய்வளிப்பது உடல், மனம் மற்றும் உடலியல் ரீதியாக சுத்தமாக வைத்திருக்கும். நோய்களுக்கு கூறப்படும் காரணம் கிருமிகள் அல்ல, கிருமிகள் நோய் ஏற்பட்ட பிறகு காணப்படுகின்றன. உடல் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், கிருமிகள் இருந்தாலும் நோய்பட வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உட்புற சிகிச்சைகள் குறிப்பாக உணவின்றி உடலுக்கு ஓய்வளிப்பது, வெளிப்புற சிகிச்சைகளைவிட (மசாஜ் போன்றவை) முக்கியமானவை.
நோயாளியின் நம்பிக்கையும் தீர்மானமும் குணப்படுவதற்குத் தீவிரமாக தேவை.
இயற்கை மருத்துவம் பஞ்சமகா பூதங்களின் அடிப்படையில் அமைந்தது:
அதாவது,
ஆகாயம் (Ether / Space)
வாயு (Air)
அக்னி (Fire)
நீர் (Water)
பூமி (Earth)
இவை அனைத்தும் நமது உடலின் இயற்கையான அமைப்புகளை பிரதி நிதித்துவப் படுத்துகின்றன.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் சிகிச்சைக்கும் இவை அடிப்படை அம்சங்கள் ஆகின்றன.
பஞ்சமகாபூதங்களின் சமநிலைதான் நம் ஆரோக்கியத்தின் மையக் கொள்கை!
பஞ்சபூதங்களின் சமநிலை தான் நம் உடல்நலம், மனநலம் மற்றும் ஆன்ம நலனுக்கான அடித்தளம்.
இந்த மூலதத்துவங்களில் ஏதேனும் ஒன்று சமநிலை இழந்தால், அது நோய்களை உருவாக்குகிறது.
இந்த சமநிலை மாற்றத்தை சரி செய்யும் சிகிச்சைகள்:
ஆகாய தத்துவம்:
சிகிச்சை: உணர்வோடு சுவாசிப்பது
விழிப்புணர்வு
கற்பனை முறைகள்
வாயு தத்துவம் :
சிகிச்சை: சுவாசப் பயிற்சிகள்
பிராணாயாமம்
அக்னி தத்துவம்:
சிகிச்சை:
சக்திவாய்ந்த உடற் பயிற்சிகள் இஞ்சி, மிளகு, பூண்டு போன்ற தீவிர உணவுகள்
நீர் தத்துவம்:
சிகிச்சை:
நீர் சிகிச்சை
நீராவி குளியல்.
பூமி தத்துவம்:
சிகிச்சை:
காந்த சிகிச்சை.
மண் சிகிச்சை.
கொரோனா காலத்தில் நாமெல்லாம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால், நாமே உருவாக்கிக் கொண்ட வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் –நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை காரணமாக, ஒவ்வொரு 8 விநாடிக்குமே ஒரு உயிர் பறிக்கப்படுகின்றது!
இதற்காக யாரும் எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லையே?
இது மரபணு காரணமல்ல, நமது கவனக்குறைவு மற்றும் அறியாமையே காரணம். இந்த நோய்கள் தவிர்க்கக்கூடியவை!
வலி ஏற்படும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் விழாதீர்கள்.
எடை கூடும் வரை சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதை ஒத்திவைக்காதீர்கள்.
மலச்சிக்கல் ஏற்படும் வரை தண்ணீர் குடிப்பதை அலட்சியம் செய்யாதீர்கள்.
தோல் நோய்கள் ஏற்படும் வரை குடலை சுத்தம் செய்வதை ஒதுக்கிவைக்காதீர்கள்.
முன்னதாகவே உடல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் (பாஸ்டிங் போன்றவை) மேற்கொள்ள வேண்டும்.
மழை வரும் நேரத்தில் தான் குடை வாங்குவது போல் இருந்து விடாதீர்கள்!
இயற்கை மருத்துவத்தில் இது ஒரு சுருக்கமான அறிமுகம் மட்டுமே.
வரவிருக்கும் வாரங்களில், இயற்கை மருத்துவத்தின் மூலம் பலவகையான நோய்களுக்குரிய சிகிச்சைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
செல்: 88258 05858