என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்ப் பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி!
- மு.வ. பற்றிய அவரின் நெகிழ்ச்சியான நினைவுகள் பதிவாகியுள்ளன.
- பழந்தமிழ் அறிஞரான மு.வ. தாம் எழுதிய புதினங்கள் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் தடம் பதித்தவர்.
ம.ரா.போ. என்று பலரால் பிரியத்தோடு அழைக்கப்பட்டவர் மாபெரும் தமிழறிஞர் ம.ரா.போ. குருசாமி. அவரது பெயரின் விரிவாக்கம் `மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்தலிங்கம் குருசாமி` என்பது. ராஜபாளையம் அருகேயுள்ள மகமது சாகிப் புரம் என்கிற மம்சாபுரம் கிராமம்தான் ம.ரா.போ. குருசாமியின் சொந்த ஊர்.
ஆனால் தம் பெயரைப் பற்றி அவர் விந்தையான விளக்கம் சொல்வார். `பற்பல அறிஞர்களின் ஆராய்ச்சிக் கருத்துகளை நான் ஒப்புக் கொள்வதில்லை. அவர்களின் கருத்துக்கு முற்றிலும் மாறாக நான் கருத்துத் தெரிவிப்பேன்.
எனவே நான் அவர்கள் கருத்துக்கு மாறாகப் போகும் குருசாமி என்பதால்தான் என்னை மா.ரா.போ. குருசாமி என்கிறார்கள்` என்று நகைத்தவாறே சொல்வார் அவர்.
1922 ஜூன் 15-ந் தேதி பிறந்தவர். மறைந்தது 2012 அக்டோபர் 6. தொண்ணூறு வயது நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகன். எப்போதும் கதர் ஆடையே அணிந்த காந்தியவாதி. அவரது உச்சரிப்பு மிகத் திருத்தமாக இருக்கும். சற்றுக் குள்ளமானவர். அவர் மேடையேறும்போது எந்த பந்தாவும் இருக்காது. என்ன பேசிவிடுவார் இவர் என்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
ஆனால் பேசத் தொடங்கிய சில கணங்களிலேயே மழைபோல் ஆய்வுக் கருத்துகளைக் கடகடவென்று கொட்டத் தொடங்குவார். கணீரென்ற குரலில் தம் கருத்துகளை பகுத்தும் தொகுத்தும் அவர் நிறுவும்போது சபை முற்றிலுமாக அவர் வயப்பட்டிருக்கும். கைதட்டவும் மறந்து அமர்ந்திருப்பார்கள் பார்வையாளர்கள்.
பழைய இலக்கியம்தான் அவரது பேசுபொருள். முக்கியமாக சிலப்பதிகாரத்தை அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
*பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் இரண்டாண்டுகள் பயின்றார். பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயிலும் வாய்ப்புப் பெற்றார்.
குருசாமியின் `குரு - சாமி` டாக்டர் மு. வரதராசனார்! ஆம். தமிழறிஞர் மு.வ.வின் மாணவர் அவர். அதில் அவருக்கு அளவுகடந்த பெருமிதம் இருந்தது. தம் ஆசிரியரான மு.வ. பற்றி `மு.வ. முப்பால், மூவா நினைவுகள்` என்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் மு.வ. பற்றிய அவரின் நெகிழ்ச்சியான நினைவுகள் பதிவாகியுள்ளன.
பழந்தமிழ் அறிஞரான மு.வ. தாம் எழுதிய புதினங்கள் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் தடம் பதித்தவர். அவரது மாணவரான குருசாமி தம் ஆசிரியர் அளவு படைப்பிலக்கியம் படைக்கவில்லை என்றாலும் `இட மதிப்பு` போன்ற தலைப்புகளில் ஒருசில சிறுகதைத் தொகுதிகளைத் தம் பங்களிப்பாக வெளியிட்டிருக்கிறார்.
குருசாமி பெரியபுராண அறிஞரான அ.ச. ஞானசம்பந்தனின் மாணவரும் கூட. தமக்குப் பிடித்த மாணவர் எனக் கூறி அ.ச.ஞா அவர் முதுகில் தட்டிக் கொடுத்ததுண்டு. அ.மு. பரமசிவானந்தம், துரை அரங்கனார் போன்ற பேரறிஞர்களிடமும் தமிழ் பயிலும் வாய்ப்பு ம.ரா.போ.வுக்கு கிட்டியது.
ஆக பற்பல உயர்நிலைத் தமிழ் அறிஞர்களால் பட்டை தீட்டப் பட்டவன் நான் எனத் தமக்குத் தமிழ் கற்பித்தவர்கள் பெயரையெல்லாம் நன்றியோடு அடிக்கடி நினைவு கூர்வார்.
இளைஞராயிருந்தபோது தமிழ்த் தென்றல் திரு.வி.க.விடம் நெருங்கிப் பழகித் தமிழ் கற்ற பெருமையும் கூட இவருக்கு உண்டு. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானமின் தமிழரசுக் கழகக் கொள்கைகளோடு உடன்பாடு உடையவராயிருந்தார் குருசாமி. தம் அரசியல் சிந்தனைகளுக்கான வழிகாட்டியாக ம.பொ.சி.யையே அவர் கொண்டிருந்தார்.
`ஆழமும் அகலமும்` என்ற தலைப்பில் அவர் ம.பொ.சி. பற்றி நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு பின்னர் புத்தகமாக வெளிவந்தது. சிலப்பதிகாரம் குறித்து ம.ரா.போ. எழுதிய `சிலப்பதிகாரச் செய்தி, சிலம்புவழிச் சிந்தனை` போன்ற நூல்கள் மிக முக்கியமான நூல்கள்.
பத்திரிகையாளராக இருந்த அனுபவமும் ம.ரா.போ.வுக்கு உண்டு. ம.பொ.சி.யின் செங்கோல் இதழில் சிறிதுகாலம் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். கோவையில் இருந்து கலைக்கதிர் என்ற சிறப்பான அறிவியல் இதழ் ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. அந்த இதழில் சிறிதுகாலம் பணிபுரிந்திருக்கிறார். புகழ்பெற்ற பதிப்பாளரான சக்திவை. கோவிந்தனின் சக்தி அலுவலகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றித் தமிழ்த் தொண்டு செய்திருக்கிறார்.
திருப்பூர் கிருஷ்ணன்
தமிழ் சார்ந்து பல்வேறு உயர்நிலைப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். கோவைக் கம்பன் கழகத்தின் துணைத் தலைவராகவும் கோவை நன்னெறிக் கழகத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
*கதரே அணிந்து வாழ்ந்த காந்தியவாதி அவர். காந்தியச் சிந்தனைகளைத் தாங்கிய `சர்வோதயம்` என்ற மாத இதழிலும் பணிபுரிந்திருக்கிறார்.
ஒவ்வோர் இதழிலும் ஒவ்வொரு பக்கத்திலும் காந்திய மணம் கமழும் சர்வோதயம் இதழ் தமிழில் தடம் பதித்த இதழ்களில் ஒன்று. தூய காந்திய வாழ்க்கை வாழ்ந்துவந்த குருசாமியின் பணியால் சர்வோதயம் பெருமை பெற்றது. *அவர் எதையும் மிக நுணுக்கமாக அணுகுபவர். பல சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கையெழுத்து இடும்போது, `ம.ரா.போ. குருசாமி` எனக் கையெழுத்திட்டு அடைப்புக் குறிக்குள் `பேராசிரியன்` என்றுதான் எழுதுவார். பேராசிரியர் என்று ஒருபோதும் எழுத மாட்டார்.
ஏன் என்று கேட்டால், `எனக்கு நானே எப்படி மரியாதை கொடுத்துக்கொள்ள முடியும்? அது பண்பாடில்லையே? மற்றவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் அப்படி எழுதலாம்` என விளக்கமளிப்பார்.
மெத்தப் படித்த படிப்பாளியான அவரிடம் புலமை உண்டு. ஆனால் புலமைச் செருக்கு அறவே கிடையாது.
*கோவை சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் துணை முதல்வராகப் பணிபுரிந்தார். கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதிப்புத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தம்மை வந்து சந்திக்கலாம் என்றும் எந்த சந்தேகத்தையும் கேட்கலாம் என்றும் சொல்வார். ஏராளமான மாணவர் சூழவே அவர் வாழ்ந்தார்.
எந்த நேரத்தில் எந்த மாணவர் வந்து தமிழ் தொடர்பாக எந்த சந்தேகம் கேட்டாலும், அந்த மாணவருக்கு எழுந்த ஐயத்தை நீக்கிவிட்டுத் தான் அடுத்த பணியைப் பார்ப்பார். தமிழ் கற்பிப்பதை ஒரு வேள்விபோல் நிகழ்த்தியவர். தமிழே வாழ்வாக வாழ்ந்தவர்.
வகுப்புக்கு மிகச் சரியான நேரத்தில் வருவது, அன்று எதைக் கற்பிக்கிறாரோ அதை முன்கூட்டியே தம் இல்லத்தில் தயார் செய்து கொண்டு வந்து வகுப்பெடுப்பது, தான் எடுத்த வகுப்பு தொடர்பாக நூலகத்தில் என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என ஒவ்வொரு வகுப்பு முடியும்போதும் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்வது, மாணவர்கள் அச்சமின்றித் தன்னிடம் கேள்வி கேட்கும் வகையில் அவர்களிடம் நட்போடு பழகுவது என்று இவ்விதமெல்லாம் இயங்கிய லட்சிய ஆசிரியர் அவர். ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்.
மாணவர்களுடன் நட்போடு பழகினாலும், கல்வி கற்பிப்பதில் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அவர் என அவரிடம் பயின்ற மாணவர்கள் சொல்கிறார்கள்.
*அவரது பதிப்பாசிரியப் பணி குறிப்பிடத்தக்கது. `கபிலம்` என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தில் உள்ள கபிலர் எழுதிய எல்லாப் பாடல்களையும் தொகுத்து ஒவ்வொரு பாடலுக்கும் உரையெழுதி நூலாக வெளியிட்டார். கோவை கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்பிலும் ம.ரா.போ. குருசாமியின் பங்களிப்பு உண்டு.
சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் என்ற கவிதை நாடகம் இப்போது பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து வரிகளை உள்ளடக்கியது. அந்த நாடக நூலையும் பதிப்பித்துள்ளார் குருசாமி.
*`பாரதியார் ஒரு பாலம், கம்பர் முப்பால்` '(ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவு), வா.செ. குழந்தைசாமியின் கவிதைகள் குறித்து `குலோத்துங்கன் கவிதைகள் ஒரு திறனாய்வுப் பார்வை` என 25-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
சாகித்ய அகாதமியின் `இந்திய இலக்கியச் சிற்பிகள்` வரிசையில் `மாபெரும் தமிழறிஞர்களான மா. ராசமாணிக்கனார் குறித்தும், திரு.வி. கல்யாண சுந்தரனார் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.
பாரதி கவிதைகளைத் தொகுத்து ஓர் ஆய்வுப் பதிப்பு நூல் வெளியிட்டுள்ளார். இவரது இலக்கியக் கட்டுரைகள் பல தொகுப்பு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் இலக்கியச் சுவை, இலக்கியச் சிந்தனை, கம்பர் கலைப்பெட்டகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
*இவரைத் தேடி எண்ணற்ற விருதுகள் வந்தன. அவற்றில் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வழங்கிய பேரவைச் செம்மல் விருது, இளையராஜா அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சேக்கிழார் விருது, கலைஞர் விருது, சென்னைக் கம்பன் கழகம் வழங்கிய பேராசிரியர் ராதாகிருஷ்ணன் விருது, குலபதி முன்ஷி விருது, ஸ்ரீராம் அறக்கட்டளை வழங்கிய பாரதி விருது, ஆதித்தனார் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை. பற்றற்ற ஆன்மிக மனம் படைத்தவர். விருதுகள் அவரைத் தேடி வந்தனவே தவிர, விருதுகளைத் தேடி அவர் ஒருபோதும் சென்றதில்லை.
*முருகப் பெருமானே அவர் வழிபடும் தெய்வம். அவர் முருகனைப் பற்றி மரபுக் கவிதை நூல் ஒன்றை எழுதிய மரபுக் கவிஞரும் கூட. தம் இறுதிக் காலத்தை முருகப் பெருமானின் சிந்தனையில் தோய்ந்தே கழித்தார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் பட்டு எழுத்தில் மட்டுமல்லாமல் பேச்சிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட தமிழறிஞர்களின் வரிசையில் நிச்சயம் மா.ரா.போ. குருசாமிக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. பழந்தமிழ் ஆர்வலர்கள் ம.ரா.போ.குருசாமியின் தமிழ்ப் புதையல்களாக விளங்கும் நூல்களைத் தேடிப் படித்துப் பயனடையலாம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com.