என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

எலும்பை வலுவாக்கும் சோளம்
- ஒரு சோளப்பயிர் எத்தனை விதங்களில் பயன் தரக்கூடியதாக இருக்கிறது.
- நீர்ப்பாசனம் பெருகி கரும்பு விளைச்சலும், நெல் விளைச்சலும் அதிகரித்து விட்டது.
"ஆளு நல்லா சோளத்தட்டைக் கணக்கா நெடு நெடுன்னு வளந்திருப்பான்" என்று ஊர்ப்புறங்களில் சொல்வார்கள். அதாவது சன்னமாகவும், திடமாகவும் உயர்ந்து வளர்ந்திருப்பவனைக் குறிக்கும் சொல்வழக்கு அது. பனை மரம்போல தண்டுக்கு வெளியே விரிந்து வேர்பற்றி வளரும் சோளம். சுமார் பத்தடிக்கும் மேலாக வளரக்கூடியது. அதனால் நல்ல இடைவெளி விட்டே சோளத்தைப் பயிர் செய்வார்கள்.
தேர்ந்த வேளாண்மை செய்யும் பலரும் சோளத்திற்கு ஊடாகப் பச்சைப் பயிறு, அவரை, தட்டை போன்றவற்றையும் விதைத்து விடுவார்கள். சோளத்தின் தோகைகள் நீளம் குறைவாக இருப்பதால் ஊடு பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், காற்றும் போதிய அளவிற்குக் கிடைக்கும். அதுபோக சோளத் தண்டில் கொடி பற்றிப் படரவும் ஏதுவாக இருக்கும். நீளமான சோளத்தட்டைகள் கூரை வேயவும், வேலி படர்த்தவும் உதவும். சோளக் கதிரை ஒட்டிய சுமார் ஒரு அடிநீளத் தண்டுப் பகுதியை அறுத்து ஆற்றில், ஓடையில் மீன் பிடிக்கப் பத்தல் கட்டுவார்கள். நீர் வழிந்தோடும் பகுதியில் துள்ளிக் குதிக்கும் தட்டைப் பின்னலில் விழுந்தால் வழுக்கி மண்குடத்தில் விழும்படிக்குப் பத்தலை சரிவாக அமைத்திருப்பார்கள். அத்தகைய பொறியியல் நுட்பம் மிகவும் நுணுக்கமானது.
காய்ந்த சோளத்தண்டில் ஈர்க்கு எடுத்து அதனைக் கொண்டு தாமரை, மந்தார இலையைத் தைப்பார்கள். இந்த இலைகள் தான் வாழை இலைக் கிடைக்காத ஊர்களில் பந்திக்கு உரிய இலையாக நீண்ட காலம் இருந்தது. இன்றும் கூட மேற்படி இலைகளில் தொன்னை செய்து பிரசாதம் அளிக்கிறார்கள்.
ஒரு சோளப்பயிர் எத்தனை விதங்களில் பயன் தரக்கூடியதாக இருக்கிறது. இதுதான் நம் சமூகத்தின் அளப்பரிய சொத்து. ஒரு முதன்மைப் பயிரின் ஊடாக பல பயிர்கள் வளர்வது, ஒரு பயிரை பல வகைகளிலும் பயன்படுத்துவது போன்றவை தான் சமூகக் கூட்டியக்கத்திற்கு இணக்கமான அடையாளமாக இருக்கும். இன்றைய பணப்பயிர்களில் இத்தகைய பன்முக செயல்கூட்டிசைவைக் காண முடியாது.
அதனால் தான் சமூகம் எந்த நேரமும் கொதிநிலையிலேயே இருக்கிறது. இந்தக் கொதிநிலை தான் கால் பவுன் காதுத் தோடுக்காகக் கிழவியின் கழுத்தை நெறிக்கச் செய்கிறது. தன் சொந்த ஆசிரியையின் வயிற்றில் மாணவனைக் கத்தியால் குத்தச் செய்கிறது. இணக்கப்பண்பானது நமது வேளாண்மையில் இருந்தே தொடங்குகிறது என்பதை மனங்கொள்ள வேண்டும்.
போப்பு
சோள விதையை ஆடி மாதத்தில் விதைத்து விட்டால் மழை வந்து தானாக முளைத்து நன்றாக வளர்ந்து அடுத்து அறுவடைக்கு மட்டும் காட்டிற்குப் போனால் போதும். கதிர் பிடித்து நிற்கும். சோளத்தட்டை மாட்டிற்கு தீவனமாக இருக்கும். தண்டு சற்றே கெட்டியாக இருப்பதால் அடுப்பெரிக்க, குறிப்பாக நெல் அவிக்கப் பொருத்தமானது சோளத்தட்டை. நெல்லினை புழுங்கலரிசியாக மாற்ற வேண்டுமானால் முதலில் ஊறவைக்க வேண்டும். ஊறின பின்னர் ஒருவாசம் எழும். அந்த வாசம் அப்படியே நம் உயிரைக் கிளர்த்தும். ஊறின நெல்லைப் பெரிய அண்டா அல்லது மண்தாழியில் கொட்டி அவிப்பார்கள். அவ்வாறு அவிக்கும் பொழுது, தீ படர வேண்டுமே தவிர நின்று எரிந்து கனன்று கொண்டிருக்கக் கூடாது. ஏனென்றால் நெல்லவிக்கும் பொழுது அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கக் கூடாது.
அவ்வாறு இருந்தால் நெல் நேரடியாகச் சோறு ஆகி விடும். மேல் உமிக்கும் உள்ளே இருக்கக் கூடிய அரிசிக்கும் இடையே ஒரு ஊடல் மட்டுமே நிகழ்ந்து அரிசியும் உமியும் தனியாகப் பிரியும் படிக்கு செயல்பாடு நடக்க வேண்டும். அப்பொழுது தான் நெல்லின் உள்ளடுக்கில் படிந்திருக்கும் ஆற்றல் அரிசிக்கு இடம் பெயர்ந்து புழுங்கல் ஆகும். ஆகவே தான் மேல்பாத்திரத்தில் தீ மட்டும் படர்ந்தால் போதும். அதுவும் ஒரே சீராகப் படர வேண்டும் என்றால் சோளத்தட்டை தான் மிகவும் பொருத்தமானது.
அதேபோல் சோளத்தட்டை மாட்டிற்கு நல்ல தீவனமாக இருக்கும். பிற தானியப் பயிர்களின் தாள்கள் எல்லாம் சன்னமாக கொசகொசவென்று இருப்பதால் மாட்டிற்கு அவைக் கழிசலை ஏற்படுத்தும். ஆனால் சோளத்தட்டைச் சற்றே கெட்டியாக இருப்பதால் அசைபோட்டு மெள்ளுவதற்கு ஏற்றதாக இருக்கும். பசுமாடுகள் சோள நாற்றையும், உழைக்கும் மாடுகள் சோளத்தட்டையையும் விரும்பி உண்ணும். ஏனென்றால் ஏர்உழ, வண்டியிழுக்க எனக் கடுமையான வேலைகளில் இழந்த ஆற்றலை மீட்டுக் கொடுக்கும் உயிர்ப்பாற்றல் சோளத்தட்டையில் உள்ளது. கிராமத்துச் சிறுவர்களுக்கு சோளத்தட்டை தான் கரும்பு. சோளத்தட்டைக் கடித்து உண்டால் அவ்வளவு இனிப்புச் சுவை. சோளமும் இனிப்புச் சுவைதான். ஆனால் சர்க்கரையை ரத்தத்தில் விரைவில் ஏற்றாத மெலிதான இனிப்பு.
நீர்ப்பாசனம் பெருகி கரும்பு விளைச்சலும், நெல் விளைச்சலும் அதிகரித்து விட்டது. சோற்றுக்கு அரிசியும், பலகாரங்களுக்கு, பானங்களுக்கு நாம் சர்க்கரையை அதிகமாகப் பாவிக்கத் தொடங்கி விட்டோம். ஆனால் மறுபுறத்தில் மேற்படி வகையில் சர்க்கரை நம் உடலில் அதிகரித்து விட்டதால் எலும்பின் உறுதித் தன்மையும், பல்லின் உறுதித் தன்மையும் குறைந்து நொறுங்கும் தன்மைக்குப் போய் விட்டது.
நான் சிறுவனாக இருந்த பொழுது பொங்கல் பண்டிகைக்கு எங்கள் வீட்டில் கரும்பினைக் கட்டாக (15 எண்ணிக்கை கட்டு, 20 எண்ணிக்கை கட்டு என்ற வீதமாக விற்பனைக்கு வரும்) வாங்குவார்கள். சேவைப்பணிகள் புரிவோர்க்குக் கொடுத்தது போக வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றரை அல்லது இரண்டு கரும்புகள் பங்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்கே மூஞ்சி தூக்கல், அவனுக்கு ஒரு கணு அதிகம், எனக்கொரு கணு குறைச்சல் பாகப்பிரிவினைத் தகராறுகள் நடக்கும். அப்படிப் போட்டி போட்டு கரும்பினை உண்டோம்.
பொங்கலுக்குக் கரும்பு கடிக்காதவன் அடுத்த ஜென்மத்தில் கழுதையாகப் பிறப்பான்/ பாள் என்று முதியவர்கள் பிறவிப்பயனாகக் கரும்புக் கடியைச் சொல்வார்கள். ஆனால் இன்றோ ரேசன் கடையில் கொடுக்கும் இரண்டு கரும்பைக் கூட கடிக்க நம் பிள்ளைகளுக்கு வலு இல்லை. மிக சர்வ சாதாரணமாக பருவ வயதிலேயே பல் சார்ந்த பிரச்சினைகள் தலைகாட்டத் தொடங்கி விட்டது. சிற்சிறு நகரங்களில் கூட பல் மருத்துவ மையங்கள் வரிசை கட்டத் தொடங்கி விட்டன. அதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பேஸ்டுகள் ஒருபுறம் என்றால் எவ்வித சத்துக்களும் அற்ற உணவுகளும் ஒரு காரணம். மிக முக்கியமாக வாயில் வைத்தவுடன் கரையும்படியாக தாடைகள் அசையாமல் பல்லில் மெள்ளாமல் உண்ணும் முறை மாறி விட்டதும் காரணம்.
இந்தச் சூழலில் தான் சோளப் பயன்பாடு முக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது. சோளத்தட்டை மாட்டின் பல்லினையும், செரிமானத்தையும் பலப்படுத்தி அதன் உழைப்பாற்றலை அதிகரிப்பது போலவே சோளத் தானியத்தை நாம் உண்டால் நம்முடைய எலும்பும், பல்லும் பலப்படும், ஒட்டுமொத்தமான உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். பெருந்தானிய வகையைச் சேர்ந்த சோளம் பிற தானியங்களைக் காட்டிலும் சற்றே இனிப்புச் சுவை உடையது. நிறமும் அரிசியைப் போலவே வெள்ளையாக இருப்பதால் தானிய உணவுக்கு மாற விரும்புவோர் தொடங்குவதற்கு ஏற்றதாக இருக்கும்.
சோளமாவினைச் சப்பாத்தியைப்போல சுட்டு சாப்பிடலாம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குறிப்பாகக் குளிர்காலங்களில் ஐதராபாத், விஜயவாடா போன்ற பெருநகரங்களில் கூடத் தெருவோரங்களில் கடைகளில் விற்கிறார்கள். சுவைக்குச் சுவை, சத்துக்குச் சத்து, விலையிலும் கைக்கு அடக்கமாக இருக்கும். இரண்டு "ஜொன்னா" ரொட்டி 15 ரூபாய் தான். குளிர்காலத்திற்கு ஏற்ப உடலில் வெப்பத்தை ஏற்றும்.
தமிழகத்தில் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் இன்றும் தமது குடும்பத் தேவைக்கு சோளம் விளைவிப்போர் உண்டு. அரை ஏக்கரில் சோளம் விளைந்தால் ஒரு ஆண்டிற்குக் குடும்பத்தின் உணவுத் தேவைக்குப் போக சிறிதளவு பணமாகவும் மீறும். அந்தளவிற்கு செலவு வைக்காமல் நீர்த் தேவையின்றியே மானாவரியில் நல்ல மகசூல் தரக்கூடியது சோளம்.
சோளத்தை ஊற வைத்து ஒன்றிரண்டாக இடித்து சோளச்சோறு சாப்பிடலாம். அதுவே மீந்தால் நீரூற்றி வைத்து மறுநாள் காலையில் மோர் விட்டுக் கரைத்தும் சாப்பிடலாம். உடலுக்கு நல்ல உரம் கொடுக்கும். இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப அரிசிக்குப் பதிலாக சோளத்தைப் போட்டு ஊற வைத்து, ஒன்றிற்கு கால்பாகம் என்ற விகிதத்தில் உளுந்துப் போட்டு அரைத்து தோசையாகச் சுட்டால் திருப்பிப் போடும் போது அதன் நிறமே அள்ளும். அப்படி ஒரு அழகு, அப்படியொரு சுவை.
சோளத்தில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை இருப்பதால் இன்றைய தலைமுறையினருக்கு எலும்பு பலத்திற்கு ஏற்ற உணவு சோளம். தானிய வகைகளில் நெடிதுயர்ந்து சூரியனை நோக்கி வளரும் சோளம், பிற தானியங்களைக் காட்டிலும் வீர்யமிக்கது. எனவே சதை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தின் ஊக்கத்திற்கும் ஏற்றது சோளம்.
சோளக் கதிரை அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள், சோளக்கதிரைச் சுட்டும் சாப்பிடுவார்கள். அது அலாதி சுவை. பச்சை சோளத்தை உதிர்த்து மண் சட்டியில் வறுத்து இடித்து அவலாக்கி உண்பார்கள். அதுவும் தனித்துவமான சுவை.
சோளத்தின் பெருமை சொல்லித் தீராது.
தொடர்ந்து சுவைப்போம் நல்லுணவு.
செல்: 96293 45938






