என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்!
- தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை தான் ம.பொ. சிவஞானத்திற்குச் சிலம்புச் செல்வர் என்ற பட்டம் சூட்டினார்.
- ம.பொ.சி. முயற்சியால் தமிழ் வரலாற்றிலேயே முதன்முறையாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது.
ம.பொ.சிவஞானம் 1906இல் பிறந்து 1995இல் மறைந்தவர். தமது எண்பத்தொன்பது ஆண்டு ஆயுட்காலத்தில் அவர் செய்த தமிழ்ப் பணிகள் ஏராளம்.
அச்சுத் தொழிலாளியாக இருந்து தமிழ் கற்று மாபெரும் தமிழறிஞராக மலர்ந்த பெருமகன் அவர். அவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழை `மழைபோல் பொழியும் சிவஞானம்` என்பதன் சுருக்கம்தான் ம.பொ.சி என்ற பெயர் எனப் பாராட்டியிருக்கிறார்.
எழுத்து, பேச்சு என இரண்டு வகைகளிலும் தமிழ்ப் பணி செய்தார் ம.பொ.சி. அவர் எழுத்திலும் சரி, பேச்சிலும் சரி, மாதுளம்பழத்தில் முத்துக்கள் அடுக்கப் பட்டிருப்பதுபோல், முத்து முத்தான கருத்துகள் நிரல்பட அடுக்கப்பட்டிருக்கும். பகுத்தும் தொகுத்தும் கருத்துகள் மக்கள் மனத்தில் சென்று சேருமாறு பேசக்கூடிய ஆற்றல் மிகுந்த பேச்சாளர் அவர்.
அவர் ஒருமுறை கண்ணகியைப் பற்றிப் பேசிய பேச்சைக் கேட்டுப் பார்வையாளர்கள் கைதட்டவும் மறந்து அமர்ந்திருந்தார்கள். அடுத்துப் பேசவந்தார் திருமதி செளந்தரா கைலாசம். பிரமித்துப் போயிருந்த பார்வையாளர்களைத் தன்வசம் திருப்பியாக வேண்டுமே?
`ம.பொ.சி.யின் மீசை ஏன் நரைத்திருக்கிறது என்ற ரகசியம் இன்றுதான் எனக்குத் தெரிந்தது` எனத் தன் பேச்சைத் தொடங்கினார். பார்வையாளர்கள் திகைப்போடு அவர் பேச்சைக் கேட்கலானார்கள். செளந்தரா கைலாசம் விளக்கினார்:
`இப்படித் தேனொழுகப் பேசினால் அந்தத் தேன் பட்டு மீசை நரைக்காமல் என்ன செய்யும்?`
கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.
தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை தான் ம.பொ. சிவஞானத்திற்குச் சிலம்புச் செல்வர் என்ற பட்டம் சூட்டினார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. ஆயிற்று.
ம.பொ.சி எழுதிய 140 நூல்களில் சிலம்பைப் பற்றி மட்டும் 14 நூல்கள் உண்டு. அவற்றில் `கண்ணகி வழிபாடு, மாதவியின் மாண்பு, கோவலன் குற்றவாளியா?` போன்ற நூல்கள் மிக முக்கியமானவை.
திருப்பூர் கிருஷ்ணன்
ம.பொ.சி. முயற்சியால் தமிழ் வரலாற்றிலேயே முதன்முறையாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை. தலைமை வகித்தவர் டாக்டர் மு. வரதராசனார். தாம் நிறுவிய தமிழரசுக் கழகம் மூலம் தொடர்ந்து ம.பொ.சி. சிலப்பதிகார விழாவை ஆண்டு தோறும் நடத்தி வந்தார்.
ம.பொ.சி. மிகச் சிறந்த பேச்சாளர். பேசும்போது மயில்போல் கழுத்தை அசைத்துக் கொண்டு கண்களைச் சிமிட்டியவாறு அவர் பேசும் அழகே தனி. பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர் பேச்சில் சொக்கிக் கிறங்கி, அவரது அழகிய தமிழின் தீவிர ரசிகர்களாக மாறினார்கள்.
`வள்ளலாரும் காந்தி அடிகளும், வள்ளலாரும் பாரதியும்` போன்ற தலைப்புகளில் ராமலிங்க அடிகள் பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். அவருக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்ததே `வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு` என்ற நூல்தான்.
ராஜாஜியை ஆதரிக்கும் செயல்வீரர்களின் பட்டியல் கல்கியில் வெளியிடப்பட்டது. ம.பொ.சி. பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. மஞ்சள் வண்ணப் பக்கத்தில் அந்தப் பெயர்களை அச்சிட்டபோது கல்கி இப்படி எழுதினார்:
`பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களை பொன்நிற வண்ணக் காகிதத்தில் அச்சிடுகிறோம்.`
தமிழ் வழிக் கல்விக்காகக் குரல்கொடுத்தவர்களில் டி.கே.சி.யைப் போல் ம.பொ.சி.யும் முக்கியமானவர். அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற கருத்தை மகாத்மா காந்தி வலியுறுத்திக் கொண்டிருந்தார். அந்தக் கருத்தையே ம.பொ.சி.யும் ஆதரித்தார்.
பிஎச்.டி. ஆய்வேடு (தமிழ் இலக்கியம் சார்ந்த முனைவர் பட்ட ஆய்வேடு) முன்னர் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டு வந்தது. தமிழ்சார்ந்த ஆய்வு தமிழிலேயே எழுதப்படலாம் என வழிவகை கண்டவர் ம.பொ.சி. தான்.
ம.பொ.சி. பல பத்திரிகைகளை ஆசிரியராக இருந்து நடத்திய இதழியலாளரும் கூட. `கிராமணி குலம், தமிழ் முரசு, செங்கோல்` ஆகிய பத்திரிகைகள் அவரால் தொடங்கப்பட்டவை.
ம.பொ.சி. தீவிர தனித்தமிழை ஆதரிக்கவில்லை.`பிறமொழிச் சொற்கள் தேவைப்படுமானால் அவற்றை எடுத்துக் கொள்ள இடர்ப்பாடு ஒன்றுமில்லை. அதற்குத் தமிழ் இலக்கணமும் இடம் தருகின்றது.` என்பது அவர் கருத்து. ஆனால் தேவைப்படாத இடங்களில் வேண்டுமென்றே பிற மொழிச் சொற்களைத் திணித்துக் கலப்புச் செய்வதை எதிர்த்தார் அவர்.
`பொதுமக்களோடு தொடர்பு கொள்ள விரும்பும் எவரும் தூய தமிழ் வைதிகத்தைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. தமிழ் வளர்ச்சிக்குக் கூட அது தேவைப்படவில்லை. தனித்தமிழ் உணர்ச்சியையும் ஒருவகையில் வரவேற்கலாம். ஆனால் அது பழகு தமிழுக்குப் பகையாகி விடக் கூடாது.` என்கிறார் ம.பொ.சி.
`கலப்பு வேறு. கலப்படம் வேறு. கலப்படம் தவறு. தேவைக்காகக் கலப்பது தவறல்ல.` என்று தன் கருத்தை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
அவர் நடத்திய தமிழ் முரசு இதழ், இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு செய்தது. அந்த இதழில் சிறுகதைகள் வெளிவந்தன. டாக்டர் மு. வரதராசனின் படைப்புகள் வெளிவந்தன. ராஜாஜி போலவே, ம.பொ.சி.யும் சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் ஒரு தொகுதியாகவும் வந்துள்ளன...
ம.பொ.சி.யின் வாழ்வில் ஒரு பெருந்துயரம் நேர்ந்தது. அவரது ஒரே மகன் திருநாவுக்கரசு அகால மரணமடைந்தபோது அவர் அடைந்த சோகம் பெரிது.
ஆனால் அந்த சோகத்திலிருந்து விடுபடவும் தமிழே அவருக்குத் துணை நின்றது. அந்தக் காலகட்டத்தில்தான் `இலக்கியங்களில் புத்திரசோகம்` என்ற தொடரை எழுதினார் அவர்.
அடுக்கு மொழி நடையில் மோகம் கொள்ளாதது இவரது நடையில் தென்படும் தெளிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று தமிழறிஞர் பெ.சு.மணி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ம.பொ.சி ஆதரிக்கவில்லை. தமிழ் எழுத்துக்கும் ஆபத்தா எனப் பதறியது அவர் உள்ளம். பழைய எழுத்துகளே தொடர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
தம் பெயரையே பரிதிமால் கலைஞர் என மாற்றிக் கொண்டவர் சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் தமிழில் இடைக்காலத்தில் புகுந்த வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையை ஆபாச நடை என வர்ணித்தார். அந்தக் கருத்தை ஏற்றார் ம.பொ.சி.
`சாஸ்திரியார் வடமொழியிடம் காழ்ப்பற்றவர். தேவைப்படுமிடத்து வடமொழிச் சொற்கள் கலப்பதை வரவேற்பவர். அதேநேரம் தமிழின் தனித்தன்மையை அழிக்க முயன்ற கலப்படங்களின் நாசவேலையை எதிர்த்தவர்.` என சூரிய நாராயண சாஸ்திரியாரைப் போற்றுகிறது ம.பொ.சி.யின் தமிழுள்ளம்.
ஆலயங்கள் தொடர்பாகவும் அவர் பல முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளார். அர்ச்சனை மொழி தமிழாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தம் தீர்க்கமான கருத்தைப் பதிவு செய்தார்.
`ஆலயங்களில் அருச்சனை தமிழில் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கை நமக்கு உடன்பாடே. ஆனால் இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது முற்றிலும் சமயத் தொடர்புடைய பிரச்னை. ஆட்சிமொழி போதனா மொழிப் பிரச்னை போன்று தமிழ் இனத்தவர் எல்லோருக்கும் உரிய சமூகப் பிரச்னை அன்று. ஆகவே சமய நம்பிக்கையற்றோரும் ஆலய வழிபாட்டைக் கடமையாகக் கொள்ளாதோரும் இந்தப் பிரச்னையில் கலந்துகொள்வது சிவ பூஜையில் கரடி புகுந்தது என்பார்களே, அதுபோலத் தான்...` என இடித்துரைத்தார் அவர்.
சிலம்பில் பல ஆய்வுகளை நிகழ்த்திப் பல முடிவுகளைத் தெரிவித்துள்ளார். கண்ணகி சிலம்பைக் கொடுத்தது மாதவியிடம் கொடுப்பதற்காக என்று பொதுவாகக் கருதி வந்தனர். அதை மறுத்து கண்ணகி கோவலனிடம் சிலம்பைக் கொடுத்தது மீண்டும் வணிகத் தொழிலில் ஈடுபடவே என நிறுவினார்.
தோழனோடும் ஏழைமை பேசேல் என்ற கருத்தின்படி, கோவலன் தந்தையோடும் தன் வறுமை குறித்துப் பேசவில்லை என்றார். அதுபோலவே கண்ணகியிடம் விடைபெற்றுக் கோவலன் சென்றபின் உள்ள நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நிகழ்ந்தன அல்ல எனவும் நிறுவினார்.
தமிழர்களுக்கு எனத் தமிழ்நாடு என்ற தனி மாநிலம் படைத்ததால் அவர் தமிழ் மாநிலச் சிற்பியாகப் போற்றப்படுகிறார். ஆந்திர மாநிலத்தோடு இணைக்கப் படுவதாக இருந்த திருத்தணி இவரது போராட்டத்தால் தமிழகத்திற்குக் கிடைத்தது. இவர் சுதந்திரப் போராட்டத் தியாகியும் கூட. எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தவர்.
வ.உ.சிதம்பரம் பிள்ளைமேல் மிகுந்த மதிப்புக் கொண்டவர். அவர் வ.உ.சி பற்றி எழுதிய நூல்களில் `கப்பலோட்டிய தமிழன்` என்ற நூல் பெருமை வாய்ந்தது. பின்னாளில் பி.ஆர் பந்துலு அந்த நூலைத் தழுவி, `கப்பலோட்டிய தமிழன்` என்ற தலைப்பிலேயே ஒரு திரைப்படம் எடுத்தார். வ.உ.சி.யாக நடித்த சிவாஜி கணேசன் நடிப்பில் உச்சத்தைத் தொட்ட படம் அது.
ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நூலும் புகழ்பெற்றது. இந்த நூலை ஆதாரமாகக் கொண்டு பி.ஆர். பந்துலு எடுத்த படம்தான் `வீரபாண்டிய கட்டபொம்மன்`. அதிலும் கட்டபொம்மனாக நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.
சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் தந்து கெளரவித்தன. மத்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்து கெளரவித்தது.
2006ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டை ஒட்டி தமிழக அரசு இவரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கிச் சிறப்பித்தது.
எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பின் மூலம் தமிழ் கற்று, பின் தாம் எழுதிய உன்னதமான நூல்களால் தமிழ் அறிஞர்கள் மத்தியில் ஒரு தனியிடம் பிடித்தவர் ம.பொ.சி. அவரது புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






