என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்
- கர்ப்பப்பை புற்றுநோய் குறிப்பாக 40 மற்றும் 50 வயதை கடந்த பெண்களுக்கு அதிகமாக வருகிறது.
- உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் வரும்.
பெண்களை பாதிக்கின்ற முக்கியமான புற்றுநோய்களில் ஒன்று கர்ப்பப்பை புற்றுநோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சுமார் 2 லட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.
கர்ப்பப்பை புற்றுநோயில் 2 விதங்கள் இருக்கின்றன. ஒன்று கர்ப்பவாய் புற்றுநோய், இன்னொன்று கர்ப்பப்பை புற்றுநோய். இந்தியாவில் உள்ள பெண்களை அதிக அளவில் பாதிக்கின்ற புற்றுநோய் இந்த 2 புற்றுநோய்கள் தான். இதில் கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பூசி உள்ளது. அந்த தடுப்பூசியை போட்டால் கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்கிற விழிப்புணர்வு தற்போது நிறைய பேரிடம் இருக்கிறது.
ஆனால் எண்டோமெட்ரியம் என்று சொல்கின்ற கர்ப்பப்பையின் உள் லைனிங் லேயரில் வரக்கூடிய புற்றுநோயை எண்டோமெட்ரியல் புற்றுநோய், அதாவது கர்ப்பப்பை புற்றுநோய் என்று சொல்கிறோம்.
கர்ப்பப்பை புற்றுநோய் எதனால் வருகிறது?
கர்ப்பப்பை புற்றுநோய் குறிப்பாக 40 மற்றும் 50 வயதை கடந்த பெண்களுக்கு அதிகமாக வருகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிறைய இளம் பெண்களுக்கும் இந்த கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது. இந்த கர்ப்பப்பை புற்றுநோய் எதனால் வருகிறது என்பதை பார்ப்போம். கர்ப்பப்பையின் உள்ளே லைனிங் லேயரில் உள்ள செல்களில் டி.என்.ஏ. மாற்றங்கள் ஏற்படும்போது அந்த செல்கள் வழக்கத்துக்கு மாறாக மாறுபடுகிறது.
இது எதனால் இப்படி ஆகிறது என்று பார்த்தால் இதற்கு முக்கியமான ஒரு காரணம், ஹார்மோன்கள் தான். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நீண்ட காலம் அதிகமாக சுரந்து எண்டமெட்ரியம் லைனிங் லேயரில் பாதிப்பை உருவாக்கினால் அந்த செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை உள் லைனிங் லேயரில் புற்றுநோய் வரும்.
இந்தியாவில் உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 5 சதவீதமான பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பே கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவல். குறிப்பாக கருமுட்டைகளுக்கான அறைகளில் சிறு நீர்க்கட்டிகளை உருவாக்கும் நோயான பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் (பி.சி.ஓ.டி.) இருக்கின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையை எண்டோமெட்ரியல் ஹைப்பர்பிளேசியா என்று சொல்கிறோம். இந்த ஹைப்பர்பிளேசியா என்பது புற்றுநோய்க்கு முந்தைய நிலை ஆகும். இந்த பெண்களுக்கு அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், கர்ப்பப்பையில் உள் லைனிங் லேயரை பாதிக்கும் போது ஹைப்பர்பிளேசியா தன்மையானது அதிகமாகி, கர்ப்ப்பப்பை லைனிங் லேயரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:
பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு செல்லானது 7 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே ஹைப்பர்பிளேசியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு, கர்ப்பப்பையில் உள்ள செல்லானது 27 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும். அவ்வளவு தடிமன் இருக்கும் நிலையில், அதில் உள்ள செல்களின் பெருக்கம் காரணமாக டி.என்.ஏ. மாறுபாடு ஏற்பட்டு, பிறழ்வை உருவாக்கி புற்றுநோய் செல்களாக மாறும்.
இந்த சூழ்நிலையில் தான் பெண்களுக்கு எண்டோமெட்ரியல் ஹைப்பர்பிளேசியா வரும்போது அதில் புற்றுநோய்க்கான மாற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான முக்கியமான காரணங்களை பார்ப்போம்.
கர்ப்பப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதற்கு முதல் முக்கியமான காரணம் உடல் பருமன். பெண்களுக்கு உடல் எடை கூடும்போது ஈஸ்ட்ரோஜனின் தாக்கம் அதிகமாகும். அதனால் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம் வருவது என்பது பொதுவான காரணமாக பார்க்கப்படுகிறது.
உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் வரும். பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் இருந்தால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் போது ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும். கருமுட்டைகள் வளர்ச்சி சீராக இல்லாததால், புரோஜெஸ்டிரோன் எனப்படும் இனப்பெருக்க ஹார்மோனின் பாதுகாப்பானது கருப்பைக்கு கிடைக்காத நிலையில் அதுபோன்ற பாதிப்பு கொண்ட பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. திருமணம் ஆகி குழந்தையே பெறாத பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் இருக்கின்ற இனப்பெருக்க ஹார்மோன்தான் புரோஜெஸ்டிரோன். இது சீராக இல்லாத நிலையில் 40 வயதை கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள், நீண்ட காலம் கழித்து குழந்தைபேறு பெறும் பெண்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பானது மிகவும் அதிகமாக இருக்கும்.
சானிட்டரி நாப்கின் வேதிப்பொருளால் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு:
கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான அடுத்த முக்கியமான காரணம், தற்காலத்தில் அதிகரித்து வருகிற ஒரு பிரச்சினை கர்ப்பப்பை ஹார்மோன்கள் சுரக்கின்ற நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாகும். இந்த நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைப்பானது பலநேரங்களில் பெண்கள் பயன்படுத்துகின்ற சில ரசாயன பொருட்களால் ஏற்படுகிறது.
இன்றைக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், நிறைய பெண்கள் தங்களின் கூந்தலை நேராக மாற்றுவதற்கு பலவித ரசாயனம் கலந்த வண்ணங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ரசாயனம் கலந்த வண்ணங்களை நீண்ட காலமாக பயன்படுத்தினால் கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது என்று கண்டு பிடித்து உள்ளார்கள்.
மேலும் டயாக்சின் என்கிற ரசாயன பொருளும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இந்த டயாக்சின் என்கிற வேதிப்பொருள், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினில் உள்ள பிளாஸ்டிக்கில் இருக்கிறது. இந்த டயாக்சினும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இது ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், இதனால் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் பெண்கள் பயன்படுத்துகிற நகப்பூச்சுக்கள் மற்றும் தினமும் பயன்படுத்துகின்ற பெரும்பாலான ரசாயன பொருட்கள் ஆகிய அனைத்துமே புற்றுநோய் வருவதற்கான மாற்றங்களை உருவாக்கக் கூடியதற்கான அடிப்படையாக அமைகிறது. கண்டிப்பாக இதுபோன்ற ரசாயன பொருட்களும் புற்றுநோய் வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
மேலும் நீண்டகாலம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. சில பெண்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஏதாவது ஒரு காரணத்துக்காக நீண்ட காலம் பயன்படுத்துகிறார்கள். அதனுடைய பின்விளைவுகள் தெரியாமல் பயன்படுத்தும்போது கர்ப்பப்பை புற்றுநோய் பிரச்சினைகள் உருவாகிறது.
பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் பாதித்த பெண்கள் பலருக்கும் கருமுட்டைகள் வளர்ச்சி சீராக இல்லாததால், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் தாக்கம் குறைவாகி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாவதால் எண்டோமெட்ரியல் லைனிங் லேயரில் தூண்டுதல் ஏற்பட்டு கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம்:
இந்த காலத்தில் பல பெண் குழந்தைகள் 9 வயது, 10 வயது நிரம்பும்போதே பருவம் அடைந்து விடுகிறார்கள். அதேபோல் சில பெண்களுக்கு ரொம்ப தாமதமாக மெனோபாஸ் வருகிறது. இந்த நீண்ட காலகட்டங்களில் ஈஸ்ட்ரோஜனின் பாதிப்பு மற்றும் கர்ப்பப்பையில் அதன் தாக்கம் இருந்தால் புற்றுநோய் வரலாம். அதாவது நீண்டநாள் ஈஸ்ட்ரோஜனின் தாக்கம் இருக்கும் பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இதுதவிர உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி ஆகியவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை அதிகரித்து, அதனாலும் கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம்.
இன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பாக்கெட் உணவுகளை அதிகமாக உட்கொள்கிறவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் ரெட் மீட் அதாவது மட்டன், மாட்டிறைச்சி ஆகியவற்றை நிறைய உட்கொள்கிறவர்கள் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
இதுதவிர யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தாலோ அல்லது குடல் புற்றுநோய் இருந்தாலோ அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதவிர குடும்பத்தில் மரபு ரீதியாக யாருக்காவது கர்ப்பப்பை புற்றுநோய் இருந்தால், கண்டிப்பாக அவர்களுடைய சகோதரிகள், அவர்களின் குழந்தைகள், அவர்களை சார்ந்த பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எனவே கர்ப்பப்பை புற்றுநோய் வருவது பல காரணங்களை பொருத்து இருக்கிறது. டி.என்.ஏ. மாறுபாடு, உடல் பருமன், கருமுட்டைகள் வளர்ச்சி இல்லாத நிலை, ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பது, தேவையில்லாத ஈஸ்ட்ரோஜன் நிறைய எடுப்பது, நாம் பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் ஆகியவற்றால் கர்ப்பப்பை புற்றுநோய் வரும்.
இந்த கர்ப்பப்பை புற்றுநோய் என்னென்ன அறிகுறிகளை உருவாக்கும்? இதனை வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை வந்தால் இதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது எப்படி? இதனை முழுமையாக குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.






