என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோட்ச்சார கால சர்ப்ப தோஷம்
    X

    கோட்ச்சார கால சர்ப்ப தோஷம்

    • ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்தையும் பாதிக்கும்.
    • தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான பரிகார முறைகளை பார்ப்போம்.

    ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தராமல் சர்ப்பம் எனும் ராகு, கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதே காலசர்ப்ப தோஷம் எனப்படுகிறது. கடந்த வாரம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகாரர்களுக்கு கோட்ச்சார கால சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார வழிபாட்டு முைறகளை பார்த்தோம். இன்று கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான பரிகார முறைகளை பார்ப்போம்.

    கன்னி

    ராசிக்கு பனிரெண்டில் கேதுவும், ஆறில் ராகுவும் இருக்கிறார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். பாஸ்போர்ட் விசா சார்ந்த பிரச்சினைகள் தீரும். சுப விரயங்கள் மிகுதியாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகமாகும். அரசின் மானியம் அரசு ஆதரவு கிடைக்கும்.

    தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். நிம்மதியான தூக்கம் வரும். கடன், சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வங்கியில் விண்ணப்பித்த வீடு, வாகன கடன், தொழில் கடன், பிள்ளைகளின் கல்வி கடன், போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும்.

    ராகு பகவானுக்கு உளுந்து வடை படைத்து தானம் செய்யலாம்.

    துலாம்

    ராசிக்கு ஐந்தில் ராகு பதினொன்றில் கேது சஞ்சரிக்கிறார்கள். சகல சவுபாக்கியம் புகழ் அந்தஸ்துடன் வாழ்வீர்கள். விரும்பிய அனைத்து மாற்றங்களும் வந்து சேரும். காதல் முயற்சி வெற்றி தரும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். பங்கு சந்தை ஆர்வம் கூடும். புத்திர பிராப்தம் உண்டாகும் திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து, குல தெய்வ அனுகிரகம், வெளிநாட்டு பயணம் போன்ற பாக்கிய பலன் கிடைக்கும்.

    இதுவரை ஒரு தொழில் செய்தவர்களுக்கு புதிய இணை தொழில் அமையும். மூத்த சகோதரன் சித்தப்பா இவர்கள் மூலமாக இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்து தொடர்பான முடிவுகள் சாதகமாகும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சுந்தர காண்டம் படிக்க வேண்டும்.

    விருச்சிகம்

    சுகஸ்தானமான நான்காம் இடத்தில் ராகு. தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் கேது. புதிய ஆடம்பரமான அசையும் அசையா சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அழகு, ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும்.

    குடும்ப உறவுகளை பகைக்க கூடாது. இதுவரை உழைத்த உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்யும் நேரம். விற்க முடியாத சொத்துக்களை விற்க உகந்த நேரம்.

    இனிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் புதிய தொழில் முயற்சிகளில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். சிரமங்களை தவிர்க்க தெருவோரம் வசிப்பவர்களுக்கு உணவு, உடை தானம் செய்ய வேண்டும்.

    தனுசு

    ராசிக்கு மூன்றில் ராகு ஒன்பதில் கேது சஞ்சாரம் செய்வதால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தபடுத்தும் ஆன்மீக வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷம் உள்ளவர்கள் முறையான தில ஹோமம் செய்வதால் பித்ருக்கள் சாந்தி அடைவார்கள். பிறருக்கு ஜாமீன் போடுவதையும் பெறுவதையும் தவிர்க்க வேண்டும் சொத்துக்கள் வாங்கும் போதும் விற்கும் ேபாதும் முறையாக ஆவணங்களை சரிபார்க்கவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்லுவது நல்லது. தந்தை வழி முன்னோர்களால் ஏற்பட்ட இன்னல்கள் சீராகும். உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் ஆன்மாவை சாந்திப்படுத்தும் பித்ருக்கள் வழிபாடு அவசியம்.

    ஐ.ஆனந்தி


    மகரம்

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டமஸ்தானத்தில் கேது இருப்பதால் தன வரவில் நிலவிய தடைகள் அகலும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் கூடும். இது திருமண தடையை அதிகரிக்கும் அமைப்பாகும். கணவன்-மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்.

    வேற்று மொழி கற்கும் ஆர்வம் கூடும். சிலருக்கு வழக்கின் தீர்ப்பு தள்ளிப் போகும் அல்லது புதிய வழக்குகள் உருவாகும். ஆரோக்கிய குறைபாடு, துன்பம், துயரம், அழுகை, அவமானம், வாக்கால் பிரச்சினை போன்றவற்றில் இருந்து விடுபட அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது.

    கும்பம்

    ராசியில் ராகு ஏழில் கேது இருப்பதால் இது சர்ப்ப தோஷ அமைப்பாகும். அந்நிய மொழி கற்பதில் ஆர்வம் கூடும். கடினமான முயற்சியும் உழைப்பும் நல்ல பலன் தரும். சிறு சிறு மன சஞ்சலம், பய உணர்வு. உணவு ஒவ்வாமை போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் இருக்கும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் ஜனன கால ரீதியான திருமணத் தடை அகலும். செயற்கை கருத்தரிப்பு முறையே அணுக உகந்த காலமாகும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம். மதிக்க வேண்டியவர்களே உதாசீனம் செய்வார்கள். போலி உறவுகள் அதிகரிக்கும். மேலும் சுப பலனை அதிகரிக்க வீட்டின் அருகில் உள்ள அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.

    மீனம்

    ராசிக்கு ஆறில் கேது பனிரெண்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டு பயணத்தில் நிலவிய தடை அகலும் எதிர்பார்த்த பண உதவி அல்லது கடன் தொகை கிடைக்கும். தீராத பல பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணக்கிட முடியாத வீண் விரயங்கள் வரும். வீடு, மனை, வாகனம் என சுப விரயச் செலவுகள் ஏற்படும். சேமிப்பு கரையும். விரயத்தை முதலீடாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். கண் தொடர்பான நோய்க்கு, அறுவை சிகச்சை செய்ய நேரும். கண்ணாடி அணிய வேண்டி வரும். உறவிற்காக சூழ்நிலை கைதியாக இருக்க நேரும். காரிய சித்திக்கு சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட வேண்டும்.

    ஜாதகத்தில் ராகு கேது செயல்படும் விதம்

    நவகிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளது வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. கர்ம காரகன் நீதி மான் சனி என்றால் சனி பகவானின் பிரதிநிதிகள் ராகு கேதுக்கள். ஒரு ஆன்மா பல்வேறு பிறவிகளில் செய்த பிறப்புகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தும் சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குவதும், ஒவ்வொரு பிறப்பிலும் வெவ்வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக்கு ஏற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அனுபவிக்க செய்வதும் இவர்கள் தான். ஆகையால் இவர்களின் தன்மையை கொண்டு ஒரு ஜாதகத்தில் தோஷ பலன்கள் வீரியமானதா இல்லையா? என்பதை நிர்ணயிக்கிறோம்.

    பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்றவர்கள் இவர்கள். மேலும் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டுவருவதும் செயலாக்கம் செய்வதும் இவர்களே. ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள்செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

    அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாவிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம். இதை அறிவியல் ரீதியாக கூறினால் மனிதர்களின் மரபணுவில் இருக்கும் 46 குரோமோசோம்கள் ராகு கேது கலவைகளாகும்.

    குரோமோ சோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி இருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பவை (கேது). மரபுவழி பாவங்களை குறிப்பிடும் ராகு கேது என்னும் இரு சர்பங்கள் மத்தியில் நிற்கும் அனைத்து கிரகங்களும் பலம் இழக்கிறது. அதனால், எவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த யோகம் தரும் கிரகங்களின் திசை புத்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுப்பதில்லை.

    முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின் வாயின் பிடியில் சிக்கி அனுபவித்து 36 ஆண்டுகள் கழித்து பல அனுபவங்கள் பெற்று கேதுவின் வால் பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்தையும் பாதிக்கும். வீரியமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரகம் எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவக ரீதியான உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவத்தையும் சிதைக்கும் வல்லமை உண்டு.

    அதே நேரத்தில் அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாத தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அஷ்டமபாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். சாதாரண மனிதன் ஒருவன் சாதனையாளராக மாறுகிறான் என்றால் அங்கு ராகுவே முன்னணியில் நிற்பார். வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளவன் ஆணவத்தால் ஆடினால் அவனை அடக்க ராகு தயங்க மாட்டார். முடி சார்ந்த மன்னனும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே என்பதை உணர்த்துபவர் கேது. ராகு லவுகீகம் என்றால் கேது மோட்சம் ஆன்மீகம். ராகு அழிவு கிரகம், கேது தடை கிரகம். கண் இமைக்கும் நேரத்தில் நன்மையை தீமையாகவும் தீமையை நன்மையாகவும் மாற்றக்கூடிய சக்தி படைத்த கிரகம் ராகு. அதேபோல் ஒருவரின் விருப்பத்தை கேதுவும் நிறைவு செய்வார். ஆனால் விருப்பத்திற்கான தகுநிலையை வழங்கி தடை தாமதத்தை தந்து காலதாமதமாக பலன் தருபவர்கள். எனவே அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி, பந்த பாசங்களை அறுத்து, மனசாட்சிக்கு பயந்து முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்கள் எளிதாக பிறவிப் பிணியிலிருந்து மீள முடியும்.

    செல்: 98652 20406

    Next Story
    ×