என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்.... மகளின் மகிழ்ச்சியில் மன நிறைவு
    X

    மீனா மலரும் நினைவுகள்.... மகளின் மகிழ்ச்சியில் மன நிறைவு

    • தென்கொரியா இதுவரை நான் பார்க்காத நாடுகளில் ஒன்று.
    • எனது சந்தோசத்தை விட என் மகளின் சந்தோசமே எனக்கு முக்கியமாக இருந்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்ற வெளிநாட்டு பயணம். மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து கொஞ்சம் ெகாஞ்சமாக மீண்டேன். என்னைப் பற்றி நான் நினைப்பதை விட என் மகள் நைனிகா மீதான நினைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

    முன்பெல்லாம் ஆண்டு தோறும் கோடை காலம் வந்தால் எங்களுக்கு வசந்த காலம் மாதிரி தான். ஏனெனில் கோடை காலத்தில் ஏதாவது வெளிநாடு சுற்றுலா சென்று விடுவோம்.

    ஆரம்பத்தில் அப்பா, அம்மாவோடு... அதன்பிறகு கணவர் சாகர், குழந்தை என்று எங்களின் ஒவ்வொரு உல்லாச பயணமும் ஒரு உற்சாக பயணம் போலவே அமையும். அப்பா, கணவர் மறைவுக்கு பிறகு நைனிகாவின் சந்தோசம் முக்கியம் என்பதால் முதல் முறையாக நான் தன்னந்தனியாக என் மகளோடு சுற்றுலாவுக்கு திட்டமிட்டேன்.

    அதன்படி 2025 ஏப்ரலில் தென் கொரியாவுக்கு புறப்பட்டோம். இதுவரை நான் சென்ற சுற்றுலாவுக்கும் இந்த முறை சென்றதற்கும் நிறையவே வித்தியாசம் ெதரிந்தது. கடந்த கால நினைவுகள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் என் கண்முன்னால் நிழலாடியது.

    இந்த முறை எனது சந்தோசத்தை விட என் மகளின் சந்தோசமே எனக்கு முக்கியமாக இருந்தது. எனவே எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் கவனமாக இருந்தேன்.

    தென்கொரியா இதுவரை நான் பார்க்காத நாடுகளில் ஒன்று. எனவே அந்த நாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சுமார் 8 மணி நேர விமான பயணத்துக்கு பிறகு தென் கொரியாவின் சியோல் நகரை அடைந்தோம்.


    நாங்கள் ஏற்பாடு செய்து இருந்த வழிகாட்டி எங்கள் வருகையை எதிர்பார்த்து காத்து இருந்தார். அவரை பார்த்ததும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அங்குள்ள மக்கள் ஆங்கிலம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. எங்களுக்கு கொரிய மொழி தெரியாது. எனவே அவர்களோடு பேசி பழக மட்டும் சிரமமாக இருந்தது. தென் கொரியாவின் பாய்ஸ் மியூசிக் குழு உலகம் முழுவதும் இன்றைய தலை முறையிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தனித்துவமான இசை பாணியை உருவாக்கி உள்ளது. அத்துடன் அந்த நாட்டு கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

    இந்த குழுவினர் தங்கி இருந்த வீட்டை பார்த்தோம். அந்த வீட்டினுள் தனியாக ஒரு ஹாலில் அந்த நாட்டின் பாரம்பரிய நடனத்தை அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருக்கும் சுமார் ஒரு மணி நேரம் கற்று தருகிறார்கள். நமக்கு தான் டான்ஸ் என்றால் சொல்லித்த ரவும் வேண்டுமா? அவர்கள் ெசால்லித் தந்ததை அப்படியே அச்சு பிசராமல் நான் ஆடியதை பார்த்ததும் பயிற்சியாளருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இவ்வளவு அழகாக ஆடுகிறீர்களே எப்படி? நீங்கள் டான்சரா? என்றார். நான் ஒரு நடிகை என்றோ.. நன்றாக டான்ஸ் ஆடுேவன் என்றோ காட்டிக் கொள்ளவில்லை.

    சிரித்துக்கொண்டே ெகாஞ்சம் டான்ஸ் தெரியும் என்று மட்டும் கூறினேன். அடுத்ததாக புசான் நகர கடற்கரை உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அழகிய கடற்கரை. கடலுக்கு அடியில் அழகிய கண்ணாடி பாலம்... அதனுள் நடக்கும் போது நம்மை சுற்றி கடல் தண்ணீர் புரண்டு ஓடும் அழகே அழகுதான். அந்த நகரம் உணவுக்கும், ஸ்பாவுக்கும் பிரபலம். நம்மைப் போலவே அங்குள்ள மக்களும் அரிசி சோற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் சோறு கொஞ்சம் இருக்கும். காய்கறியில் பலவகையான உணவுகளை தயாரித்து சோற்றுடன் சாப்பிடுகிறார்கள். அதாவது ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறார்கள்.


    ஓட்டல் ஒன்றில் சாப்பிட அமர்ந்திருந்தோம். மேஜையில் அமர்ந்து ஆர்டர் செய்தால் போதும். பரிமாற ஆட்கள் வரமாட்டார்கள். அப்படியே குறுக்கும், நெடுக்குமாக ஓடி கொண்டிருக்கும் பெல்ட்டின் வழியாக நாம் ஆர்டர் செய்த உணவு நம் மேஜைக்கு வந்து விடும். அதை பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

    நம்மூரில் தலைக்கு மசாஜ் என்றால் தலை முடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும். ஆனால் அங்கு ஒரு மணி நேரம் மசாஜ் செய்கிறார்கள். தலைமுடி 'சில்கி' யாகி வாவ்... என்று பிரமிக்க செய்தது. அங்குள்ள பிரபலமான பொழுது போக்கு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளன. நான் ஒரு காரை எடுத்து ஒட்டினேன். எனக்கு அது எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பெதல்லாம் தெரிய வில்லை. ஆனால் நைனிகா அதையெல்லாம் தெரிந்து வைத்து கொண்டு இன்னொரு காைர எடுத்து ஓட்டி என்னை முந்தி சென்று எனக்கு டாடா காட்டி சென்றாள். அவள் முகத்தில் தெரிந்த சந்தோசம் தான் எனக்கு கூடுதல் சந்தோசத்தை கொடுத்தது. ஜார்ஜூ தீவு அந்த நாட்டின் பழமையான பாரம்பரியத்தை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்தில் பொருளீட்ட பெண்களும் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டார்களாம். அதை குறிக்கும் வகையில் வின்ட்(W). ராக்(R), விமன்(W) என்று அழைக்கிறார்கள். காற்றோடு பாறைபோல் நின்று போராடிய பெண்கள் என்பது இதன் அர்த்தம்.

    அந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கை முறையும் வித்தியாசமாக இருந்து இருக்கிறது. வீடுகளுக்கு பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எதுவும் கிடையாதாம். வீட்டுக்கு முன்பு 3 கம்பு குச்சிகள் வைத்திருப்பார்களாம். அதில் ஒரே ஒரு குச்சியை மட்டும் ைவத்து இருந்தால் நான் வீட்டில் இல்லை. பக்கத்தில் தான் சென்று இருக்கிறேன். விரைவில் வந்து விடுவேன் என்று அர்த்தமாம். இப்படி 3 குச்சிகளுக்கும் தனித்தனி அர்த்தம் கொடுத்து வாழ்க்கையை கட்டமைத்து வாழ்ந்து இருக்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தான் வடகொரியா இருக்கிறது. இரு நாடுகளும் ஜென்ம பகை கொண்ட நாடுகள். எனவே யாரும் அங்கு செல்ல முடியாது. பார்வையாளர் கோபுரத்தில் ஏறி தொலைநோக்கி மூலம் வடகொரியாவையும் பார்க்க முடியும். அதற்கும் வடகொரியா எதிர்ப்பு தெரிவித்ததால் இப்போது சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை. வடகொரியா அமைத்த சுரங்கப்பாதை ஒன்று தென் கொரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிக பிரமாண்டமாக அமைந்துள்ள அந்த சுரங்கப்பாதைக்கு சென்று பார்க்கலாம்.

    மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு நினைவுகளுடன் வருகிறேன்...

    (தொடரும்)

    Next Story
    ×